இறை வேதத்தின் நோக்கங்கள்

இறை வேதத்தின் நோக்கங்கள்

வேதம் என்று சொல்கின்ற போது அதற்கென்று சில நோக்கங்கள் இருக்க வேண்டும் என்று பைபிள் கூறுகின்றது.

அந்த நோக்கங்கள் என்ன?

மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.

திமாத்தியூ 3:16

  1. ஒரு கொள்கையைப் போதிக்க வேண்டும்.
  2. தவறுக்காக நம்மைக் கண்டிக்க வேண்டும்.
  3. நம்மைத் திருத்த வேண்டும்.
  4. நமக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும்.

இதைத் தாண்டி வேறு நோக்கங்கள் இல்லை என்று சொல்லி விடலாம். பைபிள் கூறும் இந்த நோக்கங்களின் அடிப்படையிலேயே பைபிளை ஆய்வு செய்வோம். பைபிளின் முதல் நூலான ஆதியாகமத்தின் 38வது அதிகாரத்தைப் படியுங்கள்.

1 அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.

2 அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.

3 அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.

4 அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.

5 கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.

6 யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.

7 யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.

8 அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, “நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்” என்றார்.

9 அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் விந்தைத் தரையில் சிந்தி வந்தான்.

10 அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.

11 ஆதலால் யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, “என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு” என்றார். ஏனெனில் அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.

12 பல நாள்களுக்குப் பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.

13 அப்போது “உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்” என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.

14 சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்து கொண்டார்.

15 யூதா அவரைக் கண்ட போது, அவர் முகம் மூடியிருந்ததால் அவர் ஒரு விலை மாது என்று நினைத்தார்.

16 அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், “என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?” என்று கேட்டார்.

17 அவர், “என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்” என்றார். அதற்கு அவர், “நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?” என்று கேட்டார்.

18 “அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று அவர் கேட்க, அவர் “உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்” என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.

19 பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டார்.

20 அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.

21 அங்கிருந்த ஆள்களை நோக்கி, “ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே?” என்று கேட்க, அவர்கள், “இங்கே விலைமாது எவளுமில்லை” என்றனர்.

22 அவன் யூதாவிடம் திரும்பி வந்து, “நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், “இங்கு விலைமாது எவளுமில்லை” என்றனர்” என்று சொன்னான்.

23 யூதா, “அவளே வைத்துக் கொள்ளட்டும்; இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.

24 மூன்று மாதம் சென்ற பின்னர், “உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்” என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், “அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்; அவள் எரிக்கப்பட வேண்டும்” என்றார்.

25 அவ்வாறே அவரை இழுத்துக் கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, “இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்” என்று சொல்லியனுப்பினார்.

26 யூதா அவற்றைப் பார்த்தறிந்து, “அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள். அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!” என்றார். ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.

27 தாமாருக்குப் பேறுகாலம் வந்த போது, அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.

28 அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி “இதுவே முதலில் வந்தது” என்றாள்.

29 ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக் கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் “நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!” என்று சொன்னாள். எனவே அவனுக்குப் “பெரேட்சு” என்று பெயரிடப்பட்டது.

30 பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட அவனுக்கு “செராகு” என்று பெயரிடப்பட்டது.

ஆதியாகமம் 38வது அதிகாரம்

இந்தக் கதை சொல்வதென்ன?

ஜுடா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் யூதா என்பவர் யூத இனத்தின் தந்தை ஆவார். யூதச் சிந்தனைக்கு இவரது பெயரைக் கொண்டு தான் யூதயிஸம் அல்லது ஜுடாயிஸம் என்று குறிப்பிடப்படுகின்றது.

யூதாவுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் ஏர் என்பவன் கொடியவனாக இருந்ததால் கடவுள் அவனைக் கொன்று விடுகின்றார்.

இந்தச் செய்தி, பைபிள் கூறும் வேதத்தின் நோக்கங்களில் இரண்டாவது நோக்கமான கண்டித்தல் என்ற நோக்கத்தின் கீழ் வருகின்றது.

மூத்த சகோதரன் எந்தவித சந்ததியும் இல்லாமல் இறந்து விட்டால், இறந்தவனின் அடுத்த சகோதரன் மூத்தவனின் மனைவியை, அதாவது அண்ணியை மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பது யூதர்களின் வழக்கம். மறைந்த அண்ணனின் பெயர் நிலைபெற வேண்டும் என்பதற்காக! யூதாவின் உத்தரவுப்படி, ஏரின் அடுத்த சகோதரன் ஓனான் தனது அண்ணியை மணமுடித்துக் கொள்கிறான்.

ஓனானிஸம்

அண்ணியை மணந்த ஓனானின் உள்ளத்தில் பொறாமை ஏற்பட்டது. இவள் மூலம் தனக்குக் குழந்தை பிறந்தால் அது தன் குழந்தையாக இருக்காது. தனது அண்ணனின் வாரிசாகத் தான் இருக்கும் என்று கருதினான். அதனால் ஓனான் உச்சக்கட்ட நேரத்தில் விந்துத் துளியை தரையில் விட்டு விட்டான். அதனால் கோபப்பட்ட கடவுள் அவனையும் சாகடித்து விட்டார்.

இந்த மரண தண்டனையும் வேதத்தின் நோக்கங்களில் ஒன்றான “கண்டித்தல்’ என்ற நோக்கத்தின் கீழ் வருகின்றது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அது தான் இங்கும் நடந்திருக்கின்றது. தப்புச் செய்த ஓனான் கடவுள் புத்தகத்திலேயே மறக்கடிக்கப்பட்டு விட்டான். ஆனாலும் கிறித்தவ வேத விற்பன்னர்கள் ஓனானுக்கு வேறு வகையில் உயிர் கொடுத்து நினைவு கூர்கின்றனர்.

ஆங்கிலத்தில் Coitos Interruptus என்று சொல்வார்கள். அதாவது இந்திரியம் பெண்ணுறுப்பில் போய்ச் சேர்வதற்குள்ளாக ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். அரபியில் அஸ்ல் என்று பெயர். இதற்குக் கிறித்தவ வேத விற்பன்னர்கள், தங்களுடைய நூற்களில் ஓனானிஸம் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

யூதாவின் இரண்டாவது மகனான ஓனானும் கடவுளால் கொல்லப்பட்டு விட்டான். இப்படி இரண்டாவது ஒரு சோக நிகழ்ச்சி நடந்தது. மாமனார் யூதா, தனது மருமகள் தாமாரை அழைத்து, “நீ உன் தந்தை வீட்டிற்குச் செல்! மூன்றாம் மகன் சேலா திருமணப் பருவத்தை அடைந்ததும் உனக்கு மணமுடித்து வைக்கின்றேன்” என்று வாக்குக் கொடுக்கின்றார்.

பழிவாங்கும் படலம்

யூதா தனது வாக்கைக் காப்பாற்றவில்லை. காரணம் அவருக்கு உள்ளுக்குள் பயம். மூத்த மகனிடமும், அடுத்த மகனிடமும் விளையாடிய கடவுளின் சாபம் எனும் பிடி இளைய மகன் சேலாவிடமும் விளையாடி விடக்கூடாது என்று வெலவெலத்துப் போயிருந்தார்.

சேலாவுக்குத் திருமண வயதாகியும் தாமாரைக் கட்டிக் கொடுக்கவில்லை.  தன் வாக்குறுதியை யூதா வசதியாக மறந்து விட்டார்.

தனக்கு வர வேண்டிய சந்ததி வித்தைப் பெறுகின்ற உரிமையை யூதா பறித்து விட்டாரா? என்று தாமார் கடுமையான ஆத்திரம் கொண்டாள். அதற்காக யூதாவைப் பழிவாங்கத் துடித்தார். இந்த சமயத்தில், தமது ஆட்டு மந்தைக்கு முடி வெட்டுவதற்காக திம்னா என்ற இடத்திற்கு யூதா வரப் போவதாக தாமாருக்குத் தகவல் கிடைக்கின்றது.

விலை மாது வேடத்தில்…

திம்னாவுக்கு வருகின்ற தனது மாமனாரை முகமூடி போட்டுக் கொண்டு மடக்கிப் பிடிக்கின்றார். தாமாரை தமது மருமகள் என்று அடையாளம் கண்டு கொள்ளாமல் அவளை விலைமாது என்றெண்ணி, யூதா அவளை விபச்சாரத்திற்கு அழைக்கிறார்.

“என்னுடன் உடலுறவு கொள்வதற்கு என்ன தருவாய்?” என்று தாமார் கேட்கிறாள். “ஓர் ஆட்டுக்குட்டி தருவேன்” என்று யூதா வாக்களிக்கின்றார். “வெள்ளாட்டுக் கிடாயை என்னிடம் அனுப்பும் வரை அதற்கு அடைமானமாக என்ன தருவீர்?” என்று தாமார் கேட்டாள். அதற்கு யூதா, “என்ன வேண்டும்?” என்று கேட்டார். “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், இடை வாரையும், கைக்கோலையும் தர வேண்டும்” என்றாள் தாமார். அவளிடம் அவற்றைக் கொடுத்த பின் யூதா அவளுடன் உடலுறவு கொண்டு, அதன் மூலம் தாமார் கருவுற்றாள்.

இது தான் பைபிள் ஆதியாகமத்தின் 38வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒழுக்கப் படிப்பினை

இப்போது நமது கேள்விக்கு வருவோம்.

வேதத்தின் நோக்கங்கள் என்று பைபிள் கூறிய நான்கு நோக்கங்களில் இது எந்த நோக்கத்தின் கீழ் வருகின்றது? கடவுளின் வேதம் என்று கிறித்தவர்கள் நம்புகின்ற பைபிளில் இடம் பெறுகின்ற ஆபாசமான, அசிங்கமான, சரச சல்லாபமான சம்பவத்தின் மூலம் நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன பாடமும் படிப்பினையும் கிடைக்கப் போகின்றது?

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கின்ற சம்பவங்களை, சரித்திரங்களை நாம் அவர்களிடம் சொல்லலாம். இதைச் சொல்ல முடியுமா?

டாக்டர் வெர்னான் ஜோன்ஸ் என்ற புகழ்மிக்க உளவியல் மருத்துவர் பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சோதனை நடத்தினார். வகுப்பறையில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லப்பட்டன. கதைகளின் கதாநாயகன் ஒருவர் தான். ஆனால் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு கதாபாத்திரத்தில் வந்தனர்.

குழந்தைகளில் ஒரு சாராரிடம், டிராகன் எனப்படும் கொடிய மிருகத்தை வெட்டி வீழ்த்திய ஜார்ஜ் என்ற கதாநாயகன் வெற்றி வீரராகத் தெரிந்தார். குழந்தைகளில் மற்றொரு சாராரோ பயத்தில் கிடுகிடுத்து தாயின் மடியில் அடைக்கலம் தேடினர். இத்தனைக்கும் மிக மென்மையான போக்கில் இந்தக் கதைகள் படைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அது குழந்தைகளில் மனநிலையை நிரந்தரமாகப் பாதிக்கச் செய்து விட்டது. மிகச் சிறிய வகுப்பறை சூழலில் கூட இதன் பிரதிபலிப்பைக் காண முடிந்தது

இவ்வாறு தனது ஆய்வில் டாக்டர் ஜோன்ஸ் தெரிவிக்கின்றார்.

புனித (?) பைபிள், கிறித்தவக் குழந்தைகளிடம் கொலை, கற்பழிப்புகளை, நெருங்கிய உறவுகளிடம் விபச்சாரம் செய்வதை, மிருகத்தனங்களை உருவாக்கியுள்ளது என்பதைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தங்களது கடவுள் இல்லத்தில் வைத்தே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மத்தியில் திருமணத்தை இவர்கள் நடத்தி வைப்பதும் இதன் எதிரொலியாகத் தான்.

இப்போது யூதாவின் விபச்சார சம்பவத்திற்கு வருவோம்.

தாமார், விலை மாது விளையாட்டில் இறங்கி அதற்கு விலையாகக் கருவில் ஒரு குழந்தையையும் சுமந்திருக்கின்றாள் என்ற செய்தி மூன்று மாதங்களுக்குப் பிறகு யூதாவுக்குத் தெரிய வருகின்றது. உடனே யூதா கொதித்தெழுந்து, “இழுத்து வாருங்கள் அந்த விபச்சாரியை! கொளுத்துங்கள் அவளை தீயில்!” என்று கர்ஜிக்கின்றார்.

தீப்பிழம்பாய் தெறிக்கும் தனது மாமனாரின் உத்தரவைக் கேட்ட தாமார், முத்திரை மோதிரத்தையும், இடை வாரையும், கைக்கோலையும் அனுப்பி வைக்கிறாள். விலை மாதுக்குப் பின்னால் உள்ள விஷமி யார் என்பதை இந்த மூன்று பொருட்களும் தெரிவித்து விட்டன. தீப்பிழம்பாகக் கொதித்தவர் பனிப் பாறையாக உறைந்து போகின்றார்.

ஏசுவின் தலைமுறைப் பட்டியலில் யூதா

இந்த யூதா தான் இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெறுகின்றார். இதன் மூலம் யூதாவையும், தாமாரையும் கிறித்தவ நற்செய்தி எழுத்தாளர்கள் என்றென்றும் வாழ வைத்திருக்கின்றார்கள். இது மிகவும் வெட்கக் கேடும் வேதனையுமாகும்.

இதில் நாம் எழுப்பக் கூடிய கேள்வி இது தான்.

இறை வேதத்தின் நோக்கங்கள் என்று திமொத்தேயு 3:16 கூறுகின்ற நான்கு நோக்கங்களில் எந்த நோக்கத்தின் கீழ் இந்தச் சம்பவம் வருகின்றது?

மகனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்த யூதாவின் ஈனச் செயலை எந்த நோக்கத்தின் கீழ் சேர்ப்பது?

யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.

மத்தேயு 1:3

ஏசுவின் தலைமுறைப் பட்டியலைக் கூறும் இந்த வசனத்தின்படி இவர்கள் கடவுளின் வேதத்தில் புகழப்படுகின்றார்கள். கடவுள் பெற்ற (?) ஒரே ஒரு மகனான ஏசுவின் பாட்டி, பாட்டனார் என்ற பாக்கியத்தை இவர்கள் பெற்றிருக்கின்றார்கள். ஏசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெறுவது சாதாரண காரியமல்ல!

ஒழுக்கமே உன் விலை என்ன என்று கேட்ட யூதாவுக்குக் கடவுளின் ஆசீர்வாதம்!

யூதாவின் மகன் ஏர் தப்பு செய்தார் என்பதற்காக அவர் கடவுளால் கொல்லப்படுகின்றார். அவரது மற்றொரு மகன் ஓனான், விந்தைத் தரையில் சிந்தியதற்காகக் கடவுளால் தண்டிக்கப்படுகின்றார்.

ஆனால் தந்திரமாக சதி செய்து விபச்சாரியாக வந்து மாமனாரின் விந்தைக் கருவில் ஏந்திய தாமாருக்குக் கடவுளின் தண்டனை இல்லை.

விலை மாது என்று நினைத்து அவளுடன் விபச்சாரம் செய்த யூதாவுக்கும் கடவுளின் தண்டனை இல்லை.

வேதத்தின் நான்கு நோக்கங்கள் என்ன ஆயிற்று? உங்கள் வீட்டு வாசல் கதவுகளைத் தட்டும் நற்செய்தியாளர்களிடம் விடை கேளுங்கள். சரியான விடை அளித்து விட்டால் தகுந்த சன்மானம் வழங்குங்கள்.

தடை செய்யப்பட வேண்டிய ஒரு நூல்

THE MOST DANGEROUS BOOK (the Bible) ON EARTH, KEEP IT UNDER LOCK AND KEY.

“இந்தப் புவியில் மிக மிக அபாயகரமான நூல் இது (பைபிள்). இதனை உள்ளே வைத்துப் பூட்டி சாவியைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஜார்ஜ் பெர்னாட் ஷா மிகச் சரியாகவே சொல்லியிருக்கின்றார்.

குழந்தைக்கு பைபிள் கதைகளைச் சொல்லிக் காட்டுவது, பாலியல் ஒழுக்கத்தை விவாதத்திற்கு உட்படுத்தும். அனைத்து வாய்ப்புகளையும் திறந்து விடும்.

தகாதவற்றைக் களையப்படாத பைபிள், தணிக்கைக் குழுவினரின் தரச் சான்றிதழில் ஆபாசச் சான்றிதழ் வழங்குவதற்குத் தகுதியானதாகும்.

இவ்வாறு The Plain Truth – 1977 என்ற நூல் கூறுகின்றது.

இந்த ஆபாசக் களஞ்சியத்தை இறை வேதம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஏற்றுக் கொண்டால், தந்தை வீட்டிலிருக்கும் போது மகன் தன் மனைவியை தனியாக விட்டு விட்டுச் செல்ல முடியாது.

எனவே ஒழுக்கத்தைப் போதிக்கின்ற உண்மையான இறை வேதமான திருக்குர்ஆனை நோக்கி வாரீர் என கிறித்தவ சமுதாயத்தை அழைக்கிறோம்.