இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே!

இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே!

அதிகாலை கிழக்கு வெளுத்ததிலிருந்து வாய்க்கும் வயிற்றுக்கும் பூட்டு! உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்! அந்தி சாய்ந்து சூரியன் அஸ்தமனமாகும் அந்தப் பொன்னிற மாலை நேரத்தை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிறந்த குழந்தை முகம் பார்த்ததும் பிரசவித்த தாய்க்கு அத்தனை வேதனைகளும் பறந்து விடுவது போல், பட்ட வலிகள் அத்தனையும் அவள் மறந்திடுவது போல், ஒரு நோன்பாளி தான் பட்ட தாகம், பசி அனைத்தையும் நோன்பு துறந்ததும் மறந்து விடுகின்றார்.

சூடேறிய உடலில் சுவையான நீர் வாயில் நுழைந்ததும் எவ்வளவு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கின்றது என்பதை வர்ணிக்க வார்த்தை இல்லை என்றே சொல்ல வேண்டும். இதைத் தான் நபி (ஸல்) அவர்களின் கூற்று அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டு விடுகின்றார்என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் வேளையில் கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7492

இது நோன்பு துறக்கும் போது நாம் காண்கின்ற, கண்டு ரசிக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஆகும். இந்த ஹதீஸ் கூறுகின்ற மற்றொரு சந்தோஷத்தைப் பார்ப்போம்.

இதே கருத்தைக் கொண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும் போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தை விட நறுமணமிக்கதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1945

இந்த ஹதீஸ், ஒவ்வொரு வணக்கத்திற்கும் கிடைக்கக்கூடிய நன்மையின் அளவீட்டைக் குறிப்பிடுகின்றது.

அடியான் செய்கின்ற ஒவ்வொரு வணக்கத்திற்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்கு என்ற அளவீட்டிற்கு அல்லாஹ் நன்மை அளிப்பதைத் தெரிவிக்கின்றது. ஆனால் நோன்புக்கு மாண்புமிகு நாயன், தானே தன்னுடைய அடியானைச் சந்திக்கும் போது கணக்கற்ற காணிக்கையாக, கண்ணியமிக்க கைம்மாறு தரப் போவதாகத் தெரிவிக்கின்றான்.

எல்லா வணக்கங்களுக்கும் உரிய கூலி இவ்வளவு தான் என்ற வரையறையும் வரம்பும் தெரிந்து விட்டது. ஆனால் நோன்பின் கூலி எவ்வளவு? எப்படி? நோன்பிற்கு ரஹ்மான் தரப் போகும் வெகுமானம் என்ன? அவனை நேரில் சந்திக்கும் போது தான் அது தெரியும் என்று இறைவன் தெரிவிக்கின்றான்.

அல்லாஹ்வின் சந்திப்பே ஒரு தித்திப்பு! ஒரு மகிழ்ச்சியின் திளைப்பு! இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அல்குர்ஆன் 75:22, 23

இதில் அவன் பொத்தி வைத்திருக்கும் சன்மானம் எவ்வளவு என்று உடைக்கின்ற போது நமக்குப் பெருக்கெடுக்கின்ற மகிழ்ச்சி வெள்ளம், அல்லாஹ் தருகின்ற கூலியைப் போன்று அளவிட முடியாததும் அணை போட முடியாததுமாகும். அந்த ஆனந்தத்தையும் அளப்பரிய கருணையையும் அடைவதை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அருள்மிகு ரமளான் இதற்கான வழித்தடத்தையும் வரித் தடயத்தையும் பதிவதற்காகவே வந்துள்ளது.

அல்லாஹ் தன்னுடைய சந்திப்பிற்கு இரு நிபந்தனைகளைக் கூறுகின்றான்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

அல்லாஹ் கூறும் நிபந்தனைகளில் ஒன்று, நல்லமல்கள் செய்ய வேண்டும்.

இனிய ரமளானில் தொழுகைகளை ஜமாஅத்துடன் பேணித் தொழுதோம். இதர காலங்களில் சுபுஹ் தொழுகைக்கு எழுந்திருக்கவே சிரமப்பட்ட நாம், இரவில் தாமதமாகப் படுத்தும் ஸஹர் நேரத்தில் எழுந்தோம். குர்ஆனை ஓதினோம். தான தர்மங்களைச் செய்தோம். அது போன்று ரமளான் காட்டிய வழித்தடத்தில் பாக்கியமிகு ரமளானைப் பாடமாகக் கொண்டு, ரமளான் அல்லாத காலங்களிலும் பயணத்தைத் தொடர்வோம்.

இரண்டாவது நிபந்தனை, இணை வைக்காமல் இருத்தல்.

வாய் கொப்பளிக்கும் போது தொண்டைக் குழியில் தண்ணீர் நிற்கின்றது. துளியளவு தொண்டைக்குள் போனால் யாரும் பார்க்கப் போவதில்லை. இருப்பினும் வெளியே கொப்பளித்து விடுகிறோம். ஏன்? எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அருகில் இருக்கிறான் என்பதால் தான். இவ்வளவு அருகில் இருக்கும் அல்லாஹ்வை விட்டு விட்டு, உயிருடன் இருக்கின்ற அல்லது இறந்து போன அடியார்களை அழைக்கலாமா? இவர்களை அழைக்காமல் வல்ல அல்லாஹ்வை மட்டும் அழைப்பவர்களுக்கே அவனைச் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று இந்த வசனம் நிபந்தனை விதிக்கின்றது.

இந்நிபந்தனைகளைப் பேணாதவர்களுக்கு இறைவனைச் சந்திக்கும் பாக்கியம் இல்லை. குறிப்பாக அப்துல்லாஹ் ஜமாலி கூட்டத்தினர் போன்ற முஷ்ரிக்குகளுக்கு இல்லை. காரணம், இவர்கள் அருகில் இருக்கின்ற அல்லாஹ்வை விட்டு விட்டு, என்றோ இறந்து விட்ட அடியார்களை அழைத்து உதவி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இறை மறுப்பின் எடுத்துக்காட்டுகளாகத் திகழும் இந்தப் பேர்வழிகள், அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறி வருகின்றனர். இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர்கள் இந்த வாதத்தை ஒரு போதும் முன்வைக்க மாட்டார்கள். சந்திப்பு என்றாலே அதற்கு ஒரு வடிவம் இருந்தாக வேண்டும். ஒன்றுமில்லாத சூனியத்தைச் சந்திக்க முடியாது. எனவே இறைவனுக்கு உருவமில்லை என்று கூறி, அவனது சந்திப்பையும் சேர்த்து நிராகரிக்கின்றார்கள்.

இவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விவாதக் களத்தில் எதிர்கொண்டு இவர்களது முகத்திரையைக் கிழித்தெறிந்தது. அந்த விவாதத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நூல் வடிவில் தருவதில் ஏகத்துவம் மகிழ்ச்சியடைகின்றது.