இணையற்ற இறைவனுக்காக ஓர் ஏகத்துவ எழுச்சி மாநாடு

இணையற்ற இறைவனுக்காக ஓர் ஏகத்துவ எழுச்சி மாநாடு

தலைவர் அழைக்கிறார்

தளபதி அழைக்கிறார்

தலைவி அழைக்கிறார்

அம்மா அழைக்கிறார்

அன்னை அழைக்கிறார்

அண்ணன் அழைக்கிறார்

இப்படி அழைப்புப் படலங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. உறவுகளைக் குறிப்பிட்டு மக்களை மாநாட்டிற்காக, கட்சி, கழகம், இயக்கத் தலைவர்கள் நீட்டி முழக்கி விடுக்கின்ற அழைப்புகள் தாம் இவை!

இவை முஸ்லிம் அல்லாதோர் நடத்துகின்ற மாநாடுகளாகும். முஸ்லிம்களும் தங்கள் பங்குக்கு அன்றும் இன்றும் மாநாடுகள் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.

வலிமார்கள் மாநாடு

தரீக்காக்கள் மாநாடு

மத்ஹபுகள் மாநாடு

இவை முஸ்லிம்கள் நடத்தும் மாநாடுகள்!

இவை அனைத்துமே தனி நபர்கள் மீது போதையூட்டும் தனி மனித வழிபாட்டு மாநாடுகள்!

இன்றைய இந்திய முஸ்லிம்கள், குறிப்பாகத் தமிழக முஸ்லிம்கள் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முயீனுத்தீன், ஏர்வாடி இப்ராஹீம், நாகூர் ஷாகுல் ஹமீது, ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா, கேரள பீமா ஆகியோரை அல்லாஹ்வுடன் இணைத்து இணையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று இம்மக்களிடையே நாம் சொல்கிறோம்; பிரச்சாரம் செய்கிறோம். இதைத் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்தார்கள்.

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

அல்குர்ஆன் 60:4

இதைத் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா இறைத் தூதர்களும் போதித்தார்கள்.

“எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 7:70

அதே பிரச்சாரத்தை நாம் இன்று செய்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் சந்தித்த அந்த இழப்புக்களை நாமும் சந்திக்கின்றோம்.

மக்கா முஷ்ரிக்குகள் என்ன வெறுப்பை வெளிப்படுத்தினார்களோ அதே வெறுப்பைத் தான் இந்த மக்களும் வெளிப்படுத்துகின்றனர்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று நாம் கூட்டம் போட்டால் இவர்கள் அந்த வெறுப்பின் காரணமாக அதைத் தடை செய்கிறார்கள். அதே சமயம் தரீக்கா, அவ்லியாக்கள், மல்லிதுகள் என்று இணை வைப்புக் கூட்டங்களை நடத்தினால் இவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப் பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்.

அல்குர்ஆன் 40:12

இவர்களிடம் உள்ள இணை வைப்பை ஏகத்துவவாதிகள் எதிர்த்த போது,

ஊர் நீக்கம் செய்கின்றனர்.

பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை விதிக்கின்றனர்.

இவை மக்காவின் இணை வைப்பாளர்கள் வெளிப்படுத்திய அதே விளைவுகள் தான். இந்த விளைவுகளை எல்லாம் தாண்டித் தான் ஏகத்துவக் கொள்கை எழுச்சி கண்டு கொண்டிருக்கின்றது.

அவ்லியாக்களை எதிர்ப்பவர்கள்  அழிந்து போவார்கள் என்று கனவு கண்டார்கள். (நாம் அவ்லியாக்களை எதிர்க்கவில்லை. அவர்களிடம் பிரார்த்திப்பதைத் தான் எதிர்க்கிறோம்) ஆனால் அவர்களது கனவு பொய்யாகும் விதத்தில் இந்த ஏகத்துவம் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கின்றது. ஏகத்துவ இயக்கத்திற்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதற்காகத் தான் இம்மாநாடு!

கோடான கோடி செலவில் மாநாடுகள் ஏன் நடத்தப்படுகின்றன? கோடிக்கணக்கில் செலவு செய்து இப்படிக் கூடி கலையும் மாநாடுகள் தேவையா? என்று ஓர் எண்ணம் தோன்றலாம். தமிழகத்தின் கட்சிகள், கழகங்களின் வரலாற்றை உற்று நோக்கினால் இதற்கு விடை கிடைத்து விடும். தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக மக்களிடம் களம் புகுந்தது மாநாடுகள் மூலம் தான் என்ற கடந்த கால வரலாற்றுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

அண்மைக் காலத்தில் ஓர் இயக்கத்தை நாம் உருவாக்கி, அதை அடையாளப்படுத்த அடித்தளமாக அமைந்தது கடற்கரையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு தான். விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் அமைத்தது மதுரை மாநாடு தான்.

மாநாடுகள் ஓர் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் படிக்கட்டு! ஓர் இயக்கத்தின் திருப்புமுனை! இலக்கு நோக்கிச் செல்கின்ற இயக்கத்தின் இலட்சியப் பயணத்திற்கு இந்த மாநாடுகள் எரிபொருளாக அமைகின்றன.

அதனால் தான் எல்லா இயக்கங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து மாநாடுகள் நடத்துகின்றன. அவற்றின் பயன்களையும் கைக்கு மெய்யாகக் காண்கின்றன. இம்மாநாடுகள் அனைத்தும் தனி மனித வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஆனால் நாம் நடத்தவுள்ள இந்த மாநாடு இணையில்லாத அந்த இறைவனுக்காக நடத்தப்படும் மாநாடாகும்.

மாநாடு என்பது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற ஓர் அழைப்பு வியூகம்!

பொதுவாக மக்கள் ஒரு கொள்கையை ஏற்கும் போது அக்கொள்கையில் பெருங்கூட்டம் உள்ளதா? அல்லது இணைகின்றதா? என்று பார்ப்பார்கள்.

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கு என்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள, மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தாருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத் தூதர் தாம் (என்பது நிரூபணமாகி விடும்)” என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றிச் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் குலத்தாருடன் என் தந்தை விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.

அறிவிப்பவர்: அம்ர் பின் சலமா (ரலி)

நூல்: புகாரி 4302

மாநாட்டில் சங்கமிக்கின்ற மக்களைப் பார்க்கும் போது மாநாட்டுக்கு வரும் மக்களிடம் கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படும். அவர்களும் ஏகத்துவத்தை ஏற்பதற்கு அது வழி வகுக்கும் இன்ஷா அல்லாஹ்!

“அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின்  உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத்  (ரலி)

நூல்: புகாரி 2942

நம்முடைய ஏக்கம், இலட்சியம், எதிர்பார்ப்பு எல்லாமே, இம்மாநாட்டின் மூலமாக யாரேனும் ஒருவர் ஏகத்துவத்தில் இணைய மாட்டார்களா? என்பது தான். கோடி செலவழித்துக் கூடிய மக்கள் கூட்டத்தில் ஒருவர் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் போதும். இது போன்ற பாக்கியம் வேறு எதுவுமில்லை. யாரும் இணையவில்லை என்றாலும் அப்போதும் நாம் செய்த முயற்சிக்கு அல்லாஹ் கூலி தராமல் இருக்கப் போவதில்லை.

அல்லாஹ்வின் மீது அன்பு இருந்தால்…

எனவே நடைபெற இருக்கும் இந்த ஏகத்துவ அழைப்பு மாநாட்டிற்காக அள்ளி வழங்குங்கள். இம்மாநாடு அல்லாஹ்விற்காக மட்டும் நடைபெறுகின்ற ஏகத்துவ மாநாடு! எனவே இதற்காக அள்ளி வழங்குங்கள்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர்.

அல்குர்ஆன் 2:165

இதன்படி அவ்லியாக்களுக்காக அந்த மக்கள் அள்ளி வீசுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வோ, “நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்” (அல்குர்ஆன் 2:165) என்று குறிப்பிடுகிறான்.

இதன்படி நீங்கள் அல்லாஹ்விடம் அதிமதிகம் அன்பு, விருப்பம் கொள்பவர்களாக இருந்தால் அவனுக்காக – அவன் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டிற்காக அள்ளி வழங்குங்கள்.

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதை எப்படிக் கடவுள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோமோ அது போன்று தான் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதையும் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். இதற்காகத் தான் நான்கு மத்ஹபுகளை விட்டும் விலகியிருக்கின்றோம். இதுவும் எதற்காக?

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

மத்ஹபு இமாம்களைப் பின்பற்றுபவர்கள் அதற்காக அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்.

நாம் நபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவது உண்மையெனில் நபியவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையைச் சொல்வதற்காக நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு அள்ளி வழங்க வேண்டும்.

இந்த மாநாடு வெற்று பெறுவதற்கு உதவியாக நின்று அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்!

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 64:16

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:272