இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி
இறைத் தூதர் நூஹ் நபி அவர்கள் 950 ஆண்டு காலம் வாழ்ந்து அழைப்புப் பணியாற்றிய ஓர் உன்னதத் தூதர். ஒரு நூற்றாண்டல்ல! சுமார் 10 நூற்றாண்டுகள் ஓயாது, உரக்கவும் உள்ளூரவும், இரைந்தும் இரகசியமாகவும், தனியாகவும் கூட்டாகவும் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
ஆனால் அவர்களது பிரச்சாரத்தைக் கேட்பாரும் இல்லை. ஏற்பாரும் இல்லை. பொறுத்தது போதும் என்று அவரது உள்ளம் பொங்கி எழுகின்றது. அவர்களது நாவு வல்ல நாயனிடம் பொரிந்து தள்ளுகின்றது.
“என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!” என்று நூஹ் கூறினார். நீ அவர்களை விட்டு வைத்தால் உனது அடியார்களை அவர்கள் வழி கெடுப்பார்கள். (உன்னை) மறுக்கும் பாவியைத் தவிர அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் 71:26, 27
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது குமுறலை, கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்.
திருக்குர்ஆனின் 71வது அத்தியாயம் முழுமையும் நூஹ் நபியின் பிரச்சாரத்தையும் அதற்கு மக்கள் அளித்த ஆத்திரமூட்டும் பதிலையும் எதிரொலிக்கும் ஓர் உன்னத அத்தியாயம். இந்த அத்தியாயத்தின் வசனங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் விடாது.
நூஹ் நபியின் அந்தப் பிரார்த்தனையின் பலனாய், விளைவாய் அல்லாஹ் அம்மக்களுக்கு எதிராகப் பெரும் பிரளயத்தைப் பெருக்கெடுக்கச் செய்கிறான்.
வானம் மழையைப் பெய்வதற்கு முன்னால், பூமி ஊற்றுக் கண்களைப் பீறிடச் செய்வதற்கு முன்னால் கப்பலைக் கட்டிக் கொள்ளுமாறு நூஹ் நபிக்கு உத்தரவிடுகின்றான். அதில் ஏற்ற வேண்டிய பயணிகளையும் மனித சமூகம் அல்லாத பிராணிகளையும் பட்டியலிடுகின்றான்.
வெள்ளத்தில், வேதனையில் பலியாகப் போகும் மக்களுக்காக என்னிடம் பரிந்து பேசக் கூடாது; பிரார்த்தனை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றான்.
“நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்” என்று அவருக்கு அறிவித்தோம். (அல்குர்ஆன் 23:27)
“(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 11:36, 37)
பெருக்கெடுத்த பிள்ளைப் பாசம்
மேலெழுந்த வெள்ளத்தில் மிதக்கின்ற மகனைப் பார்த்து நூஹ் என்ற தந்தையின் உள்ளம் பாச வெள்ளத்தில் மிதக்கின்றது. அல்லாஹ் விடுத்த எச்சரிக்கையை அவரது உள்ளம் மறக்கின்றது.
அவர்களின் கப்பல் தண்ணீரில் மிதக்கின்றது; கண்களோ கண்ணீரில் மிதக்கின்றது.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார். (அல்குர்ஆன் 11:45)
என்ற பிரார்த்தனை அவர்களுடைய நாவில் வந்து விடுகின்றது. அவ்வளவு தான்.
அல்லாஹ்வின் கட்டளையும் அவனது தடையும் உயர் அழுத்த மின்சாரம் பாயும் கம்பியைப் போன்றதாகும். அது யாரிடமும் பாகுபாடு பார்க்காது; பாரபட்சம் காட்டாது. இதோ அல்லாஹ்வின் கண்டனம் நூஹ் நபியை நோக்கிப் பாய்கின்றது.
“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 11:46)
நபியின் மகன் நரகத்தில்….
பத்து நூற்றாண்டு காலம் உழைத்த ஒரு தூதராயிற்றே என்பதெல்லாம் அல்லாஹ்விடம் எடுபடவில்லை. இறை மறுப்பு, இணை வைப்பு போன்றவை அவனிடம் மன்னிக்க முடியாத குற்றம். இந்த இறை மறுப்புக்கும், இணை வைப்பிற்கும் அல்லாஹ்விடத்தில் தண்டனை, என்றென்றைக்கும் பற்றி எரியும் நெருப்பு தான்.
அவர்களது குற்றங்கள் காரணமாக மூழ்கடிக்கப்பட்டு நரகில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்களை அவர்கள் காண மாட்டார்கள். (அல்குர்ஆன் 71:25)
இறுதியாக அல்லாஹ் சொல்வது போன்று நூஹ் நபியின் மகன் நீரில் மூழ்கி, நெருப்பில் நுழைந்து விட்டான்.
இதன் மூலம் கொள்கை உறவு தான் உறவு; குடும்ப உறவு உறவல்ல என்பதை அல்லாஹ் உணர்த்தி விட்டான்.
இதே போன்ற ஒரு நெருக்கடி இப்ராஹீம் நபிக்கு ஏற்படுகின்றது. இப்ராஹீம் தமது தந்தையை நோக்கிப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
“என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்”
“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்”
“என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்” (என்றார்.)
“இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!” என்று (தந்தை) கூறினார்.
“உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்.
உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றையும் விட்டு விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே பிரார்த்தனை செய்வேன். எனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பேன்” (என்று இப்ராஹீம் கூறினார்.) (அல்குர்ஆன் 19:41-48)
நூஹ் நபிக்கு ஏற்பட்ட அதே நிலை இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் ஏற்படுகின்றது. நூஹ் நபி சம்பவத்தில் மகன். இப்ராஹீம் (அலை) சம்பவத்தில் தந்தை! அவ்வளவு தான்.
உங்களுடைய தந்தைக்குப் பாவ மன்னிப்பு தேட வேண்டாம் என்று அல்லாஹ், இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு விதித்த தடை எதையும் நாம் காண முடியவில்லை.
ஆனால் அவர்கள் தமது தந்தைக்குப் பாவ மன்னிப்பு தேடுவதை விட்டும் விலகிக் கொள்கிறார்கள்.
தயவு காட்டாத தனயன்
நூஹ் (அலை) அவர்களின் சம்பவம் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப் பாடமாக அமைந்து, அல்லாஹ்வின் கோபத்தைத் தவிர்த்துக் கொள்கிறார்கள் என்றும் விளங்கலாம்.
அல்லாஹ் அவர்களுக்கு, பாவ மன்னிப்பு தேடக் கூடாது என்று அறிவித்துக் கொடுத்து, அதன்படி அவர்கள் விலகிக் கொண்டார்கள் என்றும் விளங்கலாம். எப்படியிருந்தாலும் தனது தந்தை ஏகத்துவத்தின் எதிரி என்று தெரிந்ததும், அதாவது அல்லாஹ்வின் எதிரி என்று தெரிந்ததும் அவரைத் தனது எதிரியாகப் பாவித்து விலகிக் கொள்கின்றார்கள்.
இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)
அவர்கள் ஏற்கனவே ஊரை, உலகை அல்லாஹ்வுக்காகப் பகைத்து விட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
“உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
இப்போது அந்தப் பட்டியலில் தனது தந்தையையும் தயவு தாட்சண்யமின்றி சேர்த்து விட்டார்கள்.
ஊரை, உலகை, பெற்ற தந்தையை அவர்கள் பிரிந்து நின்றால் உலகப் பார்வையில் அவர் ஒரு தனி மனிதர்! சிறுபான்மையிலும் சிறுபான்மை! இன்னும் சொல்லப் போனால் பூஜ்யம்!
ஆனால் அல்லாஹ்வின் துலாக்கோலில் அவர் ஒரு சமுதாயம்! இப்ராஹீம் நபி இருந்த தட்டு கனத்து நிற்கின்றது. ஏகத்துவ எதிரிகள் இருக்கும் தட்டு கனமின்றி, காலித் தட்டாகக் காற்றாடுகின்றது. இதையே அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:120)
இங்கே நாம் பார்க்க வேண்டியது, அவர்கள் தமது தந்தைப் பாசத்தை, இறையன்புக்கு எதிராக உரச விடவில்லை. ஏகத்துவத்திற்கு எதிராக இந்த உலகமே ஒன்று திரண்டாலும் ஓரணியில் சேர்ந்தாலும் இப்ராஹீம் நபியவர்கள் ஓரணு கூட அசையவில்லை.
ஓர் ஏகத்துவக் கொள்கையாளர் ஊர் நீக்கம் செய்யப்படும் போது, உறவுகள் அவருக்கு எதிராகக் கிளம்பும் போது, இப்ராஹீம் நபியின் இந்த வாழ்க்கைப் பகுதியைத் தனது பாடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தேற்றிக் கொள்ள வேண்டும்.
முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய அவர்களது உறுதியும், சோதனையும் இத்துடன் நின்று விடவில்லை.
கால தாமதமான குழந்தை பாக்கியம்
ஏகத்துவக் கொள்கைக்காகத் தீக்குண்டத்தில் வீசியெறியப்பட்டவர்கள், தந்தையைப் பகைத்தவர்கள், ஊரை விட்டும் ஒதுக்கப்பட்டவர்கள், நாட்டைத் துறந்தவர்கள் என்று அவர்களின் தியாகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இறைவனுடைய அன்பையும் நட்பையும் பெற்ற அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தச் சோதனையையும் இந்த இறைத் தூதர் தனது ஏகத்துவப் பயணத்தில் சகித்துக் கொள்கின்றார்கள்.
குழ்நதை பாக்கியம் இல்லாததால் அவர்கள் எத்தனை விமர்சனங்களை எதிர்நோக்கியிருப்பார்கள் என்பது நமது மனக்கண் முன்னால் ஓடுகின்றது. அந்தக் குழந்தைப் பாக்கியம் அவர்களது வயோதிகத்தில் கிடைக்கின்றது. நன்றி மிக்க அந்தத் திருமகனார் நன்றிப் பெருக்குடனும் நம்பிக்கையுடனும் நளினமான வார்த்தைகளில் தெரிவிப்பதைப் பாருங்கள்.
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.
அல்குர்ஆன் 14:39
வெல்ல முடியாத பிள்ளைப் பாசம்
இந்தப் பச்சிளம் பாலகனைத் தான் அன்னாரது மனைவி ஹாஜருடன் பாலைவனத்தில் அல்லாஹ் விடச் சொல்கிறான்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (அல்குர்ஆன் 14:37)
இங்கும் அன்னாரது இறைப் பாசத்திற்கு முன்னால் குழந்தை, குடும்பப் பாசம் தோற்றுப் போய்விடுகின்றது.
அடுத்தக்கட்ட சோதனை, அந்தச் செல்ல மகனை அறுத்துப் பலியிடும் சோதனைக் கட்டம்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம் (அல்குர்ஆன் 37:103, 104)
இயற்கையாகவே பிள்ளை மீது ஏற்பட்டிருக்கும் அந்தக் கொள்ளைப் பாசம் அன்னாரின் எல்லையில்லாத இறைப் பாசத்தை வெல்ல முடியவில்லை.
தோல்வியைத் தழுவும் தவ்ஹீதுவாதிகள்
ஒவ்வொரு ஏகத்துவவாதிக்கும் இப்ராஹீம் நபியின் இந்த மன வலிமை, உறுதிப்பாடு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும்.
ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டதும் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஊர் நீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்களுக்குத் திருமணப் பதிவேடு தரப்படுவதில்லை. அடக்கத்தலம் மறுக்கப்படுகின்றது. சுன்னத் ஜமாஅத்தினரின் வணிகத் தலங்களில் கடை வைத்திருந்தால் காலி செய்யப்படுகின்றனர். காவல் துறையில் புகார் செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். சிறை வாசத்தையும் அனுபவிக்கின்றனர். சமயங்களில் கொலைவெறித் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர்.
தவ்ஹீதுக் கொள்கையை ஏற்ற பிறகு குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்படுதல், விபத்தில் சிக்குதல், மரணத்தைத் தழுவுதல், வியாபாரத்தில் பெரு நஷ்டம் ஏற்படுதல், வேலையை விட்டு நீக்கப்படுதல் இதுபோன்ற சோதனைகளில் ஒன்றோ, இரண்டோ ஏற்பட்டு விட்டால் போதும். தவ்ஹீது முகாமையே காலி செய்து விட்டு அசத்தியக் கொள்கைக்குத் தாவி விடுகின்றனர்.
இத்தகையோருக்கு இப்ராஹீம் நபியின் வாழ்க்கை மாபெரும் பாடமாகவும் படிப்பினையாகவும் அமைந்து விடுகின்றது. அவர்கள் சந்தித்த அளவுக்குச் சோதனையை யாரும் சந்திக்கப் போவதில்லை. யாரும் சந்தித்ததில்லை.
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுதல் என்ற கண்ணோட்டத்தில் ஏகத்துவவாதிகளுக்கு இப்ராஹீம் நபியின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி இருக்கின்றது.
பந்த பாசம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இப்ராஹீம் (அலை) தியாகம் மகத்தான முன்மாதிரியாக அமைகின்றது. தவ்ஹீதுவாதிகள் இந்த பந்த பாசம் என்ற சறுகல் பாதையில் வெகு வேகமாகவே சறுகி விடுகின்றார்கள்.
இந்த சறுக்கல் பாதையில் முதலிடம் வகிப்பது திருமணம்.
- திருமணம்
தவ்ஹீதை ஏற்காத அல்லது தரீக்கா கொள்கையுடைய பெண்ணைத் தேர்வு செய்தல்
விருந்து என்ற பெயரில் பொருளாதாரத்தை விரயம் செய்தல்
திருமணத்தை ஆடம்பரமாக நடத்துதல்
பெண் வீட்டில் விருந்து வைத்தல்
பொருள், நகை, விருந்து என்ற வடிவங்களில் பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு வரதட்சணை கொடுத்தல்
இத்தகைய திருமணங்களில் போய் கலந்து கொள்ளுதல்
தவ்ஹீதுவாதிகள் இத்தகைய திருமணங்களைத் தங்கள் வீட்டில் நடத்தாமல் இருப்பதில் ஓரளவு கட்டுப்பாடாக இருக்கின்றனர். தங்களது உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களில் போய் கலந்து கொள்வதில் தங்களது கொள்கையை இழந்து விடுகின்றனர்.
- இணை வைப்பாளரின் மரணம்
திருமணத்தைப் போன்று மரணமும் தவ்ஹீதுவாதிகளின் சறுகல் பாதையாக அமைகின்றது. ஒருவரது தந்தை அல்லது தாய் அல்லது பிள்ளைகள் தவ்ஹீது எதிரியாக இருந்து மரணத்தைத் தழுவினால் அவர்களுடைய ஜனாஸாவில் போய் கலந்து கொள்ளுதல். இதில் ஏகத்துவவாதிகள் பாசத்திற்கு அடிமைப்பட்டு அந்த இணை வைப்பாளர்களுக்குப் பாவ மன்னிப்புத் தேடி விடுகின்றனர்.
திருமணத்தைப் போன்று மரண விஷயத்திலும் அல்லாஹ்வின் வரம்பைத் தாண்டி விடுகின்றனர்.
இவர்களுடைய விஷயத்தில் தான் அல்லாஹ் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:113-114)
- இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல்
தவ்ஹீதுவாதியின் சறுக்கல்களில் மிக முதன்மையான இடத்தைப் பிடிப்பதில் இதுவும் ஒன்று! இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி ஒருபோதும் தொழக் கூடாது. இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.
ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9:18, 19)
மின் விளக்கு பொருத்துவது, அதைச் சரி செய்வது, மோட்டார் போட்டு தொட்டியில் தண்ணீர் சேமிப்பது போன்ற காரியங்கள் பள்ளியின் நிர்வாகமல்ல! பள்ளியில் நிர்வாகம் என்பதே தொழுகை நடத்துவது தான். இந்தத் தூய பணியைச் செய்வோர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றார் எனில் அவருக்குப் பின்னால் நின்று ஒருபோதும் தொழ முடியாது.
ஒரு தவ்ஹீதுவாதி இறந்து விட்டால் அவருக்காக இப்படிப்பட்ட ஒரு இமாம் தொழுகை நடத்தினால் அப்போதும் அவருக்குப் பின்னால் நின்று தொழ முடியாது. ஏனெனில் இவர்கள் ஷிர்க்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் கேந்திரங்களாகவும் அதைப் பன்மடங்காக உருவாக்கி, பரப்புகின்ற எந்திரங்களாகவும் செயல்படுகின்றனர். இவர்களெல்லாம் இப்ராஹீம் நபியின் பார்வையில் முழுமையாகப் பகைக்கப்பட வேண்டியவர்கள்.
மொத்தத்தில் மேற்கண்ட இணை வைப்பு மற்றும் இதர தீமைகளில் மூழ்கியிருப்போரைத் திருத்த வேண்டுமெனில் அதற்கான ஆயுதம் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு தான்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
இங்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓர் எல்லையை நிர்ணயிக்கின்றார்கள். அவர்கள் கையிலெடுத்த இந்தக் கொள்கைப் பிரகடனத்தை, திருக்குர்ஆனில் வேறோர் இடத்தில் அல்லாஹ் வெகுவாகப் பாராட்டுகின்றான்.
என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர் வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 43:26, 27
இந்தப் பகை, புறக்கணிப்பு ஏன்? எதற்காக? அசத்தியத்தில் இருப்பவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக! அதனால் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் இதற்கு ஓர் எல்லையை நிர்ணயிக்கின்றார்கள். “அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை” என்பது தான் அந்த எல்லை!
ஒரு கொள்கைவாதி சாகும் வரை அல்லாஹ்வுக்காகப் பகைத்துக் கொண்டு இருந்து விடுவார். ஆனால் ஓர் அசத்தியவாதியால் பெரும்பாலும் அப்படி இருக்க முடியாது.
இன்றைக்குத் தவ்ஹீதுவாதிகள் இரண்டு வகையான விளைவுகளையும் தங்கள் நடைமுறை வாழ்க்கையில் கண்டு வருகின்றார்கள். ஒரு தவ்ஹீதுவாதி அசத்தியவாதிக்குத் தக்க இறங்கிப் போனால் அசத்தியவாதி ஏறி மிதிக்கின்றான். அசத்தியத்தில் மேலும் மேலும் முன்னேறிச் செல்கின்றான். காலப் போக்கில் இந்தத் தவ்ஹீதுவாதி கரைந்து காணாமல் போய் விடுகின்றான்.
அதே சமயம், சத்தியவாதி தனது கொள்கையில் பிடிமானமாகவும், புறக்கணிப்பில் உறுதியாகவும் இருந்து விட்டால் கொள்கைத் தீயின் ஜுவாலையில் அசத்திய இரும்பு எரிந்து, தீயுடன் கலந்து தீயாகவே மாறி விடுகின்றது.
அதனால் அசத்தியவாதிகளை, அவர்கள் திருந்துகின்ற வரை அல்லாஹ்வுக்காகப் பகைப்பதும் புறக்கணிப்பதும் நமது கடமை! அவர்களின் உள்ளங்களில் ஏகத்துவத்தையும் இணக்கத்தையும் அன்பையும் போடுவது அல்லாஹ்வின் உரிமை!
இதைத் தான் திருக்குர்ஆன் நமக்கு உணர்த்துகின்றது.
உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 60:7)
எனவே இப்ராஹீம் நபியின் நினைவை மலரச் செய்யும் இம்மாதங்களில் அன்னாரின் ஏகத்துவ உறுதியைப் பேணுவோமாக! அவரைப் போன்ற தூய மரணத்தை அடைவதற்கு அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!