கஅபா வரலாறு
எம். ஷம்சுல்லுஹா
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, களேபரம், போர், குண்டு வெடிப்பு என உலகத்தின் அனைத்துப் பகுதிகளும் அமளி துமளியாகி அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் ஒரேயொரு ஊர் மட்டும் அமைதியிலும் அடக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்றது. சுற்றி எரியும் பயங்கர பாவத் தீ அங்கு மட்டும் பற்றாமல், பரவாமல் எப்படித் தள்ளி நிற்கின்றது? அந்தத் தீயை விட்டும் அந்த ஊர் தன்னை மட்டும் எப்படித் தற்காத்துக் கொண்டு தனித்து நிற்கின்றது?
சுற்றி எரியும் நெருப்பு வளையத்தின் நடுவே சுண்டைக்காய் அளவிலான அந்தப் பகுதி மட்டும் பற்றி எரியாமல் பத்திரமாக இருக்கின்றது. அந்தப் பகுதி எது? மானுட குலத்திற்கு வழிகாட்டும் அந்த மண்ணின் மகுடம் எது? அது தான் முதல் ஆலயத்தைத் தன்னகமாகக் கொண்ட புனித மக்கா நகரமாகும்.
மங்காத புகழ் கொண்ட அந்த மக்காவின் அற்புதத்தைத் தான் அல்குர்ஆன் அகில உலகத்தை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றது.
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
அல்குர்ஆன் 29:67
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 28:57
அமைதிப் பூங்காவை நோக்கி ஆண்டுக்கொரு பயணம்
இவ்வாறு உலக மக்கள் அனைவரின் அபய வாழ்விற்கு, அமைதி வாழ்விற்கு மாதிரி நகரமாக மக்கா திகழ்கின்றது. இதை, மாதிரி நகரமாகவும், அபாய நகரங்களுக்கு மத்தியில் அபய நகரமாகவும் அமைதிப் பூங்காவாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளதற்குக் காரணம் அங்குள்ள ஆலயம் தான்.
அது தான் உலகிலேயே முதன் முதலில் மக்களுக்கு ஒரு வணக்கத் தலமாக நிறுவப்பட்ட ஆலயமாகும். இதைப் பின் வரும் வசனம் தெரிவிக்கின்றது.
அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
அல்குர்ஆன் 3:96
அந்த ஆலயத்தை நோக்தித் தான் வல்ல இறைவன் ஆண்டு தோறும் மக்களை சென்று வரச் செய்கிறான். ஏன்?
அது உலக மக்களின் ஒருமைப்பாட்டுச் சின்னம்! வெள்ளையன், கறுப்பன் என்ற நிற வேறுபாடுகளை – ஆப்ரிக்கன், அமெரிக்கன் என்ற தேசிய வேறுபாடுகளை – ஆங்கிலேயன், அரபியன் என்ற மொழி வேறுபாடுகளை – ஆண்டான், அடிமை என்ற உயர்வு தாழ்வுகளை – மனிதர்களுக்கு மத்தியில் உடைத்தெறிந்து உலகிலுள்ள மனித குலத்தை ஆண்டுதோறும் அங்கு ஒன்று கூட்டுகின்றது.
நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் தான். உங்களுக்குள் வேறுபாடுகள் தலை காட்டக் கூடாது என்று இந்த முதல் ஆலயத்தில் ஒன்று கூட்டி உத்தரவு போடுகின்றது.
பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள். யாருக்கும் அங்கே முதலிடம் என்பது இல்லை.
மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.
அல்குர்ஆன் 22:25
ஒரு இந்தியனுக்கு இருக்கின்ற அதே உரிமை தான் மக்காவைச் சேர்ந்த அரபியனுக்கும் உண்டு என்று இந்த வசனம் பிரகடனம் செய்கிறது.
ஏற்றத் தாழ்வுகளின் கேந்திரமாக வழிபாட்டுத் தலங்களே அமைந்திருக்கும் சூழ்நிலையில் இஸ்லாம் மாத்திரமே அவற்றைச் சமத்துவத்தின் பிறப்பிடமாக மாற்றி அமைத்திருக்கிறது.
ஜனநாயகத்தின் சிகரம்
அறிவியலில் ஆகாயம் என்று பிதற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா மீது சாதியச் சகதி அள்ளி வீசப்படுகின்றது. அவரைக் கொலை செய்யச் சதி செய்ததாகக் கைது செய்யப் பட்டவர்கள் கூறும் காரணம், இன வெறி தான்.
ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ இந்தச் சாதியத்தை – சனாதன தர்மத்தை அடியோடு அழித்து சகோதரத்துவத்தை, மக்காவில் நடைபெறும் ஹஜ் எனும் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. அத்துடன் அந்தப் புனித நகரத்தின் சட்ட ஒழுங்கையும் பாதுகாக்கச் செய்கின்றது.
அந்நகரத்தில் எப்படி அமைதி நிலவுகின்றது? திரையரங்குகள், ஆபாச நடன நட்சத்திர ஆடலரங்குகள், மதுக் கடைகள், விபச்சார விடுதிகள், கூத்துக்கள், கும்மாளங்கள், கொலைகள், கொள்ளைகள் இல்லாமல் அந்த நகரம் எப்படி நகர்கின்றது என்பதையும் ஒரு கணம் உலக மனித இனத்தைச் சிந்தித்துப் பார்க்கச் சொல்கின்றது.
அபய பூமி! அமைதிப் பூங்கா
(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
அல்குர்ஆன் 105:1-5
இந்த அத்தியாயம் கஅபா ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனின் யானைப் படையை அழித்து, கஅபாவை இறைவன் காப்பாற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகும்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள், நகரங்கள் ஏதாவது ஒரு நாட்டின் ஆதிக்கத்தில் வந்திருக்கின்றன. ஆனால் மக்கா நகரம் மட்டும் எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்தின் கீழும் ஒரு போதும் வந்ததில்லை. ஏன்? இது அபய பூமி என்பதால்!
மனித இனம் இந்த அபய பூமியை உற்று நோக்கிப் பார்க்க வேண்டும் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது. அவ்வாறு உற்று நோக்கினால் போதும். இதன் பின்னணியில் இருப்பது திருக்குர்ஆன் தான் என்பதைத் தெரிந்து கொள்ளும்.
அதனால் தான் அந்தத் திருக்குர்ஆன் அமைதி, அபயத்திற்கு மறு பெயராகத் திகழும் மக்காவை கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் பார்க்கச் சொல்கின்றது.
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
அல்குர்ஆன் 29:67
இந்த வசனத்தின் கட்டளைப்படி நாம் அதிசய அற்புத ஆலயத்தை, அல்குர்ஆன் மற்றும் அதன் விளக்கமாக அமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பார்ப்போம்.
உலக முஸ்லிம்கள் அனைவரும் கஅபாவை நோக்கித் தொழுகின்றார்கள். அதை நோக்கித் தான் இந்த துல்கஃதா, துல்ஹஜ் மாதங்களில் பயணமாகிறார்கள். ஆம்! தூரத்தில் நின்று தொழுத மக்கள் அதன் பக்கத்தில் நின்று தொழப் போகின்றார்கள். அதைச் சுற்றிலும் உவகை பொங்க வலம் வரப் போகின்றார்கள். அவர்கள் கஅபாவை அங்கு வலம் வருகின்ற வேளையில் நாம் அதன் வரலாற்றை வலம் வருவது மிகவும் பொருத்தமாகும்.
வாருங்கள்! கஅபாவைப் பற்றி ஒரு வரலாற்று வலம் வருவோம். அதன் ஊடே மக்கா வெற்றியைப் பற்றியும் கண்டு வருவோம், இன்ஷா அல்லாஹ்!
தொன்மை வாய்ந்த தூய ஆலயம்
இந்தப் பூமியில் வாழ்ந்த முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஅபாவாகும். இது திருக்குர்ஆன் கூறும் வரலாற்று உண்மை!
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
அல்குர்ஆன் 3:96
உலகம் தோன்றி எத்தனையோ பில்லியன் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகம் என்ற சக்கரம் ஒரு முனையில் துவங்கி, மறு முனையான இறுதி நாளை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கின்றது. அது தனது இறுதிக் கட்டத்தை அடைந்து வருகின்றது.
காலமெனும் வெள்ளத்தின் வேகமான ஓட்டத்திலும் அதன் துவக்கத்திலிருந்து இது வரை நிலைத்து நிற்கின்ற எந்தவொரு தொன்மைச் சின்னத்தையும் உலகில் பார்க்க இயலாது.
காரணம், இந்தக் கால ஓட்டத்தில் எத்தனை கண்டங்களை கடல் கொண்டிருக்கின்றது! எத்தனை கண்டங்கள் மலைகளாக நிமிர்ந்திருக்கின்றன! அத்தகைய மலைகளில் ஒன்று தான் இமயம் என்று அறிவியல் ஆய்வு தெரிவிக்கின்றது.
இப்படிக் கால வெள்ளத்திலும், கரை புரண்டெழுந்து தரையை இரையாக்கிய கடல் வெள்ளத்தாலும், தலை கீழாகப் புரண்டெழுந்த மாற்றங்களாலும் அழிவைக் காணாத ஒரு புராதனச் சின்னம் ஒன்று உண்டென்றால் இந்தக் கஅபாவெனும் ஆலயம் தான்.
அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
அல்குர்ஆன் 22:29
இதைப் பழம் பெரும் தொன்மை வாய்ந்த ஆலயம் என்று அல்லாஹ் மிகப் பொருத்தமாகவே பட்டம் சூட்டியிருக்கின்றான்.
இந்தக் கஅபாவை வலம் வருபவர் அதை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். காரணம், அதன் உயரம் 39 அடி 6 இன்ச் ஆகும்.
முதலில் இந்த ஆலயம் இதை விடவும் அதிகமாக இருந்திருக்கலாம். காரணம், நபி ஆதம் (அலை) அவர்கள் 60 முழம் உயரமானவர்கள். அவரும் அவரது காலத்து மக்களும் இந்தக் கஅபாவிற்குள் சென்று தொழுகின்ற அளவில் இன்னும் உயரமாக இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் புனர் நிர்மாணம் செய்யும் போது அதன் உயரம் குறைக்கப்பட்டு, குறைக்கப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்க வேண்டும்.
புனர் நிர்மாணம் பெற்ற புனித ஆலயம்
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட அந்த முதல் ஆலயம், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்தில் புனர் நிர்மாணம் பெறுகின்றது. அதுவரை அந்த ஆலயத்தின் செயல்பாடு என்ன? ஆதம் நபி முதல் இப்ராஹீம் நபி வரை அதன் வரலாற்றுச் சங்கிலித் தொடர் என்ன? என்பதைப் பற்றி குர்ஆன், ஹதீஸில் குறிப்பு ஏதும் இல்லை.
ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்திற்குப் பின் அல்லாஹ் அதற்குரிய வரலாற்றுச் சங்கிலியின் பயணத்தை இன்று வரை தொடரச் செய்துள்ளான். இனி இந்த உலகம் அழிவைச் சந்திக்கும் நாள் வரை அது தொடரும்.
இப்போது நாம் பார்க்க வேண்டியது இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலம் வரை உள்ள வரலாற்றைத் தான். அந்த வரலாற்றுச் சுரங்கத்தில் பல்வேறு பாடங்கள், படிப்பினைகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.
இறைவனின் இனிய நண்பர் இப்ராஹீம்
எல்லாம் வல்ல அல்லாஹ் முதன் முதலில் இந்தப் பூமியில் எழுப்பிய அந்த ஆலய இடத்தை அப்படிப் பாதுகாத்து வைத்திருந்தான். அதற்குப் புத்துயிர் கொடுக்க நாடி, அந்தப் பணியை ஒருவரிடம் கொடுக்க விரும்பினான். அவர் யாரென்றால் அந்த இறைவனுக்காகத் தம்மையே அர்ப்பணம் செய்யத் தயாரானவர். ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அனைத்துத் தியாகங்களையும் செய்தவர். அவரிடம் தான் அந்தப் பொறுப்பை வழங்குகின்றான். அவர் தான் அவனது நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
அவனுக்காகவே காலம் முழுவதும் ஓயாது, உறங்காது உழைத்த உத்தமருக்கு முதுமைப் பருவம் ஏற்பட்ட பின்பு குழந்தைப் பாக்கியம் இல்லை. அதற்காக அவர் அல்லாஹ்விடம், “என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக!” (37:100) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அவரது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளும் வேளை வருகின்றது. அல்லாஹ் அவருக்கு ஹாஜர் என்ற பெண்ணைத் துணைவியாக அளிக்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். “அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்!” என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் செய்து, “இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?’ எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) “என் சகோதரி‘ என்று சொன்னார்கள்.
பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள், “நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லை‘ என்று சொன்னார்கள்.
பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்க சுத்தி (உளூ) செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!‘ என்று பிரார்த்தித்தார்.
உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, “இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்‘ என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து அங்க சுத்தி செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!‘ என்று பிரார்த்தித்தார்.
உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, “இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்‘ என்று பிரார்த்தித்தார்.
இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பி இருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள்‘ என்று (அவையோரிடம்) சொன்னான்.
சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்தக் காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2217
அன்பளிப்பாகக் கிடைத்த ஹாஜர் மூலமாக அல்லாஹ், இஸ்மாயீல் என்ற குழந்தையை அவர்களுக்கு அளிக்கின்றான். இதைத் தான் அவர்கள் நன்றிப் பெருக்குடன் அல்லாஹ்விடம் சொல்லிக் காட்டுகின்றார்கள்.
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.
அல்குர்ஆன் 14:39
இப்போது இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் மக்காவின் பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப, நீண்ட நாளுக்குப் பிறகு பிறந்த – கொஞ்சி மகிழ வேண்டிய குழந்தை இஸ்மாயீலை, கொண்ட மனைவியுடன் மக்கா பாலைவனத்தில் கொண்டு போய் விடுகின்றார்கள். அங்கு தான் அவர்களுக்குத் தொன்மை வாய்ந்த தூய ஆலயத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
“எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 22:26
பகல் நேரத்தில் பற்றி எரியும் மணல் துகற்கள்! மனித சஞ்சாரம் இல்லாத, மரம் செடி இல்லாத பொட்டல் பள்ளத் தாக்கு! நீர் ஓடை அல்ல, வாடை கூட இல்லாத பாலைவனம்!
இத்தகைய பாலைவனத்தில் தான் பகுத்தறிவுப் பகலவன் இப்ராஹீம் நபியவர்கள் தம் அருமை மகன் இஸ்மாயீலை, பால் முகம் பார்த்துப் பார்த்து உள்ளத்தில் பால் வார்க்கின்ற செல்லக் குழந்தையை, ஏகத்துவத்தின் குலக் கொழுந்தை விட்டுச் செல்கிறார்கள்.
“ஏன் என்னை விட்டு மனைவி மக்களைப் பிரிக்கின்றாய்?’ என்று எதிர்க் கேள்வியை இறைவனிடம் கேட்காமல், அந்த ஐயப்பாட்டிற்கு எள்ளளவு கூட உள்ளத்தின் அடித்தளத்தில் இடம் கொடுக்காமல் பாதுகாப்பில்லாத பரந்த மணற்பரப்பு வெளியில் தன் மனைவியையும் மழலையையும் விட்டுச் செல்கிறார்கள்.
இதோ! இறைவனிடம் அவர்கள் தொடுக்கின்ற, உள்ளத்தைத் தொடுகின்ற பிரார்த்தனைகள்! உண்மையில் அவை அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்பட்ட இரத்தின வரிகள்!
“இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!
எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)
அல்குர்ஆன் 14:35-41
அவர்கள் செய்த இந்தப் பிரார்த்தனை அனைத்துமே ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை! அவை அனைத்துமே நம்முடைய கவனத்தை ஈர்ப்பவை! நம்முடைய உள்ளங்களை உணர்ச்சிப்பூர்வமாகத் தொடுபவை!
பாதுகாப்பில்லாத பாலைவனத்தில் பச்சிளம் பாலகனையும் மனைவியையும் விட்ட அவர்கள்,
- தம் சந்ததிக்கு எந்த அபாயமும் ஏற்படாத வகையில் அந்த இடத்தை, அந்த ஊரை அபய பூமியாக ஆக்கி விடு என்று பிரார்த்திக்கின்றார்கள்.
- என்னுடைய சந்ததியையும், மனைவியையும் நீர் வளமில்லாத, வேளாண்மை விவசாயம் இல்லாத நிலப்பகுதியில் குடியமர்த்தி இருக்கிறேன்; எனவே நீர் வளத்தை வழங்கு என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
- இங்கு இருப்பது உனது புனித ஆலயம் மட்டும் தான்; மனித சஞ்சாரமில்லை. உன்னைத் தொழுவதற்காகக் கட்டியிருக்கின்ற இந்த ஆலயத்தில் மனித சஞ்சாரத்தை ஏற்படுத்து என்று பிரார்த்திக்கிறார்கள்.
இந்தப் பிரார்த்தனைகளை அல்லாஹ் எப்படி அங்கீகரித்து, நிறைவேற்றுகின்றான் என்பதை இந்த வரலாற்றுத் தொடரின் ஊடே நாம் தெளிவாகப் பார்க்கலாம்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், ஆலயம் என்றால் அதன் அருகே மனித சஞ்சாரம் வேண்டும். மனித சஞ்சாரத்திற்கு இன்றியமையாத நீர் வளம் வேண்டும்.
இவ்விரண்டில் மனித சஞ்சாரம் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்ப வடிவில் குடியேறி விடுகின்றது.
மனிதன் ஒரு நகரை அமைக்க வேண்டும் என்றால் முதலில் நீர் வளத்தை ஏற்படுத்தி விட்டுத் தான் பிறகு மனித வளத்தைக் கொண்டு வருவான்.
ஆனால் இது மனித ஏற்பாடல்ல! இறைவனின் ஏற்பாடு! எனவே முதலில் மனித வளத்தைக் கொண்டு வந்து வைத்து விட்டு, அதன் பின் நீர்வளத்தை ஏற்படுத்துகின்றான்.
இதன் மூலம் அந்த ஆலயத்தை ஏகத்துவத்தின் இணையற்ற மையமாக நிறுவுகின்றான்.
வளரும் இன்ஷா அல்லாஹ்