கை கழுவுதலை கை கழுவாதீர்
மேற்கு வங்க மாநிலத்தில், பி.சி.ராய் மருத்துவமனையில் இறந்த 18 குழந்தைகள் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 36 குழந்தைகள் இறந்தனர். நவம்பர் மாதத்திலும் கூட இதுவரை அந்த மாநிலத்தில் மால்டா மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 22 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றாலும், இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் சிறார் மரணங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. காரணம், பிகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் இதுவரை 82 குழந்தைகள் இறந்துவிட்டனர். புத்தகயா பகுதியில் தான் இந்த மூளைக் காய்ச்சல் மிக அதிகமான குழந்தைகளைத் தாக்கியுள்ளது. 2009-ம் ஆண்டில் இதே பகுதியில் 42 குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளனர்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணம் ஓர் ஊரில் அல்லது ஒரு மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் நிகழும் போது தான் இத்தகைய மரணங்கள் மக்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. மேற்கு வங்கம், பிகார் மட்டுமன்றி இத்தகைய குழந்தைச் சாவுகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே நடந்துகொண்டிருக்கின்றன.
குழந்தை மரணங்களுக்கு மிக முக்கிய காரணம், குழந்தை மருத்துவப் பிரிவுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. நோய்த் தடுப்பூசிகள் முறையாகப் போடப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் அலட்சியம் ஆகியவை தான்.
எந்த மாநிலம் அல்லது எந்த அரசின் ஆட்சி என்ற போதிலும், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மருத்துவர் பணியிடங்களும் பிரிவுகளும் மிகக் குறைவு தான். பொது மருத்துவர் தான் குழந்தைகளின் நோய்க்கும் சிகிச்சை அளிப்பவராக இருக்கிறார். இதையும் மீறி, அந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு இருந்து, அதற்கு மருத்துவரும் இருப்பாரேயானால், அவருக்கு ஊருக்குள் தனியாக கிளினிக் இருக்கும். அரசு மருத்துவமனைக்கு அவரது சேவை நேரம் மிகக் குறைவாகவே இருக்கும். இத்தனை சிக்கல்களையும் மீறித் தான் இந்தியாவில் குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்து வருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை 2011-ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 2008-ம் ஆண்டில் 5 வயதுக்கு உள்பட்ட 3.71 லட்சம் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் இறந்துள்ளனர். தற்போது மேற்கு வங்கத்தில் இறந்துகொண்டிருக்கும் குழந்தைகளின் மரணத்துக்கும் அதிகளவு காரணம் நிமோனியா காய்ச்சல் தான்.
யுனிசெப் அறிக்கையின்படி, 2005-ம் ஆண்டில் இந்தியாவில் இறந்த, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23.5 லட்சம்! இது உலகம் முழுவதிலும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 20 விழுக்காடு!
இந்தியாவில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் பெற்றோர் 69 விழுக்காடு தான். மற்ற 31 விழுக்காட்டினர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர். ஒருவேளை, குழந்தைகளுக்கு அவரவர் தெய்வக் குறியீடுகளைப் போட்டு காப்பாற்றும் பொறுப்பைப் படைத்தவனிடமே விட்டுவிடுகிறார்கள் போலும். மருத்துவமனை அல்லது கிளினிக் வரும் 69 விழுக்காடு குழந்தைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பெறும் குழந்தைகள் 13 விழுக்காடு தான்!
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நர்சரி பள்ளிகள் மற்றும் விளையாடும் இடங்களில் தான் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, இக்குழந்தைகள் தங்கள் உணவை உண்ணும் முன்பாக கைகளைக் கழுவிவிட்டு உண்ண வேண்டும் என்கின்ற சிறிய நல்வழக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறது யுனிசெப். இதற்காக பல கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி, மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். உலக கைகழுவும் நாள் என்று அக்டோபர் 15-ம் தேதி கடைப்பிடிக்கிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு கைகளை சோப்புப் போட்டு எப்படி கழுவுவது என்று சொல்லித் தரப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தில் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சோப்பும் துடைத்துக் கொள்ள ஒரு துண்டும் கூடக் கொடுப்பதில்லை. ஆனால், நிதி மட்டும் முழுமையாகச் செலவாகிவிடுகிறது. தண்ணீரில் கை கழுவினாலே நிதி செலவாகிவிடுகிறதே, அது எப்படி என்று யாரும் கேட்பதில்லை. குழந்தைகளுக்கும் கேட்கத் தெரியாது.
நிமோனியா அல்லது மூளைக் காய்ச்சல் போன்ற எந்தவொரு நோய்த் தொற்றுக்கும் அடிப்படைக் காரணம், நம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பது தான். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்குக் குறைந்தது 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதைவிடச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை எந்தவொரு தடுப்பூசியாலும் தடுப்பு மருந்தாலும் அளித்துவிட முடியாது என்கிறது யுனிசெப் நிறுவனம்.
ஆனால், இந்தியாவில் குழந்தைக்குத் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுப்போர் 46 விழுக்காடு தான் என்று யுனிசெப் சொல்கிறது. இந்தியாவில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமும் கொண்டாடப்படுகிறது. இதற்கும் அரசு நிறைய பணம் செலவிடுகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் அளவுக்கு ஆரோக்கியமான தாய்மார்கள் இல்லாமல் இருப்பது கூட அதற்குக் காரணம் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?
பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து, குழந்தைகளுக்குச் சுகாதாரமான பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தால் 90 விழுக்காடு காய்ச்சல்களைத் தடுத்துவிட முடியும். நமது நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைக் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நிறுவவும் பராமரிக்கவும் மட்டுமே செலவிட்டாலே போதும், நாளைய தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாகவும், குழந்தைச் சாவுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படவும்கூடுமே, இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா தெரிய வேண்டும்?
“என்ன காரணம்?” என்ற தலைப்பில் 16-11-2011 அன்று தினமணி நாளிதழில் வெளியான தலையங்கத்தை மேலே பார்த்தீர்கள்.
அடுத்து, ஹிந்து ஆங்கில நாளேட்டில் 14-10-2011 அன்று Don’t wash your hands off hand washing என்ற தலைப்பில் வெளியான செய்தியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
கை கழுவுங்கள் என்று அடிக்கடி சொல்லும் வார்த்தையைக் கேட்டு கொஞ்சம் கடுப்புடன் தான் குழந்தைப் பருவத்தில் கைகளைக் கழுவியெடுப்பீர்கள். ஆனால் கை கழுவுதல் என்பது செலவில்லாத மிகப் பயனுள்ள நோய் தடுப்பு வழிமுறையாகும்.
குழந்தைகள் தான் முதன்முதலில் வயிற்றுப் போக்கு, சுவாசக் குழாய் தொற்று நோய் ஆகியவற்றிற்கு அதிகம் பலியாகி விடுகின்றனர். குழந்தைகளின் மரணத்திற்கும் இது தான் முக்கியக் காரணம். அவர்களின் கைகளில் வைரஸ், தொற்று நோய் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. கைகளைக் கழுவாததால் அவர்களிடம் நோய்கள் எளிதில் தொற்றி விடுகின்றன. அதனால் அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவ வேண்டும். இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் கொண்டு வருவதற்காக யூனிசெப் நிறுவனம் அக்டோபர் 15ஆம் தேதியை உலக கைகழுவும் தினமாக அனுஷ்டிக்கின்றது. அந்நாளில் இந்தியாவில் பள்ளிக்கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கு வெந்நீர், சோப் வைத்து கழுவும் பயிற்சியை அளிக்கின்றது.
பள்ளிக்கூடங்களில் வாராந்திர சுகாதார நிகழ்ச்சிகளை மாநில நல்வாழ்வுத் துறை நடத்துகின்றது என்று அதன் துணை இயக்குனர் வி. வீரபாண்டியன் தெரிவிக்கின்றார். இந்நிகழ்ச்சியில் “கை கழுவுதல்’ தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் இதோ:
பள்ளி மாணவர்களுக்குக் கை கழுவுகின்ற நுட்பம் இந்நிகழ்ச்சியில் கற்றுக் கொடுக்கப்பட்டது. வயிற்றுப் போக்கு, மூச்சுக் குழாய் (நிமோனியா), காற்றினால் பரவுகின்ற பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு அவசியம் என்பதும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
உள்ளங்கைகள், நக இடுக்குகள் ஆகியன எல்லாம் நன்கு கவனம் செலுத்தப்பட்டு வெந்நீர், சோப்பு வைத்துக் கழுவப்பட வேண்டும்.
பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது கதவுகளின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தொடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
“தாய்மார்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியர்கள், குழந்தைகளிடம் கிருமிகள், வைரஸ்கள் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய ஒரே வழிமுறை கைகளைக் கழுவுவது தான். இது நீரினால் ஏற்படும் தொற்று நோய்களைப் பாதியளவுக்குத் தடுத்து விடும்” என்று குழந்தை நல மருத்துவ சங்கத்தின் செயலாளர் தெரிவிக்கின்றார். இது வயிற்றுப் போக்கு, டைபாயிட், வயிற்றுப் புழுக்கள் உள்ளிட்ட நோய்கள் வராமல் காக்கின்றன.
பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய அணைச் சீலைகள் (டயாப்பர்) போன்றவற்றை மாற்றிய பிறகு கைகளை கழுவிக் கொள்ள வேண்டும்.
கைகளைக் கழுவும் பழக்கம் பெண்களின் சுகாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக மாதவிலக்கு நேரங்களில் கறை பட்ட துணிகளைக் களையும் போதும், அடுத்த புதிய மாற்றுத் துணி அணியும் போதும் கண்டிப்பாகக் கைகளைக் கழுவியாக வேண்டும். காரணம், இது இன உறுப்புகளில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் என்று மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது Don’t wash your hands off hand washing என்ற தலைப்பில் ஹிந்து ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியாகும்.
மனிதன் தன் வாழ்க்கையில் தூய்மை, துப்புரவை உச்சக்கட்டமாகக் கடைப்பிடிக்க வேண்டும்; குறிப்பாகக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதை தினமணி தலையங்கத்திலிருந்தும், ஹிந்து நாளேட்டின் செய்தியிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.
தினமணி தலையங்கம் குறிப்பிடுகின்ற இரண்டு நோய்களில் ஒன்று மூளைக் காய்ச்சல்; மற்றொன்று நிமோனியா!
நிமோனியாவிற்குத் தீர்வைச் சொல்கின்ற இந்தக் கட்டுரை மூளைக் காய்ச்சலுக்குத் தீர்வைச் சொல்லவில்லை. அது நிமோனியாவிற்குச் சொல்கின்ற தீர்வை இஸ்லாம் அன்றே சொல்லி விட்டது.
மூளைக் காய்ச்சலுக்கும் இஸ்லாம் தீர்வைச் சொல்கின்றது. இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அதாவது மனிதனைப் படைத்த அதே சக்தி தான் அவனுக்குரிய வாழ்க்கை நெறியை, மார்க்கத்தையும் படைத்திருக்கின்றது. அதனால் மனிதனுக்கு எது நன்மை பயக்கும்? எது தீமை விளைவிக்கும் என்பது அந்தச் சக்திக்கு, அதாவது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். அதனால் அவன் அமைத்த அந்த நெறிக்குத் தக்க வாழ்கின்ற போது மனிதன், தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, துப்புரவாக வைத்துக் கொள்கின்றான்.
இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கம் மனிதனையும் சுத்தமாக இருக்கச் சொல்கின்றது; அவன் வாழ்கின்ற சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைக்கச் சொல்கின்றது.
நிமோனியாவும் தாய்ப்பாலும்
நிமோனியாவுக்குப் பரிகாரம் தாய்ப்பால் என்று தினமணி தலையங்கமே தெரிவிக்கின்றது. உலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; அதுவும் இரண்டாண்டு காலம் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றது.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
அல்குர்ஆன் 31.:14
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.
அல்குர்ஆன் 2:233
வேதம் என்று சொன்னால் தத்துவம், துறவு, நடைமுறைக்குச் சாத்தியமற்ற சமாச்சாரங்கள் அடங்கியதாகத் தான் இருக்கும். ஆனால் திருக்குர்ஆன் நடைமுறைக்கு எளிதான வாழ்க்கை நெறியாகும். இயற்கைக்கு ஒத்த நெறியாகும். அதனால் இத்தகைய இயற்கை வழியை இயல்பான வழியைக் காட்டுகின்றது.
இன்று மக்கள் மனிதப் பால், தாய்ப்பால் கொடுப்பதற்குப் பதிலாக மாட்டுப் பால், மாவுப் பால் கொடுக்கின்றனர். இது குழந்தையின் குடலுக்கு ஒத்துவருவதில்லை. மாறாக ஒவ்வாமையையும் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றது.
ஒரு குழந்தை பிறந்ததும் ஓர் அரை மணி நேரம் அது குடிக்கின்ற தாய்ப்பால் தான் அதன் வாழ்நாள் முழுவதற்கும், ஆயுளின் இறுதி வரைக்கும் தாக்குப் பிடிக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தியாக அமைந்து விடுகின்றது. அத்தகைய இயற்கை அருமருந்தாக தாய்ப்பால் அமைந்திருக்கின்றது. அதனால் தான் அது நிமோனியாவை விட்டும் காக்கின்ற காவல் அரணாக நிற்கின்றது.
இதையெல்லாம் தெரிந்த இறைவன், மனிதப் பாலைக் குடிக்க, கொடுக்கச் சொல்கிறான். பெண்களுக்கு இயற்கையிலேயே நோய் அல்லது பலவீனம் போன்ற இடையூறுகள் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் போது கூட மாற்றுக்காக மாவுப் பாலையோ, மாட்டுப் பாலையோ கொடுக்கச் சொல்லாமல் மனிதப்பாலையே கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது.
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும்.
அல்குர்ஆன் 65:6
இன்று தாய்ப்பால் கொடுக்கும் பழக்கும் வெகுவாகக் குறைந்து வருகின்றது. பெற்ற தாயே தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முன்வருவதில்லை. தங்கள் அழகு கெட்டு விடும் என்று கருதி தாய்ப்பால் கொடுக்காமல், தங்கள் குழந்தைக்குத் தாங்களே எதிரிகளாக ஆகி விடுகின்றனர். இதில் பால்குடித் தாய் மூலம் குழந்தைக்குப் பாலூட்டுவதெல்லாம் கற்பனையே செய்ய முடியாத நிலை.
மார்க்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாகத் திகழும் தவ்ஹீத் ஜமாஅத் தான் இதற்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குழந்தைகளுக்கு பால்குடித் தாய் மூலம் பால் கொடுக்கும் வழிமுறையை உயிர்ப்பிக்க வேண்டும்.
அண்மையில் மேலப்பாளையத்தில் ஏகத்துவப் பிரச்சாரப் பணி செய்து கொண்டிருந்த ஆலிமா ஹஜ் பாத்திமா என்ற கொள்கைச் சகோதரி, குழந்தை பெற்றெடுத்து 14 நாட்களில் மூளையில் இரத்தக் கட்டு ஏற்பட்டு இறந்து விட்டார். பிறந்து பதினான்கு நாட்களில் தாயை இழந்த அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கு நமது ஜமாஅத்தில் யாரேனும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, நகரத் தலைவர் ரோஷன் பொறுப்பேற்றுக் கொண்டு தனது மனைவி மூலம் பால் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
பன்றியும் மூளைக் காய்ச்சலும்
குழந்தைகளின் மூளைக் காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமே பன்றிகள் தான். பன்றிகளில் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சுகின்ற கொசு, குழந்தையை வந்து கடிக்கும் போது ஏற்படுவது தான் மூளைக் காய்ச்சல் என்பது அறிவியல் உலகம் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.
கிறித்தவ மதத்தில் பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டதாகும். இன்னும் சொல்லப் போனால் பன்றி இறைச்சி சாப்பிடுவதைப் புனிதம் என்று கருதும் கிறித்தவர்களும் இருக்கிறார்கள். இந்து மதத்தினரும் பன்றி இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆனால் இஸ்லாம் அதைச் சாப்பிடுவதற்குத் தடை செய்வதுடன் அதை விற்பதற்கும் தடை செய்கின்றது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன் பன்றிப் பண்ணைகள் வளர்ப்பதற்கும் ஊக்குவிக்கின்றனர். என்ன செய்வது? மது, வட்டி போன்ற சமூகக் கேடுகளை விளைவிக்கும் தீமைகள் இவர்களுக்கு அலங்காரமாகத் தெரிவது போன்று இந்தக் கேடும் அலங்காரமாகத் தெரிகின்றது. இதை ஒழிக்க வேண்டுமெனில் இஸ்லாமிய அரசு தான் அமைய வேண்டும்.
தாய்மையும் தூய்மையும்
அடுத்து மகப்பேறு மருத்துவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது பாலூட்டும் பெண்கள், பாலூட்டுவதற்கு முன்பு தங்களது கைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் என்று தான்.
பொதுவாகப் பிள்ளை பெறுகின்ற தாய்மார்களுக்கு இரண்டு விதமான இயற்கை உபாதைகள் ஏற்படுகின்றன.
- பிரசவத்திற்குப் பின் நாற்பது நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான நாட்களுக்குத் தொடர்கின்ற உதிரப் போக்கு மற்றும் வழக்கமான மாத விலக்கு.
- குழந்தைகள் கழிக்கின்ற மல ஜலம்.
இந்த இரு கட்டங்களிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதில் பிரசவ இரத்தம் என்பது கொஞ்ச நாட்களுக்குத் தான். ஆனால் மாத விலக்கு என்பது மாதந்தோறும் தொடர்கின்ற இயற்கைச் சிரமம்.
குழந்தைகள் கழிக்கின்ற மலஜலமும் அன்றாடம் தொடர்கின்ற ஒன்று தான். இக்குழந்தைகள் தாங்களாக இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி, தாங்களே சுத்தம் செய்கின்ற வரை தொடர்கின்ற ஒரு சிரமம் தான்.
இதில் தாய்மார்கள் அதிகம் தூய்மை காக்க வேண்டும். அவர்கள் காக்கும் தூய்மை, குழந்தைகளை வைரஸ் கிருமிகளின் தாக்குதலிலிருந்து காக்கும்.
தூய்மையைக் காட்டும் தூய நெறி
தாய்மை தாக்க வேண்டிய இந்தத் தூய்மையை, தூய நெறியான இஸ்லாம், பிள்ளைகளை வளர்க்கும் போதே பெற்றோர்களுக்குக் காட்டித் தருகின்றது.
இறை நம்பிக்கையாளர்களின் அன்னையார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.
நூல்: புகாரி 222
குழந்தையை வளர்க்கும் போது இந்தத் தூய பண்பைச் சொல்லித் தருகின்றது. இதன் மூலம் மலம், ஜலம் அசுத்தம் என்பதை உணரச் செய்து குழந்தைகள் வளர, வளர அவர்களுடன் தூய்மை உணர்வையும் சேர்த்தே வளர்க்கின்றது.
உணவுக்கு வலது கை
உண்ணுதல், பருகுதல் போன்று அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையைக் கொண்டே செய்ய வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தருகின்றது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்துகொள்ளும்போதும் தலைவாரிக் கொள்ளும்போதும் சுத்தம் செய்யும்போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.
நூல்: புகாரி 168
வலது கைகளையே பயன்படுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியன உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல்: புகாரி 5376
சிறுநீர் கழிக்கும் போது வலது கையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் போதிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது பிறப்புறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புகாரி 154
இயற்கை மார்க்கத்தின் இனிய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த இயற்கை நெறியில், உணவுக்கு வலது கை, அசுத்தம் களைவதற்கு இடது கை என்ற நாகரீகப் பழக்கத்தை, நாசூக்கான நடைமுறையை நமக்குக் கற்றுத் தருகின்றார்கள். உணவு உண்ணும் போது கிருமிகள் உட்புகுவதை விட்டும் இதன் மூலம் காக்கச் செய்கின்றார்கள். இந்த இனிய மார்க்கத்தைப் பின்பற்றுவோர் தன்னையும் தன் சுற்றுப்புறச் சூழலையும் காப்பவராகி விடுகின்றார்.
இஸ்லாம் ஒரு தூய்மை மார்க்கம்
தூய்மைக்கு மறு பெயர் இஸ்லாம்; இஸ்லாத்திற்கு மறு பெயர் தூய்மை என்று கூறி விடலாம். இஸ்லாத்தின் ஆதார நூலான திருக்குர்ஆன் அருளப்படும் ஆரம்ப கட்டத்திலேயே ஆடைத் தூய்மையைப் பற்றித் தான் அது கட்டளையிடுகின்றது.
உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! (அல்குர்ஆன் 74:4)
ஒவ்வொரு முஸ்லிமும் ஐந்து வேளை தொழுவது கட்டாயக் கடமையாகும். அந்த ஐந்து வேளை தொழுகையின் போது, கை, கால்கள், முகத்தைக் கழுவியாக வேண்டும். அவ்வாறு கழுவாமல் தொழ முடியாது. இந்தத் தூய்மையும் துப்புரவும் கிருமிகள் அண்டவோ, அணுகவோ விடாமல் மனிதனைக் காக்கின்றது. இந்தக் கிருமிகளின் பிடியிலிருந்து மனித சமுதாயம் காக்கப்பட வேண்டுமானால் மனிதனுக்கேற்ற, மண்ணுக்கேற்ற இஸ்லாம் தான் தீர்வு என்பதைத் தெளிவாக உணரலாம்.