ஹஜ் – உம்ரா கேள்வி பதில்

ஹஜ் – உம்ரா கேள்வி பதில்

ஹஜ்ஜுக்குரிய காலமான ஷவ்வால் மாதம் துவங்கியதையொட்டி, ஹாஜிகள் ஹஜ்ஜுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டனர். நோன்புப் பெருநாள் முடிந்த கையோடு ஹஜ் செல்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.

எனவே அவர்களுக்கும், இன்னும் ஹஜ்ஜைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த ஏகத்துவ இதழ் ஹஜ் – உம்ரா கேள்வி பதில் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது.

இந்தக் கேள்வி பதில் சிறப்பிதழ் உதயமாவதற்கு, ஃபிரான்ஸைச் சேர்ந்த உம்மு நஃபீஸ் என்ற சகோதரி ஒரு தூண்டுகோலாக இருந்தார்.

ஏகத்துவம் இதழில், “தூதர் வழியில் தூய ஹஜ்’ என்ற தலைப்பில் ஹஜ் சிறப்பிதழ் முன்பு வெளியானது. அதில் ஹஜ் தொடர்பான முழுமையான விளக்கங்கள் இடம்பெற்றன. அதைப் படித்துவிட்டு எழுந்த சந்தேகங்களை அவர் ஏகத்துவத்திற்கு அனுப்பி வைத்தார்.

அதற்கான பதில் அவருக்கு அப்போதைக்கு சுருக்கமாக எழுதி அனுப்பப்பட்டது. இப்போது அந்தக் கேள்விகளுக்கு முழு விளக்கங்களைத் தாங்கி, ஆதாரங்களுடன் இந்த இதழ் மலர்ந்திருக்கின்றது.

இந்தக் கேள்விகளுடன் ஹஜ், உம்ரா தொடர்பாக ஹஜ் பயிற்சி வகுப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகள்,  இணைய தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் போன்றவையும் தொகுத்து அவற்றிற்கும் பதிலளிக்கப்பட்டுள்ளன.

இந்த இதழ் ஹஜ், உம்ரா கேள்வி பதிலைத் தாங்கி வருவதால் வழக்கமாக இடம்பெறும் தொடர்கள், கட்டுரைகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இஹ்ராம்

கேள்வி: 1

துல்ஹஜ் மாதத்திற்கு முன்பே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் பலமுறை உபரியான உம்ராக்கள் செய்யலாமா? பல உம்ராக்கள் செய்யும் போது ஒவ்வொரு உம்ராவையும் முடித்தபிறகு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமா? அல்லது விடுபடாமலே தொடர்ந்து பல உம்ராக்கள் செய்யலாமா? இஹ்ராமிலிருந்து விடுபட்டு, மீண்டும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்?

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர்.

இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடை செய்யவில்லை.

ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்குப் போதுமானது.

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)என்றார்கள்.

அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிரஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிரஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிரஎன்றார்கள்.

 அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 46

கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை “நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர’ என்ற நபிகளாரின் வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)

ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாகப் பேசும் போது, “நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்’ என்று நன்மைகளை கூடுதலாகச் செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடுதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் (1463)

எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது.

உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஸயீ செய்து, முடியைக் களைந்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது. தலைமுடியை மழிப்பது அல்லது குறைப்பது தான் உம்ராவின் முடிவாகும்.

இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது கத்தரித்ததும் உம்ரா செய்பவர் அதிலிருந்து விடுபட்டு விடுகின்றார். இதன்பிறகும் அதே உம்ராவில் நீடித்தல் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.

ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.

வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் அவர், தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

நூல்: புகாரி 1529

ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது.

மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.

நூல்: புகாரி 319

வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1788

நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

துல்ஹஜ் பிறை 1 வரை பல உம்ராக்கள் செய்ய விரும்பினால் மேற்கண்ட முறைப்படித் தான் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு உம்ராவிலிருந்து விடுபட்டு, மறு உம்ரா செய்ய முடியுமே தவிர முதலில் செய்த உம்ராவில் இருந்தவாறே அடுத்த உம்ராவைச் செய்ய முடியாது.

கேள்வி: 2

இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் கட்டவேண்டுமா? அல்லது இஹ்ராம் கட்டும் எல்லைக்கு வந்து, நிய்யத் சொல்லும் போது தான் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டுமா?

இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள். (நூல்: பைஹகீ சுனனுல் குப்ரா 9258)

கேள்வி: 3

இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா? ‘லப்பைக்க உம்ரதன்’ அல்லது ‘அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன்’ என்பது மட்டும் போதுமானதா?

கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்என்றார்கள். அதற்குத் தோழர்கள் “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால் அதை – (குர்பானிப் பிராணியை)… அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாதுஎன்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 1568

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்யப் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஹஜ்ஜை மட்டுமே மனதில் எண்ணியிருந்தனர். பின்னர் அவர்கள் மக்கா சென்றதும் ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அப்போது அவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துக் கொண்டனர். இந்த அடிப்படையில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து கிரான் அடிப்படையில் செய்பவர்கள் செய்பவர்கள், “லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்ஜத்தின் வ உம்ரத்தின்’ என்றோ, “லப்பைக்கல்லாஹும்ம பி உம்ரத்தன் வ ஹஜ்ஜத்தன்’ என்றோ சொல்லிக் கொள்ள வேண்டும்.

தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்’ என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்’ என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இந்த வார்த்தைகளைத் தவிர்த்து, “நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று சிலர் கூறுகின்றர். இது பித்அத்தாகும்.

கேள்வி: 4

இஹ்ராம் அணிந்த பின் தொழ வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) “துல்ஹுலைஃபாவில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, “பைதாஉஎனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 2184

இதுபோன்று தொழுகை நேரங்களுக்குப் பிறகு நம்முடைய இஹ்ராம் யதார்த்தமாக அமைந்து கொண்டால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். ஆனால் அதே சமயம் இப்படி தொழுகை நேரத்திற்குப் பின்னர் தான் அமைக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: 5

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு  இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு தொழ வேண்டும் என்ற உத்தரவு வந்தது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!எனக் கட்டளையிட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன்.

நூல்: புகாரி 1534

இதன்படி துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.

கேள்வி: 6

இஹ்ராமுக்கு முன் நகம், முடிகளைக் களைந்து கொள்ள வேண்டுமா? துல்ஹஜ் பிறை பிறந்த பிறகு ஊரிலிருந்து புறப்படுபவர்கள் (குர்பானிக்காக) பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா?

இஹ்ராமுக்கு முந்தி நகம், முடிகளைக் களைய வேண்டும் என்று எந்த ஹதீசும் வரவில்லை. ஆனால் இஹ்ராமுக்குப் பின்னால் இவற்றைக் களைகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்பு களைந்து கொள்ள வேண்டும். துல்ஹஜ் பிறை 1க்குப் பிறகு புறப்பட நேர்ந்தால் அப்போதும் முடி, நகம் களைந்து கொள்ளலாம். குர்பானிக்காக முடி, நகம் களையக்கூடாது என்பது ஹாஜி அல்லாதவர்களுக்குரிய சட்டமாகும். ஹாஜிகளுக்கு இஹ்ராம் கட்டிய பிறகு தான் இவை தடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: 7

ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு சொல்லக்கூடிய “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று ஹதீஸ் உள்ளதா?

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்என்று சொல்லிவிடு!எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 5089

கேள்வி: 8

இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா?

பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள்.

நூல்: புகாரி 271

கேள்வி: 9

வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா? அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்), தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1839

இந்த ஹதீஸின் அடிப்படையில் இஹ்ராமின் போது நறுமணம் பூசக்கூடாது. ஆனால் கண்வலி, காது வலிக்கு மருந்து இட்டுக் கொள்ளலாம்.

நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் “அல்மலல்எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் “அர்ரவ்ஹாஎனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகி விட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) “இஹ்ராம்கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2089

இந்த அடிப்படையில் தலைவலிக்குத் தைலம் தடவிக் கொள்ளலாம். தைலத்தில் நறுமணம் கலந்திருந்தாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை. ஆனால் குளிக்கும் போது பயன்படுத்துகின்ற ஷாம்பு, வாசனை சோப்பு, தலைக்குத் தடவும் எண்ணெய் போன்றவை மருந்து வகையில் அடங்காது. அவற்றில் நறுமணம் கலந்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

கேள்வி: 10

‘ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!’ என்ற நபிமொழியின்படி,  கட் ஷூ அணிந்து கொள்ளலாமா? குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் செருப்புக்குப் பதிலாக அதையே இஹ்ராமிலும் அணிந்துக் கொள்ளலாமா?

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1838

நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் காலுறைகளை வெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் பின்வரும் ஹதீஸில் வெட்ட வேண்டும் என்று கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும்போது, “யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்!என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

நூல்: புகாரி 1841

இது நபி (ஸல்) அவர்கள் அரஃபா தினத்தில் கூறியதாகும். எனவே, ஆரம்ப நிலையில் காலுறைகளை வெட்டி அணிய வேண்டும் என்று கூறியிருந்தாலும், இறுதியாக அந்த நிபந்தனையைக் கூறாமல் காலுறை அணிந்து கொள்ளட்டும் என்று பொதுவாகக் கூறுவதால் இந்த அனுமதியைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் ஷூ அணிவதில் தவறில்லை.

கேள்வி: 11

காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா? அல்லது பெண்கள் காலுறை மற்றும் உள்ளாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள், அதுபோல் எதுவும் நபிவழியில் சொல்லப்பட்டுள்ளதா?

செருப்பு கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளலாம் என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் காலுறை, உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றோ, அணியக் கூடாது என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை. பெண்கள் முகத்திரையும், கையுறையும் அணியக் கூடாது என்று மட்டும் தடை உள்ளது.

கேள்வி: 12

பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகமும் முன் கைகளும் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றால் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா? உடல் ஆரோக்கியம் பேணிக்கொள்ள ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி இங்குள்ள ஹஜ் சர்வீஸில் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் முகம் மூடக்கூடாது என்றால் ஃபேஸ் மாஸ்க் இஹ்ராமில் ஆண், பெண் இருவருக்கும் கூடுமா?

பெண்கள் பொதுவாக முகம், கை, கால்கள் மறைக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மார்க்கத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முகத்தை மூடுவதற்குத் தடை விதிக்கின்றார்கள்.

இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1838

ஃபேஸ் மாஸ்க் போன்ற முகத்தை மறைக்கும் சாதனங்களைக் குறித்தே நபி (ஸல்) அவர்கள் இந்தத் தடையை விதித்துள்ளார்கள் என்று இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

கேள்வி: 13

பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக ‘உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா?

இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி விட்டன. இதில் தலை வாருதல் இடம்பெறவில்லை. இதிலிருந்தே தலை வாருவதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால் முதலில் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.

நூல்: புகாரி 317

இந்த ஹதீஸ், இஹ்ராமின் போது ஆண்களோ, பெண்களோ தலை வாரிக்கொள்வதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும். அத்துடன் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டாலும் அவர்கள் இஹ்ராமில் தான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

தவாஃபைத் தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ராமில் இருக்கின்றார்கள் என்பதற்கு சரியான சான்றாகும்.

கேள்வி: 14

இஹ்ராம் ஆடையில் ஆண்கள் தலை, கால்களை மறைக்கக்கூடாது என்பதால் குளிர் மற்றும் உறங்கும் சமயங்களிலும் தலை, கால்களை மூடும் விதமாக போர்வை போர்த்தலாமா? தலை, கால்களை விட்டுவிட்டு உடம்பில் மட்டும்தான் போர்த்திக் கொள்ள வேண்டுமா?

ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்யும் போது அணிந்திருக்கும் இஹ்ராம் ஆடையில் தான் தலையை மறைக்கக் கூடாது. உறங்கும் போது போர்வை போர்த்துதல் என்பது ஆடையில் சேராது. குளிருக்காக நன்கு மூடப்பட்ட ஓர் அறைக்குள் போய் உறங்குவது எப்படியோ அப்படித் தான் போர்வை போர்த்திக் கொண்டு உறங்குவதும் ஆகும். எனவே உறங்கும் போது தலையை மறைத்து போர்வை போர்த்துவதில் தவறில்லை.

கேள்வி: 15

ஆண்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் முன்னர் குளிக்கும் தேவை ஏற்பட்டால், மூட்டப்பட்ட கைலியை (ஈரத்திற்காக) அணிந்துக் கொண்டு குளிக்கலாமா? மூட்டப்படாத வேட்டி அணிந்து குளிப்பதுதான் சிறந்ததா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் போது அந்த உத்தரவை நம்மால் இயன்ற அளவுக்குப் பின்பற்றுவது தான் சரியான செயலாகும். உடுத்திக் குளிப்பதற்கும், மாற்றுக்காகவும் தையல் இல்லாத துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொள்வது என்பது பெரிய சிரமமான காரியமல்ல. நபிவழியை முடிந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

கேள்வி: 16

வழக்கமாகப் போடும் கடுகளவு மூக்குத்தி மற்றும் மெல்லிய குச்சியளவிலான மோதிரம் போன்றவற்றை இஹ்ராமின்போது அணியலாமா? (மற்ற நேரங்களில் இதுபோன்ற சிறிய அளவுகளில் இருந்தால் இவை வெளியில் தெரியலாமா?)

இஹ்ராமின் போது அணியத் தடை செய்யப்பட்டவைகளில் இவை இடம்பெறவில்லை. ஆனால் பொதுவாக அலங்காரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண்கள் நகைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் 24:31

கேள்வி: 17

இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா?

முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:197

எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, மார்க்க ரீதியிலான வாதங்கள் செய்வது விதண்டாவாதத்தில் வராது.

கேள்வி: 18

ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது.

பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்குக் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது.

ஹஸ்அம்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டதுஎன்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ ஹஜ் செய்என்று அவரிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி 1513, 1854, 1855, 4399, 6228

உயிருடன் இருப்பவர் ஹஜ் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம். அது அவர் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா?” ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் தாய் மீது கடன் இருந்தால் நீதானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிக தகுதி உள்ளதுஎன்றார்கள்.

நூல்: புகாரி 1582, 7315

அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து கடமையான ஹஜ்ஜாக இருந்தால் தான் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.

ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.

அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாதுஎன்றேன். “உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும் உம்ராவும் செய்துகொள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி (852)

பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவைச் செய்யும் போது மட்டும் தான் இந்த அனுமதியாகும்.

இந்த ஹதீஸைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது.

ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது நம்மீது கட்டாயக் கடமையும் இல்லை.

ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு மனிதர் “லப்பைக்க அன் ஷுப்ருமா” (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஷுப்ருமா என்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். “உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் “இல்லைஎன்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894

பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

கேள்வி: 19

ஆண்களுக்கான இஹ்ராம் ஆடையில் எந்தத் தையலும் இல்லாமல், ஓரங்களில் ஊக்கு மாட்டிக் கொள்வதற்கு பதிலாக ப்ரெஸ் பட்டன் கொடுத்து கடைகளில் விற்கிறார்கள். அதைப் பயன்படுத்தலாமா?

பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம் அது தடை செய்யப்பட்டவைகளில் இல்லை.

கேள்வி: 20

ஆண்கள் இஹ்ராமின் போது ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா?

ஜட்டி என்பது தையல் ஆடை என்பதால் அதை இஹ்ராமின் போது அணியக்கூடாது. தையல் இல்லாத வகையில் லங்கோடு போன்ற துணியால் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.

தல்பியா

கேள்வி: 1

தல்பியாவை ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா? அதேபோல், ஒருவருக்கொருவர் குழம்பாமல் இருப்பதற்காக, தனியாக ஒருவர் சொல்லிக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்வது நபிவழிக்கு மாற்றமானதா?

அவரவர் தல்பியா சொன்னதாகத் தான் ஹதீஸில் வருகிறதே தவிர ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சொன்னதாக வரவில்லை.

முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்களிடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லைஎன்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 970

இந்த ஹதீஸின் அடிப்படையில் அவரவர் சொல்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள். ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் சொல்வது நபிவழிக்கு மாற்றமானதாகும். அவரவர் சொல்லும் போது அது கூட்டாகச் சொல்வதாகத் தான் அமையும். எனவே இது தவறில்லை.

கேள்வி: 2

கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்த வேண்டுமா?

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்என்றும் கூறுவார்கள்.

நூல்: புகாரி 1573

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும் என்பதே சரி!

ஹரமில் நுழைதல் & தொழுதல்

கேள்வி: 1

ஹரமில் “பாபு பனீ ஷைபா’ வழியாக நுழைவது சுன்னத் என்பதை அறிந்திருக்கிறேன். சிலர் “பாபுஸ்ஸலாம்’ வழியாக நுழைவது சுன்னத் என்கிறார்கள்.  “பாபு பனீ ஷைபா’ என்பதும் “பாபுஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றா?

இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த வாசல் மகாமு இப்ராஹீம் அமைந்துள்ள கஅபாவின் பகுதியை முன்னோக்கியிருக்கும்.

கேள்வி: 2

ஹரம் ஷரீஃபில் நுழைந்த பிறகு “தஹிய்யதுல் மஸ்ஜித்’ தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா? அல்லது முதல் அமலே தவாஃபில் தான் ஆரம்பிக்க வேண்டுமா?

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 2334, 1603

நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் தவாஃபைத் துவக்குவது தான் நபிவழியாகும்.

கேள்வி: 3

ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா?

மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190

ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச் சிறந்தது என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்னத் அஹ்மத் 14167

அஹ்மதில் இடம் பெறும் இந்த ஹதீஸ் புகாரியிலும் இதர நூற்களிலும் இடம்பெறும் ஹதீசுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. இந்த ஹதீஸ்களில் தொழுகை என்று தான் இருக்கின்றது. ஒரு லட்சம் நன்மை என்று இல்லை.

மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு லட்சம் ரக்அத் தொழும் நன்மையைப் பெற்றுத் தருகின்றது. அங்கு இரண்டு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் இரண்டு லட்சம் ரக்அத் தொழுவதற்குச் சமமாகும்.

கேள்வி: 4

தொழுவதற்கு தடை செய்யப்பட்ட 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு இல்லை என்பது சரியா? மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்கும் அந்த விதிவிலக்கு உண்டா?

அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

நூற்கள்: திர்மிதி 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875

தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரங்களிலிருந்து மஸ்ஜிதுல் ஹராமுக்கு மட்டும் இந்த ஹதீஸ் விதிவிலக்கு அளிக்கின்றது. அங்கு எந்த நேரத்திலும் தொழுவதற்கு அனுமதியுள்ளது. இந்த விதிவிலக்கு மஸ்ஜிதுந்நபவீக்குப் பொருந்தாது.

கேள்வி: 5

மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பது சுன்னத் எனும்போது, நம்முடைய ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால், ஹோட்டலில் குளித்துவிட்டு ஹரமுக்கு வரலாமா? மக்காவுக்கு வெளியில் குளித்துவிட்டு வருவது மட்டும்தான் சுன்னத்தா?

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ, நூல்: புகாரி 1573

இந்த ஹதீஸ், மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என்று தெரிவிக்கின்றது. மக்கா எல்லைக்குள் தான் தங்குமிடம் அமைகின்றது என்றால் வந்த பின் குளித்துக் கொள்ளலாம்.

தவாஃப்

கேள்வி: 1

தவாஃபுக்கு உளூ அவசியமா?

ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஅபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள்.

கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

“முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்” என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள். (புகாரி 1615, 1642)

இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள். (புகாரி 337)

இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும்.

அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத்தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்” என்று கூறினார்கள்.

இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை.

மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும். உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும்.

ஆயினும் தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும்.

கேள்வி: 2

தவாஃபை ஆரம்பிக்கும்போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது சரியா?

பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்‘ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1613

கேள்வி: 3

தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் ‘ரமல்’ என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்று சொல்வது சரியா? 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா?

இது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள்.

கேள்வி: 4

உபரியான தவாஃப்கள் செய்யும் போது ஆண்கள் வலது புஜம் தெரியுமாறு இஹ்ராமின் மேலாடையை அணிந்து கொள்ள வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா

நூல்: திர்மிதி 787, அபூதாவூத் 1607

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலால் ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அபூதாவூத் 1708)

ஒவ்வொருவரும் தையல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றாகி விடுகின்றது. தவாஃபுல் விதாவிலும் இதுபோன்றே ஆடை அணிவதால், வலது புஜம் திறந்து இடது புஜத்தை மூடுவது தவாஃபுல் குதூமில் மட்டும் தான் என்பதைத் தெளிவாக விளங்கலாம். மற்ற உபரியான தவாஃபுகளில் இந்த முறை இருப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

கேள்வி: 5

தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால்  பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா? அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா?

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

இந்த வசனத்தின் அடிப்படையில் எவரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. இயற்கைத் தேவை அல்லது இயலாமை போன்ற காரணங்களால் தவாஃபை இடையில் முறித்து விட்டால், விடுபட்ட சுற்றிலிருந்து மீண்டும் தொடங்கிக் கொள்ளலாம்.

உபரியான தவாஃப் என்றால் சுற்றுக்களைத் தொடராமல் விட்டாலும் அதனால் பாதிப்பு இல்லை. ஆனால் உம்ரா, ஹஜ் ஆகியவற்றின் தவாஃபுகளைத் தொடராமல் விட்டால் அது முழுமையடையாது. எனவே விட்ட இடத்திலிருந்து மீண்டும் சுற்றுக்களைத் தொடர்ந்து முழுமைப்படுத்த வேண்டும். ஸயீயிலும் இவ்வாறு தான்.

கேள்வி: 6

ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி ‘அல்லாஹு அக்பர்’ என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா? ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு ‘அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக….’ என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா?

இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1611

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்.

நூல்: புகாரி 1612, 1613, 5293

ஹஜ் அஸ்வதை கைகளால் தொட்டு, அந்தக் கையை முத்தமிடுவது, வாயால் முத்தமிடுவது போன்றவை தான் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றது. இதற்கு இயலாவிட்டால் அதை நோக்கி சைகை செய்வதற்கு ஆதாரம் உள்ளது.

சைகை செய்த கையை முத்தமிட்டதாக ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை.

ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடுவதற்காகவோ, அல்லது சைகை செய்வதற்காகவோ பிரத்தியேகமான பிரார்த்தனை எதுவும் ஹதீஸ்களில் இல்லை.

கேள்வி: 7

நேரடியாக முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் தக்பீர் சொல்லித் தான் முத்தமிடவேண்டுமா? சைகை செய்வதற்கு மட்டும்தான் தக்பீரா? இடது அல்லது வலது எந்த கையால் வேண்டுமானாலும் சைகை செய்துக் கொள்ளலாமா?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்‘ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1613

ஹஜ்ருல் அஸ்வதுக்கு வரும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். நேரடியாக முத்தமிட வாய்ப்புக் கிடைத்தாலும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்வது நபிவழியாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும்போதும், தலைவாரும்போதும், செருப்பணியும்போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள்அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நூல்: புகாரி 426

நபி (ஸல்) அவர்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையால் செய்வதையே விரும்புவார்கள். எனவே வலது கையைக் கொண்டு சைகை செய்வதே சிறந்ததாகும்.

கேள்வி: 8

“ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது சரியா? “ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானிஎனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 166, 1609

இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது.

ருக்னுல் யமானியை முத்தமிட்டதாக நாம் தேடிய வரையில் எந்த ஹதீசும் இல்லை. ருக்னுல் யமானியை கையால் தொடுவது தான் நபிவழியாகும்.

கேள்வி: 9

ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா?

ருக்னுல் யமானியை கையால் தொடுவது நபிவழியாகும். சைகை செய்வது தொடர்பாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.

கேள்வி: 10

தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு, ஸயீ செய்வதற்கு முன்னர் மீண்டும் வந்து  ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடச் செல்லும் போது அதைத் தொட இயலாவிட்டால், அப்போதும் சைகை செய்து கொள்ளலாமா?

அந்த சமயத்தில் சைகை செய்வது பற்றி ஹதீஸில் கூறப்படவில்லை.

மகாமு இப்ராஹீமில்…

கேள்வி: 1

தவாஃபுக்கு பிறகு “மகாமு இப்ராஹீமி’ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா? “மகாமு இப்ராஹீமி’ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா?

மகாமு இப்ராஹீமில் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததாக ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை. முஸ்லிம் (2137) அறிவிப்பவின்படி, அங்கு தொழுதுவிட்டு ஜம்ஜம் நீரைப் பருகுதல், தலைக்கு ஊற்றுதல், ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல் தவிர்த்து வேறெதுவும் வரவில்லை. எனவே இவற்றை முடித்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்யச் செல்ல வேண்டும்.

கேள்வி: 2

மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா?

நேரடியாகவோ, அல்லது முக்காடு வழியாகவோ தலையில் ஊற்றிக் கொள்ளலாம்.

 நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள்.  (நூல்: அஹ்மத் 14707)

கேள்வி: 3

ஜம்ஜம் நீர் அருந்தும் முன்போ அல்லது அருந்தி முடித்த பிறகோ துஆ செய்வது சுன்னத்தா? பிரத்யேக துஆ எதுவும் உள்ளதா?

இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை.

ஸயீ செய்தல்

கேள்வி: 1

ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்” என்ற வசனத்தை ஓதிய பிறகு, “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்” என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும்.

அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி

கேள்வி: 2

ஸஃபா மர்வா மீது தற்போது ஏறமுடியாத வண்ணம் கேட் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதன் அடிவாரத்திலேயே நின்று (சுன்னத்தாக சொல்லப்பட்டவற்றை) கிப்லாவை முன்னோக்கி ஓதிக் கொள்ளலாமா? 3 முறை ஓதும்போது அவற்றுக்கிடையே நாம் கேட்கும் விருப்ப துஆவை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டித்து கேட்கலாமா?

ஸஃபா மர்வாவின் அடிவாரத்திலேயே நின்று ஓதிக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விருப்ப துஆ கேட்கலாம்.

கேள்வி: 3

ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

தோள்களைக் குலுக்க வேண்டும் என்றால் சற்று விரைந்து நடக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். மற்றபடி பெண்களுக்கென்று இதில் தனிச் சட்டம் இல்லை.

கேள்வி: 4

பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் ‘ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்’ என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா?

இல்லை.

கேள்வி: 5

உபரியான  தவாஃபைப் போன்று உபரியான சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா?

இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கேள்வி: 6

சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா?

நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும் திக்ருகளை ஓதிக் கொண்டு சென்றால் தவறில்லை.

தலை மழித்தல்

கேள்வி: 1

1) உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா?

ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!எனக் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்….என்றனர். நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1727

தமத்துஃ, கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அப்போது அவர்கள் முடியைக் குறைப்பது சுன்னத்தாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். (நூல்: புகாரி 1568)

இதன் பின்னர் ஹஜ்ஜை முடித்ததும் மேற்கண்ட 1727 ஹதீஸின் அடிப்படையில் முழுமையாக மழித்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.

அல்குர்ஆன் 48:27

முடியைக் குறைத்தல் என்று தான் திருக்குர்ஆன் வசனத்திலும், ஹதீஸிலும் சொல்லப்படுகின்றது. முடியைக் குறைத்தல் என்றால், ஆண்களைப் பொறுத்த வரை முடி வெட்டும் போது எப்படிக் குறைப்பார்களோ அதுபோன்று குறைத்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கு மழித்தல் கிடையாது; முடியைக் குறைத்தல் மட்டுமே உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல் போதுமானது.

தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 1694

கேள்வி: 2

ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? உடனே தான் குறைக்க வேண்டுமா?

உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும்.

கேள்வி: 3

பெண்கள் இஹ்ராமைக் களையும் முன் ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா?

குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க வேண்டும் என்று வரவில்லை.

பிறை 8, 9 தொடர்பான கேள்விகள்

கேள்வி: 1

பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.

பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை 9ல் அரஃபாவில் இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வாஎனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா‘) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

கேள்வி: 2

எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டு, லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா? முற்கூட்டியே செல்லவேண்டுமா?

இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப் புறப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 8ஆம் நாள் லுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் மறுநாள் ஃபஜ்ரு ஆகியவற்றை மினாவில் தொழுகிறார்கள். அப்படியானால் 8ஆம் நாளின் ஃபஜ்ரை மக்காவில்தானே தொழுதிருப்பார்கள்? நாம் அந்தக் குழுவினருடன் சேராமல் தனியாகச் செல்ல வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நாமும் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின் அவர்களோடு சேர்ந்து சென்றால் தவறாகுமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள்.

(நூல்: முஸ்லிம் 2137)

நபி (ஸல்) அவர்களை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்ற வேண்டும். லுஹரை மினாவில் தொழும் வகையில் புறப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் முன் பின்னாகப் புறப்படுவது நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை.

கேள்வி: 3

அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா?

மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும் இல்லை.

அரஃபா நாள்

கேள்வி: 1

மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்ô?. இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா?

முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்களிடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லைஎன்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 970

தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான்.

கேள்வி: 2

அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே?

தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை. (நூல்: முஸ்லிம் 2137)

ஜம்வு தக்தீமாக, லுஹர் நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்பது சரியானது தான்.

கேள்வி: 3

அன்றைய குத்பா உரையின்போது பேசக்கூடாது என்று (ஜும்ஆ குத்பாபோல்) தடை எதுவும் உள்ளதா?

இமாம் (குத்பா) உரையாற்றும் போது பேசக் கூடாது என்ற தடையிலிருந்து அரஃபா உரை விதிவிலக்கு பெறாது. எனவே உரையை செவி தாழ்த்திக் கேட்க வேண்டும்.

கேள்வி: 4

அங்குள்ள ‘ஜபலுர் ரஹ்மா’ மலையில் ஏறுவது சுன்னத் அல்ல என்றாலும், பெண்கள் அதில் ஏறக்கூடாது என்று சொல்வது சரியா?

அதில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் ஹஜ்ஜின் கிரியை என்றோ சுன்னத் என்றோ கருதி ஏறக் கூடாது.

கேள்வி: 5

அரஃபாவில் போய் சேர்ந்தது முதலே துஆ செய்யலாமா? ‘ஜபலுர் ரஹ்மா’ மலையடிவாரத்திலோ, அரஃபாவில் மற்ற எங்குமோ துஆ  செய்யும்போது நின்றுக்கொண்டுதான் துஆ செய்ய வேண்டுமா? இயலாதவர்கள் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாமா? அங்கு எப்போது தல்பியா சொல்லவேண்டும்? துஆ செய்யாத இடைப்பட்ட நேரங்களில் சொல்லவேண்டுமா?

அரபாவில் திக்ரு, துஆக்கள் என்ற எந்த வணக்கத்திலும் ஈடுபடலாம். நிற்க இயலாதவர்கள்  உட்கார்ந்தும் செய்து கொள்ளலாம். துஆ செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தல்பியா சொல்லிக் கொள்ளலாம். ஜபலுர்ரஹ்மத் என்று குறிப்பிட்டு வரும்போது அங்கு துஆவைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது “கஸ்வாஎனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்து வந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.

(நூல்: முஸ்லிம் 2137)

நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ 2961)

இந்த ஹதீஸின் அடிப்படையில் துஆவில் ஈடுபட வேண்டும். துஆவை நின்றும், உட்கார்ந்தும் செய்யலாம்.

முஸ்தலிபா & கல் எறிதல்

கேள்வி: 1

மினாவில் 8ஆம் நாளன்று எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா?

முஸ்தலிபாவில் படுத்து உறங்கிய பிறகு அன்றைய ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் ஃபர்ளை மட்டும்தான் தொழ வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் அங்கு கடமையான தொழுகைகளை மட்டுமே தொழுததாக ஹதீஸில் (முஸ்லிம் 2137) வருகின்றது. இந்த ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.

“நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதார்கள்’ என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுச் சொல்லாததால் அன்று இரவு அவர்கள் வித்ரு தொழவில்லை என்றாகிவிடாது. மாறாக, நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதது, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதது அவர்களது பார்வையில் படாமல் கூட இருந்திருக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு சாப்பிட்டார்கள், சிறுநீர் கழித்தார்கள் போன்ற பல விஷயங்களை அறிவிப்பாளர் சொல்லாமல் விட்டிருக்கலாம். அதனால் அவற்றை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்றாகி விடாது.

“நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் கூட மினா, முஸ்தலிஃபாவில் இந்தத் தொழுகைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜாபிர் (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுக் கூறவில்லை. எனவே அந்தத் தொழுகைகளைப் பற்றி அவர் அறிவிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவில் உங்களுடைய தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1245

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பொதுவாகக் கட்டளையிட்ட பின், அவர்கள் வித்ரு தொழுகையை விட்டதாகவோ அல்லது குறிப்பிட்ட வேளையில் தொழ வேண்டாம் என்று தடுத்ததாகவோ எந்த ஹதீசும் வராத வரை வித்ரு தொழ வேண்டும் என்பது தான் அடிப்படையாகும். மேலும் வித்ரு தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவும் இருப்பதால் மினாவில் நாம் வித்ரு தொழுவது தான் நபிவழி.

ஃபஜ்ருடைய முன்சுன்னத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கடைப்பிடித்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத் அளவிற்கு வேறு எந்த கூடுதல் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

நூல்: புகாரி 1169

வித்ருக்கு நாம் கூறிய வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும் என்பதால் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை முஸ்தலிஃபாவில் தொழுவது தான் நபிவழியாகும்.

கேள்வி: 2

அன்றைய இரவு முழுதும் நபி (ஸல்) அவர்கள் படுத்து உறங்கிவிட்டதாக முஸ்லிம் 2137ல் வருகிறது. ஆனால் புகாரியின் 1679வது ஹதீஸில் அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் இரவு தங்கியிருக்கும்போது சந்திரன் மறையும் வரை தொழுதார்கள் என்று வருகிறதே? இரவு தொழ முடிந்தால் அப்படியும் செய்யலாமா?

நபி (ஸல்) அவர்களின் நடைமுறை தெளிவாக இருக்கும் போது அஸ்மா (ரலி) அவர்களின் செயலை நாம் பார்க்க வேண்டியதில்லை.

கேள்வி: 3

முஸ்தலிபாவில் தான் கல் பொறுக்கவேண்டும் என்பது சரியானதல்ல என்றாலும், வாய்ப்பு கிடைத்தால் அங்கேயே பொறுக்கி வைத்துக் கொள்வது தவறாகுமா? கற்களை நமக்காக நம்முடனிருக்கும் பிறர் பொறுக்கித் தரலாமா? அவரவர் தான் பொறுக்க வேண்டுமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், “ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும். (நூல்: முஸ்லிம் 2248)

இயன்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் சரியாகும். இயலாதவர்களுக்கு கற்களைப் பொறுக்கிக் கொடுப்பது தவறல்ல.

கேள்வி: 4

முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரைத் தொழுதுவிட்டு, ‘மஷ்அருல் ஹராம்’முக்கு வந்து கிப்லாவை நோக்கி துஆ செய்துவிட்டு (முஸ்லிமின் 2137 ஹதீஸ்படி) சொல்லவேண்டிய “அல்லாஹ் அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு” என்பதை ஒருமுறை சொன்னால் போதுமா?

எண்ணிக்கை எதுவும் ஹதீஸில் இடம்பெறவில்லை.

கேள்வி: 5

10ஆம் நாள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிடக்கூடிய சலுகை பெண்களுக்கு மட்டும்தானா? வயோதிகர்கள் ஆண்களாக இருந்தால் இது பொருந்துமா? சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிட அனுமதியளிக்கப் பட்டவர்கள் அன்றைய ஃபஜ்ரைத் தொழுவதற்காக மீண்டும் முஸ்தலிஃபாவில் தங்கிய இடத்திற்கே வந்துவிட வேண்டுமா? அல்லது கல் எறிந்த பக்கத்து இடங்களிலேயே தொழலாமா? பெண்களுக்கு துணையாக உடன் வந்த ஆண்கள் ஃபஜ்ரை எங்கு நிறைவேற்ற வேண்டும்?

சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பி விடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் “மஷ்அருல் ஹராம்எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்கு தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். பிறகு, இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் “ஜம்ராவில் கல்லெறிவர். “(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய (நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு செய்ய) அனுமதியளித்துள்ளார்கள்என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

நூல்: முஸ்லிம் 2281

அஸ்மா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் அவர்கள் கூறியதாவது:

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்!என்றதும் “புறப்படுங்கள்!எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தமது கூடாரத்தில் சுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், “அம்மா நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகின்றதே!என்றேன். அதற்கவர்கள், “மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதியளித்துள்ளார்கள்என்றார்கள்.

நூல்: புகாரி 1679

இந்த ஹதீஸ்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பே கல்லெறியலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் சூரியன் உதயமான பிறகு கல்லெறிவதே சிறந்தது. ஏனெனில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பிய நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் முன்பு கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி 817

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, முற்கூட்டியே சென்றாலும் சூரியன் உதிக்கும் வரை பலவீனர்கள் காத்திருந்து தான் கல்லெறிய வேண்டும் என்று அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். எனவே பலவீனர்கள் இந்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது தான் சிறந்ததாகும்.

இவ்வாறு முற்கூட்டியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மினாவில் ஃபஜ்ர் தொழுது கொள்ளலாம் என்பதை மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ் விளக்குகின்றது.

கேள்வி: 6

நமக்கு கல் எறிந்த பிறகு, நோயாளி மற்றும் பலவீனர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு பதிலாக நாம் கல் எறியலாமா?

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!

அல்குர்ஆன் 64:16

முடிந்தவரை அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தாங்களே கல்லெறிய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் பிறரிடம் பொறுப்புச் சாட்டலாம். ஆனால் இவ்வாறு பிறருக்காக எறிபவர்கள் முதலில் தமக்காக எறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும்.

கேள்வி: 7

குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அங்கு இருக்கும்போது நோற்க வேண்டிய அந்த மூன்று நோன்புகளை அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில்  நோற்கலாம் என்று கூறுகிறீர்கள். பொதுவாகவே அந்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் அல்லவா? ஹாஜிகளுக்கு மட்டும் அந்த நாட்களில் நோன்பு நோற்க சலுகை உள்ளதா? அல்லது அய்யாமுத் தஷ்ரீக் முடிந்த பிறகு நோன்பு நோற்றுவிட்டு தவாஃபுல் விதா செய்யலாமா?

ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது:

குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!

நூல்: புகாரி 1998

மேற்கண்ட ஹதீஸ் குர்பானிப் பிராணி கிடைக்காதவர் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதியளிக்கின்றது.

பத்தாவது நாளின் மற்ற அமல்கள்

கேள்வி: 1

தவாஃபுல் இஃபாளாவை 10வது நாளின் அஸர் நேரம் முடிவதற்குள் செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா? அப்படி அஸர் முடிய முன் ‘தவாஃபுல் இஃபாளா’வை தவறவிட்டவர்கள், அதற்கு முன்பே இஹ்ராம் ஆடையைக் களைந்திருப்பார்களேயானால், மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் செய்து, மறுநாள் வந்துதான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டுமா?

பத்தாம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் தவாப் செய்து விட்டால் சட்டை பேண்ட் போன்ற தையல் ஆடை அணிந்து தவாப் செய்யும் சலுகை கிடைக்கும். நறுமணமும் பூசிக் கொள்ளலாம். தவாபுக்கு முன் சூரியன் மறைந்து விட்டால் அந்தச் சலுகை போய் விடும்.

“நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708)

பத்தாம் நாளன்று கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் ஆகிய வணக்கங்களைச் செய்யும் போதே அன்றைய தினம் சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியுமா? முடியாதா? என்ற முடிவுக்கு வந்து விடலாம்.

10ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளா செய்ய முடியும் என்றால் நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளுடன் தவாஃபை முடித்து மொத்தமாக இஹ்ராமுடைய கட்டுப்பாடுகளை விட்டு விடுதலையாகிவிடலாம்.

சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியாதென்றால் இஹ்ராம் உடையைக் களையாமல் அப்படியே இருந்து, சூரியன் மறைந்த பிறகு தவாஃப் செய்து விட்டு, ஒரேயடியாக எல்லா கட்டுப்பாடுகளை விட்டும் விடுதலையாகி விடலாம்.

இதுபோன்ற சூழலில் முதல் விடுதலையின் பயனை இழக்க நேரிடும். அதாவது உடலுறவைத் தவிர உள்ள நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும். தவாஃபுல் இஃபாளாவை முடித்து விட்டால் முழு விடுதலையை அனுபவித்துக் கொள்ளலாம்.

பத்தாம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளாவை செய்யத் தவறியவர்கள் மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய இரவு அல்லது மறுநாள் வரை தவாஃபுல் இஃபாளா செய்யலாம். ஆனால் தவாஃபுல் இஃபாளாவை முடிக்கின்ற வரை இஹ்ராமின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாக முடியாது.

கேள்வி: 2

அன்றைய தினம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃபுல் இஃபாளாவையும், ஸயீயையும் எப்போது செய்வது? தூய்மையாவதற்கு ஒரு வாரம் ஆகிவிட்டால் ஹஜ்ஜுடைய நாட்கள் முடிந்துவிடும் நிலையில் எப்படி அவற்றை நிறைவேற்றுவது?

இத்தகைய பெண்களுக்கு இரண்டு விதமான நெருக்கடிகள் ஏற்படலாம்.

  1. தூய்மையாவதற்கு முன்னால் பயணம் புறப்பட நேரிடலாம்.
  2. தூய்மையாவதற்குரிய காலம் ஹஜ்ஜின் 11, 12, 13 நாட்களையும் தாண்டிச் செல்லலாம்.

தவாஃபுல் இஃபாளா என்பது ஹஜ்ஜின் தவாஃபாகும். இதைச் செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!என்றதும் “அப்படியாயின் புறப்படுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1733

மாதவிலக்கு ஏற்பட்டவர் தூய்மையாகி, தவாஃபுல் இஃபாளா செய்வதற்குள் பயணத் தேதி முடிந்து விடுவது போன்ற நெருக்கடியான கட்டத்தில் இரத்தம் உறிஞ்சுகின்ற இறுக்கமான ஆடை (நாப்கின்) அணிந்து கொண்டு தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றலாம். இவ்வாறு அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அடுத்ததாக, பயணத் தேதி மீதமிருந்தாலும் துப்புரவாகும் நாள் ஹஜ்ஜுடைய நாட்களான 13ஆம் நாளையும் தாண்டிச் செல்கின்ற நெருக்கடி ஏற்படலாம்.

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!

அல்குர்ஆன் 64:16

இந்த வசனத்தின் அடிப்படையில், ஹஜ்ஜுடைய நாட்களைத் தாண்டி விட்டாலும் அதை நிர்ப்பந்தம் என எடுத்துக் கொண்டு, துப்புரவான பின் தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றியாக வேண்டும்.

கேள்வி: 3

பத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதுடன் மினாவிலும் வந்து 2வது முறை தொழ வேண்டுமா? இரண்டு முறையும் 4 ரக்அத்கள் முழுமையாக தொழ வேண்டுமா? அன்றைய தொழுகைகளில் எல்லா வக்துகளையும் கஸ்ரு இல்லாமல் முழுமையாகத் தான் தொழவேண்டும்?

பத்தாம் நாள் அன்று மினாவில் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்.

இது “தவாஃப் ஸியாரா’ எனவும் கூறப்படுகிறது. இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று “தவாஃப் அல் இஃபாளாசெய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2307

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.

தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இமாமாக இருந்ததால் இரண்டு முறை தொழுதுள்ளார்கள். நாம் மக்காவில் தொழுவதே போதுமானதாகும். பயணத்தின் போது பொதுவான கஸ்ருத் தொழுகையின் சட்ட அடிப்படையில் லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும்.

அய்யாமுத் தஷ்ரீக்

கேள்வி: 1

11, 12, 13 ஆகிய நாட்களில் எறியவேண்டிய கற்களை எப்போது, எங்கு பொறுக்க வேண்டும்? 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரேநாளில் பொறுக்கி வைத்துக் கொள்ளலாமா?

மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மினாவில் பொறுக்கிக் கொள்ளலாம்.

கேள்வி: 2

முதல் ஜம்ராவில் கல் எறிந்த பிறகு வலது பக்கமாக நகர்ந்து நின்றும், இரண்டாவது ஜம்ராவில் கல் எறிந்த பிறகு இடது பக்கமாக நகர்ந்து நின்றும் கிப்லாவை நோக்கி துஆ செய்யவேண்டுமா? இதில் வலது பக்கம், இடது பக்கம் என்பது ஜம்ராவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா? அங்குள்ள மஸ்ஜிதுல் ஹீஃபாவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா?

கல்லெறிபவரின் வலது பக்கம், இடது பக்கத்தையே குறிக்கும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, “இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்!எனக் கூறுவார்கள்.

நூல்: புகாரி 1751, 1753

கேள்வி: 3

3வது ஜம்ராவில் கல்லெறிந்த பின், அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா?

புகாரி 1751, 1753 ஆகிய ஹதீஸ்களின்படி முதல் இரண்டு ஜம்ராக்களில் துஆச் செய்வது நபிவழியாகும். மூன்றாவது, கடைசி ஜம்ராவில் துஆச் செய்வது இல்லை.

கேள்வி: 4

கல் எறிவது அல்லாமல் இந்த நாட்களில் வேறு அமல்கள் எதுவுமுள்ளதா? நாம் விரும்பி செய்யக்கூடிய உபரியான அமல்கள் மட்டும்தானா? வாய்ப்பு கிடைத்தால் தவாஃப் செய்ய மக்காவுக்கு வரலாமா?

அதிகமதிகம் தவாஃப் செய்து கொள்ளலாம். விரும்பிய அமல்களைச் செய்து கொள்ளலாம்.

அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875)

கேள்வி: 5

கல் எறிந்த பிறகு வேறு இடங்களுக்கு செல்லத் தக்க காரணம் இல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக மக்காவிலுள்ள ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ பகலில் செல்ல அனுமதி உண்டா? கல்லெறிந்து முடியும்வரை முழு நாட்களும் மினாவில்தான் தங்கி இருக்கவேண்டுமா?

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

நூல்: புகாரி 1634

இந்த ஹதீஸ் அடிப்படையில் தக்க காரணம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் மினாவில் தான் தங்க வேண்டும்.

கேள்வி: 6

தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறியவேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம் என்றால், ஒவ்வொரு ஜம்ராவிலும் தலா 14 என தொடர்ந்து ஒரே நேரத்தில் எறிந்துவிடலாமா?

மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: திர்மிதீ 878)

இதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 14 கற்கள் எறிந்து கொள்ளலாம்.

கேள்வி: 7

12வது நாளில் சூரியன் மறையும் முன்பாக கல்லெறிந்துவிட்டவர்கள் 13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால், அவர்கள் அந்த நாளில் புறப்படும் நேரம் சூரியன் மறையும் முன்பாக இருக்கவேண்டுமா? அல்லது கல்லெறிவது மட்டும் சூரியன் மறையும் முன்பாக இருந்தால் போதுமா?

12ஆம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் புறப்படுவதாக இருந்தால் மட்டுமே 13ஆம் நாள் கல் எறியத் தேவையில்லை.

இதர சந்தேகங்கள்

கேள்வி: 1

? எந்த இடத்தில் துஆ செய்தாலும் தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா? அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா?

தஹ்மீது, ஸலவாத் சொல்லித் தான் துஆ செய்ய வேண்டும் என்று ஹதீஸ் எதுவும் வரவில்லை.

பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது போன்ற அன்றாடப் பழக்கவழக்கங்களின் துஆக்களைத் தவிர இதர துஆக்களில் கையை உயர்த்துவது நபிவழியாகும். அரஃபா உள்ளிட்ட எந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் இது பொருந்தும்.

கேள்வி: 2

தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா?

மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்குத் தொழுகையை விட்டுவிடு! பிறகு குளித்துவிட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுதுகொள்!என்றார்கள்.

நூல்: புகாரி 325

கேள்வி: 3

தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கக்கூடாது என சொல்லப்படுவதால், அதற்கு பிறகு உபரியான உம்ராக்கள் செய்யவோ, மார்க்கம் சேராத சொந்த வேலைகளுக்கோ கூட தங்கக் கூடாதா? அப்படி மற்ற தேவைகளுக்காக தங்கவேண்டி இருந்தால் அதுவரை தவாஃபுல் விதாவை தள்ளிபோடலாமா? அதிகப்பட்சமாக எத்தனை நாள் வரை தள்ளிப் போடலாம்?

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.

அல்குர்ஆன் 2:198

ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது கூடத் தவறில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே இதன்படி மார்க்க காரியங்களுக்காகவோ, சொந்தக் காரியங்களுக்காகவோ தவாஃபுல் விதாவைத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.

அல்குர்ஆன் 2:197

இந்த வசனத்தில் ஹஜ் வணக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது குறிப்பிட்ட மாதங்கள் என்று அல்லாஹ் கூறுவதால், துல்ஹஜ் மாதம் முடிவதற்குள் தவாஃபுல் விதாவை நிறைவேற்றுவது சிறந்தது.

கேள்வி: 4

மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா?

மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ, நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கென்றோ தனிப்பட்ட எந்த துஆவும் ஹதீஸ்களில் இல்லை.

“அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்)

நூல்: முஸ்லிம் 367

இதுபோன்ற பொதுவான துஆ ஓதிக் கொள்வது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது குறிப்பாக எதையும் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்களில் வரவில்லை.

“மனாஸிக்குல் ஹஜ் வல் உம்ரா’ என்ற நூலில் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு’ என்று தொழுகையில் வருகின்ற ஸலவாத்தைச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். எனினும் இதற்கு ஹதீஸ் ஆதாரம் எதையும் காட்டவில்லை.

இப்னு உமர் (ரலி) அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்ர்! அஸ்ஸலாமு அலைக்க யா அபத்தீ (என்னுடைய தந்தையே!)’ என்று கூறுவார்கள்.

இந்த நடைமுறையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். நபித்தோழர்களின் கருத்து மார்க்கமாகாது என்ற அடிப்படையில் இதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இப்னு தைமிய்யா இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கருத்தையும் உஸைமீன் மேற்கோள் காட்டுகிறார்.

மஸ்ஜிதுந்நபவிக்கு வருகின்ற ஒவ்வொரு மனிதனும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வெறுத்திருக்கின்றார்கள். காரணம் முன்னோர்களான நபித்தோழர்கள் இதைச் செய்து கொண்டிருக்கவில்லை.

மாறாக, அவர்கள் பள்ளிக்கு வந்து  தொழுவார்கள். அந்தத் தொழுகையில், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’ (நபியே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் அருளும் அவனது பரக்கத்துகளும் உண்டாகட்டுமாக!) என்ற, நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதக் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவார்கள். தொழுகை முடிந்து பள்ளியில் அமர்வார்கள் அல்லது வெளியே சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் மீது தொழுகையில் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வது மிகச் சிறந்தது என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தது தான்.

இவ்வாறு இப்னு தைமிய்யா கூறுவதாக ஸாலிஹ் அல் உஸைமீன் குறிப்பிடுகின்றார்.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது பிரத்தியேக துஆ எதுவும் கூறாமல் பொது மையவாடிகளில் ஓதும் பிரார்த்தனையை மட்டுமே கூறவேண்டும்.

கேள்வி: 5

மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியது என்று சொல்கிறார்களே, அது எந்த இடம்?

மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்தபடியாக, மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது சிறப்புக்குரியதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1190, அஹ்மத் 14167

மஸ்ஜிதுந்நபவீக்குப் பயணம் மேற்கொள்வதும் இந்த அடிப்படையில் தான் அமைய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 2383

இவ்வாறு மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்பவர்கள் அங்கு எந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1195, 1196

இந்த இடத்திற்கு மேற்கண்ட சிறப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற அந்தஸ்து மஸ்ஜிதுந்நபவீ முழுமைக்கும் உரியதாகும்.

கேள்வி: 6

ஹஜ், உம்ரா செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் அவர்கள் தவாஃப், ஸயீ போன்ற வணக்கங்களைச் செய்வதற்குத் தாமதமாகின்றது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதைத் தவிர்ப்பதற்காக மாதவிலக்கைத் தள்ளிப் போடுகின்ற மாத்திரை, ஊசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வாறு ஊசி, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என்று சவூதி ஆலிம்கள் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றனர். இது தவறாகும்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 5:3

இந்த வசனத்தில் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்கிறான். அதாவது ஹஜ்ஜின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற இந்த மாதவிலக்குப் பிரச்சனைக்கும் உரிய தீர்வை மார்க்கம் தந்து விட்டது.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

நமக்கு நாமே நாசத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது, நாசத்தை விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். மாதவிலக்கு என்பது இயற்கை! அதை மாற்றுவது உடலில் வேறுவிதமான நோயை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படுத்திவிடும். அதனால் நமது உடலுக்கு நோயை விளைவிக்கின்ற இந்தக் காரியத்தைக் குர்ஆன் தடை செய்கின்றது. மாதவிலக்கு எனும் இயற்கை செயல்பாட்டை மாத்திரைகள் மூலம் மாற்றி உடலுக்குக் கேடு விளைவிப்பதால் இதைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடையாகும்.

கேள்வி: 7

இஹ்ராம் கட்டிய பின்னர் கணவன் மனைவியிடம் உடலுறவில் ஈடுபட்டால் என்ன பரிகாரம்?

சவூதியைச் சேர்ந்த அறிஞர்கள் இதை இரண்டு நிலைகளாகப் பிரிக்கின்றனர். 1. முதல் விடுதலைக்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவது.

பத்தாம் நாளன்று கடைசி ஜம்ராவில் கல்லெறிந்து விட்டால் நறுமணம் பூசிக் கொள்ளலாம்; தையல் ஆடை அணிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவை செய்து முடிக்கின்ற வரை உடலுறவைத் தவிர இஹ்ராமில் தடுக்கப்பட்ட அனைத்துக் காரியங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இதற்குத் தான் முதல் விடுதலை என்று பெயர்.

தவாஃபுல் இஃபாளாவை முடித்துவிட்டால் உடலுறவுக்குரிய தடையும் நீங்கி விடுகின்றது. இதற்கு இரண்டாவது விடுதலை என்று பெயர்.

இவ்வாறு முதல் விடுதலைக்கு முன்பு, அதாவது முழுமையான இஹ்ராமின் போது உடலுறவில் ஈடுபட்டுவிட்டால் இரண்டு வகையான தீர்வுகளைக் கூறுகின்றனர்.

  1. உழ்ஹிய்யாவில் கொடுப்பது போன்று ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை பரிகாரமாகக் குர்பானி கொடுத்து அந்த இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக் கூடாது. 2. அவருடைய ஹஜ் வீணாகி விடுகின்றது. அவர் தாமதமின்றி மறு ஆண்டு அந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.

இரண்டாம் நிலை, முதல் விடுதலைக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடுவதாகும்.

இவ்வாறு ஈடுபட்டுவிட்டால் இரண்டு தீர்வுகளைக் கூறுகின்றனர்.

  1. ஓர் ஆட்டை அறுத்து, ஏழைகளுக்குப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக்கூடாது.
  2. ஹரம் எல்லைக்கு அப்பால் அருகில் உள்ள இஹ்ராம் கட்டுகின்ற எல்லைக்குப் போய் தனது இஹ்ராமைப் புதுப்பித்து, இஹ்ராமுக்குரிய ஆடைகளை அணிந்து ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவைச் செய்ய வேண்டும்.

இஹ்ராமுக்குப் பிறகு ஒருவர் உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அதற்குரிய பரிகாரம் இது என்று சவூதியைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளிக்கின்றனர்.

இவ்வாறு தீர்ப்பளிக்கும் ஆலிம்கள் இதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டவில்லை.

நமக்குத் தெரிந்த வரை நோயாளிகள், தலையில் காயம், புண் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள், ஹஜ்ஜின் போது குர்பானி கொடுக்க இயலாதவர்கள், வேட்டையாடியவர்கள் போன்றவர்களுக்குரிய பரிகாரத்தை குர்ஆன் ஹதீஸில் நாம் பார்க்க முடிகின்றது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:196

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபியாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்!என்றேன். அதற்கு “உம் தலையை மழித்துக் கொள்ளும்!என்றார்கள். என் விஷயமாகத்தான் (2:196ஆவது) இறைவசனம் அருளப்பெற்றதுது; அப்போது நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாஉ தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1815

இங்கு நோயாளிகள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்துக் கூறப்படுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:94, 95

இந்த வசனம், வேட்டையாடுவதற்குரிய பரிகாரத்தைக் குறிப்பிடுகின்றது.

இதைத் தவிர இஹ்ராமின் போது ஏற்படுகின்ற வேறு குற்றங்களுக்குப் பரிகாரத்தைக் காண முடியவில்லை.

இஹ்ராமில் இருப்பவர் முதல் விடுதலைக்கு முன்போ, அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால் இன்னது தான் பரிகாரம் என்று குர்ஆன், ஹதீஸில் கூறப்படவில்லை.

அப்படியானால் இதுபோன்ற தவறுக்குப் பரிகாரம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

ஒருவர் உளூச் செய்கின்றார். உளூ முறிந்து விட்டால் அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். இதுதான் அதற்குரிய பரிகாரம். ஒருவர் தொழுகின்றார். தொழுகையில் உளூ முறிந்து விடுகின்றது. அந்தத் தொழுகையை அவர் மீண்டும் தொழ வேண்டும். இதுபோன்று ஒருவர் ஹஜ் செய்யும் போது அதற்காக இஹ்ராமில் நுழைந்து விட்டார்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:197

அல்லாஹ் கூறும் இந்தத் தடையை மீறி, உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அவர் அந்த ஹஜ்ஜை திரும்ப நிறைவேற்ற வேண்டும். அதுதான் இதற்குரிய பரிகாரமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

கேள்வி: 8

ஒரு பெண் ஹஜ் தமத்துஃக்காக இஹ்ராம் கட்டி விட்டார். அவர் தவாஃபுல் குதூம் – உம்ராவுக்கான தவாஃப் செய்வதற்கு முன்னால் மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது. அரஃபா நாளில் தங்குவதற்கு முன்பு தான் அவர் மாதவிலக்கிலிருந்து தூய்மையடைகின்றார். இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா?

ஹஜ்ஜுக்காக அவர் இஹ்ராம் கட்டும் போது தனது ஹஜ்ஜை கிரான் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தல் தவிர உள்ள, ஹாஜிகள் செய்கின்ற மற்ற வணக்கங்களை அவர் செய்து கொள்ள வேண்டும். துப்புரவானதும் அவர் ஹஜ்ஜுக்குரிய தவாஃபும், ஸஃபா மர்வாவில் ஸயீயும் செய்து விட்டால் அவருக்கு ஹஜ்ஜும் உம்ராவும் கிடைத்து விடும்.

உம்ராவுக்கான தவாஃப் இந்த கிரான் முறையில் கடமையாக ஆகாது. சுன்னத்தாக ஆகிவிடும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “விடைபெறும்ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக “இஹ்ராம்கட்டினோம். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்என்று சொன்னார்கள்.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவுமில்லை.

ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், “உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடுஎன்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்.

நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) “தன்ஈம்எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். “இது உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

உம்ராவிற்காக “இஹ்ராம்கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்.

நூல்: முஸ்லிம் 2123

கிரான் முறையில் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் ஒரே தவாஃப் போதுமானது என்று கூறப்படுவதால் உம்ராவுக்காக தனி தவாஃப் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கேள்வி: 9

தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர் அரஃபா நாளில், அரஃபாவில் தங்குகின்ற நேரத்தில் தான் மக்காவிற்குள் வந்து சேர முடிந்தது. இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் தான் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா? இனி, இவர் உம்ரா, அதற்குரிய தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ போன்றவை செய்ய முடியாதே! இவர் என்ன செய்ய வேண்டும்?

முந்தைய (கேள்வி எண்: 8) பதிலில் உள்ளவாறு தனது ஹஜ்ஜை கிரான் என்ற முறையில் ஆக்கிக் கொண்டு விட்டால் இவருக்கு இந்த நிலையில் ஹஜ், உம்ராவுக்கும் சேர்த்து ஒரே தவாஃப், ஸயீ செய்தால் போதுமானது. ஹஜ், உம்ரா இரண்டும் சேர்த்து இவருக்குக் கிடைத்து விடும்.

கேள்வி: 10

புகாரி 2734 ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உம்ராô செய்யும் போது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டதாக வருகின்றது. ஆனால் இப்போது யாரும் உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப் பலியிடுவதில்லையே! ஏன்?

நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் உம்ராவுக்கு வரும் போது பலிப்பிராணிகள் அழைத்து வந்தார்கள். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கா இணை வைப்பாளர்களுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. அது தான் ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும்.

இதன்பிறகு, கொண்டு வந்த ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு, முடியை மழித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்.

அந்த உடன்படிக்கை விதியின்படி மறு ஆண்டு அவர்கள் உம்ராவை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் எந்தப் பலிப்பிராணியையும் கொண்டு வரவில்லை. இந்த அடிப்படையில் உம்ராவின் போது குர்பானி கொடுத்ததற்கும், கொடுக்காததற்கும் நபி (ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கின்றது.

இதன்படி இப்போதும் ஒருவர், உம்ராவின் போது பலிப்பிராணியை அறுக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தது போன்று பலிப்பிராணியை உடன் அழைத்து வந்து குர்பானி கொடுக்கலாம். ஹஜ்ஜுக்குச் சென்று அங்கு போய் குர்பானி கொடுப்பது போன்று உம்ராவில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.