ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

நபி (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிவிக்கும் செய்திகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் பெயரால் வரும் ஹதீஸ்களில் உண்மையில் அவர்கள் சொன்னவையும் இருக்கின்றன. அவர்கள் கூறாத செய்திகளும் அவர்களின் பெயரால் வந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்…

அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும்.

நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரை நேரடியாகச் சந்தித்திருக்க வேண்டும்.

மற்ற நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடாது

என்ற விதிமுறைகளும் உள்ளன. பெரும்பாலும் இவற்றை யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய இந்த நிபந்தனைகளும் வேண்டும். இத்துடன் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றம் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருகின்றது. தங்களை ஸலபுகள், சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்பவர்களும் மத்ஹபுவாதிகளும் நாம் கூறும் இந்தக் கருத்தை மறுத்து வருகின்றனர். இந்த விதியின் அடிப்படையில் இதற்கு முன்பு யாரும் ஹதீஸ்களை மறுத்ததில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே புதிதாக மறுக்கின்றது என்ற தவறான விமர்சனத்தைச் செய்கிறார்கள்.

உண்மையை மறுக்கும் இவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காக அறிஞர்கள் சிலரது கூற்றுக்களை இங்கே குறிப்பிடுகிறோம். இந்த அறிஞர்கள், ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைவதுடன் அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமான ஆட்கள் அறிவித்தால் அதில் தவறே வராது என்று மனித இயல்புக்கு மாற்றமாகச் சிந்திக்கும் இவர்களுக்கு இந்த அறிஞர்கள் மரண அடி தரும் வகையில் நாம் கூறும் விதியை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமானவரின் அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதை அறிவித்தவர்கள் நம்பகமானவராக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

நாம் இங்கே குறிப்பிடும் அறிஞர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் அல்ல. எராளமான ஹதீஸ்களை அறிவித்தவர்களும் இஸ்லாத்திற்குப் பெரும் பெரும் தொண்டுகளைச் செய்தவர்களும் இமாம் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களும் ஆவார்கள்.

இவர்களில் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால்  வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற்றவர்கள். இத்தகையவர்கள், இன்று தவ்ஹீத் ஜமாஅத் கூறும் விதியை  நமக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

இமாம் அவ்ஸாயீ

“நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா?” என்று முனீப் என்பவர் அவ்ஸாயீ அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், “அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக்கொள்வோம். அது நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல” என்று கூறினார்கள். முனீப் அவர்கள், “அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே” என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, “நம்பகமானவர்கள் நம்பகம் இல்லாதவர்களிடமிருந்து அதைப் பெற்றிருக்கலாமே” என்று கூறினார்கள்.

நூல்: தாரீகு அபீ சுர்ஆ (பாகம் 1, பக்கம் 271)

இமாம் கதீபுல் பஃதாதீ

அறிவிப்பாளர் தொடர் முறிவில்லாத ஒரு செய்தியை நேர்மை மிகுந்த நம்பகமானவர் அறிவித்தால் சில காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும். அதில் ஒன்று அந்தச் செய்தி குர்ஆனின் நேரடியான கருத்திற்கு முரணாக இருக்கும். அல்லது பல வழிகளில் வந்த உறுதியான ஹதீஸிற்கு முரணாக இருக்கும். அப்படி இருந்தால் அது அடிப்படையற்ற செய்தி என்றோ சட்டம் மாற்றப்பட்டது என்றோ அறியப்படும்.

நூல்: அல்ஃபகீஹ் வல்முதஃபக்கிஹ் (பாகம் 1, பக்கம் 354)

அறிஞர் அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ்

ஒரு ஹதீஸ் எந்த விளக்கமும் தரமுடியாத வகையில் குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அது நிராகரிக்கப்படும். இவ்வாறு ஈசா பின் அப்பான் கூறியுள்ளார். எந்தக் குறைகளால் ஹதீஸ் நிராகரிக்கப்படுமோ அவற்றில் இதுவும் ஒன்று என்பதே நமது அறிஞர்களின் கருத்தாகும்.

நூல்: அல்ஃபுசூலு ஃபில் உசூல், (பாகம் 3, பக்கம் 113)

இமாம் இப்னு ஜமாஆ

சில செய்திகள் சரியானது என்று உறுதியாக அறிந்துகொள்ளப்படும். அல்லாஹ்வின் செய்தியும் அவனுடைய தூதரின் செய்தியும் இதற்கு உதாரணமாகும். சில செய்திகள் பொய்யானது என்று உறுதியாக அறியப்படும். அல்லாஹ்வின் செய்திக்கு முரணாக இருக்கின்ற செய்தி இதற்கு உதாரணமாகும்.

நூல்: அல்மன்ஹலுர் ரவீ, (பாகம் 1 பக்கம் 31)

இமாம் அபூ இஸ்ஹாக் ஷீராஸி

ஒரு ஹதீஸ் எந்தக் காரணங்களால் நிராகரிக்கப்படும் என்பதைப் பற்றிய பாடம்.

ஒரு நம்பகமானவர் ஒரு ஹதீஸை அறிவித்தால் சில காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும். அதில் ஒன்று அந்தச் செய்தி குர்ஆனின் நேரடியான கருத்திற்கு முரணாக இருக்கும். அல்லது பல வழிகளில் வந்த உறுதியான ஹதீஸிற்கு முரணாக இருக்கும். அப்படி இருந்தால் அது அடிப்படையற்ற செய்தி என்றோ சட்டம் மாற்றப்பட்டது என்றோ அறியப்படும்.

நூல்: அல்லம்உ ஃபீ உசூலில் பிக்ஹ், (பாகம் 1, பக்கம் 82)

அறிஞர் ஸர்கஸீ

ஹதீஸ் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக ஆகாது. செயல்படுத்துவதற்கும் அது ஆதாரமாக அமையாது.

நூல்: உசூலுஸ் ஸர்கஸீ, (பாகம் 1, பக்கம் 364)

மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள அறிஞர்கள் சுன்னத் வல்ஜமாத்தினராலும் அறிவிப்பாளர்களை எடைபோடும் இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபீ போன்றவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இஸ்லாமியப் பணியை செய்து சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர்கள். இவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் இவர்களின் மதிப்பை உணருவார்கள்.

இவர்கள் தான், ஒரு ஹதீஸ் குர்ஆனுடன் முரண்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று நாம் கூறும் விதியை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இங்கு நாம் குறிப்பிட்ட அறிஞர்கள் அல்லாமல் இன்னும் பல அறிஞர்களும் இவ்விதியைக் கூறியுள்ளனர். இவ்விதியின் அடிப்படையில் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைந்த சில ஹதீஸ்களையும் மறுத்துள்ளனர்.

அபூபக்ர் இஸ்மாயீலீ

புகாரியில் 3350வது எண்ணில் பதிவாகியுள்ள செய்தியை அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கின்றது என்பதால் இந்த அறிஞர் குறை கண்டுள்ளார்.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 8 பக்கம் 500

அபூபக்ர் இப்னுல் அரபி

புகாரி 4670வது செய்தியாகப் பதிவாகியுள்ள ஹதீஸை அதன் கருத்து தவறாக இருக்கின்றது என்ற காரணத்தால்

இமாம் அபூபக்ர் இப்னுல் அரபி

இமாம் அபூபக்ர் அல்பாகில்லானி

இமாமுல் ஹரமைன் அல்ஜ‚வைனி

இமாம் அபூ ஜஃபர் தாவுதீ

கஸ்ஸாலி

ஆகியோர் மறுத்துள்ளனர்.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 8, பக்கம் 338

ஸஹாபாக்களில் உமர் (ரலி), ஆயிஷா (ரலி), அபூ அய்யூப் அல்அன்சாரீ ஆகியோர் இந்த விதியின் அடிப்படையில் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.

அபூபக்ர் இப்னுல் அரபி

அபூபக்ர் இஸ்மாயீலீ

அபூபக்ர் பாகிலானீ

புகாரி நூலுக்கு விரிரை எழுதிய தாவூதீ

கஸ்ஸாலி

இமாமுல் ஹரமைன்

யஹ்யா பின் மயீன்

இப்னு அப்தில் பர்

அவ்ஸாயீ

அபூ இஸ்ஹாக் ஷீராஸி

கதீபுல் பஃதாதீ

இப்னு ஜமாஆ

சர்ஹஸீ

அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ்

குர்துபி

மற்றும் இன்னும் பல அறிஞர்கள் இந்த விதியின் அடிப்படையில் குர்ஆனுக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் யாரும் செல்லாத தனி பாதையில் சென்று நபிமொழிகளை மறுக்கின்றது என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சில உதாரணங்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம். உண்மையை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இவை போதிய சான்றுகளாகும்.

இத்தனை அறிஞர்களையும் நமது நிலைபாட்டிற்கு ஆதாரமாக நாம் குறிப்பிடவில்லை என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும். அறிஞர்களின் கூற்றுக்கள் ஒருக்காலும் மார்க்க ஆதாரமாக இருக்க முடியாது. குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகும்.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் மார்க்க விஷங்களில் தவறே செய்யாதவர்கள் என்பதும் நம்முடைய வாதமில்லை. இவர்கள் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான வழிகேடான கருத்துக்களைக் கூட கூறியிருக்கலாம். இதையும் நாம் மறுக்கமாட்டோம்.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று நமது ஜமாஅத் மட்டும் சொல்லவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் பலரும் கூறியுள்ளார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த அறிஞர்களை இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.