ஹதீஸ்களை மறுப்பது மத்ஹபுவாதிகளே!
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படை! இரண்டில் எந்த ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுத்தாலும் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறிவிடுவான்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
அல்குர்ஆன் 59:7
நபிகள் நாயகம் ஒன்றைச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதே ஒரு முஸ்லிமின் கடமை. நபிகள் நாயகம் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்பவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது.
இந்தக் கொள்கை பிரகடனம் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாரக மந்திரமாக, தமிழகத்தில் பன்னெடுங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் நம்மை எதிர்த்தது, அடித்தது, உதைத்தது ஆகிய அனைத்தும் இந்தக் கொள்கையை உரக்கச் சொன்னதன் விளைவாகவே தவிர சொந்தப் பகையினால் அல்ல!
முன்னோர்களைப் பின்பற்றாதீர்கள், பெரியோர்களைப் பின்பற்றாதீர்கள், இமாம்களை, சஹாபாக்களைப் பின்பற்றாதீர்கள். நபிகள் நாயகம் அவர்களை (ஹதீஸ்களை) மட்டும் பின்பற்றுங்கள் என்று நாம் சொன்னதாலேயே இவர்கள் நம்மை எதிர்த்தார்கள், நமது பிரச்சாரத்தை ஏற்க மறுத்தார்கள்.
இத்தகையவர்கள் இன்று நம்மை நோக்கி, “ஹதீஸை மறுப்பவர்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
ஒரு செய்தி குர்ஆனுடன் முரண்படுகிறது. எனவே இது நபிகள் நாயகத்தின் கூற்றல்ல என்று சொல்பவர்கள் ஒரு போதும் ஹதீஸை மறுத்தவர்களாக மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு அற்றவர்களாக இந்தப் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் நம்மை விமர்சிக்கின்றார்கள்.
இதில் வியப்பிலும் வியப்பு என்ன தெரியுமா?
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தெளிவுபடுத்தாமல் மக்களிடையே பிரச்சாரம் செய்வதே தவறு. அதையும் தாண்டி நபிகள் நாயகத்தின் பெயரால் துணிந்து பல ஹதீஸ்களைப் புதிது புதிதாக இட்டுக் கட்டிச் சொல்வது நரகில் தள்ளும் நாச காரியம். அதை மனஉறுத்தலின்றி செய்யும் சைபுத்தீன் ரஷாதி வகையறாக்களும் ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்று நம்மை விமர்சிப்பது தான் நமக்கு பெரும் வியப்பை அளிக்கின்றது.
காரணம், இந்த விமர்சனத்தை முன்வைப்பதற்குக் கொஞ்சமும் தகுதியற்றவர்களாகவே போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் காட்சியளிக்கின்றார்கள்.
உண்மையில் நாம் ஹதீஸை மறுப்பவர்களில்லை என்பது தனி விஷயம். நபிகள் நாயகம் குர்ஆனுக்கு முரணாகப் பேச மாட்டார்கள்; ஆனால் இன்ன ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுகிறது; எனவே இதை நபிகள் நாயகம் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று சொல்வது ஒரு போதும் ஹதீஸை மறுப்பதாகாது.
ஆனால் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் நேரடியாகவே பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கின்றார்கள். அவர்கள் மறுக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை என்பதே உண்மை.
புறக்கணிப்பதும் மறுப்பதே!
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
திருக்குர்ஆன் 4:140
இந்த வசனம் சொல்வதென்ன?
ஒரு வசனம் எந்தக் கருத்தை வலியுறுத்துகிறதோ அதைப் புறக்கணிக்கும் வகையில் நடப்பது அந்த வசனத்தை மறுக்கும் செயல் என இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான். அது போலவே ஹதீஸில் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கும் போது அதை தமது செயலால் புறக்கணிப்பதும் ஹதீஸை மறுக்கும் செயலேயாகும்.
குறிப்பாக ஹதீஸ்களில் ஒரு செயல் தடை செய்யப்பட்டிருக்க அதையே மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றுவதும், அனுமதிக்கப்பட்ட செயல்களை மனோ இச்சைப் பிரகாரம் தடைசெய்வதும் தெளிவாக ஹதீஸ்களை மறுக்கும் செயலாகும்.
இதை சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் மிக நிறைவாகவே செய்கிறார்கள்.
கப்ர் வழிபாடு
இஸ்லாத்தில் கப்ர் வழிபாட்டிற்குத் துளியும் இடமில்லை. கப்ர் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடை செய்து பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. கப்ர் வழிபாடு செய்வதைக் கடுமையாகப் பல ஹதீஸ்கள் எச்சரிக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1330
கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம் 1765
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்),
நூல்: முஸ்லிம் 1764
இத்தனை நபிமொழிகள் கப்ர் கூடாது என்று தடை செய்திருக்க அதை இஸ்லாத்தின் பெயராலேயே அரங்கேற்றுகிறார்கள் எனில் இது ஹதீஸை மறுக்கும் செயலில்லையா?
கப்ர் தொடர்பான நபிகள் நாயகம் கூறிய ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளை மறுத்தால் மட்டுமே கப்ர் வழிபாடு செய்ய முடியும்.
பள்ளிவாசல் வளாகத்திலேயே கப்ர் கட்டி வழிபாடு செய்வதும், அதற்கு விழா எடுப்பதும் அதற்கு இஸ்லாத்தின் சாயம் பூசுவதும் ஹதீஸ்களை மறுக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன?
இதனடிப்படையில் கப்ர் வழிபாடு செய்பவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என சைபுத்தீன் ரஷாதி வகையறாக்கள் கொதித்து எழுந்துள்ளார்களா? அவ்வாறு கொதித்தெழுந்திருந்தால் உண்மையில் இவர்களுக்கு ஹதீஸின் மேல் அப்பழுக்கற்ற அக்கறை உண்டு என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கும் செயலுக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும், அவர்களின் அனாச்சார நிகழ்வுகளை ஆதரிப்பவர்களாகவுமே இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்.
மக்ரிப் முன் சுன்னத்
அனைத்து பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் தொழுகை உண்டு என்பது நபிமொழி.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என்று மூன்று முறை கூறிவிட்டு, “விரும்பியவர் (அதைத் தொழுது கொள்ளட்டும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி)
நூல்: புகாரி 624
இந்த ஹதீஸின் பிரகாரம் சுப்ஹ், லுஹர், அஸர், மக்ரிப், இஷா என எல்லா தொழுகைக்கும் முன் சுன்னத் உண்டு என்பது தெளிவாகிறது.
மேலும் மக்ரிபிற்கு முன் சுன்னத் உண்டு என்பது தெளிவாகவே வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்‘ (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி)
நூல்: புகாரி 1183
மக்ரிபிற்கு முன் சுன்னத் உண்டு விரும்பியவர் தொழலாம் என்று நேரடியாக இந்த நபிமொழி தெரிவிக்கின்றது. சிலர் இயலாமையினால் முன் சுன்னத் தொழவில்லை எனில் அது வேறு விஷயம். ஆனால் மத்ஹபினர் மக்ரிபிற்கு முன் சுன்னத் தொழக்கூடாது என்று சட்டமே வகுத்துள்ளனர்.
அனைத்து நேர தொழுகைக்கான பாங்கிற்கும் அதன் இகாமத்திற்கும் இடையில் சிறிது இடைவேளை விடும் நிலையில் மக்ரிபிற்கு மட்டும் அவ்வாறு இடைவெளி விடுவதில்லை. “மக்ரிப் பாங்கு – 6:35, இகாமத் – உடன்’ என்று எழுதி வைத்திருப்பதுடன் ஒருவர் மக்ரிப் பாங்கு சொல்லி முடிக்கவும் மற்றொருவர் இகாமத் சொல்லத் துவங்கிவிடுவார்.
இதுவும் ஹதீஸை மறுக்கும் செயல் தானே! நபிகள் நாயகம் தெளிவாக மக்ரிபிற்கு முன் சுன்னத் உண்டு, விரும்பியவர் தொழலாம் என்று சொல்லியிருக்க அதற்குக் கொஞ்சமும் இடமளிக்காதவாறு நடந்து கொள்வது ஹதீஸை மறுக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன? இதற்கு ஹதீஸ்களை மறுக்கும் மத்ஹபினர் பதிலளிப்பார்களா?
பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாதா?
பெண்கள் பள்ளிக்கு வரலாமா? என்ற கேள்விக்கே இஸ்லாத்தில் இடமில்லை.
நபிகளாரின் காலத்தில் ஐந்து நேரத் தொழுகைக்கும் ஜமாஅத்துடன் பெண்கள் கலந்து கொள்வார்கள்.
பள்ளிக்கு வர பெண்கள் அனுமதி கேட்டால் அனுமதி மறுக்க கூடாது என்பது நபியின் உத்தரவு,
இமாம் தவறிழைக்கும் போது அதைச் சுட்டிக்காட்ட பெண்கள் கை தட்ட வேண்டும் என்ற தனிவழியை நபியவர்கள் கற்றுந் தந்தது (புகாரி 1234), குழந்தையின் அழுகுரல் கேட்டு தாயின் மனம் பரிதவிக்க கூடாது என்றெண்ணி நபிகள் நாயகம் தொழுகையைச் சுருக்கித் தொழுதது (புகாரி 707), ஆண்கள் அமர்வில் சீராக அமரும் வரை பெண்கள் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்த கூடாது என்ற நபியின் கட்டளை உள்ளிட்ட எண்ணிடலங்கா ஹதீஸ்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கின்றன.
சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், “ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்‘ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி 362
நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துகொள்ள முடியாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 578
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 865
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5238
நபிகள் நாயகம், பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதித்த பின் அதைத் தடை செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. அப்படி ஒருவர் தடை செய்வதாக இருந்தால் இத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆனால் மத்ஹபினர் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்கின்றனர். மத்ஹபு நூல்களில் அவ்வாறு சட்டமும் இயற்றி வைத்துள்ளனர்.
தற்போது பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதை நான் வெறுக்கிறேன். மேலும் ஜூம்ஆ மற்றும் கடமையான தொழுகைகளில் (பள்ளியில்) கலந்து கொள்வதையும் நான் வெறுக்கிறேன். வயோதிக பெண்கள் இஷா, பஜ்ர் பெருநாள் தொழுகைகளில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அபூஹனீபா கூறுகிறார்.
நூல்: அல்முஹீத், பாகம் 2, பக்கம் 208
நபிகள் நாயகம் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதித்த பிறகு இவ்வாறு சட்டம் எழுதி வைப்பதும் அதனடிப்படையில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்வதும் ஹதீஸ்களை மறுக்கும் செயலேயாகும். இதற்கு மத்ஹபினர் என்ன பதிலை அளிக்கப் போகின்றனர்?
இப்படி மத்ஹபினர் ஹதீஸ்களோடு போர் செய்யும் வகையில் சட்டம் இயற்றியிருப்பது கொஞ்சம் நஞ்சமல்ல. எண்ணற்ற சட்டங்களை இயற்றியுள்ளார்கள். அது ஒவ்வொன்றையும் விரிவாக எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாமல் நீண்டு கொண்டே செல்லும். எனவே அவற்றில் சிலவற்றைப் பட்டியலாக, கேள்வி வடிவில் அறியத் தருகிறோம். இந்த ஒவ்வொன்றுக்கும் ஹதீஸை மறுப்பவர்கள் என நம்மை விமர்சிக்கும் மத்ஹபினர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.
* மவ்லித் ஓதுவது, மீலாது விழா கொண்டாடுவது கூடாது என்று ஹதீஸ்கள் (புகாரி 3445, 6830) இருக்க அதையே இஸ்லாத்தின் பெயரால் செய்வது ஹதீஸை மறுக்கும் செயலா? இல்லையா?
* ஒரே நேரத்தில் முத்தலாக் என்று சொல்வது ஒரே தலாக்காகவே கருதப்படும் என்று நபிமொழி (முஸ்லிம் 2689) இருக்க அதை மறுக்கும் வகையில் (மூன்று தலாக்காக கருதப்படும் என) சட்டம் இயற்றி வைத்திருப்பதை எந்த வகையில் சேர்ப்பது?
* ஜும்ஆவுக்கு ஒரு பாங்கு (புகாரி 912) என்று நபிமொழி சட்டம் சொல்ல அதற்கு மாற்றமாக இரண்டு பாங்கு வழிமுறையை ஏற்படுத்தியிருப்பது ஹதீஸை மறுக்கும் செயல் தானே?
* பெண்களுக்கு குலா எனும் விவாகரத்து உரிமை உண்டு என்று புகாரி 5273, திர்மிதி 1105 என ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பறைசாற்றும் போது பெண்களுக்கு குலா உரிமை இல்லை என்று ஹனபி மத்ஹப் கூறும் சட்டம், மேதாவிகளான உங்களுக்கு ஹதீஸை மறுப்பதாகத் தெரியவில்லையா?
* கடமையான தொழுகைக்கான இகாமத் சொல்லி விட்டால் அந்தத் தொழுகையைத் தவிர புதிதாக எந்தத் தொழுகையும் கிடையாது (முஸ்லிம் 1160) என்பது நபிமொழி. ஆனால் ஹனபி மத்ஹபினர் சுப்ஹ் தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டு ஜமாஅத் நடைபெற்று இரண்டாம் ரக்அத் முடியும் தருவாயில் போது கூட சுப்ஹின் முன் சுன்னத்தைத் தொழுகிறார்களே! அவ்வாறு தொழும்படி சட்டம் சொல்கிறார்களே! இது ஹதீஸை மறுக்கும் செயலாகத் தெரியவில்லையா?
இவை மட்டுமின்றி மத்ஹபைச் சார்ந்தவர்களின் நூல்களில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் விதமாகப் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தங்களுக்குத் தாங்களே பல அடிப்படைகளை வகுத்துக் கொண்டு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் நிலைப்பாட்டை அவர்களும் எடுத்துள்ளனர்.
அது பற்றிய குறிப்புகளையும் விபரங்களையும் காண்போம்.
பலிப்பிராணிக்கு அடையாளமிடுதல்
குர்பானியிடப்படும் பலிப்பிராணிகளுக்கு அடையாளமிடும் வழக்கத்தை நபிகள் நாயகம் அனுமதித்துள்ளதாகப் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன. அது பலிப்பிராணி என்பதைக் குறிக்கும் வகையில் சிறு கீறலிடப்படும். இதை இமாம் அபூஹனீபா அவர்கள் வெறுத்ததாகவும் அதுவும் ஒரு வகையில் பிராணியைச் சிதைப்பது தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். நான் அதை வெறுக்கிறேன். அதுவும் ஒரு வகையில் சிதைப்பது தான் என்று இமாம் அபூஹனீபா கூறுகிறார்.
நூல்: முஹல்லா 7:111
வியாபார ஒப்பந்தம்
வியாபார ஒப்பந்தம் செய்யும் இருவர் அவ்விடத்தை விட்டுப் பிரியாத வரை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் தெரிவிக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!
அறிவிப்பவர் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல்: புகாரி 2079
இமாம் அபூஹனீபா அவர்கள் இந்தச் செய்தியை மறுத்துள்ளதாக இப்னு அப்தில் பிர் அவர்கள் தமது நூலில் குறிப்பிடுகிறார்.
வியாபார ஒப்பந்தம் செய்யும் இருவரும் கப்பலில் அல்லது சிறைச்சாலையில் இருந்தாலோ, விலங்கிடப்பட்டிருந்தாலோ எப்படி அவ்விருவரும் பிரிவார்கள்? (பிரியாத வரை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு என்றால்) இவ்விருவருக்கிடையில் ஒரு போதும் வியாபார ஒப்பந்தம் நடக்காதே என்ற விளக்கத்தை அளித்து இந்தச் செய்தியை மறுத்துள்ளதாக இப்னு அப்தில் பிர் அவர்கள் குறிப்பிடுகிறார்.
பார்க்க: அத்தம்ஹீத் 14:13
அதற்குரிய ஆதாரம் இதோ:
நடைமுறைக்கு மாற்றமான ஹதீஸை மறுத்தல்
ஒரு நடைமுறை மக்களிடம் பரவலாக தொன்று தொட்டு இருந்து வருகிறது, அந்தப் பழக்கம் மக்களிடம் ஆழப்பதிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நடைமுறைக்கு மாற்றமாக ஒரு நபர் அறிவிக்கும் செய்தி வருமேயானால் அதை மறுக்க வேண்டும் என்பது அதிகமான ஹனபி மத்ஹபு அறிஞர்களின் கருத்து என ஹனபி மத்ஹபு நூல் சட்டம் சொல்கின்றது.
காலந்தொட்டு அந்த நடைமுறை இருக்கிறது எனில் அது ஏதாவது ஆதாரத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்ற மிகுதியான எண்ணத்தின் பேரில் இவ்வாறு சட்டம் சொல்கின்றனர்.
உதாரணத்திற்கு தொழுகையில் பிஸ்மில்லாஹ் கூறாமல் ஓதும் பழக்கம் மக்களிடம் நடைமுறையில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்கு மாற்றமாக பிஸ்மில்லாஹ் சப்தமிட்டு ஓதுவது பற்றி ஒரு ஹதீஸ் இருக்கிறது எனும் போது அந்த ஹதீஸை மறுத்து விட வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதோ அதற்குரிய ஆதாரம்:
சோதனைகள் சூழ்ந்ததாக இருக்கும் ஹதீஸை மறுப்பது பற்றியான சட்டம்
மறை உறுப்பைத் தொடுவதால் ஒளூ முறிவது, பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதுவது, ருகூவிற்குச் செல்லும் போதும் அதிலிருந்து எழுந்திருக்கும் போதும் இரு கைகளையும் உயர்த்துவது, பாத்திஹா அத்தியாத்தை ஓதுவது அவசியம் உள்ளிட்ட ஒருவர் அறிவிக்கும் செய்திகளை இதனடிப்படையில் ஹனபிகள் மறுக்கின்றனர்.
நூல்: பஹ்ருல் முஹீத் பாகம் 3, பக்கம் 403
குர்ஆனுக்கு முரண்பட்டால்…
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என நாம் கூறுகிறோம். இதன் காரணமாகவே ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று மத்ஹபினர் நம்மை விமர்சிக்கவும் செய்கிறார்கள். குர்ஆனுக்கு முரண்படும் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனும் அடிப்படையை மத்ஹப் நூல்களில் காண முடிகிறது.
ஒரு ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டு பார்ப்பது அவசியமா என்பதைப் பற்றி ஹனபி சட்ட விளக்க நூலான பஹ்ருல் முஹீத் எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிடுதல் தொடர்பான சட்டம்
ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமில்லை. பெரும்பாலான ஹனபி அறிஞர்கள் ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம் எனவும், அவ்வாறு ஒப்பிடும் போது குர்ஆனுக்கு முரணாக எதுவும் இல்லை எனில் பிரச்சனை இல்லை. முரணாக எதுவும் இருந்தால் அந்தச் செய்தி நிராகரிக்கப்படும் என்கின்றனர்.
நூல்: பஹ்ருல் முஹீத், பாகம் 3, பக்கம் 407
குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுவதால் ஹதீஸை மறுப்பவர்கள் எனில் இந்த கருத்தைத் தானே பெரும்பாலான ஹனபி அறிஞர்கள் கூறியதாக மத்ஹபு நூல் கூறுகின்றது. அந்த ஹனபி அறிஞர்கள் அனைவரும் ஹதீஸை மறுப்பவர்கள் தானா?
இப்படி எண்ணற்ற விதிமுறைகளை வகுத்து அதனடிப்படையில் மத்ஹபினரும் ஹதீஸ்களை மறுக்கவே செய்கின்றனர்.
இவை அனைத்தும் ஹதீஸ்களை மறுக்கும் ரீதியிலான மத்ஹபினரின் செயல்பாடுகளையும் அவர்களது நூல்களில் கூறப்பட்ட சட்டங்களையும் கவனத்தில் கொண்டு கேட்கப்பட்டவையாகும். இவை ஒவ்வொன்றுக்கும் கண்டிப்பாகப் பதில் சொல்வதோடு மத்ஹபு சாராத பின்வரும் இரு கேள்விகளுக்கும் சேர்த்து மத்ஹபினர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மிஃராஜ் நிகழ்வு வஹீக்கு முன்பா?
மிஃராஜ் நிகழ்வு நபிகளாருக்கு இறைச் செய்தி அருளப்பட்ட பிறகு தான் நடைபெற்றது என முஸ்லிம்கள் அனைவரும் நன்கறிவோம். அனைத்து அறிஞர்களும் மாற்றுக் கருத்தின்றி ஏகோபித்து ஏற்றுக் கொண்ட முடிவாகும். ஹதீஸ் ஆதாரம் குறிப்பிடத் தேவையில்லை எனுமளவு நன்கு அறியப்பட்ட விஷயம்.
எனினும் புகாரியில் 7517ல் மிஃராஜ் நிகழ்வு நபிகளாருக்கு இறைச் செய்தி அருளப்படுவதற்கு முன்பு நடைபெற்றதாக ஹதீஸ் வருகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?
இறைச்செய்திக்கு முன்பு என சொன்னால் பின்பு எனக்கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டி வரும்.
பின்பு எனக் கூறினால் முன்பு எனக் கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டி வரும். இரண்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம்.
இது தொடர்பாக எந்த முடிவை எடுப்பது? இரண்டு ஹதீஸ்களில் எந்த ஹதீஸையும் மறுக்காமல் மத்ஹபினர் ஒரு முடிவை சொல்வார்களா? (ஸலபுகளும் இதற்குப் பதில் சொல்ல முன்வந்தால் நமக்கு மறுப்பேதுமில்லை)
மைமூனா ரலி திருமணம் இஹ்ராமிலா?
அதே போன்று நபிகள் நாயகம் அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராமின் போது திருமணம் செய்ததாகவும், இஹ்ராம் அல்லாத நிலையில் திருமணம் செய்ததாகவும் மாறுபட்ட ஹதீஸ்கள் வருகின்றன.
இஹ்ராமில் திருமணம் நடைபெற்றதாக புகாரி 4258லும், இஹ்ராம் அல்லாத நிலையில் திருமணம் நடைபெற்றதாக முஸ்லிம் 2757லும் ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகள்.
இரண்டு ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் ஒரு முடிவைச் சொல்ல மத்ஹபினரால் இயலுமா? அவர்கள் என்ன பதிலை அளித்தாலும், விளக்கம் கூறினாலும் நிச்சயம் ஒரு ஹதீஸை மறுக்க வேண்டி வரும். இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்கள்? ரஷாதிகள் பதிலளிப்பார்களா?
அபூஹனீஃபாவின் அணுகுமுறை
இமாம் அபூஹனிபா அவரிடம் அன்னாருடைய மாணவர் கேட்ட சில கேள்விகள் – அதற்கு இமாம் அவர்கள் அளித்த பதில்கள் ஆகியவை ஆலிம் வல் முதஅல்லிம் எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. (இது ஹனபி மத்ஹபு நூல்களில் மேற்கோடிட்டு காட்டப்படுகின்றது)
அதில் அவர்கள் காலத்தில் பரவிய ஒரு ஹதீஸைப் பற்றி அபூஹனீபா அவர்களிடம் கேட்கப்படுகிறது.
இறைவிசுவாசி விபச்சாரம் செய்தால் தொப்பி அவனது தலையிலிருந்து கழன்று விடுவதைப் போன்று இறைநம்பிக்கை கழன்று விடுகிறது. அவன் பாவமன்னிப்பு கோரினால் இறைநம்பிக்கை அவனிடமே திரும்பி விடுகிறது.
இதை நபிகள் நாயகம் கூறியதாக அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்படுகிறதே, இது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று இமாம் அபூஹனீபா அவர்களிடம் கேட்கப்படுகிறது. அதற்கு இமாம் அவர்கள் இது குர்ஆனுக்கு முரண்படுகிறது, ஒரு இறைத்தூதர் குர்ஆனுக்கு மாற்றமாக பேசமாட்டார். குர்ஆனுக்கு மாற்றமாகப் பேசுபவர் இறைத்தூதரமாக இருக்க மட்டார். இந்தச் செய்தியை பொய் என்று சொல்வதால் நபியை பொய்ப்படுத்தியாகாது, நபியின் கூற்றை மறுக்கிறேன் என்று கூறினால் தான் மறுத்தவன் ஆவேன் என்று அபூஹனிபா அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இதுபற்றி ஆலிம் வல்முதஅல்லிம் நூலில் பக்கம் 24, 25ல் பாரக்கலாம்.
இதனடிப்படையில் மத்ஹபினரும் ஹதீஸ்களை மறுக்கவே செய்கிறார்கள்.
ஹதீஸ் என்பது இஸ்லாத்தின் அடிப்படையல்ல என்று மறுப்பது வேறு. குர்ஆனுக்கு முரண்படுவதால் இது ஹதீஸ் அல்ல என்றுரைப்பது வேறு. இரண்டுக்குமிடையில் வித்தியாசம் உண்டு என்பதை உணர்த்துவதற்கே இதை இங்கு குறிப்பிடுகிறோம்.