ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 13
இறை மறுப்பாளர்களுடன் போர் செய்ய வேண்டுமா?
மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைக் கூறுகின்றார்கள். அதற்கான விளக்கத்தையும், “எதிர்வாதங்களும் முறையான பதில்களும்’ என்ற தலைப்பின் கீழ் கண்டோம்.
மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு வேறு சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
ஆதாரம்: 1
இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இருக்கிறது என்ற மோசமான கருத்தை நிலை நாட்ட, பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதர்‘ என்று மனிதர்கள் உறுதியாக நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர. மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 25
இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அவர்களிடம் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே வாளால் இஸ்லாம் பரவியது என்று இஸ்லாமிய விரோதிகள் கூறும் கூற்று உண்மை தான் என்பது இவர்களின் வாதம்.
நமது விளக்கம்
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்கள் கூறுவது சரி என்பது போல் தெரியும். ஆனால் போர் புரிவதற்கு இஸ்லாம் வகுத்துள்ள விதிமுறைகளைக் கவனித்தால் இந்த ஹதீஸை இவ்வாறு விளங்கக் கூடாது என்ற முடிவிற்கே நியாயமானவர்கள் வருவார்கள். திருக்குர்ஆன் அழகான இந்த விதிமுறைகளைக் கூறுகிறது.
வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 2:190
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.
அல்குர்ஆன் 9:13
சொந்த ஊரை விட்டு விரட்டியவர்களுடன் தான் போர்
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.
அல்குர்ஆன் 2:191
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
அல்குர்ஆன் 22:40
போரிலிருந்து விலகிக்கொள்வோருடன் போரில்லை
(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:192
அநீதி இழைக்கப்படும் பலவீனர்களுக்காகவே போர்
“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!” என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்குர்ஆன் 4:75
போரை முதலில் துவக்கக் கூடாது
“போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
அல்குர்ஆன் 22:39
சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை
(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 8:61
மதத்தைப் பரப்பப் போரில்லை
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:256
இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் 9:6
“(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 109வது அத்தியாயம்
போர் செய்வதற்குக் குர்ஆன் மேற்கண்ட விதிமுறைகளைக் கூறுவதால் எதிர்த் தரப்பினர் சுட்டிக் காட்டிய ஹதீஸை குர்ஆனுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.
- ஹதீஸில் இடம்பெற்றுள்ள மக்கள் என்ற வார்த்தை எல்லோரையும் எடுத்துக் கொள்ளாது. மாறாக அநியாயமாகப் போர் செய்ய வருபவர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
- மதத்தைப் பரப்புவதற்காகப் போரில்லை என்று குர்ஆன் கூறுவதால் இஸ்லாத்திற்குப் பிறரைக் கொண்டு வருவதற்காகப் போர் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காக அக்கிரமக்காரர்களுடன் போர் செய்யும் போது அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாக ஒத்துக் கொண்டால் இதற்கு மேல் அவர்களிடம் போரிடக் கூடாது. அக்கிரமத்தை ஒழிப்பது தான் போரின் நோக்கமே தவிர இஸ்லாத்திற்கு நிர்ப்பந்தமாக இழுத்து வருவது நோக்கமல்ல. முஸ்லிம்களோடு இணைந்து கொள்கிறேன் என்று அவன் கூறுவதன் மூலம் போரை நிறுத்திக் கொள்ள விரும்புகிறான்.
அக்கிரமக்காரர்களுடன் செய்யும் போர் பின்வரும் காரணங்களால் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
- அவர்கள் சாமாதானத்தை விரும்பினால் இதற்கு மேல் போர் செய்யக் கூடாது.
- ஜிஸ்யா வரி கொடுப்பதாகக் கூறினாலும் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாகக் கூறினாலும் போர் செய்வது கூடாது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த மூன்று காரணங்களில் ஒன்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹதீஸின் இறுதியில் “இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்’ என்று இடம் பெற்றுள்ள இந்த வாசகம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. இது தான் இந்த ஹதீஸின் நோக்கம் என்பதை பின்வரும் சம்பவங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
“இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து)கொண்டு, “அல்லாஹ்வுக்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்‘ என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்) அவனைக் கொல்லாதே!” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது கையைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னான்!” என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்று விடுவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி)
நூல்: முஸ்லிம் 155
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரக்கா‘ கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்ட போது, அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்‘ (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம், “உஸாமா! அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் “அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்று மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் “(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)‘ என்றுகூட ஆசைப்பட்டேன்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: முஸ்லிம் 159
“ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். “அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?” என்று (கடிந்து) கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா (ரலி)
நூல்: முஸ்லிம் 158
அக்கிரமத்திற்கு எதிராக மட்டும் தான் போர் இருக்க வேண்டும். அக்கிரமத்திற்கு எதிராக நடத்தப்படும் போரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி விட்டால் அவருடைய கூற்றைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் கொன்று விடக் கூடாது. மாறாக அவருடைய கூற்றை ஏற்று அவரைத் தாக்காமல் விட்டுவிட வேண்டும். இதைத் தான் எதிர் தரப்பினர் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.
முஸ்லிம் அல்லாதவர்களின் மீது இஸ்லாத்தைத் திணிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஜிஸ்யா என்ற வரியை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் செல்வங்களுக்கு ஜகாத் வாங்கப்படுவதைப் போல் இவர்களிடம் இந்த வரி வாங்கப்படும். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் இந்த வரியை செலுத்திக் கொண்டு தங்கள் கொள்கையில் இருந்து கொள்ளலாம்.
இஸ்லாம் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் மார்க்கமாக இருந்திருந்தால் “இஸ்லாத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை; வராதவர்கள் கொல்லப்படுவார்கள்’ என்ற ஒரு சட்டத்தை மட்டுமே கூறியிருக்கும். நிர்ப்பந்தம் இல்லை என்பதால் தான் இதற்கான மாற்று வழியாக ஜிஸ்யாவை ஆக்கியுள்ளது.
வளரும் இன்ஷா அல்லாஹ்