ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 11
மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?
மார்க்கத்தை மாற்றிக் கொண்டவன் என்றால் யார்?
தனது மார்க்கத்தை மாற்றியவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸிற்கு மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று அர்த்தம் செய்வது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் தவறு என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். எதிர்த் தரப்பினர் கூறும் பொருள் சரியானதல்ல என்றாகி விட்ட போது அதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து கொண்டே இஸ்லாம் கூறாததை இஸ்லாம் என்று சொல்பவன் அல்லது இஸ்லாம் கூறியிருப்பதை இஸ்லாம் இல்லை என்று கூறுபவன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்படுவான் என்பதே அந்த ஹதீஸின் விளக்கம். மதம் மாறியவனை விட இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தைச் சீர்குலைப்பவன் தான் மிகவும் தீமைக்குரியவன்.
பின்னால் வரவிருக்கும் கவாரிஜ் கூட்டத்தார்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். நபியவர்கள் கூறிய தன்மையுள்ள அந்தக் கூட்டத்தாரிடம் அலீ (ரலி) அவர்கள் போர் செய்தார்கள். இவர்கள் தங்களை முஸ்லிம் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். குர்ஆனைப் படிக்கும் வழக்கம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களை நடைமுறைப்படுத்துவதால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பினார்கள். இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அதை நபி (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் எழுந்து வந்து, “நீங்கள் அநியாயமாகப் பங்கிட்டுள்ளீர்கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். இவரைப் பற்றியும் இவரது வழித் தோன்றல்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது. வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். முஸ்லிம்களையே அவர்கள் கொலை செய்வார்கள். சிலை வணங்கிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்களை அடைந்தால் ஆது கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழிப்பேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7432
அலீ (ரலி) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்தின் அடிப்படையில், மார்க்கத்தில் இருந்து கொண்டே அதை மாற்ற நினைத்தவர்களிடமும், முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களிடமும் தான் போர் புரிந்தார்கள்.
அலீ (ரலி) அவர்களிடம் (ஸனாதிகா என்று சொல்லப்படும்) இஸ்லாத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து விட்டார்கள். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்க மாட்டேன். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்‘ என்று கூறினார்கள். மாறாக நபி (ஸல்) அவர்கள், “எவர் தமது மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள்‘ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இக்ரிமா
நூல்: புகாரி 6922
அலீ (ரலி) அவர்களால் கொல்லப்பட்டவர்கள் யாரென்றால் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் என்று சொன்னவர்கள். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்திருந்தார்கள். அதனால் தான் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றார்கள். இந்தக் கூட்டத்தினர் ராஃபிளா என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குத் தலைவனாக அப்துல்லாஹ் பின் ஸபஃ என்பவன் இருந்தான். இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு இந்த மோசமான கொள்கையைத் தோற்றுவித்தான்.
இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையைச் இஸ்லாத்தின் கொள்கை என்று சொன்ன இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸையே ஆதாரமாகக் காட்டினார்கள். அந்த ஹதீஸ் யாரைக் கொல்ல வேண்டும் என்று சொல்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இந்த வரலாற்றுச் செய்தி ஹசன் என்ற தரத்தில் அமைந்தது என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள். இமாம் ஷவ்கானீ அவர்கள் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்று தமது நூலில் குறிப்பிடுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததன் மூலம்) காஃபிராகி விட்டார்கள். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்கர் தயாரானார்கள்) உமர் (ரலி), “லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்; தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது‘ என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்.
அபூபக்ர் (ரலி) உமரை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நான் போர் புரிவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் வழங்கி வந்த ஒரு ஒட்டகக் குட்டியை வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்றார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1400
அபூபக்கர் (ரலி) அவர்கள் யாரிடத்தில் போர் செய்தார்களோ அவர்கள் கலிமாச் சொன்னவர்கள். தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள். ஆனால் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகிய ஸகாத்தைக் கொடுக்க மறுத்தார்கள். ஸகாத் இல்லை என்றே இஸ்லாம் சொல்கிறது என வாதிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் இவர்களால் மாற்றப்பட்டு விடும் என்பதால் அபூபக்கர் (ரலி) அவர்கள் அம்மக்களிடம் போர் தொடுத்தார்கள்.
தனது மார்க்கத்தை மாற்றுபவனைக் கொல்லுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன காரணத்தினால் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸகாத்தை மறுத்தவர்களிடத்தில் போர் புரிந்ததாக இமாம் புகாரி அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்