இலக்கணமும் தலைக்கனமும்

இலக்கணமும் தலைக்கனமும்

இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் மவ்லவி ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசும் போது, திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களில், “நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று ஈஸா (அலை) அவர்கள் கூறும் வாசகத்திற்கு கோவை விவாதத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தைச் சுட்டிக் காட்டி, இந்த விளக்கம் தான் ஈஸா மரணித்து விட்டார் என்ற காதியானிகளின் வாதத்திற்குப் பேரிடியாக அமைந்தது என்று பேசினார்.

அந்த விளக்கம் இதோ:

ஈஸா நபி மரணிக்கவில்லை

திருக்குர்ஆன் 19:30-32 ஆகிய வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர். எனவே, இம்மொழி பெயர்ப்பில் எது சரியானது என்பதை விரிவாக நாம் ஆராய்வோம்.

ஏனெனில் தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குக் காதியானிகள் இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.

  1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான். (திருக்குர்ஆன் 19:30)
  2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். (திருக்குர்ஆன் 19:31)
  3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32)

மேற்கண்டவாறு இந்த வசனங்களை சிலர் மொழி பெயர்த்துள்ளனர்.

தவறான கொள்கை உடையவர்கள் இந்த மொழி பெயர்ப்பின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்புகின்றனர்.

இரண்டாவது வசனத்தில் “நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்” என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.

இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32 வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.

எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.

இவ்வசனத்தில் “வ பர்ரன் பிவாலிததீ” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. “எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பது இதன் பொருள்.

செய்பவன் + ஆக + உம் (செய்பவனாகவும்) என்பதில் “உம்’மைப் பொருளை எங்கே தொடர்புபடுத்துவது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

“உம்’மைப் பொருளைப் பொறுத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன் என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு “உம்’மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் “கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்” என்ற வரிசைப்படி அமையும்.

“நல்லவனாகவும்’ என்பதை தொடர்புபடுத்துவதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, மூன்றாவது வசனத்தை (19:32) ஆராய்வோம்.

“என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பதை எங்கே தொடர்புபடுத்த வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதைத் தொடர்புபடுத்த முடியும்.

என்னை நபியாகவும் ஆக்கினான் என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக “என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்” என்ற கருத்து கிடைக்கிறது.

இப்படித் தான் பெரும்பான்மை அறிஞர்கள் தொடர்புபடுத்துகின்றனர்.

 “என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்ற சொற்றொடரை இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட 19:31 வசனத்தின் இறுதியிலும் தொடர்புபடுத்த முடியும்.

“நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்ற கருத்து இதிலிருந்து கிடைக்கும்.

நாம் இரண்டாவதாகக் கூறியபடி தொடர்புபடுத்துவது தான் மிகவும் சரியானதாகும்.

“உம்மை’ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் தொடர்புபடுத்த வேண்டும். அருகில் தொடர்புபடுத்த முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் தொடர்புபடுத்த வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.

“என் தாயாருக்கு நன்மை செய்பவனாக’ என்பது 19:32-வது வசனம். அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் தொடர்புபடுத்த வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் தொடர்புபடுத்துவதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

“நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் ஸகாத் கொடுக்குமாறு கட்டளையிட்டான்” என்பது தான் சரியான பொருளாகும்.

எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது…

இது  தர்ஜுமாவில் 19:30-32 வசனங்கள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள விளக்கம்!

கோவையில் காதியானிகளுடன் நடைபெற்ற விவாதத்தில் இந்த விளக்கத்தைக் கூறிய பிறகு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதை ஷம்சுல்லுஹா ரஹ்மானி தனது உரையில் குறிப்பிட்டார்.

இதற்கு நகர மஜ்லிசுல் உலமா சார்பில் நடைபெற்ற மறுப்புக் கூட்டத்தில் பேசிய ஸைபுத்தீன் ரஷாதி, தர்ஜுமாவில் இடம் பெற்ற இந்த அர்த்தத்தை ஆட்சேபித்து இரண்டு கேள்விகளை எழுப்பினார்.

  1. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவரது தாயார் இறந்து விட்டால் ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?
  2. ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் போது, அவரது தாயார் உயிருடன் இருக்க மாட்டார். அப்போது ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?

இவை தான் அவர் எழுப்பிய இரு கேள்விகளாகும். இவ்வாறு கேள்வி எழுப்பியதன் மூலம் மேற்கண்ட வசனத்திற்கு நாம் கொடுத்த அர்த்தம் தவறு என்று கூறுகின்றார்.

அப்படியானால் நாம் இவர்களிடம், “வானத்திலிருந்து ஈஸா நபி ஸகாத் கொடுக்கின்றார்களா?’ என்று காதியானிகள் கேட்கும் கேள்வியைத் திரும்பக் கேட்கிறோம். அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில், “இந்த உலகத்தில்” என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, “நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு, ‘இந்த உலகத்தில் நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்’ என்று வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

இப்படி அந்தப் பதில் கூட்டத்தில் விளக்கம் கூறியிருக்கிறார்கள்.

“நான் இந்தப் பூமியில் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் ஸகாத் கொடுக்க வேண்டும்; வானத்தில் இருக்கும் போது ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை’ என்று ஈஸா நபி கூறியதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்கிறார்கள்; மிர்ஸா குலாம் இப்படித் தான் சுய விளக்கம் கொடுத்தான் என்று நம்மை நோக்கி இந்த சு.ஜ.வினர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் தான் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்கின்றார்கள். இவர்கள் இஷ்டத்திற்கு எதையும் சேர்ப்பதற்கு குர்ஆன் என்ன மவ்லிது கிதாபா?

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 69:44, 45

ஏதாவது ஒரு வசனத்தையோ, ஏன் ஒரு வார்த்தையையோ கூட யாரும் துணிந்து இடைச்செறுகல் செய்யக் கூடாது; செய்யவும் முடியாது என்று கூறும் போது இதில் எப்படி, “ஃபித்துன்யா – இந்த உலகத்தில்’ என்று சேர்க்க முடியும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, “அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்தஎன்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருüய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன்னுடைய நபியையும்

நான் நம்பினேன்)

(இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில்)

நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்.

இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்என்று நபி (ஸல்) அவர்கüடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (“நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்என்பதற்கு பதிலாக) “நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை; “நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்என்று சொல்என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள். (நூல்: புகாரி 6311)

தான் கற்றுக் கொடுத்த வார்த்தையில் மாற்றம் செய்வதற்குக் கூட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இவர்கள் துணிந்து குர்ஆனில் தங்கள் கைச்சரக்கை நுழைக்கின்றார்கள்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம்

“பூமியில் இருக்கும் போது’ என்று அர்த்தம் செய்வதற்குக் குர்ஆனிலிருந்து சான்றைக் காட்ட வேண்டும். அல்லது ஹதீஸிலிருந்து சான்றைக் காட்ட வேண்டும்.

அவ்விரண்டையும் விட்டு விட்டு, கைச்சரக்கைச் சேர்த்துச் சொன்னால் காதியானி மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் கூட எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஒரு விவாதக் களத்தில் இந்த வாதம் எப்படி நிற்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் உளறித் தள்ளுகின்றார்கள்.

இதிலிருந்து காதியானிகளின் கேள்விக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை, பண்டமும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம்! இறுதி நாள் வரை அசத்தியத்தைக் கிள்ளி எறிகின்ற ஓர் அருள் வாக்கு!

இப்படி எவனாவது நபி என்று முளைத்தானென்றால் அதற்கும் அது தனக்குள் ஒரு பதிலை, பாதுகாப்பை வைத்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்கு நாம் பொருள் செய்திருப்பது போன்று பொருள் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

அப்படியானால், மர்யம் (அலை) அவர்கள் மரணித்த பிறகு ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையா என்ற கேள்விக்குப் பதில் என்ன?

ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்படும் வரை மர்யம் (அலை) அவர்கள் உயிருடன் இருந்தார்கள். ஈஸா நபி உயர்த்தப்பட்ட பிறகு தான் அவர்களது தாயார் மரணித்தார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். மர்யம் (அலை) அவர்களின் மரணம் தொடர்பான வரலாற்றுக் குறிப்பை இந்த வசனத்திலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். அதனால் மர்யம் (அலை) அவர்கள் இறந்த பிறகு ஈஸா நபி எப்படி தொழுவார்கள்? ஸகாத் கொடுப்பார்கள் என்ற கேள்வியே அர்த்தமற்றதாகி விடுகின்றது.

இவர்களின் இரண்டாவது கேள்வி, ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் போது, அவரது தாயார் உயிருடன் இருக்க மாட்டார்களே, அப்போது ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?

இந்தக் கேள்வியும் அர்த்தமற்றதாகும்.

ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு வரும் போது அவர்களின் தாயார் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை.

அதனால் அவர்களுக்குத் தொழுகை இல்லையா? ஸகாத் இல்லையா? என்பது தான் கேள்வி.

இதற்கு நம்முடைய பதில், இல்லை என்பது தான்.

ஈஸா (அலை) அவர்கள், தன்னுடைய தாயாருடன் இருக்கும் போது எந்தத் தொழுகை கடமையாக இருந்ததோ, அந்தத் தொழுகை இல்லை. அவர்கள் தமது தாயாருடன் இருக்கும் போது எந்த ஸகாத் கடமையாக இருந்ததோ அந்த ஸகாத் இல்லை.

இப்போது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தொழுகை தான் ஈஸா நபி திரும்ப வரும் போது கடமையாகும். இப்போது முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஸகாத் தான் ஈஸா நபிக்குக் கடமையாகும்.

அரபியில் ஸலாத் என்றால் தொழுகை என்று பொருள். அஸ்ஸலாத் என்றால் அந்தத் தொழுகை என்று பொருள்.

ஸகாத் என்றால் தர்மம். அஸ்ஸகாத் என்றால் அந்தத் தர்மம் என்று பொருள்.

எனவே இந்த அடிப்படையில் மேற்கண்ட வசனத்தில் இடம் பெறும் அஸ்ஸலாத், அஸ்ஸகாத் என்பது ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அந்தத் தொழுகையையும் ஸகாத்தையுமே குறிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அவர்கள் மீண்டும் வரும்போது அந்தத் தொழுகையும் ஸகாத்தும் அவர்களுக்குக் கிடையாது. முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையும் ஸகாத்தும் தான் கடமையாக இருக்கும்.

ஈஸா நபிக்கு இருந்த தொழுகை, முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தொழுகையைப் போன்றது அல்ல என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகவுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள் வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், “வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், “இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்க மாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்ற சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்என்று கூறிவிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 225

தாம் வாழ்ந்த காலத்தில் ஈஸா நபி அவர்கள் தொழுவிக்கும் இமாமாக இருந்தார்கள். இப்போது அவர்கள் முன்னின்று தொழும் இமாமாக இருக்கவில்லை. இந்த உம்மத்தைப் பின்பற்றியே தொழுகின்றார்கள். இதிலிருந்து அவர்களது தொழுகை வேறு, இந்தத் தொழுகை வேறு என்பதை விளங்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஈஸா நபியவர்கள் இந்தச் சமுதாயத்தில் (உம்மத்தில்) ஒருவராகத் தான் வருகின்றார்கள். நபியாக வரவில்லை. இது பாமரனுக்கும் தெரிந்த விஷயம்.

அதாவது, ஈஸா நபிக்கு அவர்களது ஷரீஅத் இப்போது இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஷரீஅத் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதைத் தான் வேண்டுமென்றே இந்த ஆலிம்கள் மறுக்கின்றனர்.

இந்த வசனம் காதியானிஸத்திற்குக் கல்லறை கட்டும் ஒரு வசனமாகும். இந்த வசனத்திற்கு நாம் செய்திருக்கும் பொருள் தான் சரியானது. அது தான் இலக்கணத்திற்கும் உட்பட்டதாகும். இதை இந்த ஆலிம்கள் மறுக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களின் தலைக்கனமும் திமிரும் தவிர வேறெதுவுமில்லை.