அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம்

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம்

இந்திய நாட்டில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரு பண்டிகை என்பது அதைக் கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது.

ஆனால் ஒரு சமுதாயம் கொண்டாடும் பண்டிகை தனக்கு மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் போது அந்தப் பண்டிகையை, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். பிற சமுதாயத்தினரும் விமர்சிக்க நேரிடுகின்றது.

இந்த அடிப்படையில் இந்தியாவில் நடைபெறுகின்ற தீபாவளியை எடுத்துக் கொள்வோம். நள்ளிரவு முதல் அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என பல நாட்களுக்குத் தொடர்ந்து வெடிக்கப்படும் பட்டாசுகள்.

இந்தப் பட்டாசுகள் வெடிக்கும் போது தொட்டிலில் கிடக்கும் குழந்தைகள் பதைபதைக்கின்றன. வாசல்நடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடு மாடுகள் அலறுகின்றன. பகல் நேரகத்தில் உணவுக்கு அலைந்து, இரவில் மரக்கிளையின் கூடுகளில் துயில்கின்ற பறவைகள் அல்லல்படுகின்றன.

இதனால் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள், பட்டாசு ஓசை இத்தனை டெசிபல் அளவுக்குத் தான் இருக்க வேண்டும் என்று வரையறை சொல்கின்றன. ஆனால் பட்டாசு ஓசையோ அந்தக் காவல்துறையினரின், நீதிபதிகளின் செவிப்பறைகளைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவர்கள் சொல்லும் வரையறைக்குள் அந்த ஓசை நிற்பதில்லை.

பட்டாசு உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள், அதை விற்பனை செய்யும் கடைகள், வெடிக்கும் போது அவை போய் விழுகின்ற இடங்கள் ஆகியவை அடிக்கடி தீக்கிரையாகின்றன. பல உயிர்ப்பலிகள் நடக்கின்றன. பலருக்குக் கை, கால்கள் முடமாகின்றன. கண்கள் பறிபோகின்றன. குழந்தைகளுக்கும் இதே கதி ஏற்படுகின்றது.

இத்தனை நடந்தும் யாரும் திருந்தியபாடில்லை, வருந்தியபாடில்லை.

மாசுபடும் சுற்றுச்சூழல்

இத்துடன் இந்த விபரீதம் நின்றுவிடுவதில்லை. சுற்றுப்புறச் சூழல் மிகக் கடுமையான அளவில் மாசுபடுகின்றது. அன்றைய தினத்தில் மாசுபட்ட காற்றின் அளவை, புகை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இதனால் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களும் நோய்வாய்ப்படுவதுடன் குழந்தைகள் – குறிப்பாக ஆஸ்துமா உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக அன்றைய தினம் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு அதனுடைய அவலமும் ஆபத்தும் தொடர்கின்றது. இது தீபாவளியின் நிலை.

இதே நிலை தான் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் பொங்கல் தினத்திலும் நடக்கப் போகின்றது. இந்தப் பொங்கல் வருவதற்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பழையன கழிதல் என்ற அறியாமையின் அடிப்படையில் கொளுத்தப்படும் பொருட்களிலிருந்து கிளம்புகின்ற புகை மண்டலத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடுகின்றது. அதற்குப் பின்னால் பட்டாசுகளின் புகை மண்டலம். மொத்தத்தில் புவி மண்டலம், புகை மண்டலமாக மாறும் அளவுக்கு மாசாகிவிடும்.

பொங்கல் என்றால் நல்ல விளைச்சல் கொடுத்தற்காகப் பூமிக்கும், அதற்கு ஒளி தருகின்ற சூரியனுக்கும், வேளாண்மைக்கு உதவுகின்ற மாட்டிற்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து இவை அனைத்திற்கும் வழிபாடு செய்யும் நாள் எனக் கருதப்படுகின்றது.

இது நாளடைவில் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், மறுநாள் காணும் பொங்கல் என மூன்று நாட்களாக மாறியது. மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் ஒரு பக்கம் மாட்டை வணங்குகின்றனர். மறுபக்கம் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர்.

ஐந்தறிவை அடக்க ஆறறிவு போதும்

ஜல்லிக்கட்டை வீர விளையாட்டு என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பகுத்தறிவு அடிப்படையில் இவர்களின் வீர விளையாட்டைச் சற்று பார்ப்போம். வீரம் என்றால் என்ன? தனக்குச் சரி சமமான அல்லது தன்னை விட பலத்தில் சிறந்த மனிதனுடன் மோதினால் அதை வீரம் என்று கூறலாம்.

ஆனால் இவர்கள் தன்னை விடக் கீழ் நிலையிலுள்ள ஆறறிவு இல்லாத ஓர் அற்பப் பிராணியுடன் இவர்கள் மோதுகின்றார்கள். தனக்கு இருக்கும் வீரத்தைச் சோதிப்பதற்காக மோதுகின்றான் என்பது அந்தக் காளை மாட்டிற்குக் கொஞ்சமாவது தெரியுமா? களத்தில் நிற்கும் ஐந்தறிவுப் பிராணியான காளை மாடு, தனக்கு எதிரே நிற்பவர்கள் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றது. அதனால் அது தன்னை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தப்பிக்கவும் தற்காக்கவும் முயற்சிக்கின்றது. இப்படி ஓர் ஐந்தறிவுப் பிராணியுடன் ஆறறிவு மனிதன் மோதுவது எப்படி வீரமாகும்?

ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகள்

என்ன தான் மனிதன் வீரனாக இருந்தாலும் நிராயுதபாணியாக இருக்கும் போது அவனைச் சூழ்ந்து கொண்டு ஒரு பத்துப் பேர் தாக்கினால் அவன் பிழைக்க மாட்டான். இதுதான் யதார்த்தமும் உண்மையுமாகும். சினிமா படத்தில் வேண்டுமென்றால் ஒரு கதாநாயகன் பத்துப் பேரை அல்ல, நூறு பேரை ஒரே நேரத்தில் அடக்கலாம். நடிப்பில் அது சாத்தியம். ஆனால் நடப்பில் அது சாத்தியமல்ல.

இங்கே காளை மாட்டை அடக்குகிறேன் என்ற பெயரில் ஆயிரம் பேர் அதைச் சுற்றி வளைத்து வதை செய்கின்றனர். இதற்குப் பெயர் வீரமா? அல்லது அநியாயமா? ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகளா? இதற்கு எப்படி வீர விளையாட்டு என்று சொல்ல முடியும்?

ஆனையை அடக்க அங்குசம் போதும்

மனிதனை விட எடையிலும் எடுப்பிலும் பெரிய தோற்றம் கொண்ட யானையை மனிதன் ஒருபோதும் தன் பலத்தால் அடக்க முடியாது; வெல்லவும் முடியாது. அறிவால் தான் வெல்ல முடியும். ஓர் அற்ப ஆயுதத்தை, அங்குசத்தை வைத்துக் கொண்டு அதை எளிதில் அடக்கி விடலாம்.

இதைப் போன்று சிங்கம், புலி போன்ற கொடிய, கோர மிருகங்களை அறிவு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி எளிதில் மனிதன் அடக்கி கூண்டுக்குள் அடைத்து விடலாம்.

மாட்டை அடக்க சாட்டை போதும்

இம்மாபெரிய மிருகங்களே ஆயுதங்களில் அடங்கும் போது, மாட்டை அடக்க சண்டைக் களமா தேவை? ஒரு சாதாரண சாட்டைக் கம்பு போதும். எனவே மாட்டுடன் மோதுவதை வீர விளையாட்டு என்று கூறுவது பகுத்தறிவு அடிப்படையில் கடைந்தெடுத்த பைத்தியக்காரத்தனமான வாதமாகும்.

மாடுகள் மனிதர்களிடம் பழகி விடும் போது அவன் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்கின்ற நன்றியுள்ள பிராணியாகும். பழகி விட்டால் தன்னைவிட உடலிலும் உருவத்திலும் சிறிய ஒரு சிறுவன் இழுக்கின்ற இழுப்புக்கு இணங்கி விடும் ஓர் அரிய ஜீவனாகும்.

வயலை உழுதல், வண்டி இழுத்தல், தண்ணீர் இறைத்தல், சூடடித்தல் என மனிதச் சமுதாயத்திற்குத் தேவையான அவ்வளவு ஆக்கப்பணிகளையும் செய்கின்ற ஓர் அற்புதமான, அருமையான பிராணி! இந்தப் பிராணிக்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். இதற்கு நேர்மாறாக அந்தப் பிராணியை வதை செய்கின்றார்கள், நன்றி மறந்த இந்த மனித வர்க்கத்தினர்.

ஒருபக்கம் வணக்கம்; மறுபக்கம் வதைப்பு

இதில் வேடிக்கை என்னவென்றால் மாட்டுக்கு நன்றி சொல்லத் தான் மாட்டுப் பொங்கல்! அது செய்கின்ற வேலைகளுக்கு நன்றி சொல்லத் தான் மாட்டுப் பொங்கல்!

ஒருபக்கம் மாட்டை வணங்கவும் செய்கின்றனர். மறுபக்கம் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர்.

வதைக்கும் விதங்கள்

  1. ஒரு பெருங்கூட்டம் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை முழு வேகத்தில், மூர்க்கத்தனமாக, அதன் முன்பக்கமாக இழுக்கின்றனர். இதன் காரணமாக அதன் கழுத்தில், தொண்டைப் பகுதியில் அந்தக் கயிறு அறுத்து, அதனால் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிகின்றது.
  2. அதன் வாலைச் சுருட்டி இடது பக்கமாகச் சுண்டி இழுத்தல். வலி தாங்க முடியாமல் அது துள்ளிக் குதிக்க ஆரம்பிக்கின்றது.
  3. அதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் விதமாக, அதன் பின்னங்கால்கள் இரண்டையும் அப்படியே பின்பக்கமாகத் தூக்கி அதை வேகமாகத் தரதரவென்று இழுத்தல்.
  4. முரட்டு இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவினர் முதுகில் உள்ள திமிலில் ஏறுகின்றனர். அந்தக் காளையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, கைகளில் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் விரல்களில் வளர்த்திருக்கும் கூரிய நகங்களைக் கொண்டு அதன் உடலில் பாய்ச்சுகின்றனர். இந்தக் கோரச் செயல் காளையின் உடலில் இரத்த ஊற்றுக்களைத் தோற்றுவிக்கின்றது.
  5. மற்றொரு முரட்டு சாரார் அதன் கொம்புகளைப் பிடித்து இழுத்து, சரமாரியாக இடைவிடாமல் மொத்தித் தள்ளுகின்றனர்.
  6. வலுக்கட்டாயமாக மலிவு சாராயத்தை அதன் வாயில் ஊற்றிக் கொடுமைப்படுத்துகின்றனர். இதன் விளைவால் போதையுண்ட அந்த அற்பப் பிராணி, வெறியேறி மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக மனிதர்களைத் தாக்க வருகின்றது.
  7. காளையின் கண்களில் மிளகாய்த் தூள் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து அதன் கண்களை எரிச்சல் அடையச் செய்து அதனை வெறியேற்றச் செய்தல்.
  8. காணும் காணாததற்கு, கத்தியால் அதன் உடலில் குத்தி அதைக் கிளறி எழச் செய்தல்.
  9. நமக்கு இடையூறு செய்கின்ற ஏதாவது ஒரு பிராணியைக் கைத்தடியால் அல்லது சாட்டைக் கம்பால் தாக்குகின்ற போது அதைக் கண்டு பயந்து தன் கண்களுக்குத் தெரிகின்ற வாசல் வழிகளில் விழுந்து தப்பி ஓடி தம்மைக் காத்துக் கொள்கின்றன.

ஆனால் இந்த ஜல்லிக்கட்டில் சுற்றி தடுப்புகளை வைத்துத் தடுத்து, மனித மிருகங்கள் முற்றுகையிட்டு நிற்கும் போது அந்தக் கொடுமையிலிருந்து தன்னைத் தப்புவித்து, தற்காத்துக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கின்ற இந்த அற்பப் பிராணியைப் பார்த்து ஈவு இரக்கமுள்ள மனிதன் அழாமல் இருக்க முடியாது. இவ்வளவு கொடுமையை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கட்டவிழ்த்து விடுகின்றன.

மூன்று கொடுமை முறைகள்

காளையை அடக்குவதற்குக் கோழைகள் மூன்று விதமான கொடுமையை, கொடூரங்களைச் செய்கின்றனர்.

  1. காளை நேரான பாதையில் பல மீட்டர் தூரம் விரட்டி ஓட வைக்கப்படுகின்றன. இரு பக்கங்களிலும் காளைகளை அடக்கும் கோழைகள் நிற்பர். பார்வையாளர்களும் நிற்பர். பார்வையாளர்களை விட்டுத் தடுப்பதற்குத் தடுப்புகளோ, கம்புகளோ எதுவும் இருக்காது. நூற்றுக்கணக்கானோர் இந்தக் காளையின் மீது பாய்ந்து அடக்குவார்கள். இந்தக் கோரச் செயல் அந்தக் காளையில் உடலில் இரத்தக் காயங்களை ஏற்படுத்தும்.

மஞ்சு விரட்டு

  1. காளைகளை அடக்குகின்ற வகைகளில் இது மிகக் கொடுமையான முறையாகும். பற்பல குழுக்களாக, பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் காளை துரத்தப்படுகின்றது. ஓரிடத்தில் கூட காளை தன் ஓட்டத்தை நிறுத்த முடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் முடியும் இடத்திலும் வேறொரு குழுவினர் எதிர்பார்த்து நிற்கின்றனர். தங்கள் இடத்திற்குக் காளை வந்ததும் அவர்கள் துரத்துகின்றனர்.

இப்படி ஒரு கொடூரமான, இடைநில்லாத தொடர் ஓட்டத்தின் காரணமாக நீர்ச்சத்தை இழந்து நிலைகுலைந்து போய் விடுகின்றது. ஏற்கனவே ஒவ்வொரு குழுவினரின் தாக்குதலுக்கு இலக்காகி, தளர்ந்து, அது சரணடையும் தருவாயில் கழுத்தில் தொங்கும் அதன் மணியின் கயிறை மிகக் கடுமையாக ஒரு முரட்டு வாலிபன் இழுக்கின்றான். அதன் கழுத்தில் ரத்தம் சொட்டுகின்ற வகையில் புண் ஏற்படுகின்றது. இந்த அடக்குமுறையைத் தான், அத்துமீறலைத் தான் வெற்றி என்று மார்தட்டிக் கொள்கிறான்.

வடம்

  1. பெரிய வடக்கயிற்றால் காளை கட்டப்படுகின்றது. பதினைந்து அடி நீளக் கயிற்றில் கட்டுண்டு கிடக்கும் காளையை 9 கோழைகள் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை அடக்குவர். அதாவது வதை செய்வார்கள்.

இந்த மூன்று விதமான முரட்டுத்தனமான கொடுமைகளை, மூர்க்கத்தனமான ஒரு கூட்டம் அப்பாவியான ஓர் அற்பப் பிராணியின் மீது நடத்துகின்றது. இதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மரணமாகும் மாமன்றங்கள்

இந்த நாட்டில் 1960ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மிருக வதை தடுப்புச் சட்டமெல்லாம் இருக்கின்றது. மதம் என்றதும் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் அனைத்தும் மவுனமாகி விடுகின்றன, ஏன்? மரணமாகி விடுகின்றன.

செயல்படுத்தப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டத்தைச் சீர்குலைக்கும் சக்திகள் ராமர் பாலம் என்ற மதச் சாயத்தைப் பூசிய மாத்திரத்தில் நீதிமன்றம் கூட மரணமாகி விடுகின்றது. பாபரி மஸ்ஜித் விஷயத்திலும் இதே கதி தான். குறைந்தபட்சம் இதில் நடக்கும் மனித உயிர்ப்பலிகளைத் தடுக்கும் விதமாக நீதிமன்றங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்.

இடையில் நீதிமன்றங்கள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஆர்வம் காட்டின. அதன் பின்னர் அவற்றின் ஆரவாரமும் ஆர்வமும் அடங்கிப் போய்விட்டது. கண்காணிப்பு, கட்டுப்பாடு என்ற போர்வையில் இந்த அநியாயம் அரங்கேறுகின்றது. இதனால் மிருகங்கள் ஈவு, இரக்கம், மனிதாபிமானம், அன்பு ஏதுமின்றி கொடுமைக்கும் கொடூரத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றன. அணு அணுவாக வதைக்கப்படுகின்றன. மனித உயிர்களும் பலியாக்கப்படுகின்றன.

பண்டிகை நாளா? பலி நாளா?

உயிர்களை வதைக்கின்ற இந்நாளை பண்டிகை நாள் என்பதா? அல்லது பலி வாங்கும் நாள் என்பதா? இந்த நாளில் பலியான, காயமடைந்த உயிர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

பிப்ரவரி 17, 1999 திருச்சி கூத்தப்பர் கிராமத்தில் 17 வயது இளைஞர் மாடு முட்டி கொல்லப்படுகின்றார். 100க்கும் அதிகமானோர் காயமடைகின்றனர்.

பிப்ரவரி 24, 2002 புதுக்கோட்டை, திருவாப்பூரில் ஒருவர் கொல்லப்படுகின்றார். 30 பேர் காயமடைந்தனர்.

ஜனவரி 17, 2004 மதுரை அலங்காநல்லூரில் ஒரு கொல்லப்பட்டார். 160 பேர் காயமடைந்தனர்.

ஜனவரி 18, 2005 அதே அலங்காநல்லூரில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.

இதே நாளில் சிவகங்கையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.

ஜனவரி 2006, தேனி பல்லவராயன்பட்டியில் 2 பேர் கொல்லப்பட்டனர். 84 பேர் காயமடைந்தனர்.

2007, சேலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; 21 பேர் காயம்.

2008, பிப்ரவரி 23, புதுக்கோட்டையில் ஒருவர் சாவு; 140 பேர் காயம்.

2009, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூரில் 11 பேர் காயம்.

2010, புதுக்கோட்டையில் பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்; 64 பேர் காயம்.

2011, மதுரை பாலமேட்டில் 22 வயது இளைஞர் பலி, 35 பேர் காயம்.

2012, சிவகங்கையில் ஒருவர் பலி, 30 பேர் காயம்.

இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. மாடு முட்டி சாவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், இதைக் காண்பதற்குக் கூடுகின்ற கூட்டத்தில் ஏற்படுகின்ற நெரிசலில் சிக்கி, மிதிபட்டும் சாகின்றனர்.

இவ்வளவு உயிர்கள் பலியான பின்பும், பறிபோன பின்பும் அரசாங்கம் வாளாவிருக்கின்றது. எத்தனை உயிர்கள் சரிந்து போனாலும் பரவாயில்லை. தங்கள் வாக்கு வங்கி சரிந்து போகக் கூடாது என்பதில் ஆளுகின்ற, எதிர்க்கின்ற கட்சிகள் குறியாக இருக்கின்றன.

இப்படி பண்டிகை நாளில் உயிர்ப் பலி வாங்குகின்ற, வீர விளையாட்டு என்ற பெயரில் ஒரு கோர விளையாட்டை அரசாங்கம் அனுமதிப்பது மாபெரும் அநியாயமாகும்.

இதுபோன்ற கோர விளையாட்டுக்கள் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. ஙஹற்ஹக்ர்ழ் என்ற பெயரில் வேன்கள் உலா வருவதைப் பார்க்கலாம். காளையுடன் போராடுபவர்களுக்குத் தான் இந்தப் பெயர். இதன் மூலம் எந்த அளவுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனமான விளையாட்டு மற்ற நாடுகளில் பிரபலமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்படிக் காளையுடன் சண்டை போடுபவன் ஓர் அரக்கன். அறிவாளியல்ல, மூளையில்லாத முட்டாள், மூடன். அதை அனுமதிக்கின்ற அரசாங்கம் ஓர் அநியாயத்தை அரங்கேற்றுகின்றது.

உயிர்காக்க வேண்டிய அரசு, வாக்கு வங்கிக்காக உயிர் குடிக்கும் வேலையைச் செய்கின்றது. இந்த அநியாயம் தான் தமிழகத்தில் அலங்காநல்லூரிலும் இன்னும் பிற பகுதிகளிலும் நடக்கின்றது. இதற்குத் தீர்வு இஸ்லாம் தான்.

ஆடு, மாடுகளை அறுத்து உணவுக்குப் பயன்படுத்தச் சொல்கின்ற இந்த மார்க்கம் அவற்றை வதை செய்யக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. அப்படி வதை செய்பவர் நரகவாதி என்றும் குறிப்பிடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லைஎன்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூற்கள்: புகாரி 2365, முஸ்லிம் 4160

அதே சமயம், ஒரு நாயை துன்பத்திலிருந்து காப்பாற்றியவர் சுவனம் செல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 173, 2363

இப்படி ஒரு மறுமை நம்பிக்கை இருந்தால் தான் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்குக் கூட வதையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.