எண்ணிக்கைக்கு அல்ல! இறைஉதவி ஏகத்துவத்திற்கே!.

எண்ணிக்கைக்கு அல்ல! இறைஉதவி ஏகத்துவத்திற்கே!.

தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை வேர் பிடிக்கத் துவங்கியது முதல் விழுது விட்டுக் கொண்டிருக்கின்ற இக்காலம் வரை அசத்தியவாதிகள் அதை வீழ்த்தவும், வேரறுக்கவும் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டேயிருக்கின்றனர். தனியாகவும் அணியாகவும் பல்வேறு கட்டங்களில், பல பரிமாணங்களில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த முயற்சிகளில் ஒன்று தான் மத்ஹபு மாநாடுகள். அன்று இந்த மாநாடுகள் மறைந்த கலீல் ரஹ்மான் ரியாஜி, கலீல் அஹ்மது கீரனூரி போன்றோர் தலைமையில் நடந்தன.

ஏகத்துவவாதிகளுக்கு எதிராக மக்களை ஏவி விடுகின்ற வேலைகளை இந்த மாநாடுகளில் ஆலிம்கள் செய்து வந்தனர். ஏகத்துவவாதிகளை இடம் தெரியாமல் அழித்து விடுகின்றோம் என்று இறுமாப்புடன் எக்காளமிட்டனர்.

இதற்குத் தக்க ஒரு சில ஊர் நிர்வாகங்கள் இந்த சத்திய மரத்தின் வேர்களில் கோடரிகளைப் பாய்ச்ச முனைந்தனர்; காட்டுத் தர்பார்களை நடத்தினர்; காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இதன் விளைவாக அல்லாஹ்வின் பள்ளியில் தொழவிடாமல் ஏகத்துவவாதிகளை அடித்து விரட்டினர். ஊர் நீக்கம் செய்தனர். ஜனாஸாவை அடக்க விடாமல் சர்வாதிகாரம் செய்தனர். திருமணப் பதிவேடு தர மறுத்தனர். ஏகத்துவப் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தனர்.

இந்த எதிர்ப்புகளில் ஒரு சிலர் அடங்கி, அமுங்கிப் போயினர். ஆனால் அதிகமான ஏகத்துவவாதிகள் எதிர்த்து நின்றனர். ஏகத்துவத்திற்காக மரணத்தைக் கூட ஏற்க அவர்கள் தயாராக இருந்தனர்.

உச்சக்கட்டமாக ஒவ்வொரு ஏகத்துவவாதியும் உயிர் அர்ப்பணிப்பை இலக்காகவும் லட்சியமாகவும் கொண்டதால் இவர்களின் அடக்குமுறை அட்டகாசங்கள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை. அவனைப் பொறுத்த வரை இவை அனைத்தும் குறைந்தபட்ச நடவடிக்கைகளாகவே அமைந்தன.

அதனால் அவன் ஓர் இரும்புப் பாளமாக, எஃகுக் கோட்டையாக ஆடாமல் அசையாமல் இவற்றை எதிர் கொண்டான்; எதிர்த்து நின்றான். இதன் எதிர் விளைவு ஏகத்துவம் ஓங்கி வளர்ந்தது. ஊருக்கு ஊர் ஒரு தவ்ஹீதுவாதி என்றிருந்த நிலை மாறி, வீட்டுக்கு வீடு ஒருவர் என்றானது. ஏகத்துவவாதிகளின் எண்ணிக்கை எகிறியது. அல்லாஹ்வின் அருளால் ஏறிக் கொண்டேயிருக்கின்றது. இதுதான் உண்மை நிலை. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த உண்மை இவ்வளவு பளிச்சென்று வெளிச்சமான பிறகும் இந்த ஆலிம்கள் பொதுக்கூட்டம், மாநாடு என்று போட்டு ஏகத்துவத்திற்கு எதிராக மக்களை உசுப்பேற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களது பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் பிசுபிசுத்து விடுகின்றன. கடந்த காலத்தில் மாநாடுகள் என்ற பெயரில் ஏகத்துவவாதிகளுக்கு எதிராக இவர்கள் வைத்த வத்திகள், வெடிகள் கொஞ்சம் கொஞ்சம் வேலை செய்தன. ஆனால் இப்போது அவை அப்படியே நைத்து, நாறிப் போய்விட்டன. ஆனால் இவர்கள் மாநாடு நடத்துவதை விடவில்லை.

கடந்த நவம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை எழும்பூர் இம்பீரியல் வளாகத்தில் ஒரு மாலை நேர மாநாடு நடந்துள்ளது. இதற்கு மத்ஹபு விளக்க மாநாடு என்று பெயர் வைத்துள்ளனர். வழக்கம் போல இந்த மாநாடும் பிசுபிசுத்த உசுப்பேற்றும் மாநாடு தான். மக்கள் செல்வாக்கு இல்லாமல் மண்டபத்தில் அடைபட்டுப் போன இந்த மாநாட்டைப் பற்றி தமிழகத்தில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.

தப்லீக் வேடம் போட்டு, பரேலவிசம் பேசுகின்ற பொய்களின் சக்கரவர்த்தி ஸைபுத்தீன் ரஷாதி தான் இந்த மாநாட்டின் கதாநாயகன். கூடவே ஒரு சதீதுத்தீன் பாகவி! இந்த மாநாட்டில் தவ்ஹீதுக் கொள்கைக்கு எதிராக அத்தனை விஷத்தைக் கக்கியிருந்தார்கள். அத்துடன் தங்களது தலை கால் புரியாத ஆணவத்தையும் தலைக்கனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

“இன்று தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வீடுகளையும் கடைகளையும் வாடகைக்கு எடுத்து பள்ளிவாசல் எனப் பெயர் சூட்டி சுமார் 300 இடங்களில் நடத்துகிறார்கள். இந்த 300, பன்னிரெண்டாயிரத்தை அழித்துவிட முடியுமா?” என ஆணவத்தின் உச்சியிலிருந்து கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளிக்கின்றார்கள்.

நமது ஜமாஅத்திற்கு 650க்கும் மேற்பட்ட பள்ளிகள், மர்கஸ்கள் இருக்கின்றன. இதை முன்னூறு என்று சொல்லியிருக்கின்றார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். நம்முடைய மர்கஸ்கள் வாடகை வீடுகளிலும், கடை மாடிகளிலும் தான் இயங்குகின்றன. சொந்தக் கட்டிடங்களாக இருந்தாலும் அவையும்கூட அதன் முகடுகள் கீற்றுக் கூரைகளிலும், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளிலும் தான் அமைந்திருக்கின்றன. இதைத் தான் இவர்கள் கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள்.

மஸ்ஜிதுந்நபவீ ஆரம்பத்தில் இப்படித் தான் ஈச்ச மரக் கீற்றுகளில் வேயப்பட்டிருந்தது. வெறும் மணற்பரப்பைத் தரையாகக் கொண்டிருந்தது. சரியான வாயிற்கதவுகள் இல்லாத, நாய்கள் கூட உள்ளே வந்து செல்கின்ற அளவுக்குத் திறந்தவெளிப் பள்ளியாகத் தான் மஸ்ஜிதுந்நபவீ இருந்தது.

பத்ருக் களப் போராளிகளைப் புறப்படச் செய்து, ஏகத்துவ எதிரிகளைப் புறங்காணச் செய்தது கூரையால் வேயப்பட்ட இந்தக் குடிசைப் பள்ளி தான்.

வீராவேசத்தோடும் வெறித்தனத்தோடும் முஸ்லிம்களை வேரறுக்க வந்த எதிரிகளை, அதன் பெருந்தலைகளை, வேரறுந்த மரங்களாக, வெறும் பிணங்களாக பத்ரின் கலீப் எனும் பாழுங்கிணற்றில் வீசியெறியச் செய்தது, வீழச் செய்தது இந்தச் சிறு கூடாரம் தான்.

இந்த இரு அணிகளும் சந்திக்கும் போது, “யா அல்லாஹ்! உறவைத் துண்டித்து, தெரியாத புதுக் கருத்தைக் கொண்டு வந்தவரை (முஹம்மதை) அதிகாலையில் அழித்து விடு” என்று அபூஜஹ்ல் பிரார்த்தனை செய்தான். (நூல்: முஸ்னத் அஹ்மத் 2255)

ஆனால் அபூஜஹ்லை வீழச் செய்து, முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் அல்லாஹ் வாழச் செய்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

அல்குர்ஆன் 8:19

மத்ஹபு மாநாட்டில் இவர்கள் நம்முடைய மர்கஸ்களைப் பற்றிக் குறிப்பிடும் எண்ணிக்கை 300 தான். இந்த எண்ணிக்கை பத்ருப் போராளிகளின் எண்ணிக்கையை ஒத்திருக்கின்றது. அந்த முன்னூற்றுச் சொச்சம் பேர் ஆயிரத்தை வென்றது போன்று இன்ஷா அல்லாஹ் ஏகத்துவப் படை இவர்களின் பன்னிரண்டாயிரத்தை வெல்லும். ஏனெனில் அல்லாஹ்வின் உதவி எண்ணிக்கைக்கு அல்ல! ஏகத்துவத்திற்குத் தான் என்று இந்த இறைவசனம் இயம்புகின்றது. இந்த ஆணவக்காரர்களுக்கு அல்லாஹ்வின் வசனத்தையே பதிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.