கட்டணமில்லாத கடவுள் தரிசனம்

கட்டணமில்லாத கடவுள் தரிசனம்

கையில் ஓர் ஈட்டி! வாயை விட்டு வெளியே தொங்கும் இரத்தச் சிவப்பு நாக்கு! கழுத்தில் ஒரு கருநாகப் பாம்பு! “இது காவு கேட்கும் கடவுள்’ என்று பார்ப்பவர்கள் பயப்படும் வண்ணம் கடவுள் சிலைகளின் தோற்றம் அமைந்திருக்கின்றது. அதற்கேற்ப கடவுளுக்காக அவர்கள் உயிர்ப் பிராணிகளைப் பலி கொடுக்கின்றனர். உணவுப் பண்டங்களையும் படைக்கின்றனர்.

கடவுள் தரிசனம் என்றாலே பூஜை, புனஸ்காரம் செய்வதற்குக் கையில் பூ வாங்கிச் செல்ல வேண்டும்; பழம், பத்தி, சாம்பிராணி வாங்க வேண்டும்; சுடர் விளக்கேற்ற எண்ணெய் வாங்க வேண்டும்; சூடம் வாங்க வேண்டும். இத்தனையும் வாங்கினால் தான் கடவுள் சன்னதிக்குச் செல்ல முடியும்.

தர்ஹாக்களும் இதே நிலை தான். பத்தி, சந்தனம், சாம்பிராணி, சாய்புமார்களுக்குக் காணிக்கை என்று தர்ஹாக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இப்படி, காவும் காணிக்கையும் கொடுத்தால் தான் கடவுள் தரிசனம் என்பது பக்தனின் தலையெழுத்தாகி விட்டது.

இந்த நவீன உலகில் எங்கும் கட்டணம், எதற்கும் கட்டணம் என்றாகி விட்டது. கடவுள் கொடுத்த அருட்கொடைகளில் தண்ணீர் மாபெரும் அருட்கொடை! அந்தத் தண்ணீரும், அதுவும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் ஊர்களில் கூட காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.

கழிப்பறைக்குக் கட்டணம், குளிப்பறைக்கும் கட்டணம் என்று கட்டணம் செலுத்தி மனிதன் நிம்மதியை இழந்து விட்டான். ஊரில், உலகில் இழந்த நிம்மதியை கடவுள் ஆலயத்தில் பெறலாம் என்று வருபவன், கடவுளுக்கும் காணிக்கை, படைப்புகள் என்று காசு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

இதை விடக் கொடுமை, கடவுள் சன்னதியில் விதிக்கப்படும் கட்டணம் தான். இது தொடர்பாக முரசொலி பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

விலைவாசிகள் ஏறினால் வணிகர்களுக்குக் கொண்டாட்டம்; அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஒரு பொன்னான வாய்ப்பு. ஆனால் பொதுமக்கள் பாடுதான் திண்டாட்டம்!

இந்தக் கஷ்ட நஷ்டங்களை – துன்ப துயரங்களை எல்லாம் யாரிடம் போய் முறையிடுவது? என்று தவிக்கும் சாதாரண மக்கள்- “கடவுள் இருக்கிறார்; காப்பாற்றுவார்” என்று நிம்மதி தேடி கோவிலுக்குப் போனால் – அங்கே கடை வியாபாரிகளே தேவலாம் – ஆலய வியாபாரத்தில் விலைவாசிகள் – விண்ணை நோக்கியல்ல – வைகுந்தம் – சிவலோகம் – பரலோகத்தையெல்லாம் தொடும் அளவுக்கு ஏறிக் கிடக்கின்றன என்பதை சபரி மலையிலிருந்து வெளிவந்துள்ள வழிபாட்டுக் கட்டண உயர்வுகள் நிரூபிப்பனவாக இருக்கின்றன.

பூஜை பொருட்களின் விலை அதிகரித்து விட்டன என்று கூறி வழிபாட்டுக் கட்டணத்தை உயர்த்த – கேரள தேவஸ்வம் போர்டு, உயர்நீதி மன்றத்தின் அனுமதி பெற்று பல்வேறு விதமான வழிபாட்டுக் கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி விட்டார்கள்.

சகஸ்ர கலச பூஜை வழிபாட்டுக் கட்டணம் இது வரையில் பத்தாயிரத்து ஒரு ரூபாயாக இருந்தது. இப்போது அது, 10,001லிருந்து 1 லட்சத்து 10,001 ரூபாயாக உயர்த்தப்பட்டு விட்டது.

படி பூஜை இதுவரையில் – ரூ. 9 ஆயிரம் கட்டணம். இனி மேல் அது – 31,001 ஆக றெக்கை கட்டிப் பறக்கும்!

லட்சார்ச்சனை இது வரை 1001 ரூபாயாக இருந்தது. இனி மேல் 50,001 ஆக உயரப் பறக்கும்!

கணபதிஹோமம் – முன்பு 61 ரூபாய்; இப்போது 301 ரூபாய்.

புஷ்பாபிஷேகம் – முன்பு 1000 ரூபாய்; இப்போது 10,101 ரூபாய்.

அஷ்டாபிஷேகம் – முன்பு 751 ரூபாய்; இப்போதோ – 3,401 ரூபாய்.

பகவதி சேவை – முன்பு 151 ரூபாய்; இப்போது 1,501 ரூபாய்.

வியாபாரிகளின் விலை உயர்வை – ஒரு போதும் இந்தக் கோயில் கட்டண உயர்வோடு ஒப்பிடவே முடியாது!

பூஜைப் பொருள்களின் விலை உயர்ந்து விட்டதால் வழிபாட்டுக் கட்டணத்தை உயர்த்தி விட்டோம் என்கிறார்கள்.

பூஜை பொருள்களான – பூவும், சந்தனமும், பாலும், நெய்யும், சூடமும், சாம்பிராணியும், தேங்காயும், இன்ன பிற பொருள்களும்

61 ரூபாயை 301 ரூபாயாகவும், 1000 ரூபாயை 10,101 ரூபாயாகவும் 751 ரூபாயை 3401 ரூபாயாகவும், 151 ரூபாயை 1501 ரூபாயாகவும்

– 10,001 ரூபாயை 1 லட்சத்து 10,001 ரூபாயாகவும்

– 9 ஆயிரம் ரூபாயை 31 ஆயிரத்து 1 ரூபாயாகவும்

– 1001 ரூபாயை 50,001 ரூபாயாகவும்

உயர்த்தும் அளவுக்கா உயர்ந்து விட்டன?

கொடுமை – கொடுமை என்று முறையிடக் கோவிலுக்குப் போனால் அங்கே அதை விடக் கொடுமை சிங்கு சிங்கென ஆடியதாம்!

– என்று பழமொழி சொல்வார்கள் பக்தகோடிகள். அது இப்படி எதார்த்த வாழ்க்கையில் பலித்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருப்பார்களா?

திருப்பதி கோவிலில் 100 ரூபாய், 200 ரூபாய் சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்துச் செய்துவிட்டு விரைவு தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது! இப்படி 100 ரூபாய், 200 ரூபாய் கட்டணங்களை ஒழித்து விட்டு 500 ரூபாய் தான் என்று அறிவிக்கப்பட்டதை எந்த பக்தரும் எதிர்த்ததாகச் செய்தி இல்லை

இவை முரசொலி நாளிதழில் வெளியான கருத்துக்கள்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களைப் பாருங்கள். இந்தப் பள்ளிவாசல்களுக்கு பக்தர்கள் ஐந்து நேரம் படையெடுத்துச் செல்கின்றனர். பணம் படைத்தவர்களும் செல்கின்றனர். பாட்டாளி வர்க்கத்தினரும் செல்கின்றனர். அவர்கள் கடவுள் தரிசனத்திற்குத் தங்கள் சட்டைப் பையிலிருந்து சல்லிக் காசு கொடுப்பதில்லை. ஏன்? இந்தக் கட்டணங்களைச் செலுத்துவது யாருக்கு இயலும்? பணக்கார வர்க்கத்திற்கு மட்டும் தான் இயலும்.

இப்படித் தனது தரிசனத்தை பணக்கார வர்க்கத்திற்கு மட்டும் அளித்து விட்டு, பாட்டாளி வர்க்கத்திற்குப் பட்டை நாமம் சாத்தி, பக்தர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டும் கடவுள் ஒரு கடவுளா? நிச்சயமாகக் கடவுள் இல்லை.

இங்கே ஒரு கேள்வி எழலாம். பள்ளிவாசல்களில் மட்டும் உண்டியல் வைக்கப்பட்டுள்ளனவே, அவை ஏன்? அவை கடவுளுக்காக அல்ல! பள்ளிவாசல் பராமரிப்புக்காகவே! அதுவும் விரும்பியவர் வழங்கலாம் என்ற அடிப்படையில் தானே ஒழிய கட்டணமாக அல்ல!

நீங்கள் மட்டும் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து, காவு கொடுத்து கடவுளுக்காகப் பலியிடுகிறீர்களே என்று கேட்கலாம். கடவுளுக்காக, கடவுளின் பெயரால் அறுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஏழைகளுக்காகப் பங்கிடப்படுகின்றன. இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகின்றது.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

“அறுத்துப் பலியிடு’ என்று அல்லாஹ் சொன்னதும் அடியான் அறுத்துப் பலியிடுகிறான். ஏன்? அல்லாஹ்வுக்குப் பயந்ததால்! இந்தப் பயம் தான் எனக்குத் தேவை! பயன் ஏழைகளுக்கே! இந்தக் கட்டளைக்கு, எனக்குப் பயந்தது போன்று மற்ற கட்டளைகளுக்கும் நீ பயப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகத் தான் இறைவன் அறுத்துப் பலியிடச் சொல்கின்றானே தவிர இறைவனுக்கு அதன் இரத்தமும், இறைச்சியும் தேவை என்பதற்காக அல்ல! காரணம் இஸ்லாம் கூறுகின்ற கடவுள், காவுகளோ காணிக்கைகளோ கேட்காத கடவுள்.

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. (அல்குர்ஆன் 51:57)

பணக்காரனுக்கு ஒரு தரிசனம், பரம ஏழைக்கு ஒரு தரிசனம்! அரசனுக்கு ஒரு தரிசனம், ஆண்டிக்கு ஒரு தரிசனம்! இதையெல்லாம் இஸ்லாம் தகர்த்தெறிகின்றது.

கோவிந்தக்குடியில் குடியரசுத் தலைவர்

உள்ளூர் பள்ளிவாசல்களில் ஐந்து நேர ஜமாஅத் தொழுகைக்கு வருபவர்களில் யார் முதலில் வருகின்றாரோ அவருக்கு முதல் வரிசையில் இடம் கிடைக்கும். பின்னால் வருபவருக்குப் பிந்தைய வரிசை தான். அவர் அப்பள்ளிவாசலின் தலைவராக இருக்கலாம். பஞ்சாயத்தின் தலைவராக இருக்கலாம். ஏன்? இந்த நாட்டின் ஜனாதிபதியாகக் கூட இருக்கலாம்.

நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலீ அஹ்மத் அவர்கள், தஞ்சை மாவட்டம் கோவிந்தக்குடி என்ற ஊரில் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு வருகையளித்தார். குடியரசுத் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு யாரும் முதல் வரிசையில் இடம் அளித்துவிடவில்லை. கிடைத்த வரிசையில் அவர் இடம் பிடித்து அமர்ந்து கொண்டார்.

உள்ளூர் பள்ளிவாசல்களில் மட்டும் இந்த நிலை கடைபிடிக்கப்படுவதில்லை. உலக மக்களின் பள்ளிவாசலான மக்காவிலுள்ள புனித கஅபாவுக்கும் இதே நிலை தான்.

மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 22:25)

கட்டண, காசு பண அடிப்படையில் மட்டுமல்ல! சாதிய, குல, நிற, இன, தேசிய, மொழி அடிப்படையில் மனிதனைக் கூறு போடாத, வேறுபாடு – பாகுபாடு காட்டாத, கட்டணமில்லாத இறையில்லத்திற்குள் அனைவரும் வாருங்கள் என்று இறுதி வேதமான திருக்குர்ஆன் அழைக்கின்றது. அந்த அழைப்பை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

அல்குர்ஆன் 3:96, 97