மறுமையின் சாட்சிகள்

மறுமையின் சாட்சிகள்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்

இவ்வுலகில் வாழும் போது மனிதர்கள், தங்களது விருப்பு வெறுப்புகளுக்குத் தோதுவான குணம் கொண்டவர்களுடன் சேர்ந்து செயல்படுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் சேர்ந்து நற்காரியங்களையோ அல்லது தீய காரியங்களையோ செய்கிறார்கள். பல்வேறு காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். ஆதரவு தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இங்கே இப்படி இருக்கும் மனிதர்கள், மறுமை நாளில் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருப்பார்கள். நாம் அனைவரும் பிறரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் செயல்களுக்கு சாட்சியம் செல்லும் நிலையில் நின்று கொண்டிருப்போம். இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

இந்த வகையில், ஒவ்வொரு சமுதாயத்தாருடைய காரியங்களுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சாட்சியாளர்களாக இருப்பார்கள். தங்களுடைய சமுதாயத்தினர் செய்திருக்கும் காரியங்கள் தாங்கள் போதித்தவையா? இல்லையா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். நபிமார்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் யார்? மாறு செய்து தட்டழிந்தவர்கள் யார்? என்பது அன்றைய தினம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

(அல்குர்ஆன் 4:41,42)

(அது) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை நாம் நிறுத்தி, (முஹம்மதே!) உம்மை இவர்களுக்கு எதிரான சாட்சியாகக் கொண்டு வரும் நாள்!

(அல்குர்ஆன் 16:89)

வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.

(அல்குர்ஆன் 4:159)

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்”  எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபேஅப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)என்று கூறியதோடு “லாஇலாஹ இல்லல்லாஹ்எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்என்று கூறினார்கள். அப்போது “இணை வைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்றுஎனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முசய்யப் (ரலி)

நூல்: புகாரி (1360)

நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (1343, 1353)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி (1344)

ஒருவர் நன்மையான மற்றும் தீமையான காரியங்களைச் செய்யும் போது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் அடுத்தவர்களால் கவனிக்கப்டுகிறார்கள். இப்படியிருக்கும் மனிதர்கள், மறுமையில் அவர்கள் செய்த காரியங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள்.

இவர்கள் நல்லவிதமான காரியங்களைச் செய்தார்கள் என்று நல்லவர்கள், நல்லவர்களுக்கு சாட்சியம் சொல்வார்கள். இதுபோன்று குற்றவாளிகள் குற்றவாளிக்கு எதிராக நின்று, இவர்களே எங்களை வழிகெடுத்தார்கள் என்று கூறுவார்கள். இங்கு வாழும் போது வழிகேட்டில் இருந்து கொண்டு நேர்வழியில் இருப்போரின் செயல்களை வேடிக்கை பார்ப்பவர்கள், மறுமை நாளில்  இவர்கள் நல்ல காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள்; நாங்களோ அலட்சியமாக இருந்தோம் என்று ஆதங்கப்பட்டு நல்லவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பார்கள் இந்த உண்மைகளை பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.

(அல்குர்ஆன் 11:18)

அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார்களாயின், “நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்என்று (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.         

(அல்குர்ஆன் 3:64)

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு அவன், “ஆம், என் இறைவா!என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த முஃமின், “நாம் இத்தோடு ஒழிந்தோம்என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன், “இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்என்று கூறுவான். அப்போது அவனது நற் செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், “இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும்என்று கூறுவார்கள்‘  என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (2441) (4685)

கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி

நமது நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக ஒரு முக்கியமான ஏற்பாட்டினை வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். நமது கழுத்தில் நமது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை சேமிக்கும் பொருளை வைத்திருக்கிறான். பார்ப்பது, நடப்பது, கேட்பது என்ற சகல செயல்பாடுகளும் அதிலே பதிவு செய்யப்படுகின்றன. மறுமை நாளில் ஒரு மாபெரும் ஏடாக அதை அல்லாஹ் கொண்டு வருவான்.

நாம் சொல்லும் வார்த்தையின் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தையில் இருப்பதையெல்லாம் தேடித்தரும் மென்பொருள்களை மனிதனே உருவாக்கியிருக்கிறான். மனிதனுக்கே இந்த அறிவு இருக்கும் போது, அத்தகைய மனிதனை படைத்த இறைவன் இதற்குச் சக்தி பெற்றவன் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். “உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்” (என்று கூறப்படும்).

(அல்குர்ஆன் 17:13,14)

உடல் உறுப்புகளின் சாட்சி

நாம் செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாது என்று பலரும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திரை மறைவில் தைரியமாக தப்பும் தவறுமான காரியங்களில் இறங்குகிறார்கள். இத்தகையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கை, கால்களை வைத்து தீயகாரியங்களைச் செய்கிறார்களோ அவை மறுமையில் தாங்கள் செய்த காரியங்களைப் பற்றி பேசும்.

உலகில் நாம் நினைப்பது போன்று பேசுவதற்கு நாவைப் பயன்படுத்துகிறோம். மறுமையிலோ நாக்கு உலகில் தான் பேசியவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். நாம் நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பின் நமது உடல்களும் நல்ல வகையில் சாட்சியமளிக்கும். கெட்ட காரியங்களை செய்திருப்பின் கெட்ட விதத்தில் சாட்சியமளிக்கும்.

நமது உடல் உறுப்புகள், இவர் குர்ஆன் படித்தார், பள்ளிவாசலுக்குச் சென்றார் என்று நல்ல செய்திகளைக் கூறவேண்டுமா? அல்லது இவர் புறம் பேசினார், புகை பிடித்தார் என்று தீய தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம். “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!என்று கூறப்படும். இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

(அல்குர்ஆன் 36:63,65)

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 24:24, 25)

அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். “ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!என்று அவை கூறும். உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகிவிட்டீர்கள்.

(அல்குர்ஆன்  41:19-23)

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும் (ஆக மூன்று பேர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். மற்றொருவர், “நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லைஎன்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், “நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்என்று கூறினார். அப்போது அல்லாஹ், “உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லைஎனும் வசனங்களை (41:22) அருளினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (4817)

ஜின்களின் சாட்சி

மனித இனத்தைப் போன்று ஜின் எனும் இனமும் படைக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் காட்டிலும் வலிமையான படைப்பினமான ஜின்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஜின்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் நினைத்தால் நமது காரியங்கள் எப்படி இருந்தது என்பதற்கு நம்மைப் பற்றியறிந்த ஜின்களையும் சாட்சிகளாகக் கொண்டு வருவான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தியை கவனிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயித் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம் “நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கின்றேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன் இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடுகிலும் கேட்கின்ற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமைநாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்என்று சொல்-விட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (609, 7548)

உயிரற்ற பொருட்களின் சாட்சி

மறுமை நாளில், ஒருவர் செய்த காரியத்தை நிரூபிப்பதற்கு அவர் அந்தக் காரியத்தை செய்வதற்குப் பயன்படுத்திய பொருட்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு நல்லவர்களும் கெட்டவர்களும் பயன்படுத்தும் பொருட்களை தேவைப்படின் அவற்றையும் சாட்சியாகக் கொண்டுவரும் ஆற்றல் அல்லாஹ்விற்கு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருவர் திருடினார் என்பதற்கு அவர் திருடிய பொருளை இறைவன் நாடினால் சாட்சியாகக் கொண்டுவருவான். ஒருவர் மார்க்கத்தை மக்களுக்குச் சொன்னார் என்பதற்கு அவர் அதற்குப் பயன்படுத்திய மைக்கையோ, எழுதுகோலையோ கூட சாட்சியாகக் கொண்டுவர முடியும். இதை விளங்கிய பிறகாவது நமது செயல்களை நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையின்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.

(அல்குர்ஆன் 17:78)

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒ-க்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாளில் சாட்சி சொல்கின்றனஎன்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (3296)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்எனக் கூறினார்கள். 

ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், ” என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள்.

பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றனபசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (1465, 2842)

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். “அல்ஹம்துலில்லாஹ்‘ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி‘ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (381)

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகராமற்றும் “ஆலு இம்ரான்ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகராஅத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

நூல்: முஸ்லிம் (1470)

ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தனை சாட்சிகளை இறைவன் கண்டிப்பாகக் கொண்டு வருவான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. நல்ல விதமான காரியங்களைச் செய்த ஒருவர் தமக்கு வழங்கப்படும் கூலி சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அந்தளவிற்கு இறைவன் சாட்சிகளைக் கொண்டு வருவான்.

அதுபோன்று கெட்ட செயல்களைச் செய்த ஒருவர் தமக்குக் கொடுக்கப்படும் தண்டனை நியாயமானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அதற்குரிய வகையில் அவன் சாட்சிகளை ஏற்படுத்துவான். சிலருக்கு ஒரு சாட்சியே போதுமானதாக இருக்கும். சிலருக்கு இரு சாட்சிகள் தேவைப்படலாம்.

இவ்வாறு மறுமை நாளில் நமது செயல்களுக்கு சான்றுகள், சாட்சிகள், ஆதாரங்கள் இருக்கும் என்று மார்க்கம் சுட்டிக் காட்டுவதற்கும் நோக்கம் இருக்கிறது. நல்ல காரியங்களைச் செய்பவர்கள் நமது செயல்களுக்குத் தக்க வெகுமதிகள் கிடைக்காதோ என்று தவறுதலாக நினைத்து தளர்ந்து விடக்கூடாது. கெட்டவர்கள் எவரும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்று தைரியமாக இருந்துவிடாது. ஒவ்வொரு நேரத்திலும் நாம் கவனிக்கப்படுகிறோம்; நம்மைச் சுற்றி சாட்சிகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு நல்ல முறையில் செயல்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!