வளைக்கும் ஐரோப்பா வளையும் சவூதியா

வளைக்கும் ஐரோப்பா வளையும் சவூதியா

ஒலிம்பிக் விளையாட்டில் சவூதி, கத்தார் போன்ற நாடுகள் தங்கள் பெண்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அந்நாடுகளின் ஆண்களும் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்திருந்தது. ஒலிம்பிக் கமிட்டியின் இந்த மிரட்டலை விமர்சித்து ஏகத்துவத்தில், “ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்து.

இந்த மிரட்டல்களுக்குப் பணியாமல் இருந்த ஒரேயொரு முஸ்லிம் நாடு சவூதி அரேபியா தான். இப்போது அந்நாடும் பணிந்து விட்டது.

ஏற்கனவே புருணை தாருஸ்ஸலாம் தன் பங்கிற்குப் பெண்களை அனுப்ப முடிவு செய்து விட்டது. கத்தாரும் நான்கு வீராங்கனைகளை அனுப்பி, தன்னுடைய இஸ்லாமிய பிடிமானத்தைப் பிரகடனப் படுத்தியிருக்கின்றது.

இப்போது சவூதியும் இரண்டு பெண்களை இந்த ஒலிம்பிக் விளையாட்டிற்கு அனுப்புவதற்குப் பணிந்திருக்கின்றது என்று சொல்வதை விட மேற்கத்திய நாடுகள் விரித்த வலைக்குப் பலியாகியிருக்கின்றது.

இவ்விரு பெண்களில் ஒருவர் பெயர் ஷத்தான் ஷஹர்கானி! ஜூடோ விளையாட்டில் பங்கேற்கிறார். மற்றொரு பெண்ணின் பெயர் சாரா அத்தார்! இவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கிறார்.

ஆரம்பத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் எங்களிடம் இல்லை என்றே சாதித்து வந்தது. இறுதியில் சரிந்து, சாய்ந்து விட்டது.

இவர்களுடைய நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போன்று இருக்கின்றது.

உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3456

சவூதி அரேபியா இதற்கான சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

  1. ஷரீஅத் அடிப்படையிலான ஆடைகளை அணிய வேண்டும்.
  2. விளையாட்டு வீராங்கனையின் உறவினர் உடன் இருக்க வேண்டும்.
  3. விளையாட்டில் ஆண்களுடன் கலக்கக்கூடாது.

இத்தனை நிபந்தனைகளையும் விதித்து பங்கேற்க அனுமதித்திருக்கின்றது. இந்த நிபந்தனைகளை இப்போது இவர்கள் பின்பற்றலாம். இனிவரும் காலங்களில் இனிவரும் வீராங்கனைகள் இதில் நிற்பார்களா என்பது வினாக்குறியே!

சவூதி இவ்வாறு தளர்ந்த மாத்திரத்தில் உலக நாடுகளின் ஊடகங்கள், ஏடுகள் இதைப் பெரிது பெரிதாக எழுதுகின்றன. இதை மிகப் பெரும் முன்னேற்றமாக, புரட்சியாக வர்ணிக்கின்றன.

குட்டைப் பாவாடை சானியா மிர்ஸாவைப் போன்ற பெண்களை அரைகுறை ஆடைகளில் ஆடவிட்டு அவர்களின் அங்க அவயங்களை அங்குலம், அங்குலமாகக் கண் பார்வையினால் கற்பழித்துச் சுவைக்க நினைக்கும் இந்தக் காமுகச் சிந்தனையாளர்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருப்பதைத் தான் இது காட்டுகின்றது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் பலியாகாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு இருக்க வேண்டுமானால் உறுதியான ஈமான் இருக்க வேண்டும். அதுவே நமது அவாவும் ஆதங்கமும் ஆகும்.

ஈடேற்றம் தரும் லைலத்துல் கத்ர்

பராஅத் இரவு, மிஃராஜ் இரவு என்று இல்லாத, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத இரவுகளை உயிர்ப்பிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் உற்சாகம் காட்டி உணர்வூட்டும் உலமாக்கள், நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய, வற்புறுத்திய ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளை, அதில் அடங்கியுள்ள லைலத்துல் கத்ரை அடைவதற்கு ஆர்வம் ஊட்டுவதில்லை; ஆசை காட்டுவதில்லை.

ரமளான் 27ஆம் இரவு மட்டும் அமர்க்களமான, ஆர்ப்பாட்டமான அமல்களைச் செய்து விட்டு, அதுவும் நபி (ஸல்) அவர்கள் கற்றும் காட்டியும் தராத வகையில் அமல்களைச் செய்து விட்டு ரமளானின் பிந்திய 10 இரவுகளை இருட்டாக்கி விடுகின்றனர்; இல்லாமல் ஆக்கி விடுகின்றனர்.

இதற்குக் காரணம் 27ல் லைலத்துல் கத்ர் இருப்பதாக அவர்கள் குருட்டுத்தனமாக நம்புவது தான். அதனால் இதைத் தான் லைலத்துல் கத்ர் என்று துணிந்து பிரச்சாரமும் செய்கின்றனர். உப்புச் சப்பில்லாத, உருப்படாத ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர்.

லைலத்துல் கத்ர் என்ற வார்த்தையில் மொத்தம் 9 அரபி எழுத்துக்கள். இந்த வார்த்தை குர்ஆனில் மூன்று தடவை இடம்பெறுகின்றது. ஆக, ஒன்பதை மூன்றால் பெருக்கினால் 27 வருகின்றது. அதனால் லைலத்துல் கத்ர் 27ல் தான் உள்ளது என்ற கூறுகெட்ட வாதத்தைக் கூறுகின்றனர்.

இது ஓர் அபத்தமான வாதம் என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ் என்ற அரபி வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன என்பதற்காக நான்கு கடவுள்கள் என்று சொல்வது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு இது அபத்தமாகும். இந்த அபத்தங்கள் ஒருபோதும் ஆதாரமாகாது.

அடுத்து முஸ்லிமில் இடம்பெறும் ஒரு செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்என்று கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழிபாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக் கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்என்று பதிலளித்தார்கள். பிறகு “அல்லாஹ் நாடினால்என்று கூறாமல் “அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள்.

நான், “அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் “அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ்

நூல்: முஸ்லிம் 1272, 1999

“அடையாளத்தை வைத்து நான் அறிந்து கொள்வேன்” என்று  கூறுவதன் மூலம் நபித்தோழர் தனது சொந்தக் கருத்தைத் தான் இங்கு கூறுகின்றார் என்பதை சாதாரணமாக விளங்கிக் கொள்ளலாம்.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னால், அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் 21ஆம் இரவில் தான் லைலத்துல் கத்ர் என்று சொல்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் -அந்த இரவின் காலையின் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள் – “யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது என மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்!எனக் கூறினார்கள்.

அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்ச ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 2027

இந்த நபித்தோழரும் 21ஆம் இரவில் லைலத்துல் கத்ர் என்று அதன் அடையாளத்தை வைத்துத் தான் கூறுகின்றார்.

27ல் தான் லைலத்துல் கத்ர் என்று கூறும் ஆலிம்கள் இந்தச் செய்தியையும் மக்களிடம் கூற வேண்டுமல்லவா? ஆனால் இதைக் கண்டு கொள்வதில்லை.

உண்மையில் லைலத்துல் கத்ர் என்பது 27ல் மட்டுமல்ல. பிந்திய 10 இரவுகளில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஒரு இரவில் தான் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “லைலத்துல் கத்ர்‘ (கண்ணியமிக்க இரவு) பற்றி (“அது ரமளான் மாதத்தில் எந்த இரவுஎன்று) அறிவிப்பதற்காக (தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதனைத் தேடுங்கள்என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 49

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்: எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்!. எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 2023

நபித் தோழர்கள் சிலர் கண்ட கனவில், (ரமளானின்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் “லைலத்துல் கத்ர்எனும் கண்ணியமிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கடைசி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு(இரவு)களில் தேடிக்கொள்ளட்டும்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2015

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் “லைலத்துல் கத்ர்இரவைத் தேடிக்கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1988

இந்த ஹதீஸ்களெல்லாம் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இருப்பதை ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த ஆலிம்கள் தானும் கெட்டு, மக்களையும் வழிகெடுத்து, 27ஆம் இரவில் மட்டும் நிற்க வைத்து அன்றைய இரவுகளில் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்து, இது மட்டும் தான் லைலத்துல் கத்ர்; ஏனைய இரவுகளில் இல்லை என்றாக்கி விடுகின்றனர்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:25

இதன் மூலம் ஏமாந்த மக்கள் அனைவரின் பாவ மூட்டைகளையும் இவர்கள் சுமக்கத் துணிந்து விட்டனர். அல்லாஹ் காப்பானாக!

எனவே, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை 27ஆம் இரவில் மட்டும் தேடாமல் பிந்திய பத்து இரவுகளிலும் தேடுவோம்; லைலத்துல் கத்ரை அடைவோம்.

இதன் மூலம் நமக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கின்றனர்.

  1. லைலத்துல் கத்ர் அன்று மட்டும் அல்லாமல் மீதி 9 அல்லது 8 நாட்கள் செய்த வணக்கத்தின் நன்மைகள்.
  2. லைலத்துல் கதர் இரவின் நன்மைகளும் நிச்சயமாகக் கிடைத்து விடுகின்றது.

பொதுவாக வியாபாரிகளுக்கு இந்த இரவுகளில் தான் கொள்ளை வியாபாரம் நடக்கும். வியாபாரமும் செய்து கொள்ள வேண்டியது தான். ஆனால் லைலத்துல் கத்ரை இழந்து விடக் கூடாது.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

அல்குர்ஆன் 7:163

இஸ்ரவேலர்களின் புனித நாளான சனிக்கிழமை அன்று சோதித்தது போன்று இறைவன் நம்மைச் சோதிப்பான்.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?” என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:94

ஹஜ் வணக்கத்தின் போது வேட்டையாடத் தடை செய்யப்பட்ட நேரத்தில் வேட்டைப் பிராணிகள் நமக்கு முன்னால் வந்து வந்து போகுமாறு சோதிக்கின்றான்.

இதுபோன்றே லைலத்துல் கத்ரைத் தேடும் பிந்திய பத்து இரவுகளிலும் வியாபாரம் செழிப்பாக நடக்கும். இந்தச் சோதனைகளுக்கு நாம் பலியாகி விடாமல் லைலத்துல் கத்ரை அடைவோம். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வோம்.

ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தைக் கடைப்பிடித்ததிலிருந்து இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

வரும் ஆண்டு இருப்போமா என்று சொல்ல முடியாது. எனவே இந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் லைலத்துல் கத்ரை அடைவோம், இன்ஷா அல்லாஹ்.