பைபிளில் ஐம்பதாயிரம் பிழைகள்

பைபிளில் ஐம்பதாயிரம் பிழைகள்

ஓர் இளைஞர் பைபிளை, அதில் தவறே இருக்காது என்று எண்ணி வாங்கினார்.

ஒருநாள் “லுக்’ என்ற பழைய மாத இதழைப் பார்த்துக் கொண்டிருக்கையில், “பைபிளைப் பற்றிய உண்மை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவரது பார்வையில் பட்டது.

“புராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர்கள் படிக்கின்ற புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழியாக்கங்களில் குறைந்தது 20,000 பிழைகள் உள்ளன என்று 1720ஆம் ஆண்டு வாக்கில் ஓர் ஆங்கில அதிகாரக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. புது மாணவர்கள் சுமார் 50,000 பிழைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்” என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். பைபிளின் மீது அவர் கொண்டிருந்த நம்பகத்தன்மை ஆட்டம் கண்டது.

பல்லாயிரக்கணக்கான மிக மோசமான குறைபாடுகள், மூலத்திற்கு ஒத்திராத பிழையான ஆக்கங்கள் பைபிளில் இடம் பெற்றிருக்கும் போது அது எப்படி நம்பகமான இறை வேதமாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இந்தச் செய்தி 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி “அவேக்” என்ற பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியைப் பின்னணியாகக் கொண்டு பின்வரும் விளக்கத்திற்கு வாருங்கள்.

‘Jehovah’s Witness’ – “ஜெஹோவாவின் சாட்சியாளர்கள்’ என்று கிறித்தவர்களின் ஒரு வகையினர் உண்டு. இவர்கள் கிறித்தவர்களின் முக்கடவுள் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்ப்பவர்கள். மேற்கண்ட செய்தி இடம் பெற்ற அந்த மாத இதழ் அவர்களது வெளியீடு தான்.

இந்தச் சாட்சியாளர்களில் ஒருவர் அதிகாலை நேரத்தில் அஹ்மத் தீதாதின் வீட்டிற்கு வருகின்றார். முகமனுக்குப் பிறகு அவரிடம் தீதாத், இந்தப் பத்திரிகையின் பிரதியைக் கொடுக்கின்றார்.

தீதாத்: இது உங்களுடைய மாத இதழ் தானே?

சாட்சியாளர்: ஆம்!

தீதாத்: பைபிளில் 50,000 பிழைகள் இருப்பதாக இந்த மாத இதழ் சொல்கிறதே! அது உண்மையா?

சாட்சியாளர் (ஆச்சரியத்துடன்): என்னது?

தீதாத்: பைபிளில் 50,000 பிழைகள் உள்ளன என்று இது சொல்கின்றது.

சாட்சியாளர்: இது எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது?

(இந்நிகழ்ச்சி நடப்பதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மாத இதழ்! இது வெளியான நேரத்தில் அந்தச் சாட்சியாளர் குழந்தையாக இருந்திருப்பார்.)

தீதாத்: இந்தப் போலிப் பேச்சை விட்டு கேட்ட விஷயத்திற்குப் பதிலளியுங்கள்.

சாட்சியாளர்: நான் அதைப் பார்க்கலாமா?

தீதாத்: தாராளமாக!

(கிறித்தவர்களில் ஜெஹோவா சாட்சியாளர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். இது போன்று எங்காவது மாட்டும் போது வாய் திறக்கக் கூடாது என்பது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி! புனித ஆவி (?) அவரிடம் தோன்றி பதில் அளிக்கும் வரை அவர் காத்திருக்க வேண்டும்.)

தீதாத் அவரையே கூர்ந்து கவனிக்கின்றார். புனித ஆவி (அதாவது ஜிப்ரீல்) தோன்றி நொடிப் பொழுதில் செய்தி அருளப்பட்டவர் போன்று பதிலளிக்கத் தயாராகின்றார்.

சாட்சியாளர்: இதில் உள்ள பெரும்பான்மையான பிழைகள் களையப்பட்டு விட்டன என்று இந்தக் கட்டுரை தெரிவிக்கின்றதே!

தீதாத்: பெரும்பான்மையான பிழைகள் என்றால் 50,000? 5000? 500? 50? ஐம்பது பிழைகள் இருந்தால் கூட கடவுளுக்குப் பிழைகள் ஏற்பட்டு விட்டன என்று தானே அர்த்தம்?

சாட்சியாளர்: (மயான அமைதி! மவ்னம்!)

இதன் பின்னர் சாட்சியாளர் மவுனத்தைக் கலைத்து விட்டு, வருத்தம் தெரிவிக்கின்றார். மூத்த அழைப்பாளரை இதற்குப் பதில் தெரிவிக்க அழைத்து வருகின்றேன் என்று இடத்தைக் காலி செய்கின்றார்; காணாமலே போகின்றார்.

இவ்வளவு குறைகளையும் கோளாறுகளையும் கையில் வைத்துக் கொண்டு, கூப்பாடு போட்டு மக்களை, அதிலும் குறிப்பாக மாசு மருவற்ற குர்ஆன் வேதத்தைக் கொண்ட முஸ்லிம்களை பைபிளின் பக்கம் அழைப்பது கேலிக் கூத்தாகும்.

எனவே முஸ்லிம்களை நோக்கிப் படையெடுத்து வரும் கிறித்தவச் செய்தியாளர்களுக்கு பைபிளில் மழையெனப் பொழிந்திருக்கும் பிழைகளை, வளர்ந்து நிற்கும் களைகளை எடுத்துக் காட்டுங்கள். இனிமேல் திரும்ப எப்படி வருகிறார்கள் என்று பார்ப்போம்.