என்றும் முடியாத இப்ராஹீம் நபியின் போராட்டம்

என்றும் முடியாத இப்ராஹீம் நபியின் போராட்டம்

இட ஒதுக்கீடு கிடைத்து விட்டதால் இட ஒதுக்கீடு போராட்டம் முடிந்து விட்டது. அடுத்து, மோடியை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்களுக்கு மத்தியில் புதுத் தெம்பைப் பாய்ச்சியுள்ளது.

எத்தனை போராட்டங்களை அறிவித்தாலும் சளைக்காமல் பங்கு கொண்டு, கோரிக்கை வெற்றியடையும் வரை போராடுவது நமது கொள்கைச் சகோதரர்களின் தனிச் சிறப்பு. அந்த அளவுக்கு நமது நாடி நரம்புகளில் போராட்ட உணர்வு குருதியுடன் கலந்து விட்டது.

மாநிலத்தில் இட ஒதுக்கீடு பெற்று விட்டோம். மத்தியில் இன்னும் பெறவில்லை. அதற்காகவும் இன்ஷா அல்லாஹ் களம் காணவிருக்கிறோம். பறிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலத்தை நம்மிடம் ஒப்படைக்கக் கோரும் உணர்வுப் போராட்டம் இன்னும் முடியவில்லை. அதற்காகவும் நாம் அயராது போராடிக் கொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஜமாஅத் பிறந்தது, அது நடை பயில்வது, வளர்வது, வாழ்வது எல்லாமே இந்த இயக்கம் தன் பெயரிலேயே பதிய வைத்திருக்கின்ற அந்தத் தவ்ஹீதை – ஏகத்துவத்தை – நிலை நிறுத்துவதற்காகவே! இது தான் நம்முடைய இலட்சியமும் இறுதி இலக்குமாகும்.

“எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:162, 163

இந்தக் கட்டளையைத் தான் திருக்குர்ஆன் நமக்குப் பிறப்பிக்கின்றது. இந்த இலக்கை நோக்கிய நமது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை; முடியவும் செய்யாது.

இந்தப் போராட்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக இப்ராஹீம் (அலை) அவர்கள் திகழ்கிறார்கள்.

வீட்டையும் நாட்டையும் ஒரு சேர எதிர்த்து நிற்கிறார்கள்.

“இப்ராஹீமே! எனது கடவுள்களையே நீ அலட்சியப் படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!” என்று (தந்தை) கூறினார்.

அல்குர்ஆன் 19:46

தவ்ஹீதைச் சொன்ன மகனை, பெற்ற தந்தையே கல்லால் எறிந்து கொல்வேன் என்றார். தான் வளர்ந்த ஊர், நாடு அவர்களைத் தண்டித்தது.

“இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!” என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 29:24

ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, அவரைத் தீக்குண்டத்தில் எறிந்த போதும் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். இதற்குப் பிறகும் அவர்கள் அசத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். லூத் போன்ற குறிப்பிட்ட சிலரே சத்தியத்தை ஏற்கின்றனர். அதன் பின்னர் தமது தாயகத்தைத் துறந்து வெளியேறுகின்றார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் நாம் காணலாம்.

அவரை லூத் நம்பினார். “நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

அல்குர்ஆன் 29:26

இவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்நாள் முழுவதுமே போராட்டக் களம் தான்.

இத்தகைய போராளியைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கட்டளையிடுகின்றான்.

“அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:95

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.

அல்குர்ஆன் 4:125

“எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:161

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:123

நாம் இன்று அவர்களை அப்படியே பின்பற்றுகிறோம். அல்லாஹ்வை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்கின்றோம். நாம் இவ்வாறு செய்கின்ற போது நம்மை ஒரு கூட்டம் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றனர். இவர்கள் ஏன் நம்மை எதிர்க்கின்றனர்?

பாக்தாத் முஹ்யித்தீன், அஜ்மீர் ஹாஜா, ஏர்வாடி இப்ராஹீம், நாகூர் ஷாகுல் ஹமீது, தக்கலை பீர் முஹம்மது, ஷுமைதராவின் அபுல் ஹஸன் ஷாதுலி போன்ற இறந்து விட்ட ஆண் கடவுள்களையும், ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா, கேரள பீமா போன்ற பெண் கடவுள்களையும் வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.

“அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:66, 67

கொலுவீற்றிருந்த சிலைகளை உடைத்தெறிந்து விட்டு இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். இந்த தர்ஹாக்களை உடைக்காமல் அதே கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த விமர்சனங்களை இவர்களால் தாங்க முடியவில்லை.

அதனால் தான் இன்றளவும் பள்ளியில் தொழ விடாமல் தடுப்பது, ஊர் நீக்கம் செய்வது, பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது போன்ற அனைத்துத் தடைகளையும் நமக்கு எதிராக விதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் ஆட்சி, அதிகாரம் இருந்தால் நம்மை நெருப்புக் குண்டத்தில் போடவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இவர்கள் நம்மீது வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை நமக்கு எதிராகத் தூண்டி விட்டு, இயக்கிக் கொண்டிருப்பவர்கள் ஆலிம்கள். இவர்களுக்கு எதிரான நம்முடைய போராட்டம் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட போராட்டமாகும்.

அந்தப் போராட்டம் நமக்கு முன்னால் இன்னும் இருக்கிறது. அது முடிவுறாத, முற்றுப் பெறாத போராட்டம். அந்தப் போராட்டத்தின் வழிமுறையும் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியே அமைய வேண்டும்.

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

அல்குர்ஆன் 60:4

  1. இவர்களிடம் திருமண உறவு கொள்வதை விட்டு விலகிக் கொள்ளுதல்.
  2. இவர்களில் இறந்தோரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளாதிருத்தல்.
  3. இணை கற்பிக்கும் இவர்களுக்குப் பின்னால் நின்று தொழாதிருத்தல்.

இது போன்ற காரியங்களில் இவர்களுடன் நாம் இணைய முடியாது.

இவர்களை விட்டு விலகியிருக்கும் நம்மிடம், அதை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பின்வரும் அம்சங்கள் அவசியமாகும்.

  •   ஒவ்வொரு ஊரிலும் ஐவேளைத் தொழுகைக்கான பள்ளிவாசல்
  •  ஜும்ஆ தொழுகை
  •  பெருநாளன்று திடலில் தொழுகை

இவற்றை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் நிறைவேற்றிட, இதற்கான ஆக்கப் பணிகளில் உடனே களமிறங்குங்கள்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

இந்த வசனத்தின்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் போன்று தனி சமுதாயம் படைப்போம். இன்ஷா அல்லாஹ்!