தேர்தல் முடிந்தது தேனிலவும் முடிந்தது

தேர்தல் முடிந்தது தேனிலவும் முடிந்தது

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதியளித்து, அதற்கான ஆணையம் அமைத்ததற்காக, 2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அணியை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் ஆதரித்தது. அந்த அணியின் வெற்றிக்காகப் பாடுபட்டது. எனினும் அந்த அணி தோல்வியடைந்து ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் ஆனது.

அதன் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது. இந்த உத்தரவு வந்தவுடன் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தவ்ஹீது ஜமாஅத் ஆதரிக்கும் என்று எழுத்துப்பூர்வமாக தமிழக முதல்வரிடம் உறுதியளித்தோம்.

அது போல் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியின் வெற்றிக்காகக் களமிறங்கினோம். அல்லாஹ் அந்த அணிக்கு மகத்தான வெற்றியளித்தான். தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு இது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தது.

அதிலும் குறிப்பாக, அல்லாஹ்வின் விதியை மறந்தும், மறுக்கும் வகையிலும் மாமாகாவினர், “தவ்ஹீது ஜமாஅத் சேர்ந்ததால் திமுக அணி உருப்படாது’ என்ற பிரச்சாரத்தை முன்வைத்தனர். ஏளனமும் ஏகடியமும் பேசிக் கொண்டிருந்தோரின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போடும் விதமாக அல்லாஹ் இந்த அணிக்கு சிறந்த ஒரு வெற்றியை வழங்கினான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இரண்டு அணிகளுக்காகவும் நாம் பாடுபட்டதன் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது தான் இட ஒதுக்கீடு!

அதற்காகத் தான் நாம் தேர்தலில் பாடுபடவே செய்தோம். இதைத் தவிர நமக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது.

நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிப் பதவிகள், வாரியப் பதவிகள் என அரசியல் ஆதாயத்தை, சுய லாபத்தை நோக்கமாகக் கொண்டு நாம் களப்பணி ஆற்றவில்லை. இட ஒதுக்கீட்டை லட்சியமாகக் கொண்டு தான் களப்பணியாற்றினோம். அந்தத் தேர்தல் பணி முடிந்தது. அத்துடன் திமுக அணியுடன் கொண்டிருந்த தேனிலவும் முடிந்து விட்டது.

ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், தேர்தலுக்கு முன்பு எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்திப்பது, அவரிடம் கோரிக்கை வைப்பது, மனு கொடுப்பது, இவற்றுக்கு உரிய மரியாதை இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டம், போராட்டம் என களங்கள் வாயிலாக உரிமைக் குரல் எழுப்புவோமோ அதே பாணியைத் தான் இப்போது நாம் கடைப்பிடிக்க வேண்டும். அந்தப் பாணியைத் தான் எப்போதும் கைக்கொள்ள வேண்டும்.

நாம் ஆளுங்கட்சிக்காரர்களாகி விட்டோம்; நாம் அமைச்சரைப் பார்த்து நமது கோரிக்கைகளைச் சரி செய்து விடுவோம் என்ற அபார நம்பிக்கை, அலட்சிய எண்ணம் வேண்டாம்.

அமைச்சர்கள் இன்று இருப்பார்கள்; நாளை போய் விடுவார்கள். ஆனால் அதிகாரிகள் இன்றும் இருப்பார்கள்; நாளையும் இருப்பார்கள். ஒரு காரியத்திற்காக உளவுத் துறை அதிகாரி ஒருவரை அணுகிய போது, இனிமேல் அமைச்சரை வைத்துக் காரியத்தை முடித்துக் கொள்ளலாமே என்று குத்திக் காட்டியுள்ளார். எனவே கொள்கைச் சகோதரர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதற்காக அமைச்சர்கள் மூலமாக ஆக வேண்டிய காரியங்களுக்காகக் கூட அமைச்சர்களையோ, ஆளுங்கட்சியினரையோ சந்திக்க வேண்டாம் என்று கூறவில்லை.

சமுதாயக் காரியங்களுக்காக, தவ்ஹீது ஜமாஅத்தின் தனித்தன்மைக்கு ஆபத்தில்லாத வகையில் அவர்கள் மூலம் நிறைவேறும் கோரிக்கைகளுக்காகச் சந்திப்பதில் தவறில்லை.

ஆனால் அது ஒன்று தான் வழி என்று எண்ணி, அதிகாரிகளை அணுகாமல் ஆளுங்கட்சியினர் மூலமாகவே காரியத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்று விடக் கூôது என்பதே இந்த வேண்டுகோளின் மிக முக்கிய நோக்கம்.

மாவட்ட அளவில், நகர அளவில் முடிக்க வேண்டிய காரியங்களைக் கூட நாம் அமைச்சரை வைத்து முடித்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மிகக் குறைந்த சிலரிடம் தோன்றியிருப்பதை மறுக்க முடியாது. இந்த எண்ணம் – எப்போதும் ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் – நம்மை மற்றொரு தமுமுகவாக மாற்றி விடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால் தேர்தல் முடிந்ததுடன் அரசியல் கட்சியினருடனான தேனிலவும் முடிந்து விட்டது; அன்பால் ஆகும் காரியத்தை அன்புடன் அணுகிக் கேட்போம். ஆர்ப்பரித்துக் கேட்க வேண்டியதை அலைகடலென ஆர்ப்பரித்துக் கேட்போம், எப்போதும் போல்!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதெல்லாம் பதவியை விரும்புபவர்களுக்குத் தான். நாம் எப்போதுமே மக்களுக்காக உழைக்கின்ற சமுதாயக் கட்சி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

காலத்தின் மீது சத்தியமாக!

மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

அல்குர்ஆன் 103வது அத்தியாயம்

இந்த வசனங்களின் அடிப்படையில் சமுதாயப் பணிகள் மற்றும் ஏகத்துவப் பிரச்சாரப் பணிகளின் போது ஏற்படும் சோதனைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்வோம்.

நம்முடைய இலக்கு ஏகத்துவம். அதை மக்களிடம் கொண்டு செல்வதற்குரிய வழிப்பாதை தான் சமுதாயப் பணிகள் என்ற இலட்சியத்துடன் நமது பயணத்தைத் தொடர்வோமாக!