தேர்தலா? மாறுதலா?

தேர்தலா? மாறுதலா?

ஒரு நோயாளி, மருத்துவரிடம் காய்ச்சல் என்று வருகின்றார். உடனே மருத்துவர் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கிறார். அதே நோயாளி கண் பார்வை மங்குகின்றது என்று வருகின்றார். மருத்துவர் கண் நோய்க்கு மருந்து கொடுக்கின்றார். காதில் சீழ் என்று அடுத்து வருகின்றார். அப்போது காதுக்காக மருந்து கொடுக்கின்றார். கையில் ஆறாத புண், காலில் காயம் என்று அதே நோயாளி மீண்டும் மீண்டும் வருகின்றார். மருத்துவரும் அந்தந்த நோய்க்கு மருந்து கொடுத்து அனுப்புகின்றார். அவர் மருந்து கொடுத்த எந்த நோயும் தீரவில்லை, புண்களும் ஆறவில்லை என்றால் அந்த மருத்துவரை யாராவது நம்புவார்களா? அவரை மருத்துவர் என்று நம்பினால் அவன் பைத்தியக்காரனாகத் தான் இருக்க முடியும்.

எந்த ஒரு நோய் ஏற்பட்டாலும் அதற்கு அடிப்படைக் காரணம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது அல்லது இல்லாமல் ஆவது தான்.

அந்த எதிர்ப்பு சக்தியை அழிக்கும் தீய நோய் எது என்று கண்டறிந்து அதை நிறுத்துபவன் தான் சரியான மருத்துவன்.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

பல மாடிகள் கொண்ட ஒரு மாளிகை! அதன் சுவர்களில் வெடிப்புகள்; அதன் முகடுகளில் பாளம் பாளமாய் கீறல்கள், ஓட்டைகள்.

வெடிப்புகளிலும் கீறல்களிலும் ஒட்டுக்கள் போடப்படுகின்றன. மீண்டும் வெடிப்புகளும் உடைப்புகளும் ஏற்படுகின்றது. மீண்டும் மீண்டும் ஒட்டுக்களும், மேற்பூச்சும் ஒரு பொறியாளர் பூசச் சொல்வாரா? அவ்வாறு மேற்பூச்சை மட்டுமே பூசச் சொன்னால் அவன் பொறியாளன் அல்ல! சாதாரண கொத்தனார் அளவுக்குக் கூட அறிவு இல்லாதவன் என்று அர்த்தம்.

அவன் உண்மையான பொறியாளன் என்றால் அந்தக் கட்டடத்தின் அடித்தளத்தில் கோளாறு என்று கூறி அடித்தளத்தை மாற்றச் செய்வான்.

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதன் ஆணி வேர் என்ன? என்று பார்க்க வேண்டும்.

இந்த உதாரணங்களின் பின்னணியில் நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார்.

நூல்: புகாரி 3595

முறையீடு செய்பவருக்கு நபி (ஸல்) அவர்களின் பதில் எப்படி அமைந்திருக்க வேண்டும்? வறுமை ஒழிப்புக்கு இன்ன திட்டத்தை மேற்கொள்வோம். வழிப்பறியை ஒழிப்பதற்கு இன்ன நடவடிக்கையை எடுப்போம் என்று நபி (ஸல்) அவர்களின் பதில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் நபிகளாரின் பதில் எப்படியிருக்கின்றது என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறதுஎன்று பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள். – நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யிகுலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன். – நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)என்று பதிலளித்தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய்.

நூல்: புகாரி 3595

ஒருவரது முறையீடு வழிப்பறி! இதற்குப் பதில் சொல்கின்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இரண்டு முன்னறிவிப்புகளைத் தெரிவிக்கின்றார்கள்.

தன்னந்தனியாகச் செல்லும் ஒரு பெண்ணின் நகைக்கு மட்டுமல்ல! அவளது கற்புக்கும் உயிருக்கும் பாதுகாப்பு கிடைக்கும் காலம் வெகு சீக்கிரம் வரவிருக்கின்றது.

அடுத்தவரின் முறையீடு வறுமை தொடர்பானது. அதற்கும் நபி (ஸல்) அவர்கள் திட்டத்தைச் சொல்லாமல், ஏற்படப் போகும் திருப்பத்திற்கான முன்னறிவிப்பைத் தான் சொல்கின்றார்கள்.

மக்களைச் சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொண்ட பாரசீக மன்னர்களிடமிருந்து ஆட்சி, அதிகாரம் கைப்பற்றப்படும். அந்த வளங்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு மக்களின் வறுமைக்குத் தீர்வு காணப்படும் என்ற நற்செய்தியை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக் கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

நூல்: புகாரி 3595

இங்கு நாம் பார்க்க வேண்டியது, நபி (ஸல்) அவர்கள் வறுமையையும் வழிப்பறியையும் போக்குகின்ற திட்டத்தைக் குறிப்பிடாமல், ஏற்படப் போகும் திருப்பத்தை ஏன் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்?

அதற்குக் காரணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்க்கு வைத்தியம் செய்யவில்லை. நோய்களுக்குரிய காரணத்தைக் கண்டறிந்து அதற்கு வைத்தியம் செய்கிறார்கள். கட்டடத்தின் மேல் உள்ள வெடிப்புகளைப் பழுது பார்க்காமல், சாந்து பூசாமல் அதன் அடித்தளத்தையே மாற்றியமைத்து புனர் நிர்மாணம் செய்கிறார்கள்.

நோய்களின் ஆணிவேர் ஷிர்க்! கட்டடத்தை ஆட்டம் காணச் செய்கின்ற, வெடிப்புகளை ஏற்படுத்துகின்ற கேடும் கெடுதியும் ஷிர்க் என்ற இணை வைப்புத் தான். இதைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில்,

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 14:24-25

இந்த மரத்தின் விளைச்சல் கனி தான், தன்னந்தனியாகச் செல்லும் ஒரு பெண்ணின் கற்புக்கும் உயிருக்கும் உடைமைக்கும் கிடைத்த பாதுகாப்பு! நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு, அமைதி!

அந்த மரத்தின் மகத்தான விளைச்சல் கனி தான் வறுமை ஒழிந்து வளம் கொழிக்கும் வாழ்வு!

எனவே ஏகத்துவத்தில் பிடிமானம் கொண்ட ஒருவரது முதல் கடமை அந்த ஏகத்துவச் செய்தியைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது தான். சத்தியத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தான்.

ஒருவர், இருவர், நூறு பேர், இலட்சம் பேர் என்று மக்கள் இந்தக் கொள்கையின் வார்ப்புகளாக ஆகி விடும் போது அடுத்து மலரப் போவது இஸ்லாமிய ஆட்சி தான்.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 24:55

நான் வழங்கும் இந்த ஆட்சியைப் பெற்ற மக்கள் என்னை மட்டும் வணங்குவார்கள்; எனக்கு இணை வைக்க மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் 22:41

தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் வழங்குதல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்று ஓர் இஸ்லாமிய ஆட்சியின் ஆட்சியாளர், குடிமக்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன? என்பதன் பட்டியலைப் போட்டுக் காட்டுகிறான்.

தூய ஆட்சி என்றால் இது தான் தூய ஆட்சி!

தூய அரசியல் என்றால் இது தான் தூய அரசியல்!

மண்டிய இருள் கிழிக்கும் மாற்று அரசியல் என்பது இது தான்.

அதற்குத் தேவை இன்றியமையாத, உறுதி மிக்க அஸ்திவாரமும் அதன் மீது எழுப்பப்படும் ஆட்டம் காணாத கட்டமைப்பும் தான்.

அந்த ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் அல்லாஹ் நாடினால் நம் வாழ்நாளில் நடக்கலாம்; அல்லது நாம் இறந்த பின்பும் நடக்கலாம். அந்த மாற்றத்திற்கான அடிக்கல்லை நாம் நாட்டியிருக்கின்றோம்; அஸ்திவாரத்தைப் போட்டிருக்கின்றோம். அந்த அஸ்திவாரம் தவ்ஹீதுப் பணி!

ஏகத்துவக் கொள்கையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் இந்தப் பணியைச் செய்யவில்லை என்றால் அதற்கு அல்லாஹ்விடம் கேள்வி உண்டு!

சாக்கடை அரசியலை நீ சுத்தப்படுத்தப் போனாயா? என்ற கேள்வி விசாரணை கிடையாது. ஆனால் அதில் நுழைந்து ஈமானைப் பறி கொடுத்ததற்காகக் கடும் விசாரணையும் கோரத் தண்டனையும் உண்டு. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இதைக் கவனத்தில் கொண்டு தான் தவ்ஹீது ஜமாஅத் அந்த இலக்கை நோக்கி, அந்த விளக்கை நோக்கி மட்டும் பயணம் செய்கின்றது.

நம்முடைய எதிர்பார்ப்பு ஏகத்துவக் கொள்கை மூலம் ஏற்படும் மாறுதலே! ஐந்தாண்டுக்கு ஒருமுறை வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் தருகின்ற தேர்தல் அல்ல!