தேர்தல் கமிஷனும் தூதர் கமிஷனும்
இதற்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும், சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும் நாடே திருவிழாக் கோலம் பூண்டு விடும். ஒவ்வொரு தலைவருக்காகவும் மக்கள் விடிய விடியக் கண் விழித்து நிற்பார்கள். அதிலும் அந்த அரசியல் கட்சித் தலைவருக்குத் திரைப்படப் பின்னணி இருந்தால் போதும். அலை மோதும் கூட்டத்திற்கு அளவே இருக்காது.
இதோ புரட்சித் தலைவர் வருகிறார்; புரட்சிக் கலைஞர் வருகிறார் என்று நொடிக்கு ஒரு தடவை ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருக்கும். மக்கள் கால் கடுக்கக் காத்திருப்பார்கள். பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள திடலைச் சுற்றி ஒரு கூட்டம் ஆக்கிரமித்து நிற்கும்.
அரசியல் கட்சிகளின் மேடைகளில் குரலோசைகளைக் கோரமாகக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள்! கம்பங்களில் பிம்பங்களாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் கட்சிகளின் சின்னங்கள்! கட்சித் தலைவர்களை வரவேற்கின்ற வண்ண வண்ணக் கொடிகள்! ஊர் வாயில்களில் வரவேற்புத் தோரணங்கள்; வாழ்த்துப் பதாகைகள்! சுவர்கள் தோறும் சின்னங்கள்; வேட்பாளர்களின் படங்கள்! கோபுர உயரத்திற்கு கட்சித் தலைவர் மற்றும் வேட்பாளர்களின் படங்கள்! சுவர்களை வளைத்து மூழ்கடிக்கும் சுவரொட்டிகள்! கொடிகளைக் கட்டிக் கொண்டு ஊரை வளைத்துப் பவனி வரும் கார்கள்!
தேர்தலின் உச்சக்கட்டம், ஊரே அதிர்கின்ற, அலறுகின்ற வகையில் ஒய்யாரக் கார்களில் ஊர்வலமாக நடக்கும் வேட்பு மனு தாக்கலில் துவங்கி, வாக்குப் பதிவு நாளுக்கு ஒருநாள் முன்பு வரை இந்தக் களேபரங்கள் நடக்கும். வாக்குச் சாவடியில் போய் வாக்களித்தவுடன் நாடு பழைய நிலைக்குத் திரும்பும்.
இப்படித் தேர் திருவிழாவாக, ஊர் கந்தூரியாக அமர்க்களப்பட்டு ஆர்ப்பரித்த இந்தத் தேர்தல் களம் தற்போது இழவு விழுந்த வீடாக, சோகக் காடாக மாறி விட்டது.
பத்து மணிக்குப் பாய் மடக்கி விடுகின்ற பொதுக் கூட்டங்கள், அடங்கிப் போன அறிவிப்புக்கள். 9:59 மணிக்கு ஊமையாகி விடுகின்ற ஒலி பெருக்கிகள், வீடு திரும்புகின்ற தொண்டர்கள்! வெண் சுவர்கள் கூட சின்னங்கள் இல்லாமல் வெறுமையாகி விட்டன. கட்சித் தலைவர்கள் இறந்தால் கூட அரைக் கம்பத்தில் இறங்கி இரங்கல் பாடும் கட்சிக் கொடிகள் இப்போது ஒரேயடியாக முழுமையாக இறக்கப்பட்டு காணாமல் போய்விட்டன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் இப்படி கருமாதி வீடாக ஆனது ஏன்? இதற்குக் காரணம் தேர்தல் ஆணையம் தான்.
டி.என். சேஷன் என்பவர் தேர்தல் ஆணையரான பின் தான் ஒட்டுமொத்த இந்தியாவில் இந்த மாறுதல் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமாக அமைந்தது எது? அரசியல் சட்டம் தான்.
நமது நாடு, நாடாக இருக்க வேண்டும் என்றால் பேசாமல் தேர்தல் ஆணையத்திடம் நாட்டை ஒப்படைத்து விடலாம் என்று மக்கள் பேசுகின்ற அளவுக்கு அதிகாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாட்டில் சில வரம்பு மீறல்களும் இருக்கத் தான் செய்கின்றன. இருப்பினும் அரசியல் கட்சிகளின் ஆட்டத்தை, அமைச்சர்களின் கொட்டத்தை, அரசியல்வாதிகளின் பண நடமாட்டத்தை எல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆரம்பத்தில் இவை ஒரு வித்தியாசமாக இருந்தது. இப்போது பழகி விட்டது.
நாட்டில் தேர்தல் ஆணையம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதைப் போன்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூதரின் ஆணையமான ஷரீஅத் சட்டத்தை அதன் தூய வடிவில் மார்க்கத்தில் நிறைவேற்றி வருகின்றது.
- விடிய விடிய ஓதப்பட்ட மவ்லிதுகள்
- இறந்தவர் வீட்டில் மூன்று, ஏழு, நாற்பதாம் கத்தம் ஃபாத்திஹாக்கள்
- இருபது ரக்அத் தராவீஹ்
- கூட்டு துஆ
- தர்ஹாக்களின் கந்தூரிகள்
இன்னும் இங்கே குறிப்பிடப்படாத எத்தனையோ ஷிர்க் மற்றும் பித்அத்களைக் கடந்த 20 ஆண்டுகளில் தவ்ஹீத் ஜமாஅத் ஒழித்துக்கட்டி வருகின்றது.
தேர்தல் கமிஷன் மூலம் சட்டத்தின் ஆட்சி வருவதற்கு முன் இது அசாத்தியம் என்று பார்க்கப்பட்டது. இப்போது அது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது. அது போன்று தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரத்திற்கு முன்பு வரை இந்த ஷிர்க், பித்அத்களை ஒழிப்பது அசாத்தியமாகப் பார்க்கப்பட்டது. அப்போதும் சத்தியத்தைத் தெரிந்த ஒரு சில ஆலிம்கள் இருக்கத் தான் செய்தார்கள். “இது அசாத்தியம், இது நம்மால் முடியாது’ என்று அவற்றைக் கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல் விட்டு விட்டனர்.
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் அவற்றை ஓய்க்க, ஒழிக்கக் களம் இறங்கியது. அசாத்தியம் என்றது அவன் அருளால் சாத்தியமாக ஆனது. இப்போது அது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது. அந்த ஆச்சரியம், அற்புதம் இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்!
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்கு கிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான். (அல்குர்ஆன் 21:18)