ஈமான் பதிவாகும் எஃகு உள்ளங்கள்

ஈமான் பதிவாகும் எஃகு உள்ளங்கள்

அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில் தொடர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். இதற்கு அடிப்படைக் காரணம், அது ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பது தான்.

இப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து ஒரு சிலர் விடுபடுவதும், விலகுவதும் உள்ளே இருக்கின்ற கொள்கைச் சகோதரர்களில் சிலரது உள்ளத்தில் ஒருவித விரக்தியையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது. “இவர்களே இப்படிப் போய் விட்டார்களே! நமது நிலை என்ன?’ என்று எண்ணத் தலைப்பட்டு விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அருமருந்தாக, அற்புத அரணாக இந்த வசனம் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)

அல்லாஹ்வின் எதிரிகளை, அவனது தூதரின் எதிரிகளைத் தமது எதிரிகளாகப் பாவிப்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் பரிசுகளையும் பலன்களையும் பார்ப்போம்.

  1. உள்ளத்தில் ஈமான் (இறை நம்பிக்கை) பதிவாகுதல்
  2. பதியப்பட்ட ஈமான் பலமாகுதல்
  3. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுதல்
  4. வெற்றியடைதல்
  5. சுவனத்தில் நுழைதல்

இறைவனின் எதிரிகளை, இறைத் தூதர்களின் எதிரிகளைத் தன் எதிரிகளாகக் கொண்டவர்களுக்கு இத்தனை பாக்கியங்களும் கிடைக்கின்றன. இந்தப் பாக்கியங்களைப் பெறுபவர்கள், அவர் போய் விட்டாரே! இவர் போய் விட்டாரே! நாம் எப்படி? நமது நிலை என்ன? என்று கவலைப்படத் தேவையில்லை. கலக்கமடைய வேண்டிய அவசியமில்லை.

இன்று இந்த ஜமாஅத்திலிருந்து வெளியே செல்பவர்கள் மேற்கண்ட இறை வசனம் கூறும் இலக்கணங்களிலிருந்து விலகியவர்கள் தான். உதாரணத்திற்கு, வரதட்சணையை எடுத்துக் கொள்வோம்.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!  (அல்குர்ஆன் 4:4)

வரதட்சணை திருமணங்களை ஆதரிப்பவர்கள் திருக்குர்ஆனின் 4:4 வசனத்தை வகை வைக்கவில்லை. அதனால் அல்லாஹ்வின் வசனத்தை இவர்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டவர்கள். இதே போன்று தான் பெண் வீட்டு விருந்து. ஏனெனில் இதுவும் ஒரு தெளிவான வரதட்சணை தான். இவற்றை ஆதரிப்பவர்கள் சத்திய வேதத்தின் இந்த வசனத்தைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாதவர்கள். இது வேதக்காரர்கள் மற்றும் இறை நிராகரிப்பாளர்களின் பண்பாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!  (அல்குர்ஆன் 5:57)

அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.   (அல்குர்ஆன் 18:106)

அதனால் தான் இத்தகையோரின் விருந்துப் படையல்களை, விழா சபைகளை அல்லாஹ் புறக்கணிக்கச் சொல்கிறான்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)

ஆனால் இத்தனையும் மீறி வரதட்சணை விருந்துகளில் போய் கலந்து கொள்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனுடைய தூதருடைய பாசத்தை விட உறவுகளின் பாசமும் நேசமும் தான் மேலோங்கி நிற்கின்றது, மிகைத்து நிற்கின்றது. அதனால் தான் இத்தகையோர் எளிதில் இந்த அமைப்பை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

இங்கே இன்னொரு கேள்வி எழலாம். இந்த இயக்கத்தில் இருந்தால் தான் கொள்கை உறுதி இருக்குமா? இதை விட்டு வெளியே போய் விட்டால் கொள்கை உறுதி இருக்காதா? இங்கிருந்தால் தான் ஏகத்துவாதியா? இதை விட்டு வெளியே போய் விட்டால் தடம் புரண்டவரா? என்பது தான் அந்தக் கேள்வி.

பொதுவாக இப்படிக் கூற முடியாது என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற இயக்கங்களை எடை போட்டுப் பார்த்து இப்படிக் கூற முடியும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற அடித்தளத்தின் மீது அமையப்பெற்று எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து செய்து கொள்ளாத ஒரு இயக்கம் நம் கண்களுக்குத் தென்படவில்லை. இருக்கும் இயக்கங்களில் இந்த ஒரு இயக்கம் தான் இந்தத் தகுதியில் இருப்பதால் அப்படிச் சொல்கிறோம்.

இதை விட்டு வெளியே போனவர்கள் தர்ஹா வாசலில் போய் நிற்பதையும் அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் பார்க்க முடிகின்றது.

இந்த ஒரு அமைப்பு மட்டும் தான் வரதட்சணை விருந்தை, பெண் வீட்டு விருந்தை ஒரு பாவமாகப் பார்க்கின்றது. அதை ஒழிப்பதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது. ஜாக் உள்ளிட்ட இன்ன பிற இயக்கங்கள் இதைச் சரி காணுகின்றன. அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றன. இதிலிருந்தே தவ்ஹீத் ஜமாஅத்தின் தூய்மையை விளங்கிக் கொள்ளலாம்.

கடையநல்லூர் என்ற ஊரில் இதுவரை பெண் வீட்டு விருந்தை ஒழிப்பது சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் தான் பெண் வீட்டு விருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட, நபிவழி அடிப்படையிலான திருமணம் நடந்தேறியது. இது தான் தவ்ஹீத் ஜமாஅத்.

உறவுகளுடைய பிரியத்தை விட, பாசத்தை விட அல்லாஹ்வுடைய பாசம் மேலோங்கி நிற்பதால் தான் இந்த ஜமாஅத்தினரால் இப்படி உறுதியாக நிற்க முடிகின்றது. அப்படி நிற்பதைத் தான் இந்த ஜமாஅத் வலியுறுத்துகின்றது. அதனால் இந்த அமைப்பில் உள்ளவர்கள் கொள்கைப் பிடிமானத்துடன் இருக்க முடிகின்றது. தடம் மாறாமல் நிற்க முடிகின்றது.

இது போன்று இதர கொள்கை விஷயங்களிலும் 58:22 வசனத்தின்படி உறுதியாக நின்றால் அவர்களது உள்ளம் ஈமான் பதியும் தளமாக மாறி விடுகின்றது. அவர்களது ஈமான் பலமாக ஆகின்றது. உண்மையில் இது ஓர் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இறைவன் நாடினால் இவர்கள் தடம் மாறாமல் இருப்பார்கள். இவர்களின் உள்ளங்கள் எந்தச் சோதனையையும் தாங்குகின்ற, எந்தத் தீமையையும் எதிர் கொள்கின்ற எஃகு உள்ளங்களாகி விடுகின்றன.