கிரகணம் ஓர் அறிவியல் விளக்கம்

கிரகணம் ஓர் அறிவியல் விளக்கம்

வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும், கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் இக்கிரகணம், கங்கண சூரிய கிரகணமாக (Annular)தெரியும்.

(கங்கண சூரிய கிரகணம் என்றால் என்ன என்பது பற்றித் தனியாக விளக்கப்பட்டுள்ளது.)

இக்கிரகணம் இந்தியப் பெருங்கடல் பகுதியில், 11 நிமிடங்கள், 08 வினாடிகளுக்கு கங்கண சூரிய கிரகணமாக நிலைக்கும். 3000 ஆண்டுகளுக்கிடையில் நிகழும் மிக நீண்ட கங்கண சூரிய கிரகணமாகும் இது. இனி கி.பி.3043ஆம் ஆண்டில் தான் இதுபோன்றதொரு கிரகணம் நிகழும்.

இந்த கங்கண சூரிய கிரகணத்தை (சூரியனின் வட்ட உருவை, சந்திரன் மறைத்து, நெருப்பு மோதிரம் போல் காட்சியளிக்கும் இந்த அதிசயத்தை) மத்திய ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மாலத்தீவு, இலங்கை, பர்மா மற்றும் கிழக்கு சீனாவின் சில பகுதிகளிலிருந்து சுமார் 3 பில்லியன் மக்கள் இக்கிரணகத்தைக் காண இயலும்.

ஆண்டுதோறும் பொதுவாக (முழு கிரகணம் – பர்ற்ஹப், கங்கண கிரகணம் – ஆய்ய்ன்ப்ஹழ், பகுதி கிரகணம் – டஹழ்ற்ண்ஹப் என) உலகின் ஏதேனும் சில பகுதிகளில் 5 கிரகணங்கள் வரை நிகழும். ஒரு குறிப்பிட்ட பகுதியில், பகுதி சூரிய கிரகணம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையும், வேறு சில காலங்களில் சில மாதங்களுக்கு ஒரு முறையும் காணக்கூடியதாக இருக்கும். எனவே, முழு சூரிய கிரகணம் மற்றும் கங்கண சூரிய கிரகணம் ஒரே இடத்தில் மீண்டும் நிகழ நீண்ட காலமாகும்.

தமிழ்நாட்டில், இதற்கு முன், கி.பி.1871ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதியன்று தான் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

தமிழ்நாட்டில், அடுத்த முழு சூரிய கிரகணத்தை கி.பி.2168ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதியன்று தான் காண முடியும்.

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கங்கண சூரிய கிரகணம் 1901ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று தான் கடைசியாகத் தெரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த கங்கண சூரிய கிரகணம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியன்று தான் தென்படும். இது 15.01.2010 அன்று நடைபெறவுள்ள கங்கண சூரிய கிரகணத்தைப் பற்றிய செய்தித் தொகுப்பாகும்.

கிரகணம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? என்பன பற்றி ஒரு சிறு குறிப்பை இப்போது பார்ப்போம்.

ஒளிமறைப்பு (கிரகணம்)

புவியும் நிலவும் சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகின்றன. அவ்வாறு புவியும் நிலவும் பெறுகின்ற சூரிய ஒளியைப் புவியோ அல்லது நிலவோ தடுக்கும் போது கிரகணம் ஏற்படுகின்றது. இத்தகைய ஒளிமறைப்பைக் கிரகணம் என நாம் அழைக்கிறோம்.

இந்நிகழ்ச்சியை ஒரு எடுத்துக்காட்டுடன் நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். காலை அல்லது மாலை வேளைகளில் சூரியனை நோக்கி நில்லுங்கள். அப்பொழுது உங்கள் நிழல் உங்களுக்குப் பின்னால் விழுவதைப் பார்க்கலாம். மற்றொருவரை உங்களுக்குப் பின்னால் உங்கள் நிழலில் நிற்கச் சொல்லுங்கள். அவர் மீது உங்கள் நிழல் படிந்திருக்கும். அவ்வாறு நிற்பவரின் மீது சூரிய ஒளி விழாமல் உங்கள் நிழல் தடுக்கிறது. உங்கள் நிழலில் நிற்பவரை நிழலிலிருந்து விலகி நிற்கச் சொல்லுங்கள், இப்பொழுது சூரிய ஒளி இருவர் மீதும் சமமாக விழுகிறது.

அது போலவே சூரியனுக்கு நேராக வரும் பொழுது புவியின் நிழலும் நிலவின் நிழலும் விண்வெளியில் விழுகின்றன. புவியின் நிழலில் நிலவு வரும் பொழுது அல்லது நிலவின் நிழலில் புவி வரும் பொழுது ஒளிமறைப்பு நிகழ்ச்சி (கிரகணம்) ஏற்படுகிறது.

ஒளிமறைப்பு நிகழ்ச்சி (கிரகணம்) எல்லா பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும் நிகழ்வதில்லை. ஏன்? நிலவு புவியை வலம் வரும் பாதையின் கோணம், புவி சூரியனை வலம் வரும் பாதைக் கோணத்தை விட 5 டிகிரி சாய்வாக உள்ளது. எனவே பெரும்பாலும் நிலவு புவியின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது. அது போலவே புவியும் நிலவின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது. அவற்றின் சுழலும் கால வேறுபாட்டினால் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் புவியானது நிலவின் நிழல் விழும் பகுதியிலும், நிலவானது புவியின் நிழல் விழும் பகுதியிலும் வந்து விடுகின்றன.

அவ்வேளைகளில் சூரியன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து விடுகின்றன. ஆதலால் இவை மூன்றின் அமைவிடங்களைப் பொறுத்து கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் நிகழ்ச்சி ஏற்படக் கீழ்க்கண்ட சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.

  1. சூரியன், புவி மற்றும் நிலவு ஆகியவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைய வேண்டும்.
  2. நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் புவி அமைய வேண்டும்.
  3. முழுநிலவாகக் காட்சியளிக்கும் பௌர்ணமி இரவாக இருத்தல் அவசியம்.

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் நிகழ்ச்சி ஏற்படக் கீழ்க்கண்ட சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.

  1. சூரியன், நிலவு மற்றும் புவி ஆகியவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.
  2. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு அமைய வேண்டும்.
  3. அமாவாசை நாளாக இருத்தல் அவசியம்.

சந்திரன், சூரியனை விட மிக மிகச் சிறியது. ஆனால் சந்திரனால் எவ்வாறு சூரியனை முழுமையாக மறைக்க முடிகின்றது?

ஒரு கண்ணை மூடிக் கொண்டு மற்றொரு கண்ணுக்கு அருகில் நம் விரலை வைத்துப் பார்த்தால் எதிரே சற்றுத் தொலைவில் உள்ள கட்டடம் பெரிதாக இருந்தாலும், தொலைவில் உள்ளதால் நமக்கு சிறிதாகத் தெரிகின்றது. அது போல் விரல் சிறிதாக இருந்தாலும், நம் கண்ணுக்கு அருகில் இருப்பதால் பெரிய கட்டடத்தையே மறைக்கக் கூடியதாக இருக்கின்றது.

சந்திரனை விட சூரியன் 400 மடங்கு பெரிதாக இருந்தாலும், பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரனும், சூரியனும் ஒரே அளவாக இருப்பதாகத் தோன்றுகின்றது. இதற்குக் காரணம், பூமியிலிருந்து சந்திரன் இருக்கும் தூரத்தைக் காட்டிலும், பூமியிலிருந்து சூரியன் 400 மடங்கு தூரத்தில் இருப்பது தான். ஆகவே தான் சூரியனும் சந்திரனும் ஒரே அளவாக நமக்குத் தெரிகின்றன. இதனால் சந்திரன், தன்னை விட 400 மடங்கு பெரிதான சூரியனை முழுமையாக மறைக்க முடிகின்றது.

முழு சூரிய கிரகணம் (Total Eclipse)

சூரியனுக்கு நேர் எதிரில், புவிக்கு இடையில் நிலவு வருகின்ற நேரங்களில் புவி நிலவின் நிழல் பகுதிக்குள் சென்று அமைகிறது. அவ்வாறு நிலவின் நிழலில் புவி அமைவதால் சூரிய ஒளி புவியின் மீது படாமல் மறைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி சூரிய கிரகணம் எனப்படுகிறது. புவியை விட நிலவு உருவில் மிகச் சிறியது. எனவே புவியின் மொத்தபரப்பில் அதன் நிழல் மிகக் குறைந்த பரப்பில் மட்டுமே விழுகிறது. இவ்வாறு நிலவின் நிழல் விழும் புவியின் பரப்பில் வசிக்கும் மக்கள் மட்டுமே முழு சூரிய கிரகணத்தைக் காண இயலும். ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் முழுசூரிய கிரகணத்தைக் காண இயலாது.

புவி தனது அச்சில் சுழல 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. நிலவு தன் அச்சில் சுழல 27.3 நாள்களாகின்றன. இவ்விரண்டும் சுழலும் வேகத்தில் காணப்படும் வேறுபாட்டினால் மிகக் குறைந்த நேரமே அதாவது 8 நிமிடங்கள் மட்டுமே முழு சூரிய கிரகணம் (Total Eclipse) நீடிக்கும். அந்த 8 நிமிடங்கள் புவி இருளில் மூழ்கிவிடும்.

பகுதி கிரகணம் (Partial Eclipse)

சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும். ஆனால் சூரியனை அது முழுமையாக மறைக்காது. இது பகுதி சூரிய கிரகணம் எனப்படுகின்றது.

கங்கண கிரகணம் (Annular Eclipse)

கங்கணம் என்றால் தமிழில் வளையம், மோதிரம், காப்பு என்று பொருள்படும். புவி சூரியனைத் தனது நீள்வட்ட பாதையில் வலம் வருகிறது. அவ்வாறு வலம் வரும் பொழுது ஓர் ஆண்டில் சூரியனுக்கும் புவிக்கும் இடையில் காணப்படும் தொலைவு சிறிது மாறுபடுகிறது. புவி சூரியனுக்கு அருகில் வரும் பொழுது நிலவு வெகு தொலைவில் அமைகிறது. அவ்வேளைகளில் நிலவால் சூரியனை முழுமையாக மறைக்க இயலாது. ஏனெனில் நிலவு சூரியனை விட அளவில் மிகச் சிறியது. ஆதலால் இத்தகைய ஒளி மறைப்பின் போது சூரியனின் பிரகாசமான மையப் பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்படுகிறது. அவ்வேளைகளில் வெளிப்படும் வெளிச்சம் சூரியனின் விளிம்புகளிலிருந்து மட்டுமே வருகிறது. இதை ஒரு சிறிய சோதனை மூலமாகப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு 50 பைசா நாணயத்தை வைக்கவும். 50 பைசா நாணயத்தின் எல்லையில் ஒரு ரூபாய் நாணயத்தின் விளிம்புகள் தெரியும். ஒரு ரூபாய் நாணயத்தின் மையம் 50 பைசா நாணயத்தால் மறைக்கப்படுகிறது. அது போலவே சூரியனின் மையப்பகுதி நிலவினால் மறைக்கப்பட்டு நிலவின் வட்டு (Disc) எல்லையிலிருந்து மட்டுமே சூரிய வெளிச்சம் வெளிப்படும். இந்த நிகழ்ச்சி வளைய கிரகணம் அல்லது கங்கண கிரகணம் (Annular) எனப்படுகிறது. இத்தகைய கிரகணத்தையும் நிலவின் நிழல் விழும் புவியின் பரப்பில் வசிக்கும் மக்கள் மட்டுமே காண இயலும்.

கலப்பு கிரகணம் (Hybrid Eclipse)

உலகின் ஒரு பகுதியில் முழுக் கிரகணமாகவும், உலகின் வேறு சில பகுதிகளில் வளைய சூரிய கிரகணமாகவும் காட்சியளிப்பது கலப்பு கிரகணம் ஆகும்.

பொதுவாக சூரிய கிரகணம் ஓர் ஆண்டில் இரண்டு முதல் நான்கு முறை நிகழக்கூடும். சில ஆண்டுகளில் அரிதாக ஐந்து முறை நிகழலாம். சூரிய கிரகணத்தை நமது கண்களால் நேரடியாகப் பார்க்கக் கூடாது. ஏனெனில் சூரிய ஒளி நம் கண்ணுக்குக் கேடு விளைவிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.