தலைமையகம் அமைய தாராளமாக உதவுவீர்

தலைமையகம் அமைய தாராளமாக உதவுவீர்

மாநபி (ஸல்) அவர்களை மக்காவை விட்டும் இறை மறுப்பாளர்கள் துரத்தியடித்தனர். அதனால் நாடு துறந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தஞ்சம் அடைந்தார்கள். மதீனாவுக்கு வந்த மாத்திரத்தில் அவர்கள் செய்த தலையாய பணி, ஒரு பள்ளிவாசலை நிறுவியது தான். அதுவும் சொந்தப் பணத்தில் பள்ளியை நிறுவினார்கள்.

இந்தப் பள்ளி தான் ஐவேளையும் அல்லாஹ்வைத் தொழுகின்ற ஆலயமாக, மார்க்கப் பிரச்சாரம் செய்கின்ற மையமாக சட்டமியற்றும் சட்டமன்றமாக, நீதி வழங்கும் நீதிமன்றமாக, குற்றவியல் தண்டனையை நிறைவேற்றும் கூடாரமாக, கைதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக, படையனுப்பும் இராணுவத் தளமாக, பாடம் பயிற்றுவிக்கின்ற பள்ளிக்கூடமாக, தான தர்மங்களை வழங்குகின்ற தர்மச் சத்திரமாக – மொத்தத்தில் ஒரு தலைமைச் செயலகமாகச் செயல்பட்டது.

இந்தப் பள்ளிவாசல் தான் மக்காவை, இதர அரபிய அந்நியத் தலைநகரங்களை வெற்றி கொள்கின்ற வியூகக் களமாகவும், வீர நிலமாகவும் போர் பயிற்சிப் பாசறையாகவும் திகழ்ந்தது. உலகமெல்லாம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு ஓர் ஒலி-ஒளிபரப்பு நிலையமாகச் செயல்பட்டது.

இன்று அல்லாஹ்வின் கிருபையால் நமது ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகம், ஆட்சியதிகாரம் தவிரவுள்ள அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒரு தலைமைச் செயலகமாகச் செயல்படுகின்றது.

இந்தத் தலைமையகத்திலிருந்து ரமளான் மாதம் முழுவதும் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ஆற்றப்படுகின்ற சொற்பொழிவுகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகி இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களால் பார்க்கப்படுகின்றது. பெயரளவுக்கு முஸ்லிமாக வாழும் மக்களிடமும், முஸ்லிமல்லாத பிற மத மக்களிடமும் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெயரளவு முஸ்லிம்கள் உண்மையான மார்க்கத்தை, ஏகத்துவக் கொள்கையை அறிந்து ஏற்றுக் கொள்வதற்கும், முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை அறிந்து அலையலையாக ஏற்றுக் கொள்வதற்கும் தொலைக்காட்சிப் பிரச்சாரம் தக்க சாதனமாக அமைகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4831

இந்த நன்மைகள் பன்மடங்காகப் பெருகுவதற்குத் தலைமையகம் தான் காரணமாக அமைகின்றது.

கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகள், பிரிவினை அளவுக்குச் செல்லும் நிலையில் தீர்வுக்காகவும் தீர்ப்புக்காகவும் இங்கு வருகின்றன. பல தம்பதியர்களின் மனங்களை ஒன்றிணைக்கும் ஓர் இணைப்புப் பாலமாகவும் தலைமையகம் செயலாற்றுகின்றது. மக்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தும் சமரசக் கோட்டையாகவும் நீதிமன்றமாகவும் இது திகழ்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களின், அநீதியிழைக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாகவும் இந்தத் தலைமையகம் ஒலிக்கின்றது.

கோடிக்கணக்கில் ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து ஏழைகளுக்கு இந்த ஜமாஅத் வினியோகிக்கின்றது. ஹஜ் பெருநாளின் போது குர்பானி இறைச்சி வினியோகம் செய்கின்றது.

சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரணங்கள் வழங்குகின்றது.

அனாதைகளை ஆதரிக்கின்ற, ஆதரவற்ற முதியோரைப் பாதுகாக்கின்ற அறப்பணியை இந்தத் தலைமையகம் செய்கின்றது.

ஆபத்து, அவசர சிகிச்சைகளுக்காக இரத்த தானம் அளிப்பது, இரத்த தான முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்வது போன்றவற்றில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தில் முதன்மையாகத் திகழ்வதற்கு இந்தத் தலைமையகம் தான் காரணம்.

இப்படி வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் செயல்படுத்துகின்ற ஒரு தலைமைச் செயலகமாக இது இயங்குகின்றது.

அனைத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் பள்ளியாகவும், ஏகத்துவத்தை நிலைநிறுத்துகின்ற மையமாகவும் செயல்படுகின்றது.

அனைத்து நன்மைகளின் அடித்தளமாக, ஆணி வேராகச் செயல்படுகின்ற இந்தத் தலைமையகம் ஒரு வாடகைக் கட்டடத்தில் செயல்படுகின்றது. இதற்கான மாத வாடகை மட்டும் அறுபதாயிரம் ரூபாய்.

ஒவ்வொரு கொள்கைவாதிக்கும் ஏகத்துவக் கொள்கை என்பது தன்னுடைய உயிரினும் மேலாக இருக்குமானால் இந்தத் தவ்ஹீது மையம் சொந்தக் கட்டடத்தில் அமைவதற்காகத் தங்கள் பொருளாதாரத்தை அள்ளி வழங்க வேண்டும்.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:24

இந்த வசனத்தில் அல்லாஹ் சொன்னது போன்று நபித்தோழர்கள் அன்று தங்கள் உயிரை இந்த மார்க்கத்திற்காக அர்ப்பணித்தனர். உடைமைகளை, பொருளாதாரத்தை அர்ப்பணித்தனர்.

இன்றைக்கு நமது உயிரை அர்ப்பணிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டால் அதற்காகவும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு தற்போது நமது நாட்டில் இல்லை.

இருக்கின்ற வாய்ப்பு பொருளாதாரத்தை அர்ப்பணிப்பது தான். அந்த அர்ப்பணத்தை நாம் செய்து, தவ்ஹீதுக்கு மையமான தலைமையகம் அமைய அள்ளி வழங்குவோமாக! பன்மடங்காகப் பெருகும் அந்தப் பயன்களைப் பெறுவோமாக!

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:261