பூமிக்கு உகந்தது புதைப்பதே!

பூமிக்கு உகந்தது புதைப்பதே!

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

“என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற் காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்”

“உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்” (எனவும் அவர் கூறினார்)

(இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நஷ்டமடைந்தவனாக ஆகி விட்டான்.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்தி ருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.

அல்குர்ஆன் 5:27-31

அல்லாஹ் கூறும் இந்தச் சுவையான சம்பவம் உலகில் நடந்த முதல் கொலையை விவரிக்கும் அதே வேளையில், ஒருவர் இறந்து விட்டால் அவரைப் புதைக்க வேண்டும் என்ற முன் மாதிரியை அல்லாஹ்வின் இயற்கை வேதமான திருக்குர்ஆன் மனித குலத்திற்குக் கற்றுக் கொடுக்கின்றது.

உலகில் வாழும் 100 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த நடைமுறையைத் தான் கையாள்கின்றனர். பூமியில் புதைக்கும் இந்த முறை தான் இயற்கைக்கு உகந்ததாகும்.

“இறந்த பின் சடலத்தை எரிப்பதற்குப் பதிலாக, சுற்றுப்புறச் சூழலுக்கு உதவும் விதத்தில் அதைப் பூமியில் ஒரு மரத்திற்கு அடியில் புதையுங்கள். மண்ணில் கலந்து சிதிலமாகும் உடல் அந்த மரத்திற்குச் சத்துக்களை வழங்கும். அந்த மரம் அதைப் பல ஆண்டுகளுக்கு, கார்பன் டை ஆக்ஸைடை உயிர் காக்கும் ஆக்ஸிஜனாக மாற்றித் தருகின்றது. (மனித இனம் மட்டுமல்ல! உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குவதும் விநியோகிப்பதும் தாவர இனம் தான்.) கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றித் தரும் இந்த அற்புதமான ஒரு செயலைச் செய்யாமல், இறந்த உடலைப் புதைக்காமல், கார்பன்டை ஆக்ஸைடை அதிகப்படுத்தி விடும் நெருப்புக்குள் நம்முடைய உடலை எரிய விடுவது வெட்கக் கேடாகும்” என்று கூறுகிறார், இனப்பெருக்க உயிரியல் துறை நிபுணர் பேராசிரியர் ரோஜர் ஹார்ட் என்பவர்.

ஆஸ்திரேலியாவில் 850 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒரு சடலம் எரிக்கப்படுகிறது. சுமார் 90 நிமிடங்களுக்கு எரியும் இந்த நெருப்பினில் 50 கிலோ கார்பன்டை ஆக்ஸைட் வெளியாகின்றது. சடலத் துடன் எரிந்த எரிபொருள் மற்றும் மரக்கட்டைகள் மூலம் வெளியான கார்பன் டை ஆக்ஸைடின் மதிப்பு இந்தக் கணக்கில் சேர்க்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

சடலங்களை எரிப்பது பூமியைச் சுற்றி உள்ள பசுமைக் குடிலுக்கு மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய காரியமாகும் என்று அவர் தெரிவிக்கிறார்.

ஒருவர் இறந்ததும் தன்னுடைய உடலை மண்ணோடு மண்ணாகக் கரையும் வகையில் தானம் செய்வது, அதாவது மண்ணில் அடக்கம் செய்வது வன வளத்தைக் காக்கும் சிறந்த பணியாகும் என்று அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

“Cremation unwise idea” says scientist “எரிப்பது புத்திசாலித் தனமான காரியமல்ல” விஞ்ஞானி சொல்கிறார் – என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகள் ஹிந்து நாளேட்டில் 19.04.2007 அன்று வெளியான செய்தியாகும்.

இந்த விஞ்ஞானியின் கருத்தை இப்போது கொஞ்சம் அசை போடுவோம்.

உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அதை விட அதிகமான கிறித்தவர்கள் ஆகியோர் தங்கள் சடலங்களை எரிக்க ஆரம்பித்தால் ஏற்கனவே சூடாகிக் கொண்டிருக்கும் பூமியின் வெப்பத்தை அது அதிகரிக்கச் செய்து, உலகம் வெகு சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். ஆனால் திருக்குர்ஆனின் வழி காட்டுதலால் இறந்த மனிதர்களின் சடலங்கள் மண்ணில் புதைக்கப் படுகின்றன.

மண்ணில் கிடந்து சிதிலமாகும் இந்த உடல் மரத்திற்கு உரமாகி சத்துக்களை வழங்கும் என்று அந்த அறிவியல் அறிஞரின் கூற்று மேம்போக்கானதல்ல! அறிவியல் உண்மையாகும்.

வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.

ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது.  இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.

வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன!  இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.

மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன.  அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றில் நைட்ரேட்டுகள் உருவாகின்றன.  கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது.  இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன.

இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.

மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது.  மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங் களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது.  பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது.  இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.

மனிதனால் மரத்துக்குப் பயன்; மரத்தால் மனிதனுக்குப் பயன் என்று மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை இது விளக்குகின்றது. இறந்த உடலை மண்ணில் புதைப்பதன் மூலம் தான் இந்தச் சுழற்சி சாத்தியமாகும். அவ்வாறு புதைப்பது தான் இயற்கையானதாகும். இதையே திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் குறிப்பிடுகின்றது.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப் படுத்துவோம்.

அல்குர்ஆன் 20:55

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

அல்குர்ஆன் 22:5

இந்த வசனங்களின் கருத்து அப்படியே அறிவியல் கண்டு பிடிப்புகளுடன் பொருந்திப் போவதை நாம் பார்க்க முடிகின்றது. மண்ணில் படைக்கப்பட்டவன் மண்ணிலேயே திருப்பப்படுகிறான் என்ற உண்மையையும் இந்த வசனங்கள் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றன.

மனிதனை மண்ணில் புதைப்பது தான் இயற்கையானது என்பதை அல்லாஹ்வின் வசனங்களிலிருந்தும், அறிவியல் உண்மைகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

உலகம் இப்படித் தான் இயங்க வேண்டும் என்ற ஓர் இயற்கை விதியை அல்லாஹ் நிர்ணயித்து உள்ளான். அவனே அதைத் தனது வேதத்தின் மூலம் வழங்கி, இயற்கை விதியையும் வேத விதிகளையும் ஒத்துப் போகச் செய்கிறான். இங்கு இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகத் திகழ்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அத்துடன் நாம் இன்னொரு விளக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மங்கையும் கங்கையும்

மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது? என்று சொல்வார்கள். இமயத்தில் பிறந்த தூய்மையான பளிங்கு போன்ற பனி நீரைக் கொண்ட கங்கை நதி, இன்று எரிக்கப்பட்ட சடலங்களின் சாம்பல்களாலும், சாக்கடைகளாலும் களங்கப்படுகிறது. சடலத்தை எரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மட்டுமல்ல! சுத்தமான தண்ணீரும் மாசுபட்டுப் போகின்றது.

கங்கை மட்டுமல்லாது இந்தியாவில் ஓடும் அத்தனை ஜீவ, பருவ நதிகளும் இப்படி மாசுபட்டு விட்டன.

நர சாம்பலால் நாறிப் போன தண்ணீர் தான் இன்று குடிநீராக, கோடான கோடி மக்களால் பருகப்படுகிறது. இதுவெல்லாம் ஏன்? இயற்கை மார்க்கமான, இறை மார்க்கமான இஸ்லாத்தை விட்டு விட்டு மனிதர்கள் தாங்களாக உருவாக்கிக் கொண்ட செயற்கை மார்க்கங்களை பின்பற்றுவதால் தான்.

இவற்றைச் சிந்தித்துப் பார்த்து, இஸ்லாத்தின் பக்கம் மக்கள் அனைவரும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை!