பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்

பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்

முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி!

பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி!

ஊழலற்ற அரசு! உன்னத நாடு!

இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. 2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக செய்த சூழ்ச்சிகள் பலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்தமுறை அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, தனது ஆசான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சேர்ந்து களத்தில் இறங்கியது.

மோடியின் உயிருக்கு ஆபத்து, இந்தியன் முஜாஹிதீன் சதித் திட்டம் என்று உளவுத்துறை தன் பங்குக்கு மோடிக்கு அனுபதாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

மோடி நடத்தும் கூட்டங்களில் மாலேகான், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பாணியில் சங்பரிவார் குண்டுவெடிப்புகளை நடத்தி, மக்கள் கவனத்தை மோடியின் பக்கம் திருப்பி விட்டது.

ஊடகத்துறை மோடியின் பிம்பத்தை பலமுனை பரிமாணங்களில் பிரம்மாண்டமாக்கிக் காட்டியது.

உண்மையில் பல்வேறு துறைகளில் புள்ளி விபரங்களின் அடிப்படையில் குஜராத், தமிழ்நாட்டை விடவும் கேரளாவை விடவும் மகாராஷ்ட்ராவை விடவும் பின்தங்கிய நிலையில் 9வது,10வது இடத்தில் தான் உள்ளது. எனவே குஜராத் முன்மாதிரி, முன்னோடி என்பதெல்லாம் பக்கா மோசடியாகும்.

ஊழலை ஒழிப்பதில் உத்தமபுத்திரன் மோடி என்பதும் கடைந்தெடுத்த பொய்யே! காரணம், ஊழல் பெருச்சாளியான எடியூரப்பாவையெல்லாம் மோடி தன் வலையில் இழுத்துப் போட்டுக் கொண்டதன் மூலம் இந்தப் பொய் அம்பலமானது. ஆனால் இதையெல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் காசுக்கு விலை போயின. மோடியை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ். மிகவும் நுட்பமாகச் செயல்பட்டது.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த நரேந்திர மோடி, தனது அடியாள் அமீத்ஷாவை உத்தரபிரதேசத்தில் களமிறக்கி, கைவரிசையைக் காட்டினார். இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் கற்பழிப்பது போன்ற பொய்யான வீடியோக்களை உ.பி.யில் பரவ விட்டதன் எதிரொலியாக, அதுவரை இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மற்றும் ஜாட் இன மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டது.

உ.பி. அரசாங்கத்தை மட்டுமல்லாது, மத்தியிலும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்த உ.பி. முஸ்லிம்கள் மற்றும் ஜாட் இன மக்கள் திட்டமிட்டு வன்முறைக் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். கலவரம், வன்முறை வெடித்தது. முஸஃப்பர் நகர் முஸ்லிம்கள், ஜாட் இனத்தவரால் துவைத்து எடுக்கப்பட்டனர்; கொன்று குவிக்கப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சொந்த வீடுகளை விட்டும் விரட்டியடிக்கப்பட்டனர். சொந்த நாட்டிலேயே ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் அகதிகளான சோகமும் நிகழ்ந்தது.

மவ்லானா முலாயம் என்று அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், முஸ்லிம்களின் முதுகில் குத்தினார். கொலைகாரக் கும்பல் மீது ஒரு கொலை வழக்குக் கூட பதிவு செய்யாமல் ஜாட் இன மக்களை ஜாக்கிரதையாகக் காப்பாற்றி விட்டார். இதன் எதிர்விளைவு, நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யிலுள்ள 80 இடங்களில் 73 இடங்களை பாஜக அறுவடை செய்தது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.

இப்போது முஸ்லிம்கள் அச்ச உணர்ச்சியிலும், அபயமற்ற மனநிலையிலும் இருக்கின்றனர். இப்படியொரு தேர்தல் முடிவு வந்துவிடக்கூடாது என முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இறைவனை இருகரம் ஏந்தி இறைஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக நரேந்திர மோடி ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

இப்போது முஸ்லிம்கள் இந்த இறை விதியை சகித்துக் கொண்டாக வேண்டும். இறை நாட்டத்தின் முடிவு என்ன என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்; பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

மோடியின் ஆட்சியில் கீழ்க்கண்ட விஷயங்கள் நடக்கலாம்.

  1. எல்லாம் வல்ல அல்லாஹ் உள்ளங்களைப் புரட்டுகின்ற ஆற்றல் உள்ளவன். இத்தனை சிரமப்பட்டு ஆட்சியைப் பிடித்து விட்டோம்; அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் முஸ்லிம்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்று மோடியின் உள்ளத்தில் சிந்தனையை ஏற்டுத்தினால் அதன் மூலம் முஸ்லிம்களிடம் ஓர் இணக்கமான போக்கைக் கைக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கள் இந்துத்துவக் கொள்கையில் சமரசம் செய்து அதை நீர்த்துப் போகச் செய்யலாம்.
  2. ஒருவேளை மோடியோ அல்லது அவரது சங்பரிவாரோ முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இஸ்லாம் காட்டுத்தீயாகப் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கும்.
  3. எல்லாம் வல்ல அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன். தரையில் வைத்து ஒருவனின் கதையை முடிக்காமல் உச்சிக்குக் கொண்டு போய் உருட்டி விடுவது போல், மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்து ஒரேயடியாக உருட்டிவிடலாம்.

என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கருதுபவனையும் விட்டு விடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப் பிடிப்போம். அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். எனது சூழ்ச்சி உறுதியானது.

அல்குர்ஆன் 68:44, 45

இந்த வசனத்தில் கூறுவது போன்று அல்லாஹ் விட்டுப் பிடிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்என்று கூறிவிட்டு, பிறகு, “அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தருவது; கடினமானதுஎனும் (12:102வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

நூல்: புகாரி 4686

ஒரேயடியாக மோடியையும் அவரது பரிவாரத்தையும் ஓய்ப்பதற்கு அல்லாஹ் அளித்திருக்கும் அவகாசமாக இந்த ஆட்சியதிகாரத்தை வழங்கியிருக்கலாம். இவற்றில் எதை அல்லாஹ் நிகழ்த்தப் போகின்றான் என்பதை நாம் அறிய மாட்டோம். அவனே அறிவான். அதனால் நாம் இதற்காகக் கலக்கமோ, கலவரமோ, கவலையோ அடையத் தேவையில்லை. பாஜக ஆட்சி படைத்தவனின் சூழ்ச்சியே என்று எண்ணி அவனது இறுதி முடிவுக்காகக் காத்திருப்போமாக!