பைபிள் இறை வேதமா?

பைபிள் இறை வேதமா?

அருள்மிகு ரமளான் மாதத்தில் தான் புனிதமிகு அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே இம்மாத ஏகத்துவம், திருக்குர்ஆன் மலராக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றது.

ஒரு வேதம் என்றால் அதற்கென்று சில அடிப்படை இலக்கணங்கள் இருக்க வேண்டும்; வரையறைகளை அது கொண்டிருக்க வேண்டும். அவை என்ன?

  1. அதில் முரண்பாடு இருக்கக் கூடாது.
  2. அது கூறும் முன்னறிவிப்புக்கள் பொய்க்கக் கூடாது; மெய்க்க வேண்டும்.
  3. தான் ஒரு இறைவேதம் என்பதற்கான சான்றுகளை, அற்புதங்களை அது தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.
  4. அந்த வேதம் கூறும் கருத்துக்கள் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரண்படக் கூடாது.

இது போன்ற அடிப்படை இலக்கணங்களுக்கு உட்படவில்லை என்றால் அது புனித வேதமல்ல! மனித வேதம்! அது மனிதக் கைப்பட்டது; கறை பட்டது. மனிதக் கற்பனை; கைச்சரக்கு!

கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அஹ்மத் தீதாத் அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், சட்டம், சாட்சியம் அடிப்படையில் மனிதன் அமைத்திருக்கும் நீதிமன்றங்களில் இரண்டு நிமிடங்களுக்கு – நூற்று இருபது வினாடிகளுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத – தள்ளுபடி செய்யப்பட வேண்டிய குப்பையாகும்.

அல்லாஹ், மனித குலத்திற்கு அருளிய அல்குர்ஆன், மேலே நாம் கண்ட இலக்கணங்களைத் தன்னகமாகக் கொண்டு நிற்கின்ற, நீடிக்கின்ற இறுதி வேதமாகும்.

வேதம் என்றால் அதற்கு மேற்கண்ட அம்சங்கள் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்ததே திருக்குர்ஆன் தான். இதைத் தான் திருக்குர்ஆன் ரத்தினச் சுருக்கமாகப் பறைசாற்றுகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

அத்துடன் மட்டும் நில்லாமல், தான் ஓர் இறையாண்மை மிக்க வேதம்; தன்னுடன் யார் வேண்டுமானாலும் மோதிப் பார்க்கலாம் என்று சவால் விட்டது.

இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியேஎன்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:88

இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 11:13

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:23

இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 10:38

இந்த வசனங்களில் முதலில், தன்னைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டு வர முடியுமா? என்று திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கின்றது. அதன் பின்னர் பத்து அத்தியாயங்களையாவது கொண்டு வர முடியுமா? என்று கேட்கின்றது. இவ்வாறு படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வந்து, ஒரேயொரு அத்தியாயத்தையேனும் கொண்டு வர முடியுமா? என்று அறைகூவல் விடுக்கின்றது. இதற்குப் பிறகும் ஒரு கொம்பனும் இந்தக் குர்ஆனுக்குப் பதில் சொல்ல முன்வரவில்லை.

என்னை வீழ்த்த யாரேனும் இந்த மண்ணில் உண்டா? என்று கோட்டை மீது நின்று கொண்டு ஒரு மாவீரன் கர்ஜிப்பது போல் இந்த அல்குர்ஆன் அறைகூவல் விடுக்கின்றது. திருக்குர்ஆன் விடுக்கின்ற இந்த அறைகூவலுக்கு, அது வானிலிருந்து இறங்கிய நாள் முதல் இன்று வரை – சந்திர மண்டலத்தில் கொடியேற்றதுடன் நில்லாமல் அங்கு குடியேற்றம் காணவும் துடிக்கின்ற இந்த அறிவியல் யுக மனிதன் பதில் சொல்ல முடியவில்லை; இறுதி நாள் வரை பதில் சொல்லவும் முடியாது. காரணம் இது இறை வேதம். அத்துடன் அது இறுதி வேதமுமாகும். மனிதக் கை படாத அளவுக்கு அதை அல்லாஹ் பாதுகாத்தும் விட்டான்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

இந்த வேதத்தை அல்லாஹ் எப்படிப் பாதுகாக்கிறான்? அதையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 29:49

இந்த அறிவிப்பையும் மீறி யாராவது கை வைத்தால் என்ன ஆகும்? வேறு யாரும் கை வைக்க வேண்டியதில்லை. இந்த வேதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்த அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே கை வைத்து விட்டால் – அவர் சுயமாக எதையேனும் இட்டுக்கட்டி, புனைந்து இந்த வேதத்துடன் சேர்த்துச் சொல்லி விட்டால் – அதற்குரிய தண்டனை என்ன?

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.

அல்குர்ஆன் 69:44-47

தனது வேதத்தில் யாரும் கை வைக்க முடியாது என்பதற்கு அல்லாஹ் வழங்கும் பாதுகாப்புக் கவசமாகும்.

இது வரை யாரும் இந்த அறைகூவலை, சவாலைச் சந்திக்க முன்வராதது, இந்த வேதத்தில் மனிதக் கை படாமல் இறைவனின் வாக்குப்படி பாதுகாக்கப்படுவது இவையெல்லாம் நமது ஈமானை மேலும் வலுப்படுத்துகின்றது. நமது இறை நம்பிக்கையை மேலும் மேலும் வளர்க்கின்றது.

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள். ஒன்றின் அருமையை மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். திருக்குர்ஆன் எனும் இந்த இறுதி வேதத்தின் அருமையை, அற்புதத்தை – கிறித்தவர்கள் தங்கள் வேதம் என்று கூறும் பைபிளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது திருக்குர்ஆனின் அருமை நமக்குத் துல்லியமாகத் தெரிகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

இந்த வசனத்தின்படி பைபிளில் மலிந்து கிடக்கும் முரண்பாடுகள், அது இறை வேதமல்ல, மனித வேதம் தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன. அதே போன்று திருக்குர்ஆன், முரண்பாடுகள் ஏதுமில்லாத அல்லாஹ்வின் புனித வார்த்தைகள் என்பதை நிரூபித்து நிற்கின்றது.

இது ஒரு வேதத்திற்கு இருக்க வேண்டிய ஓர் அடிப்படையான முக்கிய, முதல் தகுதியாகும். இந்த முக்கியமான அடிப்படைத் தகுதியை இழந்து விட்ட பைபிள் மனிதச் சொல் தான் என்பதை விளக்குவதே இம்மாத ஏகத்துவ இதழின் சத்தும் சாறுமாகும்.

அஹ்மத் தீதாத்

மனிதக் கை படிந்து விட்டால் அது ஒரு மலிவுச் சரக்கு, கேலிக்கூத்து பரிகாசப் பொருள் என்பதை, கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

அஹ்மத் தீதாத் அவர்கள் கிறித்தவ அழைப்பாளர்களின் அடுக்கடுக்கான தாக்குதலுக்கு உள்ளானவர்; அலைக்கழிப்புக்கு ஆளானவர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அஹ்மத் தீதாத், 1939ல் தென்னாப்பிரிக்காவில் ஆடம் மிஷன் என்ற பகுதியில் ஒரு கடையில் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு அருகில் கிறித்தவப் பாதிரிகளின் பயிற்சிக் கல்லூரி அமந்திருந்தது.

இங்கு பயில்கின்ற பாதிரிப் பயிற்சியாளர்கள், அஹ்மத் தீதாதைக் குடைந்து தள்ளினர்; கோட்டமெடுத்தனர். குறிப்பாக, நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் பற்றி தீதாதிடம் குறிவைத்துத் தாக்கினர்.

கூனிக் குறுகிப் போன தீதாத், பல இரவுகளைத் தூக்கமின்றிக் கழித்தார். பதிலளிக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுதார். இவ்வாறு கண்ணீர் கடலில் தத்தளித்த, இருபது வயது இளைஞரான தீதாதுக்கு ஒரு மரக்கலமாக, கலங்கரை விளக்கமாக “இன்ஹாருல் ஹக்’ என்ற நூல் கிடைக்கின்றது. சத்திய வெளிப்பாடு என்பது இதன் பொருள்.

இந்நூலை எழுதிய அறிஞர் ரஹ்மத்துல்லாஹ் அல்ஹின்தி அவர்கள் பைபிளைக் கரைத்துக் குடித்த ஒரு பண்டிதர்! அதை அக்கு வேறு, ஆணி வேறாக அலசி, கிறித்தவ துதிக் கோட்டைகளை சுக்கு நூறாக உடைத்தெறிந்தவர்.

இந்த அறிஞரின் ஆழ்ந்த, அறிவுமிக்க வாதங்கள், ஒரு சிறந்த கேடயமாக, கவசமாக மட்டுமில்லாமல் வாளாகவும் தீதாதின் கைகளில் கிடைக்கின்றது. இதன் பிறகு கடைப் பணியை விட்டு விட்டு, அழைப்புப் பணியை மேற்கொள்ளத் துவங்கினார். கிறித்தவ உலகின் சிம்ம சொப்பனமாக மாறினார். கிறித்தவ உலகம் தீதாதைக் கண்டு நடுங்கும் அளவுக்கு அவரது வாள் சுழன்றது. அன்னாரது உயிர் பிரிகின்ற வரை அவரது வாதப் போர் எனும் வாட் போர் தொடர்ந்தது. பல்வேறு விவாதக் களங்களில் கிறித்தவ தூதுக் குழுவினரின் வாதங்களைப் பிசுபிசுக்க வைத்தார்.

பைபிளின் மூல மொழி, வழக்கும் வாழ்வும் இழந்த ஹிப்ரு மொழியாக இருந்தாலும், அதன் மூல மொழி ஆங்கிலம் தான் என்று சொல்லும் அளவுக்கு பைபிள் ஆங்கிலத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனால் ஆங்கிலேய கிறித்தவப் பாதிரிமார்கள் பைபிளின் ஆங்கிலப் பதிப்புகளில் அத்துமீறி விளையாடி உள்ளனர். அவர்களின் திருவிளையாடல்களை அஹ்மத் தீதாத் மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார். அது ஓர் இறை வேதமல்ல என்பதைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்.

இவ்வகையில் அவர் கிறித்தவப் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிரான ஆவணங்களையும் ஆயுதங்களையும் உலக இஸ்லாமிய சமுதாயத்திற்கு அளித்திருக்கின்றார். இதற்கு இஸ்லாமிய சமுதாயம் நன்றிக் கடன் பட்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

அறிஞர் தீதாதின், ”Is all of the Bible God’s word?” பைபிளிள் உள்ள அனைத்தும் இறை வேதமா? என்ற ஆங்கில நூலாக்கத்தின் மிக மிக முக்கிய அம்சங்களை, நேரடி மொழிபெயர்ப்பாக அல்லாமல், கருத்தாக்கமாக இவ்விதழ் உங்களுக்கு வழங்குகின்றது.

”What was the Sign of Jonah?” ”ஜோனாவின் (யூனுஸ் நபியின்) அற்புதம் என்ன ”Crucifiction or Cruci Fiction?” ஏசு சிலுவையில் அறையப்பட்டது உண்மையா? கற்பனையா?,?” ”Resurrection of Resuscitation?” ஏசு மரித்து வந்தாரா? மறுபடியும் வந்தாரா? என்ற நூல்களின் ஆக்கங்களையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் தரவுள்ளோம்.

இந்த ஆய்வுகளை நாம் வாசிக்கும் போது, மனித குலத்துக்கு அருளப்பட்ட இறுதி வேதமான அல்குர்ஆன் ஓர் அதி அற்புத வேதம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கிறித்தவ மக்களை சத்தியத்தின் பக்கம் அழைக்கும் ஆவணமாக, நம்மை வேட்டையாட வரும் கிறித்தவ அழைப்பாளர்களுக்கு எதிரான ஆயுதமாக இதை ஆக்கிக் கொள்வோம். உண்மையான வேதமாகிய திருக்குர்ஆன் கூறும் மறுமை வாழ்வுக்காக நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக!