தொடர்: 6 தொழுகையின் சிறப்புகள்
வரிசையை சீராக்குவதன் சிறப்புகள்
அப்துந் நாசிர், கடையநல்லூர்
வரிசைக்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவம்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள். (நூல்: புகாரி 719)
இந்தச் செய்தியில் நபியவர்கள் முதுகுக்குப் பின்புறமாகவும் பார்க்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ளது. சில வழிகேடர்கள் இந்த ஹதீஸைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவதற்காக தவறான பொருளில் பயன்படுத்தி வருகின்றனர்.
முதுகுக்குப் பின்புறமாக உள்ளவற்றை நபியவர்கள் பார்க்கிறார்கள் என்பதன் சரியான பொருள், நபியவர்கள் ருகூவு செய்யும் போது, சுஜூது செய்யும் போது பின்புறம் நிற்பவர்களின் மீது படுகின்ற பார்வையைத் தான் குறிப்பிடுகின்றார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் “எனக்குப் பின்புறமாக‘ அல்லது “என் முதுகுக்குப் பின்புறமாக‘ நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 742, 6644
பொதுவாகத் தொழுகையில் ருகூவு அல்லது ஸஜ்தா செய்யும் போது முன்னால் இருப்பவருக்குப் பின்னால் உள்ள வரிசை தெரியத் தான் செய்யும். எனவே தான், நீங்கள் வரிசையைச் சரி செய்யாவிட்டால் ருகூவின் போது பின்புறம் நான் பார்த்து விடுவேன் என்று சாதாரண அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதை இப்படி அனர்த்தம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
ஒரு வாதத்திற்கு, பின்னால் உள்ளதைப் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வைத்துக் கொண்டாலும் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காண்பித்துக் கொடுக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உள்ளமும் நோக்கமும் ஒன்றுபடுகிறது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல்: புகாரி (717)
“நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் அல்அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம் (739)
தொழுகை வரிசையை சீராக ஆக்குவதன் மூலம் அல்லாஹ் தொழுகையாளிகளின் உள்ளங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறான். இது தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமாகும்.
அதே நேரத்தில் வரிசையில் சீர்குலைவு ஏற்படுமென்றால் அதுவே உள்ளப் பிரிவினைகளுக்கும் காரணமாகிவிடும். எனவே வரிசையை சீர் செய்த பின்பே தொழுகையை ஆரம்பம் செய்ய வேண்டும்.
வரிசை சீர்பெற்றாலே தொழுகை முழுமை பெறும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (741)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (723)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (722)
இணைந்து நிற்க வேண்டும்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று கூறினார்கள். (ஆகவே) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள்.
நூல்: புகாரி (725)
இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒருவரது பாதங்களுடன் மற்றவரின் பாதங்களைச் சேர்த்துக் கொண்டு நிற்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இது குறித்து அபூதாவூதிலும் இன்னும் சில நூல்களிலும் இடம் பெற்ற ஹதீஸில் எங்களில் ஒருவர் தமது தோள் புஜத்தை தம் அருகில் இருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது முட்டுக்காலை தம் அருகில் இருப்பவரின் முட்டுக்கால்களுடனும் தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஹதீஸ்களில் மூன்று விஷயங்கள் கூறப்படுகின்றன.
அருகில் இருப்பவரின் பாதத்துடன் தனது பாதத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பது
அருகில் இருப்பவரின் முட்டுக்காலுடன் தனது முட்டுக்காலைச் சேர்த்துக் கொண்டு நிற்பது
அருகில் இருப்பவரின் தோள் புஜத்துடன் தனது தோள் புஜத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பது.
இந்த ஹதீஸை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டு செயல்படுத்துவதாக இருந்தால் இதில் கூறப்படும் மூன்றையும் செயல்படுத்த வேண்டும். அருகில் இருப்பவரின் முட்டுக்காலுடன் தனது முட்டுக்காலைச் சேர்த்துக் கொண்டு யாராலும் நிற்க முடியாது.
அது போல் தோள் புஜத்துடன் தோள்புஜத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பதும் சாத்தியாமாகாது. அனைத்து மனிதர்களும் சமமான உயரம் உடையவர்களாக இருந்தால் தான் ஒருவரது தோள் புஜத்துடன் மற்றவரின் தோள்புஜம் சேரும் வகையில் நிற்க முடியும். இல்லாவிட்டால் ஏற்ற இறக்கமாகத் தான் நிற்க முடியும்.
ஆனால் தோள், முட்டுக்கால், பாதம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எது சேரவே முடியாதோ அது சேர்ந்ததாகக் கூறப்பட்டால் இது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது. இதற்கு வேறு அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.
வரிசையில் நிற்கும் போது ஒருவர் முன்னால் தள்ளிக் கொண்டும் இன்னொருவர் பின்னால் தள்ளிக் கொண்டும் நின்றால் வரிசை நேராக அமையாது. ஒரே நேர் கோட்டில் நின்றால் தான் வரிசை சீராக அமையும். அவ்வாறு நேர் கோட்டில் நிற்கும் போது இருவரது தோள் புஜங்களும் இருவரது முட்டுக்கால்களும், இருவரது பாதங்களும் ஒரு நேர் கோட்டில் அமையும்.
ஒரு நேர் கோட்டில் அமைந்ததைத் தான் அறிவிப்பாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டால் இது நடைமுறைப்படுத்த சாத்தியமானது. அறிவிப்பாளர் குறிப்பிகின்றபடி நடந்திருக்கும் என்று நம்ப முடியும்.
ஒன்றுடன் ஒன்று ஒட்ட வேண்டும் என்று பொருள் கொண்டால் இந்த ஹதீஸ் நடக்க முடியாததைக் கூறுவதாக அமைந்து விடும். மேலும் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிசையைச் சீராக்குங்கள் என்று கூறியவுடன் நபித்தோழர்கள் அதற்கு செயல் வடிவம் கொடுத்தது பற்றித் தான் இது குறிப்பிடுகிறது. வரிசையை நேராக்குங்கள் என்ற கட்டளையை நேர் கோட்டில் நிற்க வேண்டும் என்று தான் யாரும் புரிந்து கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு என்ன அர்த்தமோ அதைத் தான் நபிதோழர்கள் செயல்படுத்தி இருக்க முடியும். இதன் படி பார்த்தாலும் நேர் கோட்டில் நின்றதைத் தான் இப்படி நபித்தோழர் குறிப்பிட்டுள்ளார் என்பது உறுதியாகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈட்டியை நேராக்குவது போல் வரிசையை நேராக்குவார்கள். நாங்கள் இதைப் புரிந்து கொள்ளும் வரை வரிசையச் சரியாக்குவார்கள். பின்னர் ஒரு நாள் வந்து தக்பீர் சொல்லத் தயாரான போது ஒரு மனிதர் நெஞ்சைத் தள்ளிக் கொண்டு நின்ற போது வரிசையைச் சீராக்குங்கள் என்று குறிப்பிட்டார்கள். (நூல்: முஸ்லிம்)
நெஞ்சைத் தள்ளிக் கொண்டு நிற்கும் போது அவர்கள் வரிசையை நேராக்குங்கள் என்று கூறியதில் இருந்தும் நேராக்குதல் என்பதன் பொருளை அறியலாம். இதை ஏற்காமல் ஒன்றுடன் ஒன்றைச் சேர்ப்பது என்று பொருள் கொள்வார்களானால் அவர்கள் பாதங்களோடு பாதங்களைச் சேர்ப்பதால் மட்டும் இந்த ஹதீஸைச் செயல்படுத்தியவர்களாக மாட்டார்கள். பாதம், முட்டுக்கால். புஜம் ஆகிய மூன்றையும் அருகில் உள்ளவருடன் இணைத்துக் காட்டி செயல் வடிவம் கொடுத்துக் காட்ட வேண்டும். ஒரு ஹதீஸை ஆதாரமாக எடுக்கும் போது அதில் ஒன்றை ஏற்று இரண்டை விட்டு விடுவது ஹதீஸ்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதாக ஆகாது.
அல்லாஹ்வின் உறவும் பகைமையும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலக்குமார்களின் வரிசையைக் கொண்டு தான் நீங்கள் வரிசையாக நிற்கிறீர்கள். எனவெ தொழுகை வரிசையை நேராக்குங்கள்! இடைவெளிகளை நிரப்புங்கள்! தோள் புஜங்களை நேராக்கிக் கொள்ளுங்கள்!) உங்களின் சகோதரர்களின் கைகளை (பிடித்து அருகில் நிறுத்துவதில்) இதமாக நடந்து கொள்ளுங்கள். ஷைத்தானிற்கு இடைவெளிகளை விடாதீர்கள். யார் வரிசையில் இணைந்து நிற்கிறாரோ அவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். யார் வரிசையைத் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மத் (5724)