நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

அப்துந் நாசிர், கடையநல்லூர்

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும்.

தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமை ஆகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

அல்குர்ஆன் 4:103

ஒருவன் முஸ்லிம் என்பதற்கு மிக முக்கியமான அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 116

இப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டாயக் கடமையான தொழுகையை மனித சமுதாயம் சிரமப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் கடமையாக்கவில்லை. மாறாக தன்னுடைய அடியார்களுக்குத் தனது அளவற்ற அருளை வாரி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.

தொழுகையை முன்னிட்டு ஒரு அடியான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களுக்கும் இறைவன் வழங்கும் நன்மைகளை ஒருவன் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் அளவற்ற அருளை அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாக்கியம் தொழுகையாளிகளுக்கு மட்டும் தான் கிடைக்குமே தவிர தொழுகையை முறையாகப் பேணாதவர்களுக்குக் கிடைக்காது.

தொழுகைக்காக நாம் எத்தனையோ காரியங்களைச் செய்கின்றோம்.  பல் துலக்குதல், உளூச் செய்தல், பள்ளியை நோக்கி நடந்து செல்லுதல், பாங்கிற்குப் பதில் கூறுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல், வரிசையில் நிற்பது, குனிவது, சுஜூது செய்வது போன்ற பல செயல்களைச் செய்கின்றோம்.

இவை ஒவ்வொன்றிற்கும் எப்படிப்பட்ட சிறப்புகள்? எவ்வளவு பாக்கியங்கள்? என்பதை ஒருவன் அறிந்து கொண்டால் தொழுகை என்ற வணக்கம் வாரி வழங்கும் ஒரு வற்றாத ஜீவ நதி என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தொழுகைக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எப்படிப்பட்ட சிறப்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் வாக்களித்துள்ளார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இறைநேசத்தை பெற்றுத் தரும் தூய்மை

தொழுகைக்குத் தயாராவதற்காக ஒருவன் பல் துலக்குகிறான், உலூச் செய்கின்றான்; குளிப்புக் கடமையானவனாக இருந்தால் குளிக்கின்றான். இவை ஒவ்வொன்றுமே தூய்மைக்குரிய காரியங்கள் தான்.

இவை நம்முடைய உடலுக்குத் தூய்மையைத் தருகின்றன. இதன் மூலம் நாம் இவ்வுலகில் அறியாத முடியாத பல நன்மைகளைப் பெறுகின்றோம். ஆனால் இத்துடன் மட்டுமல்லாமல் இறைநேசத்தையும் இந்தத் தூய்மை பெற்றுத் தருகிறது.

திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்எனக் கூறுவீராக!

அல்குர்ஆன்  2:222

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்குர்ஆன் 9:108

ஈமானில் பாதி தூய்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 381

மனத்தூய்மை இல்லாமல் ஒருவன் எந்த நல்லமல்களைச் செய்தாலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது. அது போன்றுதான் ஈமானிற்கு அடுத்து மிக முக்கிய வணக்கமாகிய தொழுகை, உலூ என்ற தூய்மை இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படாது. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தூய்மையை ஈமானில் பாதி என்று குறிப்பிடுகிறார்கள்.

தொழுகை என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுபவர்கள் தான் ஈமானின் முழுமைத் தன்மையை அடைந்து கொள்ள முடியும் என்பதையும் இந்தச் செய்தியிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

பல் துலக்குவதன் சிறப்புகள்

தொழுகைக்காக நாம் உலூச் செய்கின்றோம். இப்படி உலூச் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் பல்துலக்குவது சுன்னத்தாகும்.

பல நோய்களுக்கு மூலமாகத் திகழ்வது நம்முடைய வாய் தான். இதன் காரணமாக ஒவ்வொரு பல் மருத்துவமனையிலும் நாம் நம்முடைய வாயைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விளம்பரம் வைத்துள்ளார்கள்.

அதிகமாகப் பல் துலக்குவதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஒரு தொழுகையாளிக்கு இந்தக் காரியம் இறைவனின் திருப்தியையும் பெற்றுத் தருகிறது என்றால் தொழுகை எப்படிப்பட்ட பாக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல் துலக்குதல் வாய்க்கு நறுமணத்தையும், இறைவனின் திருப்தியையும் பெற்றுத்தருகிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 5

உலூவின் சிறப்புகள் மற்றும் நன்மைகள்

தொழுகையை முறையாக நிறைவேற்றும் ஒருவன் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உலூவை நிறைவேற்றுகின்றான். இந்தச் சிறிய நற்காரியத்தின் மூலம் இவ்வுலகில் பல நன்மைகள் கிடைக்கின்றன. அது மட்டுமில்லாமல் இதற்கு இறைவன் வாரி வழங்கும் ஏராளமான நன்மைகளை அறிந்து கொண்டால்  தொழுகையாளிகளை இறைவன் எந்த அளவிற்கு நேசிக்கின்றான் என்பதையும், தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மறுமை அந்தஸ்தையும் புரிந்து கொள்ளலாம்.

உலூவை முறையாக, பரிபூரணமாக நிறைவேற்றும் தொழுகையாளிகள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

முஃமின்களின் அடையாளம் உலூவைப் பேணுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான்.  முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: அஹ்மத் 22467

உலூவைப் பேணுவதை முஃமின்களின் அடையாளமாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்ள முடியும்.

பாவங்களை அழிக்கும் உலூ

நாம் நம்முடைய உடல் உறுப்புக்கள் மூலம் எத்தனையோ பாவங்களைச் செய்கின்றோம். கண்கள் மூலமாக, கைகள் மூலமாக, கால்கள் மூலமாக நாம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல சிறுபாவங்களைச் செய்கின்றோம்.

செய்த பாவங்களுக்கு நாம் இறைவனிடம் மன்னிப்பு தேடுவதும் இல்லை. செய்த பல பாவங்களை உடனேயே மறந்தும் விடுகின்றோம். இறுதியில் நம்முடைய சிறுபாவங்கள் நம்மிலேயே தேங்கி நம்மை வாட்டும் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன.

ஆனால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் மிகப் பெரும் பாக்கியம் நாம் தொழுகைக்காக செய்யும் உலூவின் மூலமாகவே நாம் உறுப்புக்களால் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கின்ற அற்புத அருளை இறைவன் வழங்கியுள்ளான்.

இது தொழுகை மூலம் நாம் அடையும் மிகப்பெரும் பாக்கியமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு “முஸ்லிமானஅல்லது “முஃமினான‘ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) “நீருடன்அல்லது “நீரின் கடைசித் துளியுடன்முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) “தண்ணீருடன்அல்லது “தண்ணீரின் கடைசித் துளியுடன்வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) “நீரோடுஅல்லது “நீரின் கடைசித் துளியோடுவெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 412

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக உளூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறி விடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்:  உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 413

முன்பாவங்கள் மன்னிக்கப்படுதல்

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (உளூ செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.(பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 159

இரு தொழுகைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிப்பு

உலூச் செய்யும் போதே நம்முடைய பாவங்கள் உடல் உறுப்புகள் வழியாக வழிந்தோடும் தண்ணீருடன் வெளியேறுகிறது என்பதைக் கண்டோம். அது மட்டுமில்லாமல் அழகிய முறையில் உளூச்  செய்தால் ஒவ்வொரு இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் உளூ செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, உளூ செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) உளூ செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை.

அறிவிப்பவர்: ஹூம்ரான் (ரலி)

நூல்: முஸ்லிம் 385

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லைஎன்று சொன்னார்கள். உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று கூறினோம். அப்போது அவர்கள், “ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள உளூவை முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லைஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 390

மறுமையில் ஒளிவீசும் உறுப்புகள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணுக்கால் வரை சென்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: நுஐம் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 415, புகாரி 136

கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம்

தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தான் மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம். தொழுகையாளிகளைத் தவிர மற்றவர்கள் இதனை அடைந்து கொள்ள முடியாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லாநகரத்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 416

நபித்தோழர்களின் அடையாளம் உளூ

நாம் தொழுகைக்காக செய்கின்ற உளூ நமக்கு நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. நாம் நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்றால் அதன் கூலி மாபெரும் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை. இந்தப் பாக்கியமும் தொழுகையாளிகளுக்குத் தான் கிடைக்கிறது.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்‘ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள் தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ள மாட்டாரா, கூறுங்கள்என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் உளூவினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 419

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ

தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 421

அழகிய உளூவும் அற்புத சுவர்க்கமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

உளூச் செய்த பிறகு ஓதும் துஆவின் சிறப்புகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

இதுவரை நாம் உளூச் செய்வதினால் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றி பார்த்தோம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

 1. தூய்மைப் பேணுவதினால் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது.
 2. தூய்மை ஈமானில் பாதி. அந்த பாக்கியத்தை அடைகின்றோம்.
 3. பல்துலக்குவது இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருகிறது.
 4. உளூச் செய்யும் போது உறுப்புக்களின் வழியாகத் தண்ணீருடன் பாவங்கள் வெளியேறுகின்றன.
 5. முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
 6. இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
 7. மறுமையில் உளூவினால் உறுப்புகள் ஒளிமயமாகக் காட்சி தருகின்றன.
 8. மறுமையில் கவ்சர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம் கிடைக்கிறது.
 9. நபிகள் நாயகத்தின் தோழர்களாகும் பாக்கியம் கிடைக்கிறது.
 10. சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல்.
 11. சுவர்க்கம் கட்டாயமாகிறது.
 12. சுவக்கத்தின் எட்டு வாயில்களில் விரும்பிய வாசல் வழியாக நுழையும் பாக்கியம்.

தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்