அவரும் அவளை நாடினார்

அவரும் அவளை நாடினார்

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

சூரத்துல் யூசுஃப் என்ற 12வது அத்தியாயத்தின் 24வது வசனத்திற்குப் பொருள் செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யூசுப் (அலை) அவர்கள் ஒரு மன்னருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னருடைய மனைவி யூசுஃப் நபியவர்களின் அழகில் மயங்கி அவரை தவறான பாதைக்கு வற்புறுத்துகின்றார். இதைப் பற்றி இறைவன் 24வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்திற்கு ஒரு சாரார் பின்வருமாறு பொருள் செய்கின்றனர்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திரா விட்டால் (தவறியிருப்பார்) இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

இம்மொழிபெயர்ப்பின் படி யூசுஃப் (அலை) அவர்கள் அப்பெண்ணை நாடி விட்டார்கள். அல்லாஹ்வின் அத்தாட்சியைப் பார்த்த காரணத்தினால் அவர்கள் அப்பெண்ணின் ஆசைக்கு இணங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மற்றொரு சாரார் இவ்வசனத்திற்குப் பின்வருமாறு பொருள் செய்கின்றனர்.

அவள் அவரை நாடினாள். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திரா விட்டால் அவரும் அவளை நாடியிருப்பார். இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

இம்மொழிபெயர்ப்பின் படி, அல்லாஹ்வின் சான்றைப் பார்த்த காரணத்தினால் யூசுஃப் நபியின் உள்ளத்தில் அப்பெண்ணைப் பற்றிய நாட்டம் அறவே ஏற்படவில்லை என்ற கருத்து வரும்.

இவ்விரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சரி என்ற ஆய்விற்கு வருவோம்.

முதல் மொழிபெயர்ப்பு தான் அரபி மொழி இலக்கணத்தின் அடிப்படையிலும், மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும் சரியானதாகும்.

இப்னு கஸீர், அர்ராஸீ, ஸமஹ்சரீ, அபூ ஜஃபர், அபூ இஸ்ஹாக், பகவீ போன்ற அறிஞர்கள், “இரண்டாவது வகையான பொருள் கொள்வது அரபு மொழி மரபுக்கும், இலக்கணத்துக்கும் எதிரானது’ என்று கூறுகின்றனர். அரபு மொழி மரபுப்படி முதல் வகையான பொருள் தான் சரியானது. திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டிருப்பதால் வேறு காரணங்கள் கூறி அம்மொழி மரபுக்கு எதிராகப் பொருள் கொள்ள முடியாது.

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி), இமாம் ஷாஃபி, இப்னு தைமிய்யா, அய்னீ, முல்லா அலீ காரி, இப்னு உஸைமீன், முஹம்மது ஸைய்யித் தன்தாவீ, குஸைரி, அபூ நஸ்ர், இப்னுல் அன்பாரி, அன்னுஹாஸ், மாவிர்தீ, முஜாஹித் போன்ற பலர் முதலாவது கருத்தையே கொண்டுள்ளனர். யூசுஃப் (அலை) அவர்கள் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் செய்தி நபிமார்களின் தன்மைக்கு முற்றிலும் எதிரானது  என்றாலும் முதலாவது அர்த்தத்தையே அவர்கள் கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நாட்டத்தின் இரு வகைகள்

யூசுப் (அலை) அவர்களின் உள்ளம் அப்பெண்ணை நாடியது என்று பொருள் செய்வது ஒரு நபியின் நபித்துவத்திற்கு எதிரானது என்று சில சகோதரர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே அரபி மொழி இலக்கணத்திற்கு எதிராக இருந்தாலும் இரண்டாவது வகையான பொருள் செய்வதை சரி காண்கின்றனர்.

முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மன்னருடைய மனைவி யூசுப் நபியை நாடியதற்கும். யூசுப் (அலை) அவர்கள் அப்பெண்ணை நாடியதற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. மன்னருடைய மனைவி யூசுப் நபியின் மீது தவறான நாட்டம் கொண்டது மட்டுமல்லாமல் தன்னுடைய தவறான நாட்டத்தை அடைவதற்காக செயலிலும் இறங்கினார். இதனை திருமறைக் குர்ஆன் மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!என்றாள்.

அல்குர்ஆன் 12:23

மன்னரின் மனைவி மோகம் கொண்டு யூசுப் நபியை விரட்டினார். இதைப் பற்றி திருமறை பின்வருமாறு விவரிக்கிறது.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள்.

அல்குர்ஆன் 12:25

இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார். நான் கட்டளையிடுவதை இவர் செய்யாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார். சிறுமையானவராக ஆவார்என்று அவள் கூறினாள்.

அல்குர்ஆன் 12:32

மன்னரின் மனைவி யூசுப் நபியின் மீது தவறான நாட்டம் கொண்டு அந்தக் கெட்ட எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயலிலும் இறங்கி விட்டார் என்பது மேற்கண்ட வசனங்கள் மூலம் தெளிவாகி விட்டது.

ஆனால் யூசுப் நபியின் நாட்டம் என்பது இவ்வாறானதல்ல. அப்பெண் யூசுப் நபியை தவறான வழியில் அடைவதற்கு ஆசைப்பட்டு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, அவளாகவே முன்வரும் போது எந்த ஒரு மனிதனுக்கும் மனதில் சலனம் ஏற்படத்தான் செய்யும்.

கடுமையான வெய்யில் காலத்தில் கடமையான நோன்பை நோற்ற ஒருவனுக்குத் தண்ணீரைப் பார்த்தால் அருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்படத் தான் செய்யும். ஆனால் அதை அருந்தினால் தான் அவன் செய்தது பாவ காரியமாகக் கருதப்படும். இது போன்று தான் யூசுப் நபியின் உள்ளத்தில் உதித்த எண்ணம். யூசுப் நபி மட்டுமல்ல. ஆதம் (அலை) முதல் உலகத்தில் இறுதியாகத் தோன்றவிருக்கின்ற மனிதன் வரை இந்தச் சலனம் ஏற்படத் தான் செய்யும். இதை யாராவது மறுத்தால் அவர் இறைவன் ஏற்படுத்திய அடிப்படை விதியை மறுக்கிறார் என்று தான் பொருள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6243

மேற்கண்ட ஹதீஸில் மனிதன் என்று மொழி பெயர்த்த வார்த்தைக்கு அரபி மூலத்தில் இப்னு ஆதம் (ஆதமுடைய மகன்) என்ற வார்த்தை உள்ளது. இது ஆதி முதல் அந்தம் வரை உள்ள மனித சமுதாயத்தைக் குறிப்பதற்குரிய சொல்லாகும்.

நபிமார்களிடம் பெரும்பாவமாகக் கூறப்படும் விபச்சாரம் போன்ற பெரும் தவறுகள் ஒரு போதும் நிகழாது. உள்ளத்தில் சலனம் ஏற்படுவது போன்ற நிலைகளுக்கு அவர்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

மார்க்க அடிப்படையில் உள்ளத்தில் ஒரு தவறை நினைத்தால் அது குற்றமாகாது. மாறாக அந்தத் தவறைச் செய்தால் தான் அது பாவமாகக் கருதப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2528

இது நபியவர்களின் உம்மத்திற்கு மட்டுமல்ல. இதற்கு முந்தைய சமுதாயத்திற்கும் இது தான் மார்க்க அடிப்படையாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி விட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7501

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் யூசுப் நபி செய்தது அவர்களுக்கு நன்மையாகத் தான் எழுதப்பட்டது என்பதில் சந்தேகமேயில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே யூசுப் நபியின் உள்ளத்தில் அந்தப் பெண்மீது நாட்டம் ஏற்பட்டது. மாறாக அப்பெண்ணைப் போன்று தவறைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த யூசுப் (அலை) எண்ணவில்லை என்பதைப் பின்வரும் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்எனக் கூறினார்.

அல்குர்ஆன் 12:23

இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார்.

அல்குர்ஆன் 12:32

இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்என்று அமைச்சரின் மனைவி கூறினார்.

அல்குர்ஆன் 12:51

என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றா விட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்என்றார். இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 12:33. 34

மேற்கண்ட வசனங்கள் யூசுப் நபியின் உள்ளத்தில் தான் நாட்டம் ஏற்பட்டதே தவிர அவர் அதனை வெளிப்படுத்தவோ செயல்படுத்தவோ இல்லை என்பதற்குச் சான்று பகர்கின்றன.

நபித்துவத்திற்கு எதிரானதா?

யூசுப் நபியின் உள்ளத்தில் அப்பெண்ணின் மீது நாட்டம் ஏற்பட்டது என்று கூறும் போது, அது நபித்துவத்திற்கு எதிரானது என்று கூறுவது தவறு என்பதை நாம் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையிலிருந்தே இதற்கு நாம் மற்றொரு சான்றையும் முன்வைக்கலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, “ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்என்று கூறினார்கள். 

நூல்: முஸ்லிம் 2718

நபியவர்களின்  வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை இவ்வாறு நடந்துள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் தெளிவான சான்றாகும். சாதாரண நிலைகளில் கூட ஒரு அழகிய பெண்ணைப் பார்க்கும் போது மனிதனுக்கு இது போன்ற சலனங்கள் ஏற்படும் என்றால் அழகும், அந்தஸ்தும் உள்ள பெண், அனைத்து சூழ்நிலைகளும் வாய்ப்பாக இருக்கும் நிலையில் தானாக முன்வந்து யூசுப் (அலை) அவர்களை நிர்ப்பந்திக்கும் போது அவர்களது உள்ளத்தில் நாட்டம் ஏற்பட்டிருப்பது மனிதத் தன்மைக்கு எதிரானதல்ல. இதனால் நபித்துவத்திற்குப் பாதிப்பில்லை. இது போன்ற சலனம் கூட ஒரு நபிக்கு ஏற்படாது என்று வாதிப்பது தான் ஈமானுக்கு எதிரான நிலையாகும்.

உண்மையை உறுதிப்படுத்தும் சான்று

சிறையில் அடைக்கப்பட்ட யூசுஃப் நபியவர்களை தன்னிடம் அழைத்து வருமாறு தூதர்களுக்கு மன்னர் கட்டளையிடுகின்றார். இதைப் பற்றி திருமறை பின்வருமாறு பேசுகிறது.

மன்னர் “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்!என்றார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் வந்தார். அதற்கு யூஸுஃப் “உமது எஜமானனிடம் சென்று “தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை அறிந்தவன்என்றார்.

யூஸுஃபை நீங்கள் மயக்க முயன்ற போது உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று (அரசர் பெண்களிடம்) விசாரித்தார். அதற்கு அவர்கள் “அல்லாஹ் தூயவன். அவரிடம் எந்த ஒழுக்கக்கேட்டையும் நாங்கள் அறியவில்லைஎன்றனர். “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்என்று அமைச்சரின் மனைவி கூறினார்.

 “(என் எஜமானராகிய) அவர் மறைவாக இருந்த போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும், துரோகமிழைப்போரின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிவதற்காக (இவ்வாறு விசாரணை கோரினேன்என்று யூஸுஃப் கூறினார்.)  “எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (என்றும் கூறினார்).

அல் குர்ஆன் 12:50-53

மேலே கோடிடப்பட்ட வார்த்தைகள் யூசுஃப் நபி கூறியவையாகும்.

“எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது.

என்ற யூசுப் நபியின் வார்த்தைகள் அவருடைய உள்ளத்திலும் நாட்டம் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

யூசுஃப் நபியின் உள்ளத்தில் அறவே எந்த நாட்டமும் ஏற்படவில்லை என வாதிக்கும் அறிஞர்கள் இவை மன்னரின் மனைவியுடைய வார்த்தைகள் எனக் கூறுகின்றனர். இலக்கண அடிப்படையில் இருவரில் யாருடைய கூற்றாகவும் இதைக் கருதுவதற்கு இடமிருந்தாலும் வசனத்தின் கருத்து இது யூசுஃப் நபியின் கூற்று தான் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. மேற்கண்ட வசனத்தை அடைப்புக் குறிகளை நீக்கிப் படித்தால் பின்வருமாறு பொருள்தரும்

“இதுவாகிறது அவர் மறைவாக இருந்த போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும், துரோகமிழைப்போரின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிவதற்காக

என்கின்ற இந்த வார்த்தைகளை நிச்சயமாக மன்னரின் மனைவி கூறியிருக்க முடியாது.

ஏனெனில் அவர் தன்னுடைய கணவருக்குத் தெளிவாகவே துரோகமிழைத்து விட்டார். மகனாகக் கருதி வளர்த்த யூசுப் நபியின் மீது தவறான முறையில் மோகம் கொண்டு வாயில்களையெல்லாம் அடைத்து, வெருண்டோடிய யூசுப் நபியின் சட்டையைப் பின்புறமாகப் பிடித்து இழுத்ததோடு மட்டுமல்லாமல், “யூசுப் என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லையென்றால் அவரைச் சிறுமைப்படுத்தி சிறையிலடைப்பேன்’ என்கின்ற அளவிற்கு சபதமெடுத்த ஒரு பெண் எவ்வாறு தன் கணவருக்குத் துரோகம் செய்யவில்லை என்று கூற முடியும்.

அப்பெண்ணுடைய கணவரும் அத்துரோகத்தை உண்மைப் படுத்தியிருக்கிறார். அப்பெண்ணும் துரோகத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியதுஎன்றார். “யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!” (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்).

அல்குர்ஆன் 12:28, 29

இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்என்று அமைச்சரின் மனைவி கூறினார்.

அல்குர்ஆன் 12:51

மேற்கண்ட வசனங்கள் மன்னரின் மனைவி, கணவருக்குத் துரோகமிழைத்தவர் தான் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

மன்னரின் மனைவி தான் விபச்சாரம் செய்யவில்லையே? எனவே அவள் விபச்சாரம் செய்யாத காரணத்தை வைத்து மன்னருக்குத் துரோகமிழைக்கவில்லை என்று கூறினால் என்ன? என்று கேட்கலாம்.

இதுவும் தவறான புரிதலாகும். மன்னரின் மனைவி விபச்சாரத்திற்குத் தயாராகத் தான் இருந்தார். யூசுப் (அலை) அவர்களை இறைவன் தன் சான்றைக் காட்டித் தடுத்த காரணத்தினால் தான் மன்னரின் மனைவியால் தவறு செய்ய இயலவில்லை.

விபச்சாரத்திற்குரிய உலகத் தண்டனையிலிருந்து தான் மன்னரின் மனைவி தப்பிக்க முடியுமே தவிர அவர் தவ்பா செய்யாமல் இருந்திருந்தால் மறுமையில் இறைவன் நாடினால் அவரைத் தண்டிக்க இயலும்.

ஏனெனில் ஒரு தீமையை நினைத்து அதை நடைமுறைப்படுத்த செயலில் இறங்கிவிட்டால் வேறு சில காரணங்களால் நாடிய காரியம் நிறைவேறாவிட்டாலும் அது முழுமையான குற்றமாகவே கருதப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில்  கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார்என்று சொன்னார்கள்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 31

கொல்லப்பட்டவர் தன் சகாவைக் கொலை செய்ய நாடியிருந்தார். ஆனால் அவர் கொல்லப்பட்ட காரணத்தினால் அவரின் நாட்டம் நிறைவேறவில்லை. என்றாலும் தீமையை நாடி அதைச் செயலாற்ற அவர் களத்தில் இறங்கிய காரணத்தினால் அவர் அந்தத் தீமையைச் செய்தவராகவே கருதப்படுவார்.

அது போல் மன்னரின் மனைவி மனம் திருந்தி விபச்சாரம் செய்யாமலிருக்கவில்லை. மாறாக உள்ளத்தில் ஆசை கொண்டு அதை நடைமுறைப்படுத்த இறங்கிய பின்னர் பிற காரணங்களினால் தான் அதற்குத் தடையேற்பட்டுள்ளது. எனவே விபச்சாரம் நடக்காததால் அவர் மன்னருக்குத் துரோகமிழைக்கவில்லை எனக் கருதுவது தவறானதாகும். மேலும் மன்னரின் மனைவி அவருக்குத் துரோகமிழைத்தவர் தான் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கூறினார்கள்: ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா? (அது தான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன்) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்குக் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள்.

நூல்: அபூதாவூத் 1417

(மனைவியர்களாகிய) அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்பது, நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.

நூல்: திர்மிதி 1083

எனவே, “நான் அவருக்குத் துரோகம் செய்யவில்லை’ என்ற இந்த வார்த்தையை மன்னரின் மனைவி தான் கூறியிருப்பார் என்ற அடிப்படையில் பொருள் செய்தால் அது தவறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.

“நான் அவருக்குத் துரோகம் செய்யவில்லை’ என்பதையும் அதைத் தொடர்ந்து வரக் கூடிய வாசகங்களையும் யூசுப் (அலை) அவர்கள் தான் கூறியுள்ளார்கள். அவர்களுக்குத் தான் அவ்வார்த்தைகளைக் கூறுவதற்கு முழுமையான தகுதியிருக்கின்றது என்பதே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான கருத்தாகும்.