அனுமதிக்கப்பட்ட ஆடைகளும் தடுக்கப்பட்ட ஆடைகளும்

ஆடைகள்  சென்ற இதழின் தொடர்ச்சி…

அனுமதிக்கப்பட்ட ஆடைகளும்

தடுக்கப்பட்ட ஆடைகளும்

எஸ். யூசுப் பைஜி

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர் கொண்டேன். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு ஜுப்பா அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து, நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் சட்டைக் கையிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால் சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே தமது இரு கைகளையும் அவர்கள் ஜுப்பாவின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும் தலையையும், காலுறையையும் மஸஹ் செய்தார்கள்.

நூல்: புகாரி (5798)

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்கள், “உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், இருக்கிறதுஎன்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவு நடந்தார்கள். பிறகு வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி ஜுப்பா  அணிந்திருந்தார்கள். இதனால் ஜுப்பாவிலிருந்து தமது முழங்கைகளை எடுக்க முடியவில்லை. ஆகவே அங்கியின் கீழிலிருந்து எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை மஸஹ் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், “அவற்றை விட்டு விடுவீராக! ஏனெனில் நான் கால்கள் இரண்டையும் தூய்மையான நிலையிலேயே நுழைத்திருந்தேன்என்று சொல்லி அவற்றைத் தடவி மஸஹ் செய்து கொண்டார்கள்.

நூல்: புகாரி (5799)

சால்வை ஆடை

நபி (ஸல்) அவர்களிடம் புர்தா ஒன்றை ஒரு பெண்மணி கொண்டு வந்தார்என்று ஸஹ்ல் கூறி விட்டு, “புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அங்கிருந்தோர், “ஆம், புர்தா என்பது சால்வை தானேஎன்றனர். ஸஹ்ல் ஆம் என்று கூறிவிட்டு, “மேலும் அப்பெண்மணி, “நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன்; இதனை உங்களுக்கு அணிவிக்கவே கொண்டு வந்தேன்என்றதும், அது தேவையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர், “இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்கு அணிவித்து விடுங்கள்என்று கேட்டார். அங்கிருந்தோர், “நீர் செய்தது சரியா? நபி (ஸல்) அவர்களுக்குத் தேவைப்பட்டதால் தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரேஎனக் கூறினார்கள் அதற்கவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அதை அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை. அது எனக்கு (இறந்த பின் போர்த்தும்) கஃபனாக ஆகி விட வேண்டும் என்றே கேட்டேன்என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாக ஆகி விட்டதுஎன்று ஸஹ்ல் கூறினார்.

நூல்: புகாரி 1277

சட்டை, பேண்ட்

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளை இடுகிறீர்கள்?” என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகையையும், தொப்பிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளை கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக் கொள்ளட்டும். குங்குமப்பூ சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள். இஹ்ராம் அணிந்த பெண் முகத் திரையையும், கையுறைகளையும் அணியக் கூடாதுஎன்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 1838

இந்த ஹதீஸிலிருந்து ஹஜ் காலம் அல்லாத மற்ற காலங்களில் சட்டை மற்றும் கால் சட்டைகள் அணிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஹஜ் உடைய காலங்களில் சட்டை அணியக் கூடாது என்பதற்குக் காரணம் அது தைக்கப்பட்ட ஆடையாக இருப்பதால் தான். தைக்கப்பட்ட ஆடைகளை ஹஜ் காலங்களில் அணியக் கூடாது.

வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை

நபி (ஸல்) அவர்களிடம் சில ஆடைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிற கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்என்று சொல்ல அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டு வரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும் இந்த ஆடையை நீ (பழையதாக்கி) கிழித்து நைந்து போகச் செய்து விடுஎன்று கூறிவிட்டு, “உம்மு காலிதே! இது ஸனாஹ் (அழகாக) இருக்கிறதுஎன்று சொன்னார்கள். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நூல்: புகாரி 5823

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க சதுரமான கருப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) ஸலாம் கொடுத்தவுடன், “எனது இந்தக் கருப்புக் கம்பளி ஆடையை (எனக்கு அன்பளிப்பு அளித்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் சற்று முன்பு அது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பி விட்டது. அபூஜஹ்மின் மற்றொரு (சாதாரண) ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5817

இந்த ஹதீஸிலிருந்து இது போன்ற தொழுகையின் கவனத்தை திருப்பக் கூடிய ஆடைகளை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆடைகளைத்  தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பயன்படுத்தலாம் என்றும் அறிய முடிகின்றது.

அரைக்கை சட்டை

அரைக்கை சட்டை அணிந்து தொழுதால் மக்ரூஹ் என்று சில உலமாக்கள் கூறி வருவதைப் பார்க்கிறோம். இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. ஹதீஸை சரியாகப் படிக்காத அல்லது விளங்காத உலமாக்கள் தான் இப்படிச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் கூறுவது உண்மைக்கு மாற்றமானது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜூது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்கு இரு கைகளையும் விரித்து வைப்பார்கள்.

நூல்: புகாரி 390, 807, 3564

இந்த ஹதீஸில் அக்குள் தெரியும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து இது ஹராமோ, மக்ரூஹோ அல்ல என்பதை அறியலாம். எனவே அக்குள் தெரியும் அளவுக்கு ஆடை அணியலாம். ஆனால் தொழும் நிலையில் தோளில் துண்டு இல்லாமல் தொழக் கூடாது என்பதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தமது தோள்களில் எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம்.

நூல்: புகாரி 359

அரைக்கால் டவுசர்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவது பற்றி ஒருவர் வினவினார். அப்போது, “உங்களில் எல்லோரும் இரு ஆடைகளை வைத்திருக்கிறார்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் இது விஷயமாக வினவினார். அதற்கு,  “உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். சிலர் எல்லா ஆடைகளும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு சட்டையும் அணிந்து தொழுதனர். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டை மேல் போர்வை அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து தொழுதனர். முழுக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து சிலர் தொழுதனர். சிலர் அரைக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து தொழுதனர். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள்.

நூல்: புகாரி 355

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள துப்பான் என்ற அரபி வார்த்தைக்கு அரைக்கால் டவுசர் என்று தான் பொருள். இதைப் பற்றி விரிவாக ஏகத்துவத்தில் முந்தைய இதழ்களில் விளக்கப்பட்டுள்ளது.

உயர் ரகமான ஆடை

சிலர் உயர் ரகமான ஆடை அணிவதை, பகட்டுக்குரியது; அவ்வாறு அணிவது கூடாது என்பது போல் பேசி வருகின்றனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமானது ஆகும்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன மனிதரிடம் சென்றேன். அவர் எனக்கு விருந்து தரவில்லை. அவர் என்னிடம் வரும் போது அவரைப் போல் நானும் நடந்து கொள்ளலாமா?” என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று சொல்லி விட்டு, நான் மட்டமான ஆடை அணிந்திருப்பதைப் பார்த்த நபியவர்கள், “உன்னிடம் வசதி இருக்கிறதா?” எனக் கேட்டார்கள். ஆடு, ஒட்டகம் மற்றும் அனைத்து செல்வங்களையும் அல்லாஹ் எனக்குக் கொடுத்திருக்கிறான்என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தச் செல்வம் உம் மீது தென்படட்டும்என்றார்கள்.

நூல்: திர்மிதி 1929

வசதி படைத்தவர்கள் உயர் ரகமான ஆடைகளை அணிவது தவறில்லை என்பதுடன் அது விரும்பத்தக்கது என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு அறிவிக்கின்றன.

பட்டாடை அணிதல்

பட்டாடை அணிவதும்தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண் களுக்கு ஹலால் (அனுமதிக்கப் பட்டது) ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: திர்மிதி 1642

சாதாரண பட்டோ, அலங்காரப் பட்டோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் (காஃபிர்களாகிய) அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர் களான) நமக்கும் உரியதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)

நூல்: புகாரி 5426

பட்டாடையின் மீது அமர்வதை நபியவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபதுல்யமான்(ரலி)

நூல்: புகாரி 5837

நபி (ஸல்) அவர்கள் “இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5830

இந்தச் செய்திகள் அனைத்தும் பட்டாடை அணிவது ஆண்களுக்கு ஹராம் என்று சொன்னாலும் பின்வரும் செய்திகள் சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர! (என்று கூறி) பெரு விரலை அடுத்துள்ள (சுட்டு விரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5828

இன்னும் சில நோய்களுக்காக பட்டாடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும் நபி ஸல் அவர்கள் நமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கு இருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2919