அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்

அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

அல்குர்ஆன் 7:54

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

அல்குர்ஆன் 10:3

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 20:5

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

அல்குர்ஆன் 25:59

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் 32:4

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 57:4

அர்ஷைச் சுமக்கும் அருள் மலக்குகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. அவனுடைய இந்த அர்ஷை எட்டு மலக்குகள் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த வசனங்கள் விளக்குகின்றன.

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று சொல்லும் போது, “அமர்தல்’ என்ற இந்தத் தன்மை அல்லாஹ்வின் தகுதிக்கு உகந்ததல்ல என்று தாங்களாக ஒரு சிந்தனையைக் கற்பனை செய்து கொண்டு, இதற்குத் தங்கள் மனோ இச்சைக்கேற்ப சுய விளக்கம் கொடுக்கின்றனர். அர்ஷில் இருக்கிறான் என்றால் அல்லாஹ் ஆட்சி செலுத்துகிறான், ஆதிக்கம் செலுத்துகிறான் என்பது தான் அந்த சுய விளக்கமாகும்.

அர்ஷ் என்பது ஒரு திடப்பொருளாக இல்லாமல் ஆட்சி, அதிகாரம் என்ற பொருளைக் கொண்டதாக இருந்தால் வேறு பொருள் கொடுக்க முடியும். அர்ஷ் என்பது ஒரு இருக்கை என்று தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

அதை வானவர்கள் சுமப்பார்கள், அதற்கு நிழல் இருக்கும் என்பது போல் இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ஒரு திடப் பொருளைக் குறிப்பிட்டு விட்டு அதனுடன் “இஸ்தவா’ என்ற சொல் சேர்ந்தால் “அமர்தல்’ என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு வராது.

அதனால் “இஸ்தவா அலல் அர்ஷ்’ என்பதற்கு அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று பொருள் கொடுப்பதே பொருத்தமான ஒன்றாகும்.

அர்ஷ் என்றால் நாற்காலி, ஆசனம் என்று பொருளாகும்.

நாற்காலியில் ஆட்சி செலுத்துகிறான்; நாற்காலியில் ஆதிக்கம் செலுத்துகிறான் என்றால் அது கேலிக்குரிய வாசகமாகி விடும். எனவே அர்ஷில் அமர்ந்து விட்டான் என்பதை அப்படியே பொருள் கொடுப்பது தான் சரியானதாகும்.

அர்ஷின் மேல் தொங்கும் ஏடு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்த போது தனது (“லவ்ஹுல் மஹ்ஃபூழ்என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – “என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டதுஎன்று எழுதினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3194, 7404

இந்த ஏடுகள் அர்ஷுக்கு மேல் தொங்குகின்றன எனும் போது, அர்ஷ் என்றால் ஆசனம் / இருக்கை என்ற அர்த்தத்தில் தான் இங்கு இடம் பெறுகின்றதே தவிர இலக்கியமான செயற்கை அர்த்தத்தில் இடம்பெறவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் இந்த இடத்தில் அர்ஷ் என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொடுத்தால், அதன் மேல் இந்த ஏடுகள் தொங்குகின்றன என்று கூறப்படுவதற்குப் பொருளில்லாமல் போய் விடும்.

அர்ஷின் கீழ் அடியாரின் ஸஜ்தா

(மறுமை நாளில்) மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அர்ஷுக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்எனும் ஊருக்கும் இடையிலுள்ளஅல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ளதூரமாகும்என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4712

அர்ஷ் என்றால் அமரும் ஆசனம் என்பதால் தான் அதன் கீழ் விழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்கின்றார்கள்.

அர்ஷைச் சுமக்கும் ஆற்றல் மிகு மலக்குகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது (நட்சத்திரம்) எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால், அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4136

எடை மிகுந்த இறை அர்ஷ்

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப் பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், “நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில் தான் நீ இருந்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், “நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்து விடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)என்றார்கள்.

(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அர்ஷின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல: முஸ்லிம் 4905

வல்ல இறைவனின் அர்ஷுக்கு ஓர் எடை உள்ளது. அது ஒரு பரிமாணம் கொண்ட திடப்பொருள் என்பது இதிலிருந்து புலனாகின்றது.

நீரில் இருந்த இறையாசனம்

உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள் என்று நீர் கூறினால் இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 11:7

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!என்று கூறினார்கள். அவர்கள், “எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தர்மம்) கொடுக்கவும் செய்யுங்கள்என்று (இரு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி (ஸல்) அவர்கள், “யமன் வாசிகளே! (எனது) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்என்று பதில் கூறினர். பிறகு, “நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்என்று கூறினார்கள். அப்போது ஒருவர்  (என்னை) அழைத்து, “ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய் விட்டதுஎன்று கூற, நான் (அதைத் தேடிப் பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்து விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! “நான் அதை அப்படியே விட்டு விட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)என்று நான் ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல: புகாரி 3192, 7418

இந்த இறை வசனமும், ஹதீஸ்களும் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அர்ஷ் என்பது ஒரு திடப் பொருள் என்பதை விளக்குகின்றன.

அர்ஷின் காலைப் பிடிக்கின்ற மூஸா நபி

வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.

அல்குர்ஆன் 69:17

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த போது யூதர் ஒருவர் வந்து, “அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(அந்தத் தோழர்) யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அன்சாரிகளில் ஒருவர்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், “இவரை நீர் அடித்தீரா?” என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, “இவர் “மனிதர்கள் அனைவரையும் விட மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கடைவீதியில் ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், “தீயவனே! முஹம்மதை விடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரது முகத்தில் அறைந்து விட்டேன்என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் போசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூசாவை அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். “மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 2412

இந்த இறை வசனம், ஹதீஸைப் பார்த்த பின்பும் யாரேனும் “அர்ஷில் அமர்ந்தான்’ என்பதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க முடியுமா? அப்படி மாற்றுப் பொருள் கொடுத்தால் அவர் வழிகேட்டில் இருக்கிறார் என்பதைத் தவிர வேறில்லை.

அர்ஷைச் சுமப்போரின் அற்புத ஆற்றல்

அர்ஷைச் சுமக்கக் கூடிய அல்லாஹ்வின் மலக்குகளில் ஒரு மலக்கைப் பற்றி அறிவிக்குமாறு எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவருடைய காது சோணையிலிருந்து தோள் புஜம் வரை உள்ள அளவு எழுநூறு ஆண்டு தூரமாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 4102

அல்லாஹ்வின் மகிமைக(ளைக் கூறும் வார்த்தைக)ளில், நீங்கள் கூறுகின்ற, “சுப்ஹானல்லாஹி லாயிலாஹ இல்லல்லாஹு அல்ஹம்துலில்லாஹ்ஆகிய திக்ருகள் அர்ஷைச் சுற்றி வலம் வருகின்றன. அவற்றிற்கு தேனீக்களைப் போன்ற ரீங்காரம் இருக்கின்றது. திக்ருகள் கூறியவரின் பெயரை அவை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தன்னை இவ்வாறு தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பவர்கள் இருக்க வேண்டும் என்று உங்களில் ஒருவர் விரும்பாமல் இருப்பாரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 3799

வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறப்படும்.

அல்குர்ஆன் 39:75

அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.

அல்குர்ஆன் 40:7

இவை அனைத்தும் அர்ஷ் என்பது மிகப் பெரிய பரிமாணத்தைக் கொண்ட பிரம்மாண்ட ஆசனம் என்பதையும், வானவர்களும் மனிதர்களும் செய்கின்ற திக்ருகள் அதனைச் சுற்றி வலம் வருகின்றன என்பதையும், இத்தகைய மகத்தான அர்ஷின் மீது தான் அல்லாஹ் அமர்ந்திருக்கின்றான் என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.

தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை

நாம் இது வரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து, அல்லாஹ் வானத்திற்கு மேல் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று தெளிவாக விளங்கிக் கொள்கிறோம். இது தான் ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று தமிழகத்தில் அரபி மதரஸாக்களில் படித்த ஆலிம்கள் கூட, “அல்லாஹ் தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். பாமர மக்கள் இந்த நம்பிக்கையில் இருந்தால் அது ஆச்சரியமில்லை. ஆனால் ஆலிம்கள் இப்படி இருப்பது தான் ஆச்சரியமாகும். அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற குர்ஆன் வசனங்களை இந்த ஆலிம்கள் படிக்கிறார்கள். ஹதீஸ்களைப் பார்க்கின்றார்கள். அதற்குப் பிறகும் இவர்களிடம் எந்த மாற்றமுமில்லை.

இதற்கு அடிப்படைக் காரணம், அல்லாஹ்வுக்கு உருவமில்லை, அவன் அர்ஷில் இல்லை, தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கை இவர்களிடம் ஆழமாகப் பதிந்திருப்பது தான். இவர்கள் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்து வைத்து விட்டனர். இப்படிச் சொன்னால் தான் அவ்லியாக்களிடம் அல்லாஹ் இருக்கிறான்; அதனால் அவ்லியாக்களும் அல்லாஹ்வும் ஒன்று என்ற வழிகேட்டை நிறுவ முடியும். அதனால் குர்ஆன் ஹதீசுக்குத் தக்க தாங்கள் வளைவதற்குப் பதிலாக, தங்களுக்குத் தக்க குர்ஆன், ஹதீஸை இவர்கள் வளைக்கிறார்கள். தாங்களும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுக்கிறார்கள். மக்களை நரகப் படுகுழியில் தள்ளுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

எனவே இஸ்லாத்தின் சரியான கடவுள் கொள்கையின்படி அல்லாஹ் வானத்தின் மேலே அர்ஷில் அமர்ந்திருக்கிறான். அல்லாஹ் தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை என்பது தான் சரியான கடவுள் கொள்கையாகும். நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

இங்கே ஒரு கேள்வி எழலாம். அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்றால், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான், அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான் என்றெல்லாம் வருகிறதே! அல்லாஹ் எங்கும் எதிலும் இருக்கிறான் என்பதற்கு இது ஆதாரமாக அமைகின்றதே! என்பது தான் அந்தக் கேள்வியாகும். இதற்கு விடை காண்பதற்கு முன்னால் அந்த வசனங்களைப் பார்ப்போம்.

அவர்கள் மக்களிடம் மறைத்து விடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்த போது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:108

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 57:4

வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாமத் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 58:7

உங்களுடன், அவர்களுடன் என்ற வார்த்தையில் இடம் பெறுகின்ற, “மஅ’ என்ற அரபிப் பதத்திற்கு இடைச் சொல்லுக்குரிய அர்த்தமாகும். “மஅ’ என்ற இடைச் சொல்லுக்கு, உடன் என்று பொருள் கொள்ளலாம். உதாரணமாக, உங்களுடன், உங்களோடு என்ற பதத்தில் வரும்.

முதலில் தமிழில் இதற்குரிய விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரு பேருந்தில் இரண்டு இருக்கைகளில் அடுத்தடுத்து நானும் என் மகனும் இருக்கிறோம் என்றால் அதை, “நான் என் மகனுடன் அமர்ந்திருக்கிறேன்’ என்று சொல்லலாம். இப்போது, உடன் என்பது நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

இதே வார்த்தைக்கு கருத்து அர்த்தம், இலக்கிய அர்த்தமும் செய்யப்படும்.

ரபீக் என்பவர் ஒரு பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவருக்கு எதிராக இன்னொருவர் காவல்துறையில் புகார் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். புகார் செய்யச் செல்பவரிடம் பொது மக்கள், “அவருக்கு எதிராகவா புகார் கொடுக்கப் போகிறாய்? காவல்துறை அவரோடு இருக்கிறது. ஆளுங்கட்சியும் அதிகார வர்க்கமும் அவருடன் இருக்கிறது’ என்று சொல்கின்றனர். இப்போது இந்த இடத்தில், அவருடன் – அவரோடு என்பதில் உடன் என்ற இடைச் சொல், இலக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் கருத்து என்ன? ரபீக்குக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஆளுங்கட்சி அவருக்குத் துணை நிற்கும். காவல்துறை அவருக்கு உதவியாக இருக்கும். அதிகார வர்க்கம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பது தான் இதன் அர்த்தம்.

“உடன்’ என்ற இடைச் சொல் இங்கு இலக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் போன்று தான் அரபியில், “மஅ’ என்ற இடைச் சொல் இரண்டு விதமான அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

மேலே நாம் பார்த்த இந்த வசனங்களில், அல்லாஹ் உடன் இருக்கிறான் என்றால், அல்லாஹ் அவருக்கு உதவியாக இருக்கிறான்; கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான் அதன் பொருள்.

2:153, 2:249, 8:19, 9:40, 9:123, 16:127 ஆகிய வசனங்களில் “மஅ’ என்ற இடைச் சொல், “அல்லாஹ்வுடைய உதவி இருக்கின்றது’ என்ற கருத்து அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.

2:14, 7:71, 18:28, 48:29 ஆகிய வசனங்களில் ‘மஅ –  உடன்’ என்பது நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாத குழப்பவாதிகள், இறைவன் எங்கும் இருக்கிறான்; எதிலும் இருக்கிறான் என்ற குஃப்ரான கொள்கைக்குச் சென்று விட்டனர். அத்வைதம் என்ற அமிலக் கருத்தையும் மார்க்கத்தில் திணித்து விட்டனர். இப்படி ஓர் அர்த்தத்தை எல்லா இடத்திலும் கொடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள ஹதீஸில் ஒரு உதாரணத்தைக் காணலாம்.

நபித் தோழர்கள் எங்கும் இருக்கிறார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கிய போது, “மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் உங்களுடன் இருக்கின்றார்கள்என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில் தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் மதீனாவில் தான் இருக்கின்றார்கள்; அத்தியாவசியக் காரணங்கள் தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்து கொள்ள விடாமல்) தடுத்து விட்டனஎன்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4423

“உடன்’ என்பதற்கு எல்லா இடத்திலும் நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும் என்றால் இந்த ஹதீஸின்படி நபித்தோழர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்ற மோசமான கருத்து வந்து விடும்.

நபி (ஸல்) அவர்களுடன் வராத ஸஹாபாக்களும், நபியவர்களுடன் தான் இருந்தார்கள் என்ற கருத்து வந்து விடும். எனவே இந்த இடத்தில் “மஅ’ என்பதற்கு நேரடி அர்த்தம் கொடுக்க முடியாது. இலக்கிய அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.

போருக்கு வர வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்கள்; ஆனால் நோய், வாகனமின்மை போன்ற காரணங்களால் வர முடியாமல் ஆகி விட்டார்கள். அவர்கள் போருக்கு வராமல் இருந்தாலும் அவர்களுக்கும் உங்களைப் போன்ற கூலி உண்டு என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

எனவே, எந்த இடத்தில் இலக்கிய அர்த்தம் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் இலக்கிய அர்த்தம் தான் கொடுக்க வேண்டும். எந்த இடத்தில் நேரடிப் பொருள் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும். இல்லையேல் அது வழிகேட்டில் கொண்டு போய் விட்டு விடும்.

மேற்கண்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் கண்ட விளக்கங்களின் படி, வல்ல ரஹ்மான் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான்; அவன் அங்கிருந்து வருவதில்லை. அல்லாஹ் மனிதர்களுடன் இருக்கிறான் என்று கூறப்படுவதன் பொருள் அவனுடைய கண்காணிப்பு, உதவி, பாதுகாவல் அவர்களுடன் இருக்கிறது என்பதாகும்.

அத்வைதத்திற்கு ஆப்பு

இங்கே அத்வைதக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாக முன்வைக்கும் ஒரு ஹதீஸையும் பார்ப்பது பொருத்தமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6502

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7405

இதை ஓர் உதாரணத்துடன் கூறுவார்கள். நெருப்பில் விழுந்த இரும்பு எப்படி நெருப்பாக மாறி விடுகின்றதோ அது போல் அடியான் அல்லாஹ்விடம் கலந்து விடுகின்றான். எனவே இருவரும் ஒன்றாகி விடுகின்றனர் என்பது இவர்களின் வாதம். இந்த வாதம் அறிவுக்குப் பொருத்தமற்ற வாதமாகும்.

அடியான் ஒரு ஜான் நெருங்கி வந்தால் அல்லாஹ் ஒரு முழம் நெருங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுத்தால் அது அர்த்தமில்லாமல் போய் விடும். ஏனென்றால் ஒரு ஜான் நெருங்கினால் அதற்குப் பின்னால் இடைவெளி சுருங்கி விடும். அதற்குப் பின்னால் ஒரு முழம் நெருங்குவது என்பது பொருத்தமாகாது. அப்படியே நெருங்கினாலும் இரண்டும் ஒன்றாகக் கலக்க முடியாது. ஒன்றையொன்று தாண்டித் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இது இலக்கியமாகச் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

செவியாக, கண்ணாக, கையாக மாறுவேன் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ், அடியானாக மாட்டான். அடியான், அல்லாஹ் ஆகவும் மாட்டான். அந்த ஹதீஸின் பொருள் என்ன என்பதை, “அடியான் கேட்டால் தருவேன்’ என்ற வாசகம் தெளிவுபடுத்தி விடுகின்றது.

இரண்டறக் கலந்து விட்டால், அங்கு கேட்க வேண்டியது என்ன இருக்கிறது? கொடுக்க வேண்டியது என்ன இருக்கின்றது?

அப்படியானால் இறைநேசர் இறந்து விட்டால் அல்லாஹ் இறந்து விடுகிறான் என்று பொருளா? அடியானை அடக்கம் செய்தால் அல்லாஹ்வை அடக்கம் செய்வதாக அர்த்தமா? நவூதுபில்லாஹ். இது போன்ற வழிகெட்ட சிந்தனைகளை விட்டும் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

ஒரு அடியான் வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை நெருங்கும் போது அந்த அடியான் மீது அல்லாஹ்வின் அன்பு அதிகமாகி விடுகின்றது என்ற அர்த்தத்தைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது. அதனால் தான், அவன் கேட்டால் கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே அல்லாஹ்வும் அடியானும் ஒன்றாகிறார்கள் என்ற அத்வைதக் கொள்கை தெளிவான இறை மறுப்பு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் கேடு கெட்ட அத்வைதக் கொள்கையுடையவர்களுக்குப் புரியும் வகையில் மற்றொரு ஹதீஸைப் பார்க்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லைஎன்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்என்று கூறுவான்.

மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லைஎன்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4661

அவ்லியாக்கள் மட்டுமல்ல! பிச்சைக்காரன் கூட இப்போது அல்லாஹ்வாகி விடுகிறான். அப்படியானால் பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டுவார்களா?