சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

ஒரு நாட்டை அல்லது ஒரு சமுதாயத்தை ஆளுகின்ற சட்டம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த புனிதச் சட்டமாக இருக்கலாம்; அல்லது மக்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்ட மனிதச் சட்டமாக இருக்கலாம். அதே போன்று ஒரு சங்கத்தை, கழகத்தை, அமைப்பை ஆளுகின்ற துணைச் சட்டமாக இருக்கலாம். எந்தச் சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்திற்கு முன் அனைவரும், ஏழை – பணக்காரன், ஆள்பவர் – ஆளப்படுவோர், ஆண் – பெண், நிர்வாகி – உறுப்பினர் அனைவரும் சமம் என்ற நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒரு சங்கம், அமைப்பு, கழகம் என்று வருகின்ற போது அதன் உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணை – துணைச் செயலாளர்கள் அனைவரும் அந்த அமைப்பின் சட்டங்களுக்கு முன் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும்.

இல்லையெனில் அந்த நாடு அல்லது அந்தச் சங்கம் அழிந்து போகும். இதை நாம் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும் படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள்.

உடனே உஸாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்தவன் திருடி விடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்ததும், பலவீனமானவன் திருடி விடும் போது அவனுக்குத் தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் வெட்டியிருப்பேன்என்று சொன்னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டார்;- மேலும் மணம் புரிந்தும் கொண்டார்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்

நூற்கள்: புகாரி 4304, 3475, 3733, முஸ்லிம் 3196, 3197

சட்டத்திற்கு முன் பாகுபாடு காட்டப்படுவதைத் தம்மால் சகித்துக் கொள்ள முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்துவதையும், தன் மகள் ஃபாத்திமாவாக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டேன் என்று முழங்குவதையும் இந்த ஹதீஸில் காண்கிறோம்.

வித்தியாசம் காட்டிய வேத சமுதாயம்

சட்டத்தின் முன் பாகுபாடு, தன் சமுதாயத்தையே அழித்து விடும் என்று உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், சாயந்திர நேரம் உரையாற்றி சரியான பிடி பிடித்து விடுகின்றார்கள். தன் சமுதாயத்தைத் தொற்றிப் பிடித்துச் சாகடிக்க வரும் இந்தப் புற்று நோயை அவசரமாகத் தமது அரிய உரை மூலம் அறுத்தெறிகின்றார்கள்.

உங்களுக்கு முன்னிருந்தவர்கள் அழிந்தது சட்டத்திற்கு முன் காட்டிய பாகுபாடு தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டையும் ஹதீஸில் நாம் காண முடிகின்றது.

யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தார் இடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதுஎன்று பதிலளித்தார்கள்.

உடனே (யூத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் “நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும் வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்று தான் அதில் கூறப்பட்டுள்ளதுஎன்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் “விபசாரிகளுக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்பட வேண்டும்என்று கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார்.

அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடுஎன்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத் தான் செய்கிறதுஎன்று சொன்னார்கள்.

உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3635

யூத சமுதாயம் நாசமானதற்குக் காரணம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதியை அது தகர்த்தெறிந்தது தான் என்பதற்கு இதை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டை நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட ஹதீஸ்களின் வெளிச்சத்திலிருந்து இஸ்லாமிய சமுதாயம், தங்களது மார்க்கச் சட்டத்திலும் சரி! அல்லது தங்களுக் கென்று வகுத்துக் கொண்ட சங்க, கழக துணைச் சட்டங்களிலும் சரி! எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது.

ஏழைக்கு ஒரு நியதி; பணக்காரனுக்கு ஒரு நியதி! உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நியதி; கீழ் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நியதி என்ற பாகுபாட்டை யாருக்கும் காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால் அந்த நாடு அந்தச் சமுதாயம், அல்லது சங்கம் அழிவைத் தான் சந்திக்கும்.

எந்த ஒரு நாடும், சமுதாயமும், சங்கமும் இது போன்ற ஒரு நெருக்கடியைச் சந்திக்காமல் இருக்காது; இருக்கவும் முடியாது. காரணம் மனிதர்கள் என்பதால் தான். மனிதர்களிடம் இது போன்ற தவறுகள் ஏற்படத் தான் செய்யும். அப்படியொரு நெருக்கடிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் விதிவிலக்கல்ல!

நாம் சந்தித்த இந்த நெருக்கடியை விளக்குவதற்கு முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றிய ஒரு   சிறிய அறிமுகத்தைப் பார்த்துக் கொள்வோம்.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்!

அல்குர்ஆன் 3:110

இந்தத் தன்மைகளைத் தன்னகமாகக் கொண்டே இந்த ஜமாஅத் தனது அழைப்புப் பணியின் பயணத்தைத் தொடர்கின்றது.

  • * ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத இரும்புக் கொள்கை
  • * குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் பின்பற்றத்தக்கவை என்ற அடிப்படைக் கொள்கையில் அறவே வளைந்து கொடுக்காத தன்மை!
  • * தனிமனித வாழ்வில் கற்பு மற்றும் காசு பணத்தில் தூய்மை

இன்னும் இது போன்ற இலட்சியங்களில் கடுகளவு கூட அலட்சியம் காட்டாத இறுக்கப் போக்குக் கொண்ட அமைப்பு தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இதனால் மக்களின் கழுகு விழிப் பார்வைகளுக்கும், கடினமான விமர்சனங்களுக்கும் இந்த ஜமாஅத் ஆளாகின்றது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நமது ஜமாஅத்தினரை விட மற்றவர்கள் மிக அதிகமாகவே கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த ஜமாஅத் அனைத்துத் துறைகளிலும் தூய்மையைக் கடைப்பிடிக்கின்றது. இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டை இங்கே கூறுவது பொருத்தமாக அமையும்.

தவ்ஹீது ஜமாஅத் உருவாவதற்கு முன்பு அதிகமான இஸ்லாமிய மாத இதழ்கள் வெளிவந்தன. அந்த மாத இதழ்களில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்தது பீடிக் கம்பெனி விளம்பரங்கள் தான். தவ்ஹீது ஜமாஅத் உதயமானதும் அதன் சார்பில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பெயர்களில் வார, மாத இதழ்கள் உதயமாயின. ஆனால் அந்த இதழ்களில் ஒன்றில் கூட பீடி விளம்பரத்தைக் காண முடியாது. அப்படி ஒரு தூய்மையை தவ்ஹீது ஜமாஅத் அப்போதிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது.

இன்றைய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ள தாயீக்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆக், ஜாக் போன்ற இயக்கங்களில் இருந்தவர்கள். அந்த இயக்கத்தில் உள்ள பொறுப்பாளர்களிடம் பெண் தொடர்பான குற்றச்சாட்டு வந்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தாயீக்கள் குரல் கொடுத்தனர். அவர்களுடைய குரலுக்குப் பதில் கிடைக்காதது மட்டுமல்ல! குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது போன்ற காரணங்களால் தான் இந்த அழைப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அடுத்து அவர்கள் கண்ட சமுதாய அமைப்பு தமுமுக! அதிலும் இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிலிருந்தும் வெளியேறினர். அதன் பின்னர் கண்ட அமைப்பு தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்!

அதனால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள், குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பதில் இதன் தாயீக்கள் குறியாகவும் வெறியாகவும் இருந்தனர். இது தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் பற்றிய ஒரு சுருக்க அறிமுகம்!

கோயம்பேட்டிலிருந்து கோவில்பட்டி வரை

இப்படிப்பட்ட இயக்கத்தில் தான் இதன் மாநில பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்தன. வந்த குற்றச்சாட்டுக்களில் ஆதாரப்பூர்வமாக வந்தது, கோயம்பேடு முதல் கோவில்பட்டி வரையிலான ஒரு பேருந்துப் பயணம்!

அண்ணியை அல்லது கொழுந்தியாவை தன் இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் செல்லும் அக்கிரமக் கலாச்சாரத்தை எதிர்த்து மிகக் கடுமையாகக் குரல் கொடுக்கும் தவ்ஹீது ஜமாஅத்தில், அதன் பொதுச் செயலாளர் ஒருவர், நந்தினி என்ற பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு கோயம் பேட்டிலிருந்து கோவில்பட்டி வரை பயணம் செய்கின்றார்.

இந்தக் கண்ணராவியைக் கண்ணாரக் கண்ட குமரி மாவட்ட சாட்சி ஒருவர் மாநில நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதுகிறார்.

மாநில நிர்வாகம் இதை விசாரணை செய்கின்ற போது, அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு பாக்கர் மறுத்து விடுகின்றார்.

ஆனால் அடுத்தடுத்து அவர் முன் வைக்கப்பட்ட சான்றுகள் அவரது சத்தியத்தைப் பொய் சத்தியமாக்கின.

பின்னர் பேருந்தில் அவ்வாறு பயணம் செய்ததை அவரே ஒப்புக் கொள்கின்றார். அவரது ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு அவர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் தண்டனை பற்றி நிர்வாகக் குழு விவாதிக்கின்றது.

  1. நிரந்தர நீக்கம்
  2. தற்காலிக நீக்கம்

கடைசியில் தற்காலிக நீக்கமே முடிவானது.

திருச்சி செயற்குழு

தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தாலும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் பதவியில் இருப்பவரின் செயல்பாடுகள் போலவே அமைந்தன. இதற்குக் கடுமையான கண்டனங்களும், காட்டமான எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில் திருச்சியில் மாநில செயற்குழு கூடுகின்றது. இதற்கு முந்தைய நாள் மாலையில் மாநில நிர்வாகக் குழு கூடுகின்றது.

பாக்கர் மீது எடுத்த நடவடிக்கை போதுமானது; அவருக்குக் கொடுத்த தண்டனை போதுமானது; எனவே அவர் மீண்டும் நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து விவாதத்திற்கு வருகின்றது.

அப்போது, தாயீக்களாக உள்ள மாநில நிர்வாகிகள், இந்தத் தண்டனை போதாது என்றும், மற்ற நிர்வாகிகள் இந்தத் தண்டனை போதும் என்று இரு வேறு கருத்துக்களைப் பதிவு செய்தனர். இறுதியில் தண்டனை போதும் என்ற முடிவே இறுதியானது.

மறு நாள் காலையில் செயற்குழு கூடியது. அதில் மாநில நிர்வாகக் குழுவின் முடிவு எடுத்து வைக்கப்பட்டது.

“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை விதி (பை லா) சட்டத்தில், இது போன்ற பாலியல் புகார் வந்தால் அவர் மீது என்ன நடவடிக்கை, அவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து ஏதுமில்லை. அப்படியொரு விதி ஏதுமில்லாததால் நாம் இப்போது பாக்கர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் இனி மேல் நாம் இதற்கென ஒரு விதியை வகுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் இது போன்ற தவறுக்கு ஆளாகும் நபர்கள் மீது தெளிவான நடவடிக்கை எடுத்து விடலாம்’ என்று அப்போதைய மாநிலத் தலைவர் செயற்குழுவில் விளக்கினார்.

அத்துடன், இனி மாநில, மாவட்ட, நகரப் பொறுப்பு வகிக்கும் எவரேனும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்து அது பிரச்சனையானால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதுடன், மீண்டும் அவர் ஒரு போதும் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தீர்மானத்தையும் அந்தச் செயற்குழுவில் கொண்டு வந்தார்.

பாக்கரை மீண்டும் சேர்த்துக் கொண்டதையும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீர்மானத்தையும் செயற்குழு ஏற்றுக் கொண்டது.

காரசாரமான விவாதத்திற்கும், காட்டமான கேள்விக் கணைகளுக்கும் காத்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஜமாஅத்தின் நன்மை மற்றும் ஒரு தனி நபரின் மானம் மரியாதையைக் கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விட்டனர்.

தலைமைக்குக் கட்டுப்பட்டு மாநில நிர்வாகத்திலிருந்த தாயீக்களும் மற்ற தாயீக்களும் இந்த விஷயத்தில் அமைதி காத்தனர்.

இதன் பின்னர் தான் ஷகீலா என்ற பெண்மணியின் குற்றச்சாட்டு வருகின்றது. முதலில் மொட்டையாக, பிறகு முகவரியுடன் முழுமையாக எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு, பாக்கருக்கு எதிராக வருகின்றது.

தலைமை அலுவலகத்தில், பாக்கரை அவரது அறையில் சந்திக்கச் சென்ற போது அவர் தன்னிடம் சில்மிஷம் செய்தார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டு சுமத்துகின்றாள். குற்றம் சுமத்துகின்ற அந்தப் பெண்ணுக்கு பாக்கர் தான் பொற்றுப்பாளர் – கார்டியன்.

இதற்காக இப்போது மீண்டும் ஒரு விசாரணை! முடிவில் பாக்கர் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்தது உறுதியானது. அந்தத் தனிமை, விபச்சாரம் நடந்தது என்று கூறக்கூடிய அளவுக்குத் தனிமை அல்ல; ஆனால் சில்மிஷங்கள் செய்வதற்கு வாய்ப்புள்ள தனிமை!

இப்போது திருச்சி செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒரு முறை திரும்பப் படித்துக் கொள்வோம்.

“மாநில, மாவட்ட, நகரப் பொறுப்பு வகிக்கும் எவரேனும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்து அது பிரச்சனையானால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதுடன், மீண்டும் அவர் ஒரு போதும் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார்”

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பாக்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தற்காலிக நீக்கமல்ல; நிரந்தர நீக்கம்!

இந்த நடவடிக்கையில் ஒரே ஒரு அம்சம் தான் கவனிக்கப்பட்டது.

கீழ்மட்டத்தில் கிளைப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் இந்தத் தவறைச் செய்தால் அந்தக் கிளை உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப் பட்டவரை நீக்கும் அல்லவா? இது தான் கிளைகளில் நடந்து கொண்டும் இருக்கின்றது.

அதே அளவுகோல் தான் மாநிலத்தில், மேல்மட்டத்தில் இருப்பவருக்கும்! அவர் தவறு செய்யும் போது இந்த அளவு கோல் தான் வைக்கப்பட வேண்டும். அந்த அளவுகோலின் அடிப்படையில் பாக்கர் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இயக்கத்தின் சட்டத்தில் அனைவரும் சமம் என்ற நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த எச்சரிக்கை, கண்டனம் கருத்தில் கொள்ளப்பட்டு, சட்டத்தின் முன் உள்ள பாகுபாடு தவிர்க்கப் பட்டுள்ளது.

இங்கே ஒரு கேள்வி எழலாம். இதற்கு ஏன் இத்தனை கால தாமதம்? கால அவகாசம்? அதிரடியாக அன்றைக்கே தூக்கி வீசியிருக்கலாமே! என்பது தான் அந்தக் கேள்வி!

ஒரு நோயாளியின் வயிற்றில் கட்டி இருப்பதை மருத்துவர் கண்டறிகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மருத்துவர் உடனே அதை அறுவை சிகிச்சை செய்ய முன் வரமாட்டார். முதலில் அதை ஊசி, மருந்து, மாத்திரை மூலமே குணப்படுத்த முயல்வார். இதே முயற்சி தான் பாக்கர் விஷயத்தில் கொள்ளப்பட்டது. இது மாத்திரைக்குக் குணமாகும் நோயல்ல! இதற்குத் தேவை அறுவை சிகிச்சை தான், அதிரடி நடவடிக்கை தான் என்பதை உணர்ந்து அதை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இறுதியில் நிறைவேற்றியது. இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதியை நிலைநாட்டியது.