அழைப்பாளரிடம் இருக்க வேண்டிய அழகிய பண்புகள்

அழைப்பாளரிடம் இருக்க வேண்டிய அழகிய பண்புகள்

தாஹா

நமது ஜமாஅத்தின் தாயீக்கள் (பிரச்சாரகர்கள்) அவர்கள் நம் அனைவருக்கும் தாய்கள். அதாவது அழைப்பாளனிடத்தில் ஒரு தாய்க்கான பக்குவமும் பொறுமையுடன் சகிப்புத்தன்மையும் மிக அவசியம்.

பிரச்சாரகர்கள் கத்தியின் மீது நடப்பதற்குச் சமமானவர்கள். கொஞ்சம் கவனம் தவறினாலும் ஆபத்து நடப்பவருக்கே என்பதை நன்குணர்ந்திருக்க வேண்டும்.

ஒரு அழைப்பாளன் ஆபத்தை உணராமல் போதுமான பக்குவமில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதினால் அவருக்கும் அவரைச் சார்ந்த கொள்கைக்கும் பங்கம் வந்துவிடும் என்பதை முதலில் புரிந்திருக்க வேண்டும்.

எனவே ஒரு அழைப்பாளனிடத்தில் முடிந்தளவுக்குக் குறைகள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பாலியல் குறித்த பார்வை

பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வைப் பெற்றவராக ஒரு அழைப்பாளர் இருக்க வேண்டும். இது போன்ற விசயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காதல் கத்தரிக்காய் போன்ற வேலைகளைச் செய்யவே கூடாது. சாதாரண மக்களிடமும் இருக்கக் கூடாத இந்தப் பண்புகள் ஒரு அழைப்பாளனிடம் அறவே கூடாது.

சில ஊர்களில் சில பெண்களே ஆலிமிடம் கேள்வி கேட்பதாகச் சொல்லிக் கொண்டு சும்மா சும்மா எதையாவது கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதும் தவறான விஷயம். அடிக்கடி போன் செய்து ஆலிமிடம் பேசி, கடைசியில் காதலில் விழுகிற, விழ வைக்கிற பிரச்சாரகர்களும், தவ்ஹீத் என்ற பெயரில் இந்தக் காரியங்களைச் செய்யும் பெண்களும் இதுபோன்ற மானக்கேடான, வெட்கங்கெட்ட செயல்களை விட்டொழிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், பெண்கள் குழைந்து பேசுவதும் அதிக உரிமை எடுத்துப் பேசுவதும் தான். எனவே ஒவ்வொரு பெண்ணும் பிரச்சாரகர்களிடத்தில் கேள்வி கேட்கும் போதும் ஏதேனும் ஒரு தேவையைக் கேட்கும் போதும் தனது தந்தை, சகோதரன், மாமா போன்ற மஹ்ரமான நபர்களிடம் கேள்வியை எழுதிக் கொடுத்து கேட்கச் சொல்லலாம். அல்லது அவர்கள் மூலமாக கேட்டுவரச் சொல்லி பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு வழி இல்லாத போது, மார்க்கம் சொல்லுகிறபடி குழையாமல் நெளியாமல் மென்மையில்லாமல் கேள்வியை நெற்றியில் அடித்தாற்போல் கேட்டு முடித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் பேசக் கூடாது.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

அல்குர்ஆன்: 33:32

நிர்வாகத்தினரில் சிலர் தங்களது வீடுகளுக்கு அடிக்கடி பிரச்சாரகர்களை அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே தங்களது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். அதுவும் அவருடன் நாமும் இருப்பது கட்டாயத்திலும் கட்டாயம். பிறகு தவறான அசம்பாவிதங்கள் நடந்தால் இரு தரப்பு நஷ்டத்தினையும் அந்த நிர்வாகியே சந்தித்தாக வேண்டும்.

திருமணமாகாத பிரச்சாரகர்களுக்குக் கடையில் சாப்பாடு ஏற்பாடு செய்வதே சிறந்த வழிமுறை.  அவரை அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்பதை கட்டாயம் தவிர்ந்து கொள்வது இரு சாராருக்கும் நல்லது.

அதே போன்று சிலர் அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பார்கள். இதிலும் கவனம் மிக முக்கியம்.

இவையெல்லாம் ஒரு அழைப்பாளனை பாலியல் சீண்டல்களிலிருந்தும் கெட்ட சிந்தனைகளிலிருந்தும் பாதுகாக்கும். ஏன் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், பிரச்சாரகர்களும் மனிதர்கள் தாம் என்பதை எந்த நேரத்திலும் நிர்வாகத்தினர் மறந்துவிடக் கூடாது. இவரெல்லாம் இப்படிச் செய்வாரா என்ற எண்ணத்தை அறவே ஒழித்துவிட்டு, முடிந்தளவுக்கு மார்க்கத்தின் எந்த அடிப்படையையும் மீறாமல் நடந்து கொள்ள முயற்சித்தால் பாலியல் குறித்த ஒரு சில குற்றச்சாட்டுகளும் நடக்காமல் தடுக்கலாம்.

நிர்வாக நட்பு குறித்த பார்வை

நிர்வாகிகள் தங்களது பிரச்சாரகர்களிடத்தில் எப்போதுமே மரியாதையாக நடந்து கொள்வது ஆரோக்கியமான நட்பாகவும் பணிகளைச் சரியாகச் செய்வதற்கும் வழிவகுக்கும்.

நிர்வாகத்தில் இருக்கிற தனி நபர்கள் அவருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். அதே போன்று பிரச்சாரகர்களும் நிர்வாகத்தினரிடம் தேவைக்கு ஏற்ப பழகினாலே போதுமானது. எப்போதும் அவர்களின் மரியாதையை தனிமையிலும் பிறருக்கு முன்னிலையிலும் குறைத்துவிடக் கூடாது. நிர்வாகத்தினருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அளவுக்கு அவர்களிடம் நட்பைப் பேணினால் அதுவே போதுமானதாகும்.

நிர்வாகத்தில் ஆலோசனை செய்யும் போது, தன்னுடைய கருத்துத் தான் சிறந்தது என்று நினைத்துக் கொண்டு, தனது கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் இருப்பதே பிரச்சாரகருக்கு உகந்தது.

நிர்வாகத்தினரும் எப்போதும் நமது கட்டுப்பாட்டில் தான் அழைப்பாளர் இருக்க வேண்டும் என்று நினைத்து கரடுமுரடாகக் கட்டளையிடாமல், அதிகாரத் தொனியில் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பிரச்சாரகராக இருப்பவர், நிர்வாகத்தினரிடமும் பொதுமக்களிடமும் குறைகள் இருந்தால் தகுந்த நேரத்தில் தகுந்த மாதிரி கையாண்டு குறைகளைச் சரிசெய்ய முயற்சிக்காமல், எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே திரியக் கூடாது.

அதே போன்று நிர்வாகத்தினரும் அனுபவமில்லாத அழைப்பாளரை அலைக்கழிக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொடுத்து நல்ல பக்குவமிக்க அழைப்பாளனாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதெனில் ஒருவருக்கொருவர் உண்மையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உபதேசம் பெற்றுக் கொள்ளுதல் அவசியம்.

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

அல்குர்ஆன் 103வது அத்தியாயம்

முதலில் நிர்வாகிகள் அழைப்பாளரையும், அழைப்பாளர் நிர்வாகத்தினரையும் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் புரியாமல் நடப்பதினால் தான் பிரச்சனைகள் எழுகிறது.

அதே போன்று ஒவ்வொருவரும் பிறரைத் தவறாக எண்ணாமல் இருக்க வேண்டும். ஒருவரைத் தவறாக எண்ணும் போது அவர் செய்கிற அனைத்துமே எரிச்சலூட்டுவதாகத் தான் மற்றவர் கருதுவார்.

எனவே இருவரில் ஒருவர் எந்தச் செயலைச் செய்தாலும் மறுமை நன்மைக்குத் தான் செய்வார் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மற்றவரும் அது போன்றே நினைத்துக் கொள்ள வேண்டும். இப்போது யாராவது ஒருவர் தவறு செய்யும் போது, அதைப் பற்றி தௌவுபடுத்துவற்கு விளக்கம் கேட்கலாம்.

பொறுமையும் கலந்தாலோசித்தலும் 

சிலர் தன்னிச்சையாகச் செயல்படுவதினால் தான் நிறையக் குழப்பங்கள் உருவாகின்றன. எனவே எதையும் சக நிர்வாகிகளுடனும் அழைப்பாளர்களிடமும் ஆலோசித்து விட்டுத் தான் களத்தில் இறங்க வேண்டும்.

பதறாத காரியம் சிதறாது என்பார்கள். எனவே நிர்வாகியாக இருந்தாலும் அல்லது பிரச்சாரகராக இருந்தாலும் எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்தால் எதையும் சரியாக முழுமையாக முறையாகச் செய்ய முடியாது என்பதை இருவருமே கற்றுக் கொள்ள வேண்டும்.

ரோஷம் (ஈகோ) களைந்தால் மோசம் வராது

ஈகோ என்கிற ரோஷம் கொள்கிற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை கைவிட்டால் எட்டாதவையும் கைகூடும் என்பதில் எள்முனைக்கும் சந்தேகமில்லை. நீ என்ன கேட்பது? நான் எதையும் செய்வேன் என்கிற மனப்பாங்குடன் செயல்படுவது நிர்வாகத்திலும் பிரச்சாரக் களத்திலும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்திவிடும்.

இன்று நம்மிடத்தில் பலர் கொள்கையிலிருந்து புரண்டதற்குக் கூட தேவையில்லாத ரோஷ உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதே காரணம் எனலாம். அதே நேரத்தில் ரோஷமே படக்கூடாதா என்றால், உலகில் அப்படியொருவன் மனிதனா என்று கேட்கத் தோன்றும். ஆனால் இவன் சொல்லி நான் கேட்பதா? என்ற ஈகோவிற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது.

எனவே எதற்கெடுத்தாலும் தனது மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகக் காரியத்தை நிறைவேற்றாமல் இறை திருப்திக்காக செயலாற்ற வேண்டும்.

கொள்கைத் தவறுகளும் குழப்பங்களும் ஏற்படும் போதும், நமது ஜமாஅத்தின் மதிப்பைக் குறைக்கிற எதற்காகவும் ரோஷப்படுவது நியாயமானது. அதைக் குறை சொல்ல முடியாது. பாராட்ட வேண்டிய பண்பு தான்.

பணியைப் பகிர்ந்தளிக்காமை

பிரச்சாரகர்களிலோ நிர்வாகத்தினரிலோ அனைத்துப் பணிகளையும் தானே சுமந்து கொண்டு, தானும் சரியாக முறையாக முழுமையாக நிறைவேற்றாமல் பிறருக்கும் பகிர்ந்தளிக்காமல் அதைப் பற்றி பேசிப் பேசியே நேரம் கடத்துகிறவர்களும் நம்மில் உண்டு.

எந்தப் பணியைத் துவங்கினாலும் அதை முடிக்காமல், நானே அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு எதையும் செய்ய மாட்டார்கள். இத்தகையவர்கள் நமது ஜமாஅத்தின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிப்பவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே எந்தப் பணியாக இருந்தாலும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும், யார் யாரெல்லாம் எதை எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே ஆலோசனை செய்து, அதன் பிரகாரம் பணிகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

அதில் எவராவது கொடுத்த பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் அவரைக் கண்டிப்பதற்கும் வசதியாக இருக்கும். மேலும் இப்படி பணியைப் பகிர்ந்தளிக்கும் போது தான், யார் யார் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியும்.

மக்களோடு மக்களாகப் பணி செய்தல்

பிரச்சாரகர்களில் பலரிடம் இருக்கும் குறை இது. மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்று பணியாற்றாமல் வெறுமனே சொற்பொழிவுகளை மட்டுமே செய்து கொண்டிருக்கக் கூடாது. அதே போன்று சில இடங்களில் எல்லா வேலைகளையும் பிரச்சாரகர்களிடத்தில் விட்டுவிட்டு எந்த வேலையையும் செய்யாமல் இருக்கிற நிர்வாகிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சில ஊர்களில் ஒரு தெருமுனைப் பிரச்சாரம் நடக்கிறதென்றால், அழைப்பாளரே சேர் போடுவது, ஒலி பெருக்கியை வைப்பது என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சொற்பொழிவையும் அவரே நிகழ்த்துவார்.

இது பரிதாபமான நிலை. இந்த நிலையை மாற்றி மக்கள் அழைப்பாளரோடும் அழைப்பாளர் மக்களோடும் கலந்து ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். எனவே நாம் செய்கிற அனைத்துப் பணிகளையும் ஒழுங்காகவும் முழுமையாகவும் செய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறைகள் யாரிடமிருந்தாலும் சரி செய்து கொண்டு, நிறைகளுக்காக இறைவனைப் புகழ்ந்து, எண்ணத்தில் கலப்பில்லாமல் இறைவனுக்காகவே எல்லாவற்றையும் செய்து ஈருலகிலும் வெற்றியாளர்களாக நமது பயணத்தைத் தொடர்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வழிவகுப்பானாக!