அழைப்பாளர்களை அரவணைப்போம்

அழைப்பாளர்களை அரவணைப்போம்

கே.ஏ. செய்யது அலீ

இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானோர், அதிலும் குறிப்பாகச் சொல்வதென்றால் தமிழகம் முழுவதும் வசிக்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் அதன் தனித் தன்மையையும் மறந்து மூட மௌட்டீகப் பழக்க வழக்கங்களிலும், ஏக இறைவனுக்கு இணை வைக்கும் காரியங்களிலும் மூழ்கிக் கிடந்தனர்.

ஒரு சில தனி நபர்களின் குர்ஆன் மற்றும் ஹதீஸியத் தொடர்புக்குப் பின்னால் ஒன்றும் இரண்டுமாய் இஸ்லாத்தின் தனிச்சிறப்பை விளங்க ஆரம்பித்தனர். அதனைத் தயங்காமல் பிறருக்கு எடுத்துச் சொன்னதன் விளைவு, இன்று பரவலாக தமிழகத்தின் பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் தவ்ஹீத் எழுச்சி பெற்றுள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!

தொடர்ச்சியாக ஏகத்துவப் பாதையில் பயணித்த நமது ஜமாஅத், பல ஏகத்துவப் படைப்பாளிகளை உருவாக்கிக் களம் கண்டது. ஆனால் அந்தப் படைப்பாளிகளில் சிலர் இன்று நம்மிடமில்லை. நம்மிடம் அவர்கள் இல்லை என்பதை விடவும் நமக்கெதிராகவே பலர் செயல்பட்டனர். ஆனாலும் வெற்றி தவ்ஹீத் ஜமாஅத்துக்கே! அதற்குக் காரணம் அரண்போல் மக்களை காத்த நமது தவ்ஹீத் பிரச்சாரகர்கள். நாம் பயணித்த பாதையில் பல கசப்பான உணவுர்களையும் உள்வாங்கிக் கொள்ள நேர்ந்தது. ஆனாலும் அவையனைத்தையும் தாங்கி நின்றோம்.

அந்நஜ்ஜாத், ஜாக், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக என்று பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வளர்ந்த நாம் தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக பிரம்மாண்ட வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். நமது பயணங்களில் தங்கு தடை வந்தாலும் தடை தாண்டி மடை உடைத்த வெள்ளமாகப் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்கிறோம். இவை அத்தனைக்கும் அடிப்படை குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் பிடிவாதமாக நிற்கிற குணமும், எந்த பிரச்சனை வந்தாலும் ஏகத்துவத்திற்கு இழப்பு வராமல் காத்து நிற்கின்ற கொள்கைப் பிடிப்பும் தான்.

இப்படி இந்த ஜமாஅத்தும், இந்த ஜமாஅத்தின் நிர்வாகத்தினரும், இதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் கொள்கையைச் சரியாக நம்புவதற்கும் நம்பிய கொள்கையிலேயே உறுதியாக நிற்பதற்கும் அல்லாஹ்வின் அருளால் உறுதுணையாக நின்றவர்கள் நமது பிரச்சாரகர்கள்.

கிளைகளிலும், மாவட்டத்திலும் ஏன்? அதைத் தாண்டி மாநில அளவிலும் கூட சில பல பிரச்சனைகளைச் சரி செய்வதிலும், கொள்கை மாறாமல் காத்துக் கொள்வதிலும் கவனமாகச் செயல்பட்டவர்கள் நமது பிரச்சாரகர்கள்.

நாம் பல்வேறு ஜமாஅத்துக்களை உருவாக்கி அதற்காகப் பாடுபட்டு இரத்தம் சிந்தி உழைத்திருப்போம். சில பிரச்சனைகளினால் அவர்களிடமிருந்து பிரிந்தும் சிலரைப் பிரித்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அப்போதெல்லாம் மக்களிடத்தில் உண்மை நிலையை விளக்கி மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்து உழைத்தவர்கள் நமது பிரச்சாரகர்கள். இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தினால் நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கிளைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. விளைவு, பிரச்சாரகர்கள் பற்றாக்குறை.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறத்தில் நம்மிடம் இருக்கிற பிரச்சாரகர்களிடமிருந்து பல்வேறு பிரச்சனைகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளன. பிரச்சனைகளை முளைக்கின்ற போதே முடக்கினால் தான் இருக்கிற இடம் தெரியாமல் போகும். இல்லையெனில், சின்னது தானே என்று கண்டும் காணாமல் விட்டுக் கொண்டே சென்றால் நம்மையே ஒட்டு மொத்தமாக அழித்துவிடும்.

ஆம்! இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி கொஞ்சம் ஆழமாகவே அலச வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எதையும் எதிர்பார்க்கவில்லை

தவ்ஹீத் பிரச்சாரத்தை ஆரம்பித்த காலத்தில் மேற்கொண்ட தாயிக்கள் பிரச்சாரங்களுக்குப் போன செய்தியை நம்மில் பலர் நமக்குச் சொல்வதுண்டு.

பயணச் செலவுக்காக பணத்தைக் கையில் வாங்காமல், போய் சேரும் இடத்திற்கு டிக்கட்டை எடுத்துக் கொடுக்கச் சொல்லி, அதை வைத்துக் கொண்டு பிரயாணம் செய்து மக்களுக்குப் பிரச்சாரம் செய்த காலம் அது!

போலி சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களிடமிருந்து முற்றிலும் மாற்றமாக, நமது பிரச்சாரகர்கள் பேசும் பேச்சுக்கு காசு பணம் வாங்காமல் பிரயாணச் செலவைக் கூட தந்தால் வாங்கிக் கொண்டு, தராவிட்டால் மனப்பூர்வமாக தனது சொந்த செலவிலேயே இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இன்றளவும் கூட இதுபோன்ற பல பிரச்சாரகர்கள் பிரயாணச் செலவை வாயினால் கேட்டு வாங்குவதற்கு வெட்கப்பட்டு, தந்தால் வாங்கிக் கொண்டும் தராவிட்டால் மௌனமாக வீடு திரும்பும் நிலையையும் நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

அதே நேரத்தில் நமது ஜமாஅத்தில் பிரச்சாரகர்களாக இருப்பவர்களின் நிலையை சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களோடு, மவ்லவிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமிருக்கும்.

சுன்னத் வல் ஜமாஅத் மவ்லவி ஒருவர், அதுவும் தொழுகை மட்டும் நடத்துகின்ற, வேறெந்த வேலையும் செய்யாத ஒருவர், வேறெந்த வேலையும் என்றால், நமது பிரச்சாரகர்களைப் போன்று நிர்வாகத்தை கவனித்தல், தெருமுனைப் பிரச்சாரம், பல்வேறு வகையிலான பிரச்சாரம் செய்தல், வசூல், சுவரொட்டி ஒட்டுதல், பள்ளியை சுத்தம் செய்தல், சமுதாயப் பிரச்சனைகள்… என்று இது போன்ற மக்களும் நிர்வாகிகளும் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாத சுன்னத் ஜமாஅத் மவ்லவிகளில் சிலர் கார் வைத்துள்ளனர். பலர் சொந்த வீடு வாசல், பங்களா என்று தனது அடிப்படைத் தேவைக்கும் மேலாக அபரிதமாக அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். அதுபோன்று நமது பிரச்சாரகர்களில் எவருமே இல்லை. வேண்டுமானால், ஏற்கனவே இந்த வசதிகளைப் பெற்றவர் பேச்சாளராக மாறியவர்கள் நம்மில் சிலர் இருக்கலாம்.

ஆனால் மக்களிடம் முழுநேரமாகப் பிரச்சாரம் செய்யத் தங்கள் வாழ்க்கையை இதில் தொலைத்துக் கொண்ட பிரச்சாரகர்களில் எவராவது ஒருவர், இந்தப் பணியை மேற்கொண்டு எல்லா வசதிகளையும் பெற்றவர்கள் உண்டா? இல்லவே இல்லை.

நமது ஜமாஅத்தில் அங்கம் வகிக்கிற எந்தப் பிரச்சாரகரும் தனது பேச்சுக்காக காசு பணம் வாங்கியதில்லை. அப்படி வாங்குபவர் நமது ஜமாஅத்தில் இருக்கவும் மாட்டார். அல்லாஹ் அவரை நம்மிடமிருந்து கழற்றியிருப்பான். அல்லது மக்களே அது போன்றவர்களைத் தூக்கி எறிந்திருப்பார்கள்.

எனவே எதனையும் எதிர்பார்த்து, எதனையும் என்றால்… பொருளாதாரம், புகழ், பட்டம், பதவி போன்ற சிற்றின்பங்களையோ பேரின்பங்களையோ எதிர்பாராமல் பிரச்சாரப் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களையே அல்லாஹ் இதுவரைக்கும் நம்முடன் வைத்திருக்கிறான். இனியும் கடைசி வரைக்கும் அதுபோன்றவர்களை இந்த ஜமாஅத்திற்குத் தந்துதவ இறைவனை வேண்டுகிறோம்.

ஆரம்ப காலமும் இன்றைய நிலையும்

ஆரம்ப காலங்களில்…., நமது பிரச்சாரகர்கள் ஒரு புறம் எதையும் எதிர்பார்க்காவிட்டாலும் மறுபுறம் நிர்வாகிகளும் தனி நபர்களும் தேவையான அனுசரணைகளையும் பிரச்சாரகருக்குத் தேவைப்படுகிற அடிப்படை பொருளுதவியையும் செவ்வனே செய்யத் தான் செய்தார்கள்.

போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் போல் நமது பிரச்சாரகர்களும் செல்லவில்லை. நமது தவ்ஹீத் மக்களும் அவர்களைப் போன்று கஞ்சத்தனமாகவோ அல்லது பொருளாதார மன உலைச்சலையோ இன்ன பிற எரிச்சலையோ கொடுக்கவில்லை. அவர்கள் மனதைக்  கெடுக்கவில்லை.

ஆனால் இன்று பிரம்மாண்ட வளர்ச்சியடைந்த நாம், அந்த வளர்ச்சிக்கு அர்த்தம் என்ன தெரியுமா? மேன் பவர் என்று சொல்லக்கூடிய மனித வளம் (அதிகமான மக்கள் இந்தக் கொள்கையையும் இந்த ஜமாஅத்தையும் ஏற்றுக் கொள்ளுதல்), எந்தப் பிரச்சாரத்தையும் அல்லது நிகழ்ச்சியையும் நடத்துவதற்குத் தேவையான பொருளாதார, அறிவு வளர்ச்சி. இன்னும் பல்வேறு வகையான வளர்ச்சி. இத்தனையும் பெற்றுக் கொண்ட நாம், பிரச்சாரகர்களைப் பேணுவதில் அக்கறை செலுத்துதில்லை.

மாறாக, பிரச்சாரகர்களுக்கு மன உளைச்சலைக் கொடுப்பதாகப் பல பிரச்சாரகர்களும், நமது ஜமாஅத்தின் சார்பாக நடைபெறுகின்ற தவ்ஹீத் கல்லூரிகளில் படிக்கிற காலத்திலேயே பல்வேறு ஊர்களுக்குச் சென்று ஜும்ஆ, தெருமுனை, குர்ஆன் வகுப்பு போன்ற பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிற மாணவ பிரச்சாரகர்களும், மாணவர்களாக பயின்று இன்று எதாவது ஊர்களில் முழுநேர ஊழியர்களாகப் பணியிலிருக்கும் பிரச்சாரகர்களும் வேதனைப்படுவதுண்டு.

அவர்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து பார்த்த வகையில் முழுக் குற்றமும் நிர்வாகத்தின் மேல் சொல்ல முடியாது. பல நிர்வாகத்தின் மேல் இருந்தாலும் சில பிரச்சாரகர்கள் மீதும் இருக்கத் தான் செய்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே நிர்வாகத்தினருக்கும் பிரச்சாரகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மத்தியில் சரியான புரிந்துணர்தல் வந்துவிட்டால் எந்தப் பிரச்சனைகளையும் எளிதாகக் களையலாம். அல்லது களையெடுக்கலாம்.

இணைவைப்பு, பித்அத்திற்கு வழிவகுத்த சம்பளம் – கிம்பளம்

நமது நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பேச்சாளர்களுக்கோ, இன்னபிற அமைப்பின் பேச்சாளர்களுக்கோ ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது ஜமாஅத்தின் பேச்சாளர்களுக்கு மட்டுமே எந்த விலையும் இல்லை. முன்னர் சிலருக்கு நிர்ணயித்திருக்கலாம். அவர்கள் இன்று நம்மிடமில்லை என்பதே நமக்குரிய தனிச்சிறப்பு. எனவே விலை பேசப்பட்டு அதற்குத் தலை சாய்த்த எவரும் நம்மிடமில்லை.

மத்ஹப்வாதிகள் அன்றிலிருந்து இன்று வரை எந்த ஆலிமுக்கும் சரியாகச் சம்பளம் கொடுத்ததே இல்லை. இன்று வேண்டுமானால் ஒரு நட்சத்திரப் பேச்சாளர் நல்ல சம்பளத்தில் இருக்கலாம். ஆனால் அவரும் கூட கிம்பளமில்லாமல் இருக்க மாட்டார். இரண்டாயிரம் ரூபாய் பேரம் பேசி வேலைக்குச் சேரும் போதே பள்ளிவாசலின் முத்தவல்லிகளும் நிர்வாகத்தினரும் மறக்காமல் சொல்லி விடுவார்கள்: ஆலிம்ஷாவுக்கு கிம்பளம் முழுவதுமாக ஒதுக்கப்படும் என்று!

கிம்பளம் என்றால் என்ன? அதுதான் தகடு, தாவிசு (தாயத்து) அணிவித்தல், பேய் பிசாசு கழித்தல், பில்லி சூனியம் வைத்தல் – எடுத்தல், ஓதிப் பார்ப்பதன் மூலம் தனது ஆன்மீக பலத்தை நிறுவுதல், தர்ஹாக்களில் அப்படி… இப்படி…ன்னு ஏதாவது செய்தல், மறக்காமல் செத்தவருக்கு ஃபாத்திஹா ஓதி பையை நிரப்புதல், இதுவெல்லாம் போதாது என்று சொல்லி, வருடந்தோறும் புகழ் மாலை ஓதி பூமான் நபிக்குப் புகழ் சேர்க்கிறோம் என்ற பெயரில் அரபியில் எழுதப்பட்டிருக்கும் அண்டப் புளுகை எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களின் ஹிட் பாடல்களில் மெட்டு எடுத்து ஓதுதல், ரமளானில் தராவீஹ் தொழுவித்தல், இப்படி இன்னும் பல இணை வைப்புக் காரியங்களையும் பித்அத்தான, இஸ்லாத்தில் இல்லாத நவீன நூதனப் பழக்க வழக்கங்களையும் செய்து வாய்க்கு ருசியாக சாப்பிடுவதும், வயிற்றுப் பிழைப்பை நடத்துவதும், பைக், கார், பங்களா என்று சேர்ப்பதும் தான் கிம்பளமாகும்.

இந்தக் கிம்பளத்தை நாம் பலவாரியாகக் கிண்டல் செய்வதும், அதனால் சில சு.ஜ. ஆலிம்கள் திருந்திய பலனும் உண்டு. இந்தச் செய்தியை இங்கே சொல்லக் காரணம் என்னவெனில், சு.ஜ. ஆலிம்களை விமர்சனம் செய்யும் போது இந்தக் காரணத்தையும் சொல்லத் தவற மாட்டோம்.

சு.ஜ. பள்ளிவாயிலை நிர்வாகம் செய்யும் முத்தவல்லிகளும் நிர்வாகிகளும் மக்களும் அவர்களது ஆலிம்களின் அடிப்படைப் பொருளாதாரத்தைக் கூட சரியாகக் கொடுக்கவில்லை. அதனால் மேற்சொன்ன, மார்க்கத்திற்கு மாற்றமான அத்தனை காரியத்தையும் செய்து சம்பாதித்தனர். வயிற்றுப் பிழைப்பை நடத்தினர் என்று குற்றம் சுமத்தினோம்.

ஆனால் இன்று நாமும் அதே நிலைக்குப் படிப்படியாகச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது மிகையல்ல. தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தினர் கீழ் மட்டத்தில் உள்ளவர்களோ, மேல் மட்டத்தில் உள்ளவர்களோ இதை உணர்வதாகத் தெரியவில்லை. பிரச்சாரகர்களின் அடிப்படையைக் கூட நிறைவேற்றிக் கொடுக்க முடியாத இந்தப் பொருளாதாரக் கொள்கை நமது பிரச்சாரகர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கப் பிரச்சாரத்தை விட்டும் மாற்றி விடுமோ என்று நாம் அஞ்ச வேண்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து சரி செய்வார்களா? இப்படிச் சொன்னவுடன் என்னமோ சுயமரியாதை இல்லாமல் பேசியதாக நினைத்துவிடக் கூடாது. அனைத்து பிரச்சாரகர்களின் சுய மரியாதையும் பேணப்பட வேண்டும் என்பதே நமது அவா.

சுயமரியாதையும் சம்பளமும்

பிரச்சாரகர்களில் சிலர் சம்பளம் வாங்குவதை சுயமரியாதைக்கு உகந்ததாக இல்லை என்று கருதுபவரும் உண்டு. சிலர் அதை சுய மரியாதைக்கு இழுக்கென்று  பிறருக்குப் பிரச்சாரம் செய்வதுமுண்டு. இதே போன்ற மனநிலை மக்களிடமும் இருக்கிறது. ஒரு சிலர் சம்பளம் வாங்குவதை இழி செயலாகப் பார்ப்பார்கள். அதிகமானோர் சம்பளம் கொடுப்பதை வரவேற்பார்கள். இந்த விஷயத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் பிரச்சாரம் செய்வதற்காகச் சம்பளம் வாங்குவதை மார்க்க அடிப்படையில் தவறு என்று சொல்ல முடியாது. இதுவும் கூட சில நேரத்தில் ஒருவரின் சுய மரியாதையை சீண்டிப் பார்க்கத் தவறுவதில்லை. சம்பளத்தைப் பிரச்சாரகர்கள் கேட்குமளவுக்கு கிளை, மாவட்ட, மாநில நிர்வாகம் நடந்து கொள்ளக் கூடாது. சரியான தேதியில் கேட்காமலேயே சம்பளத்தைக் கொடுத்துவிட வேண்டும். நாமாக சம்பளத்தைக் கொடுத்து விடும் போது அவர் கேட்க மாட்டார். அவர் கேட்கத் தேவையுமில்லை என்றாகி விடும். இதைப் பற்றி குர்ஆன் சொல்வதைக் கேளுங்கள்.

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.

அல்குர்ஆன்: 9:122

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.

ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். இத்தகையோருக்கு வழங்குவதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும்.

அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யும் வணக்கத்துக்குக் கூலியாகாது.

மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன்: 2:273

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வதைக் குறை கூறக்கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுய மரியாதையை இழப்பதோ கூடாது.

எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த மன நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

அவசியம் கருதி தேவைகளை நிறைவேற்றுங்கள்

பிரச்சாரகர்களில் இரண்டு வகையினர். ஒன்று நிரந்தர பிரச்சாரகர். இன்னொன்று தேவைக்குத் தகுந்தாற் போல் வந்து செல்கின்ற பிரச்சாரகர்.

நிரந்தரப் பிரச்சாரகராக இருப்பவர், திருமணம் ஆகாதவராக இருந்தால், அவரது தேவைகள் குறைவாகத் தான் இருக்கும். எனினும் தனது உணவு, உடை என சொந்தத் தேவைக்காகவும், இத்துடன் தனது தாய் தந்தை குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டிய தேவைக்காகவும் அதிகமான பொருளாதாரம் தேவைப்படுகின்றது.

நிரந்தரப் பிரச்சாரகராக இருப்பவர், திருமணம் முடித்தவராக இருந்தால், அவரது தேவைகள் பலவாறாக இருக்கும். திருமணத்திற்கு முன்னால் தனக்கும், தனது பெற்றோர்களுக்கும் செலவளித்து கவனித்து வந்தவர் திருமணத்திற்குப் பின்னால் தனது மனைவிக்கும் சேர்த்துச் செலவளிக்கும் சுமை கூடுகிறது. குழந்தை பிறந்தால் மேலும் பொருளாதாரச் சுமை கூடுகிறது.

இத்தனையையும் சமாளிக்க அவர் சொந்தத் தொழில் செய்பவராக இருந்தால் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அப்படி சொந்தமாகத் தொழில் செய்து கொண்டு இருப்பவரால் முழு நேர பிரச்சாரகராகவும் இருக்க முடிவதில்லை. இப்படியொரு சிக்கல் நமது பிரச்சாரகர்களில் அதிமானோருக்கு இருக்கத் தான் செய்கிறது. இதை வெளிப்படையில் சொல்லாமல் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர் என்பதுவே நிதர்சன உண்மை. எல்லா மட்டத்திலும் இந்த நிலை உணர்ந்து நிர்வாகத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.

நிரந்தரமில்லாத, தேவைக்குத் தகுந்தாற் போல் வந்து செல்லும் அழைப்பாளராக இருந்தால், அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட நமது நிர்வாகத்தினர் சரியாகச் செய்து கொடுப்பதில்லை. இந்தக் கருத்தை நமது ஜமாஅத்தின் நிறுவனரும் தற்போது மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவருமான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த பொதுக்குழுவில், பிரச்சாரகர்கள் விஷயத்தில் நாம் சரியாக நடக்கவில்லை என்பதையும், இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பயணச் செலவும் பராமரிப்பும்

ஒருவர் ஒரு ஊரிலிருந்து வருகிறார் என்றால், அவருக்கு வெறுமனே பேருந்துச் செலவு மட்டுமே கொடுக்கக்கூடாது. அவர் சாதாரணக் கட்டண பஸ் கிடைக்காமல் ஒரு வேளை உயர் கட்டண பேருந்தில் வர நேரிடலாம். வரும் போது பயணத்திலேயே காலை உணவு உட்கொள்ளும் நிலையில் வரலாம். அதாவது அதிகாலை புறப்பட்டு 4 அல்லது 5 மணி நேர பயணத் தொலைவில் வருகிறவர் காலை உணவை பஸ் இடை நிறுத்தத்தில் தான் சாப்பிட்டிருப்பார் என்பதைக் கூட நிர்வாகிகளால் உணர முடியாதா?

அதே போன்று வரும் வழியில் குளிர்பானமோ அல்லது டீயோ குடித்து சாப்பிட்டிருந்தால் அதற்கும் சேர்த்துத் தான் பயணச் செலவைக் கொடுக்க வேண்டும். வருவதற்கு 50 ரூபாய், போவதற்கு 50 என்று கச்சிதமாய் கணக்குப் பார்ப்பதில் நமது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டக் கூடாது. தாரள மனமாய் கொடுக்க வேண்டும். அழைப்பாளன் தனது கையிலிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை போடுவான். ஒவ்வொரு தடவையும் போட முடியுமா?

அப்படிக் கொடுக்க முடியவில்லையெனில் நீங்களே உங்களது பகுதியில் நன்றாகப் பேசுகிற ஒருவரைத் தேர்வு செய்து ஜும்ஆவையும் மற்ற பிரச்சாரங்களையும் செய்யலாம். வெளியிலிருந்து பிரச்சாரகர்கள் வர வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை சரியாகச் செய்யுங்கள்.

சம்பளப் பிரச்சனைக்குச் சரியான வழி

ஒரு பிரச்சாரகருக்கு சம்பளம் வாங்குவதற்கு மனம் ஒத்துவரவில்லை என்றால் அது அவரது தனி விருப்பம். அதனால் சம்பளம் வாங்குகிற பிறரை மட்டமாகக் கருதுவது, பேசுவது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைத் திணிப்பதாகி விடும்.

இவ்வாறு கருதுபவர்கள் கிளை, மாவட்டத்தில் பிரச்சாரகராக இருப்பவருக்கு நிரந்தர வருமானம் வருவதற்கும், அதே நேரத்தில் அவரது பிரச்சாரப் பணியை பாதிக்காமல் இருக்கும் வகையிலும் ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொடுக்கலாம். அவரும் கற்றுக் கொள்ளலாம். அல்லது ஜமாஅத்தினரில் எவராவது நிறுவனமோ தொழிலோ நடத்தினால் அதில் இவர் சார்பாக கொஞ்சப் பணத்தை கடனாகக் கொடுத்து கேஷ் பார்ட்னராக, பங்குதாரராகச் சேர்த்து அதற்குத் தகுந்த சதவீத லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

பிரச்சாரப் பணி போக நேரம் மீதமிருந்தால், அதற்குத் தகுந்த உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான முயற்சிகளை செய்து கொடுக்கலாம். ஏதோ ஒரு வழியில் அவரது குடும்பத்தையும் அவரையும் பாதுகாக்கும் பொருளாதார உதவித் திட்டத்தை செய்து கொடுத்தால் ஓரளவுக்கு சம்பளப் பிரச்சனை சரியாகி விடும்.

கச்சிதமாய் கணக்குப் பார்க்கும் தவ்ஹீத் ஜமாஅத்

நமது ஜமாஅத்தைப் பொறுத்தளவுக்கு, எல்லா விஷயத்திலும் கணக்குப் பார்த்துச் செலவழிப்பது கீழ் மட்டதிலிருந்து மேல் மட்டம் வரைக்கும் உள்ள ஒரே மாதிரியான ஒற்றுமைப் பண்பாகும். இதில் விதி விலக்காக ஒரு சில ஊர்கள் இருக்கலாம்.

அதற்காக, மாநாடு நடத்த எவ்வளவு செலவாகிறது? மாநாட்டு விளம்பரத்திற்கு இவ்வளவா? இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா? இந்தப் பணத்தை வைத்து எத்தனை மீட்டிங் போடலாம்! எத்தனை பள்ளிவாசல் கட்டலாம்! எவ்வளவு மார்க்க சமுதாயப் பணிகளைச் செய்யலாம் என்று யோசிக்கின்றனர். இது தவறான கருத்தாக்கமாகும்.

இப்படித் தான் ஒரு காலகட்டத்தில் தனிப்பள்ளி வேண்டும் என்ற சிந்தனை வரும் போது நம்மில் பலர் இந்தச் செலவு தேவை தானா என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று அது முற்றிலும் தவறாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தனிப்பள்ளி வந்த பிறகு நாம் எழுச்சி பெற்றிருக்கிறோம். பிரச்சாரக் களம் அமைத்துப் பல்வேறு பிரச்சாரத்தை மேற்கொள்கிறோம். அதுமாதிரி தான் மாநாடு நடத்துவதில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. இந்தச் சமூக மக்கள் பலனடைவதோடு மாநாட்டுச் செலவை ஒப்பிட்டால் யானைப் பசிக்கு சோளப்பொறி தான் எனலாம்.

இது போலத் தான் பிரச்சாரகர்கள் விஷயத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். பிரச்சாரகர்களின் சம்பளம் மற்றும் இதர தேவைகளிலும் இப்படித் தான் யோசிக்க வேண்டும். கிளைகளிலும் மாவட்டத்திலும் மாநிலத்திலும் பிரச்சாரகர்களுக்கு தாராளமாகச் செலவு செய்வதற்கு, தாராளமாக என்றால் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தேவைக்குத் தகுந்தாற் போல பொருளாதாரத்தை அமைத்துக் கொடுப்பது தான் சரியான செயல் திட்டம். அதனால் எதற்கெல்லாமோ செலவழிக்கிற நாம் தேவையில்லாத கணக்குப் பார்த்து பிரச்சாரகர்கள் விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியாததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

ஒரு பிரச்சாரகர் தான் தங்கியிருக்கும் ஊரிலிருந்து, பிரச்சாரம் செய்யும் ஊருக்கு வருகிறார் என்றால், அவரை அழைத்து வர யாராவது ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். முடியுமானால் நன்கு அறிமுகமானவரே அழைத்து வர வேண்டும். யாரும் வந்து அழைத்துச் செல்ல வசதி வாய்ப்புகள் குறைவு என்றால், தொலைபேசியின் மூலமாக வழிகாட்டலாம். இதில் எதையும் செய்யாமல் அவராக வந்து கொள்வார் என்று குத்துக்கல்லாக இருக்கும் நிர்வாகிகள் நம்மில் எத்தனை பேர்? கடைசியில் அவருக்குச் சரியாக வழிகாட்டாமல் 11 மணிக்கு வந்தவர் அந்த ஊரைப் பல சுற்று சுற்றி விட்டு இடம் தெரியவில்லை என்று சொல்லி 2 மணிக்கு வந்து சேர்ந்த சம்பவங்களும் உண்டு. இதனை நிர்வாகம் சரி செய்து கொள்ள வேண்டியது அவர்களது கடமை.

அதே நேரத்தில் அழைப்பாளராகச் செல்பவர் எதனையும் விசாரிக்காமல் தேவையில்லாமல் 78 ஊரைச் சுற்றி சுற்றி, கடைசியில் ஒரு வழியாக வந்து சேர்ந்தும் விடுவார். சில வேளை சேராமல் ஜும்ஆ முடிந்ததற்குப் பிறகும் வருவார்.

இந்தப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, புறப்படும் முன்பே, நாம் எந்த மாவட்டதில் எந்த ஊருக்குச் செல்ல இருக்கிறோம் என்பதையும், எந்த ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் சென்றால் சரியான நேரத்திற்குப் போய்ச் சேர முடியும் என்பதையும், எந்த பெயரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதையும், முடிந்தால் நாம் செல்லவிருக்கும் பஸ், 55-ஏ, 15-பி என எதுவும் குறிப்பிட்ட எண்ணைக் கொண்டு இருக்குமா? நாம் போகும் ஊரின் வண்டி நம்பர் என்ன என்பன உட்பட அனைத்தையும் தொலைபேசி வாயிலாகக் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நமது பயணத்தைப் பற்றி நிர்வாகிகளிடம் மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்திக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதாவது நமது பயணத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் ஒரு அழைப்பாளரிடம் இயல்பாக இருப்பது அவசியத்திலும் அவசியம். இதை ஒவ்வொரு அழைப்பாளரும் சரி செய்து கொண்டால் பிரச்சனை சரியாகி விடும்.

முழு நேர பிரச்சாரகரும் நிர்வாகமும்

நமது ஜமாஅத்தில் பிரச்சாரகர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே நடக்கும் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், கோபங்கள், உரசல்கள் எங்கு நடக்கிறது என்று கவனித்தால், பெரும்பாலும் நிரந்தரமாகப் பணிபுரியும் பிரச்சாரகர்களிடம் தான்.

ஏன் இப்படியொரு அவலநிலை என்று ஆழமாக அலசினால், இதற்கான காரணம் அவர்களில் இரு சாராருமே தான்.

பிரச்சாரகர்களாகப் பணி புரியப் போகிறவர்கள், ஒரு ஊருக்குப் போனவுடன் எதையும் எதிர்பார்க்காமல் காரசாரமாக அனைத்துப் பணிகளையும் தானே முன்வந்து இழுத்துப் போட்டுச் செய்வார். பிறகு கொஞ்ச காலம் சென்றவுடன் அவருடன் அவரது அபிமானிகளாக ஒரு கோஷ்டி சேர்ந்து விடும். அல்லது சேர்த்து விடுவார். இப்போது பிரச்சனை பூதாகரமாகிவிடுகிறது. இந்த நிலையில் அந்தக் கிளைக்குச் சொந்தமான மக்கள், இனி ஒருபோதும் நிரந்தர பிரச்சாரகர் தேவையில்லை. தேவைக்குத் தகுந்தாற்போல் ஒரு பிரச்சாரகரை அழைத்துப் பிரச்சாரம் செய்தால் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இதனால் ஏராளமான மார்க்க சமூகப் பணிகள் தேங்கி விடுகின்றன. இப்போது அந்தக் கிளையின் நிலை, கழுதை தேய்ந்து கட்டெறும்பு தான்.

அதே நேரத்தில் சில இடங்களில் கிளை நிர்வாகிகளாக இருப்பவர்கள், ஒரு பிரச்சாரகர் வந்த ஆரம்பத்தில் அவருடன் மெல்ல மெல்லப் பழகுவார்கள். உடனே அனைத்து உரிமைகளும் அவருக்குக் கொடுத்து விடவும் மாட்டார்கள். இவரும் எடுத்துக் கொள்ளவும் மாட்டார். இப்படியே தங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒட்டு உரசல் அதிகமானவுடன் இரு சாராரும் சம உரிமை கொடுக்கிறோம் என்ற பெயரில் மரியாதை குறைத்து அழைத்துப் பேசுவார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு வகையில் அந்நியோன்னியமாக வந்ததும் திடீரென்று இரு சாராரில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் ரோஷம் வந்துவிடும். பிறகு அந்தச் சண்டையை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதில் அந்தப் பிரச்சாரகர் கொஞ்சம் இறங்கிப் போனாலோ அல்லது கிளை நிர்வாகிகள் இறங்கிப் போனாலே தவிர கிளை கொஞ்சம் நஞ்சமாவது மிஞ்சும். இல்லையென்றால் அதோ கதி தான்.

இன்னும் சில ஊர்களில் பார்த்தால், சில நிர்வாகிகள் பிரச்சாரகர்களிடம் ஆரம்ப காலத்திலிருந்தே ஒழுங்காகப் பழகாமல், இவரும் பேசுவதற்கே காசு கேட்கும் நிலையிலேயே இருப்பதால், இரு சாராருக்கும் சரியான புரிந்துணர்வில்லாமல் நேரடியாக எதையும் பேசும் கேட்கும் பக்குவமில்லாமல் பிறரிடமே பிரச்சனைகளைப் பேசிப் பேசி ஒரு கட்டத்தில் அது எரிமலையாய் வெடித்துச் சிதறும் போது எதிர்பாராத பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துவண்டு.

இன்னும் சில ஊர்களில் நிர்வாகிகள், பிரச்சாரகர்களை சரியாக அரவணைக்காமல் ஆரம்பத்திலிருந்தே அலைக்கழிக்க வைப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இது போன்றே சில பிரச்சாரகர்களும் நிர்வாகத்தினரிடம் நடப்பதுண்டு.

பிரச்சாரகர்களில் சிலர் யதார்த்தத்தை உணராமல் எதற்கெடுத்தாலும் குற்றங்குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நிர்வாகத்தினருக்கு எரிச்சலாகத் தான் இருக்கும். அதே போன்று நிர்வாகத்தினர்களில் அல்லது பொது மக்களில் சிலரும் இதே தவறை, எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு குறையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அவருக்கும் எரிச்சலாக இருக்கும்.

எனவே மனிதன் என்ற முறையில் ஏற்படும் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு, அதைச் சரி செய்ய மென்மையாக நடந்து கொண்டால் பிரச்சனைகள் ஏற்படாது. பிரச்சனைகள் ஏற்பட்டால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இதுபோன்று நம்மில் யார் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும்.

சின்ன சின்ன பிரச்சனைகளை ஆங்காங்கே சரி செய்து விட்டோமென்றால், குர்ஆன், ஹதீஸ் என்ற இரு சக்கரப் பாதையில் நமக்கு மத்தியில் இருக்கும் விலக்கத்தையும் கலக்கத்தையும் உடைத்தெறிந்து இலக்கை நிச்சயம் எட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்!