அழைப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் அடித்தளத்தில் ஆழமான வேர்கள் பிடித்து வண்ண வண்ண இலைகள் துளிர்த்த, கனிகள் குலுங்குகின்ற, வானளாவிய கிளைகள் பரப்பி அண்டை மாநிலங்களிலும் விரிந்து நிற்கின்ற பெரும் மரமாகும்.
நம்முடைய ஜமாஅத்தின் கிளைகள் ஆள் நடமாட்டமும் அரவமும் இல்லாத வனத்தில் அமையவில்லை. நம்முடைய கிளைகளும் அதன் அழைப்பு மையங்களும் கடை வீதிகளிலும் அடர்த்தியாக முஸ்லிம்கள் வசிக்கின்ற குடியிருப்புப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன. நமது மையங்களைச் சுற்றிலும் சூழவும் குடும்பங்கள் வாழ்கின்ற முஹல்லாக்கள்.
குடும்பம் என்பது, வயதுக்கு வராத விடலைப் பெண்கள், வயதுக்கு வந்த கன்னியர், திருமணம் முடித்த இளம் பெண்கள் போன்றோர் இணைந்த ஒன்றாகும். இவர்கள் எப்போதும் வீட்டுக்குள்ளேயே கட்டுண்டு கிடக்க மாட்டார்கள். அடுப்படி சமையல், உணவு பரிமாற்றம் முடிந்து மாலை நேரங்களிலும் இரவு வேளைகளிலும் காற்று வாங்க திண்ணையில் வந்து அமர்வார்கள். பகல் வேளைகளில் துவைத்த துணிகளைக் காயப் போட மாடிகளுக்கும் கொள்ளைப் புறங்களுக்கும் வருவார்கள்.
நம்முடைய ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் உறுப்பினர்களிலும் பொறுப்பு நிர்வாகிகள் உட்பட அத்துணை பேரும் இளைய தலைமுறையினர்; இளவட்டங்கள்.
இத்தகைய வாலிப வட்டங்களை வேட்டையாடுவதற்கு ஷைத்தான் தனது விஷ வலைகளை விசாலமாக விரித்து வைத்திருக்கின்றான்.
ஊரில் உள்ளவனை ஒழிப்பதற்கு ஒரு ஷைத்தான் முனைகிறான் என்றால் ஓர் ஏகத்துவவாதிக்கு ஒன்பது ஷைத்தான்கள் முற்றுகையிட்டு நிற்பார்கள்.
ஏனெனில் இவன் ஒருவன் தான் இஸ்லாத்தைத் தூய வடிவில் நிலைநாட்டப் புறப்பட்டவன்; அதற்காகப் பாடுபடுபவன்.
இவன் ஒழுக்கத்தின் ஒட்டுமொத்த உருவமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, நாணயத்தின் மறுபக்கமாக, ஏகத்துவத்தின் எஃகுக் கோட்டையாக, ஊருக்கு ஓர் உதாரண புருஷனாகத் திகழ்கின்றான்.
அதனால் இவனை வீழ்த்த ஷைத்தான் தனது படை பரிவாரங்களுடன் சுற்றி வளைக்கின்றான்.
“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
அல்குர்ஆன் 7:17
இந்த வசனத்தின்படி வலது, இடது என்று அனைத்துப் பக்கங்களிலும் ஷைத்தான் தாக்குதல் தொடுக்கின்றான். இதில் அவன் வீழ்ந்து விட்டால், “இவன் ஒன்றும் வித்தியாசமானவன் இல்லை, பத்தோடு பதினொன்று; அத்தோடு இவனும் ஒன்று’ என்ற எண்ணத்தை உருவாக்கி மற்றவர்களை தவ்ஹீதுக்கு வரவிடாமல் செய்வதற்கு ஷைத்தானுக்கு இது ஓர் அழகிய ஆயுதமாகி விடுகின்றது.
அதனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயீக்கள் ஷைத்தானின் இந்த விஷ வலையில் வீழ்ந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். உறுதிப்பாட்டுடன் நிற்கும் உறுதியாளர்களிடம் ஷைத்தானின் சதி வேலை பலிப்பதில்லை. அவனது சக்தி பாய்வதுமில்லை.
எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் 15:42
இதன்படி ஷைத்தானின் விளையாட்டு இந்த ஏகத்துவவாதிகளிடம் ஒருபோதும் எடுபடுவதில்லை.
பார்வை தடுமாற்றம்
நம்முடைய அழைப்பு மையங்களில் பணிபுரிகின்ற தாயீக்கள், எல்லாம் வல்ல அல்லாஹ்வை பயந்து, தங்களின் பார்வைகள் தடுமாற்றத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். பார்வை தடுமாறினால் பாதம் தடுமாறும். பாதை தடம் மாறி விடும். கண் போன போக்கில் கடிதம் போகும்; பின்னர் கால் போகும்.
இக்காலத்தில் கடிதம் போவதில்லை. கைபேசிகளி-ருந்து பாய்கின்ற காந்த அலைகளில் காதல் மொழிகள் பயணமாகின்றன; பரிமாறுகின்றன.
காதல் என்பது என்ன? காமத்தின் மறுபெயர் தான் காதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6243
ஏகத்துவத்தின் எஃகுக் கோட்டையாகத் திகழ்கின்ற ஓர் இளைஞனிடம் ஷைத்தான் காம வலைகள் விரித்து, எளிதாக ஒரு ஓட்டை போட்டு மிக லாவகமாக, தனக்கு லாபமாக அவனைச் சாய்த்து சரித்து விடுகின்றான். அவனைச் சந்தி சிரிக்க வைத்து விடுகின்றான். அதனால் தாயீக்கள், நிர்வாகிகள் ஷைத்தானின் சதி வலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நமது ஜமாஅத்தில் கண்ணியமாக இருந்தவர்கள், ஷைத்தானிய கன்னி வலையில் கவிழ்ந்து தான் காணாமல் போனார்கள். அதனால் கொள்கைவாதிகள், குறிப்பாக ஏகத்துவ அழைப்பாளர்கள், நிர்வாகிகள் போன்றோர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வழிதவறுவதற்குரிய வாசல்கள் என்னென்ன என்பதைக் கவனத்தில் கொண்டு அவற்றை அடைக்க வேண்டும்.
வழிதவறுகின்ற வாசல்கள்
- செல்போன்
வெட்டிப் பேச்சிலிருந்து விபச்சாரம் வரை கொண்டு போகின்ற கொடிய சாதனம் செல்போன் தான். இந்த போனில் பெண்களின் குரல்களில் உள்ள இயல்பான நளினம், நயம் ஓர் அபாயச் சங்கு.
மார்க்கக் கேள்வி கேட்டுத் தான் முதலில் தொடர்பு தொடங்கும். அப்புறம் குசலம் விசாரிப்புகள் தொடங்கி, அந்தப்புற அழைப்பில் போய் முடியும். அதனால் கேள்விக்குப் பதில் சொல்வதாக இருந்தாலும் சரி, குடும்பப் பிரச்சனையைச் சரி செய்யும் பஞ்சாயத்துக்களானாலும் சரி! பேசும் போது வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்று நிற்க வேண்டும்.
- பஞ்சாயத்து
குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கோரி நமது ஜமாஅத் தலைமையை நோக்கியும், கிளைகளை நோக்கியும் மனுக்கள் படையெடுத்து வருகின்றன. வேறெந்த ஜமாஅத்தையும் விட இவர்களிடம் நீதி, நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் பெருகி வருகின்றது. அந்தப் பஞ்சாயத்துக்கள் பல பரிமாணங்களைக் கொண்டவையாக அமையும்.
சில சமயங்களில் கணவனின் தாம்பத்திய பலவீனம் அல்லது வேறு ஏதேனும் பலவீனங்களைப் பற்றி மனைவி மனம் திறப்பாள். அதை ஒரு பிளாக்மெயில் ஆயுதமாக ஆக்கி, படுகுழியில் தள்ள ஷைத்தான் முயற்சிப்பான். அதனால் இந்தப் பஞ்சாயத்துக்களில் கவனமாக இருக்க வேண்டும். பஞ்சாயத்து என்று வருகின்ற போது ஒரு நிர்வாகி மட்டுமே இருந்து விசாரிக்கக் கூடாது. இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இருந்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை முடிவெடுத்துள்ளது. அதையே அனைத்து கிளைகளிலும் பின்பற்ற வேண்டும்.
- பெண்கள் மதரஸாக்கள்
பெண்கள் மதரஸாக்கள் நடத்துவோர் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஷைத்தான், தவ்ஹீது அழைப்பாளர்களை வெகு விரைவில் வீழ்த்தி விடும் கொலைக் களம் என்றே சொல்ல வேண்டும். இங்கு பணியாற்றக் கூடியவர்கள் பெண்களிடம் கனிந்து பேசக்கூடியவர்களாக இருக்கக் கூடாது. விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை. கடிந்து பேசக் கூடியவர்களாக, கண்டிப்புடன் நடக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கற்புக்குக் காவல் அரணாக தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனங்களைக் கருதுகின்றார்கள். அந்த நம்பிக்கைக்குக் குந்தகம் விளைவிப்பது அல்லாஹ்விடம் மாபெரும் அக்கிரமும் அநியாயமுமாகும்.
- மர்கஸ்களில் மகளிர்
நமது மர்கஸ்களிலும், மஸ்ஜிதுகளிலும் சில இடங்களில் ஐவேளைத் தொழுகைகளுக்கும் பல இடங்களில் ஜும்ஆ, ரமளான் மாத இரவுத் தொழுகைகளுக்கும் பெண்கள் வருகின்றனர். இங்கும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் காக்கப்பட்ட கண்ணியம் காக்கப்பட வேண்டும். இதில் ஏற்படும் தவறு காரணமாக பெண்கள் பள்ளிக்கு வருவது தடைப்பட்டால் அல்லாஹ்வின் ஆலயத்திற்கு வருவதைத் தடுத்த மிகப் பெரிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோன்று இங்கு குறிப்பிடப்படாத இன்னும் பல்வேறு வாசல்களையும் அடையாளம் கண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
தலைமையின் ஒழுக்க ரீதியிலான வழிகாட்டு நெறிகளுக்கு நேர்மாறாக நடந்து, வழிகேட்டில் வீழ்ந்தால் அதை இந்த ஜமாஅத் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.
ஜாக் போன்ற சில இயக்கங்களில் பெண்கள் விஷயத்தில் சறுக்கியவர்களைப் பற்றி சுட்டிக்காட்டிய போது அவர்களை பதவியிலிருந்தும், பணியிலிருந்தும் நீக்குவதற்குப் பதிலாக பதவி உயர்வு வழங்கிக் கவுரவித்தார்கள். அதுபோன்ற செயலை இந்த ஜமாஅத் ஒருபோதும் செய்யாது. எவ்வளவு பெரிய கோபுரத்தில் இருந்தாலும் அவரை வீசியெறியத் தயங்காது என்பதை ஒவ்வொரு அழைப்பாளரும், நிர்வாகியும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.