கியாம நாளின் அடையாளங்கள்

திருக்குர்ஆன் விளக்கவுரை      தொடர்: 4

கியாம நாளின் அடையாளங்கள்

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.  (திருக்குர்ஆன் 78:1-5)

உலக முடிவு நாள் வருவதற்கு முன்னர் உலகில் ஏற்படும், ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றிக் கடந்த இதழ்களில் அறிந்தோம். அந்த நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது சில மகத்தான அடையாளங்கள் ஏற்படவுள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்வோம்.

மாபெரும் பத்து அடையாளங்கள்

உலக முடிவு நாளின் மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 – புகை மூட்டம்

2 – தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 – ஈஸா (அலை) இறங்கி வருவது

6 – யஃஜுஜ், மஃஜுஜ்

7 – கிழக்கே ஒரு பூகம்பம்

8 – மேற்கே ஒரு பூகம்பம்

9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 – இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162

  1. புகை மூட்டம்

இவற்றில் முதலாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளத்திற்கு அதிகமான விளக்கம் எதையும் அவர்கள் கூறவில்லை.

ஆயினும் திருமறைக் குர்ஆனில் புகை மூட்டம் என்ற 44-வது அத்தியாயத்தில் ஓரளவு இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை. “எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்) அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். “பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” என்றும் கூறினர். வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள். மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில் தண்டிப்போம்.  (திருக்குர்ஆன் 44:10-16)

அந்தப் புகை வானிலிருந்து இறங்கி வரும். அதனால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும். அதைக் காணும் மக்கள் தம்மைத் திருத்திக் கொள்ள முன்வரும் அளவுக்கு அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.

மக்காவாசிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த போது, புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் எனவே இந்த அடையாளம் ஏற்கனவே வந்து விட்டதாகவும் இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர்.  (நூல்: புகாரி 1007)

இதை நாம் ஏற்கத் தேவையில்லை;. ஏற்கவும் கூடாது. ஏனெனில் மதீனா சென்ற பிறகு தான் மேற்கண்ட பத்து அடையாளங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இனி மேல் தான் அவை ஏற்படும் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

மக்காவில் ஏதோ ஒரு புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரம்மாண்டமான பத்து அடையாளங்களில் ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அதைக் குறிப்பிட்டிருக்க முடியாது.

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப் போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ மாலிக் (ரலி), நூல்: தப்ரானி

அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர்களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர்களின் உடல் ஊதிவிடும் என்றும் அவர்களுக்கு அதனால் மிகப் பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.

  1. தஜ்ஜால்

பத்து அடையாளங்களில் தஜ்ஜால் என்பவனின் வருகை முக்கியமானதாகும்.

தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.

முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றிப் பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தஜ்ஜால் என்பது ஒரு தீய சக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர்.

பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த மாடர்ன் மவ்லவிகள், “பிரிட்டன் தான் தஜ்ஜால்” என்றனர்.

இஸ்ரேலின் பிரதமர் மோஷே தயானையும் சிலர் தஜ்ஜால் என்றனர்.

ஜார்ஜ் புஷ் என்ற அமெரிக்க அரக்கனின் ஆட்சியைச் சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது ஜார்ஜ் புஷ் தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.

தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம். தஜ்ஜாலைப் பற்றி எல்லா அறிவிப்புகளையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்புகளில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் தமது அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.

மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை, வானத்துக்கும், கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான் என்றெல்லாம் கடோத்கஜன் கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை

நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி), நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408

ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: முஸ்லிம் 5239

தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்

ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக் கண் என்பதில் இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, 7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408

பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 7131,

தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407

ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன.

ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இரு கண்களுக்கிடையே “காஃபிர்’ என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும் படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.

தஜ்ஜாலின் கண்களுக்கிடையே “காஃபிர்என்று எழுதப்பட்டிருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 7131, 7404

எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத எல்லா முஃமின்களும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே “காஃபிர்என்று எழுதப்பட்டிருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: முஸ்லிம் 5223

ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமான சதைக் கட்டி ஒன்று தென்படும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 5223

ஒரு கண் ஊனமுற்றிருந்தாலும் ஊனமடையாத மற்றொரு கண் பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போன்று அமைந்திருக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: அஹ்மத் 20220

இந்த வர்ணனையின் அடிப்படையில் அவனது முகம் கோரமாக அமைந்திருக்கும் என்று தெரிந்தாலும் அவனது உடலமைப்பில் கவர்ச்சியாகவும் சில உறுப்புகள் அமைந்திருக்கும்.

அவன் சிவந்த நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 3441, 7026, 7128

அவன் அதிக வெண்மை நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: அஹ்மத் 2707, 2041

தஜ்ஜாலின் நிறம் குறித்து இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.

ஒருவர் சிவந்த நிறமுடையவராகவும், அதிலும் அதிக சிவப்பு நிறமுடையவராக இருந்தால் அவரைப் பற்றி வெள்ளை நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு. சிவந்த நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு.

உதாரணமாக வெள்ளையர்கள் என்று ஆங்கிலேயர்களை நாம் குறிப்பிடுகிறோம். எந்த மனிதனும் வெள்ளை நிறத்தில் இருக்க முடியாது. சிவந்த நிறத்தைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அது போலவே இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 3441, 7026, 7128

குறிப்பிட்ட ஒரு மனிதனையே தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்; தீய சக்தியை உருவகமாகச் சொல்லவில்லை என்பதை மேற்கண்ட அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த அடையாளங்கள் யாவும் அவன் வானத்துக்கும், பூமிக்குமாக பிரம்மாண்டமாகத் தென்படுவான் என்ற கற்பனையையும் நிராகரிக்கின்றன.

வளரும் இன்ஷா அல்லாஹ்