அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும்

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும்

அற்புத அல்குர்ஆன் வழங்கப்பட்ட அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ஐவேளைத் தொழுகைகளிலும் பள்ளிவாசல் நிரம்பி வழியத் துவங்கி விடும். கடமையான தொழுகைக்கு வருகிறார்களோ இல்லையோ தராவீஹ் என்றழைக்கப்படும் இரவுத் தொழுகைக்கு ஒரு சாரார் வந்து விடுவர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு நிம்மதி இருக்காது. இன்னொரு சாரார் ஆரம்ப மூன்று நாட்கள் வந்து கலந்து கொண்டு ரமளான் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதன் பிறகு மாதக் கடைசியில் பிறை 27ல் வந்து கணக்கை முடித்து விடுவார்கள்.

தொழுகைகளில் மக்கள் வெள்ளமெனப் பொங்கி வழிவார்கள். ஏறத்தாழ நாற்பத்தைந்து நிமிடங்களில், அற்றுப் பிடுங்கி செல்கின்ற அதிவேக விரைவு வண்டிகளைப் போன்று ஹாபிஸ்கள் குர்ஆன் ஆயத்துக்களை ஓதித் தள்ளுவார்கள். ஒரே மூச்சில் சூரத்துல் ஃபாத்திஹா வாயிலிருந்து வானத்திற்குப் பறந்து விடும். அல்ஹம்து என்று ஆரம்பித்து வலல்லாள்ளீன் என்பது தான் அடுத்த நிறுத்தம். அடுத்தடுத்து என்ன ஓதுகிறார்கள் என்பது அந்த ஹாபிசுக்குத் தான் வெளிச்சம்.

அறியாத மக்கள் ரமளான் மாதத்தில் குர்ஆனைக் கேட்போம் என்று வந்து நிற்கின்றார்கள். ஆனால் ஒரு வார்த்தை கூட அவர்களது காதுகளில் தெளிவாக விழப் போவதில்லை. இப்படியே சென்று 27ஆவது அன்று அந்த ஹாபிசுக்கு மூடுவிழா! அல்குர்ஆனுக்கு மூடுவிழா! மக்களுக்கும் மூடுவிழா! காட்டமான கத்முல் குர்ஆன் துஆவுடன் குர்ஆன் பிரியாவிடை பெற்று விடும். அடுத்த ரமளானில் தான் அல்குர்ஆன் ஹாபிசுடன் வருகையளிக்கும். பண முடிப்பை வாங்கி ஹாபிஸ் பறந்து விடுவார். அவரிடமிருந்து அல்குர்ஆனும் பறந்து விடும். இது ரமாளன் மாதத்தில்!

இதர மாதங்களில் இறந்தவர் வீட்டில், இழவு வீட்டில் நேர்ச்சை தப்ரூக்குகளுடன் முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் என்று பந்திக்கு முன்பும் அல்குர்ஆன் பாய்ந்து வரும். அதற்குப் பின் நீத்தார் நினைவு நாளில் வருடாந்திர கத்தம் பாத்திஹா சத்தம் சகிதமாக வெளிவரும். இது தான் இந்த முஸ்லிம்களுக்குக் குர்ஆனுடன் உள்ள தொடர்பு!

இதைக் கண்டிக்கும் விதமாகத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

அல்குர்ஆன் 62:5

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ சிந்தனை மக்களிடம் வந்த பிறகு, உயரத்தில் உரியில் இருந்த திருக்குர்ஆன் மக்களின் அன்றாட வாழ்வில் அமுலுக்கு வந்து கொண்டிருக்கின்றது. இது எப்படி வந்தது? தவ்ஹீத் ஜமாஅத் இந்த மக்களிடம் திருக்குர்ஆனை எப்படிக் கொண்டு வந்து சேர்த்தது?

கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்

கொள்கையளவில் தமிழகத்து முஸ்லிம்கள் ஏனைய இந்திய முஸ்லிம்களைப் போலவே இணை வைப்பில் மூழ்கிக் கிடந்தனர். இவர்களுடைய நிலை மக்காவிலிருந்த இணை வைப்பாளர்களின் நிலையை அப்படியே ஒத்திருந்தது.

முஹ்யித்தீன் என்றதும் முக மலர்ச்சி

அன்றைய முஷ்ரிக்குகள் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்கள் கூறப்பட்டால் முகமும் அகமும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

தமிழக முஸ்லிம்களும் இதே நிலையில் தான் இருந்தார்கள்; இருக்கின்றார்கள். அல்லாஹ் என்று சொன்னால் அவர்களிடம் எந்தவொரு அசைவையும் ஆர்வத்தையும் பார்க்க முடியாது. ஆனால் முஹ்யித்தீன் என்று சொல்லப்பட்டால் முகம் பூரித்துப் போய் மலர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறார்கள்.

அன்று மக்கா முஷ்ரிக்குகளிடம், “இந்தப் பெரியார்களை நீங்கள் ஏன் அழைத்துப் பிரார்த்திக்கிறீர்கள்?’ என்று கேட்டால் அதற்கு அவர்கள் அளித்த பதில்:

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்

அல்குர்ஆன் 39:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

இதே வாதத்தைத் தான் இன்றைய முஸ்லிம்களும் முன்வைக்கின்றனர். மக்கா முஷ்ரிக்குகளிடம் அல்குர்ஆன் தொடுத்த அடுக்கடுக்கான கேள்விகளை இவர்களிடமும் நாம் தொடுத்தோம்.

வானத்தைப் படைத்தவன் யார்?

“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?”

அல்குர்ஆன் 29:61

மழையைப் பொழிவிப்பவன் யார்?

“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

அல்குர்ஆன் 29:63

அவர்களைப் படைத்தவன் யார்?

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 31:25

வானம், பூமி யாருக்குச் சொந்தம்?

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் 23:84

அர்ஷின் நாயன் யார்?

“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக!

அல்குர்ஆன் 23:86

ஆட்சியதிகாரம் யாரிடம் உள்ளது?

“பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக!”அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:88, 89

கடலில் ஏற்படும் சோதனையில் காப்பாற்றுபவன் யார்?

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 31:32

அஸீஸ், அலீம் என்றழைக்கப்படுபவன் யார்?

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்” எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 43:9

இந்த வசனங்களை, இணை வைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் முன்வைத்தோம். இன்று அந்தக் குர்ஆன் அவர்களிடம் கொள்கையளவில் ஒரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவர்களை விட்டுக் குர்ஆனைப் பிரிக்க முடியாது; குர்ஆனும் அவர்களை விட்டுப் பிரியாது என்ற அளவுக்கு மக்கள் குர்ஆனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது:

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:23, 24

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

அல்குர்ஆன் 58:22

சொந்த பந்தம், உற்றார் உறவினர் இணை வைத்தால் அவர்கள் அத்தனை பேரையும் உதறித் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்காக ஒரு போர்ப்படை புறப்படுகின்ற புரட்சியை ஏற்படுத்துகின்ற அளவுக்கு இந்தத் திருக்குர்ஆன் அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இஸ்லாத்தின் பெயரால் கண்ட, கண்ட கப்ஸாக்களையும் கதைகளையும் படிப்பதை விட்டு விட்டு அல்குர்ஆன் அடிப்படையில் ஆதாரப்பூர்வமான சரியான ஹதீஸ்களை மட்டும் படிக்கின்ற, பின்பற்றுகின்ற ஒரு மனமாற்றம் தமிழக முஸ்லிம்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. அல்குர்ஆன் இன்று படிப்படியாக மக்களிடம் அமுலுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அல்குர்ஆனுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நடைமுறைகளும் இன்று மக்களிடம் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது.