அஹ்லுல் குர்ஆன்  ஏன் தோன்றினார்கள்?

ஹதீஸ் கலை ஆய்வு                                    தொடர்: 4

அஹ்லுல் குர்ஆன்  ஏன் தோன்றினார்கள்?

குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதல் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதிலும், இரண்டும் மார்க்க ஆதாரங்கள் என்பதிலும் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் இரண்டும் பாதுகாக்கப் பட்ட விதத்தில் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களைக் கூறுவதால் ஹதீஸ்களைப் பின்தள்ளுகிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

குர்ஆனா? ஹதீஸா? என்று வரும் போது இரண்டில் எதை எடுப்பது என்ற கேள்விக்கான பதிலாகத் தான் இந்த வித்தியாசங்களைக் கூறுகிறோம்.

  1. குர்ஆன் பல்லாயிரக் கணக்கான நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் அனைத்து நபித் தோழர்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை.
  2. நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே குர்ஆனைப் பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டு குழப்பங்கள் பரவுவதற்கு முன்பே உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் நிறைவுக்கு வந்தது.

நபி (ஸல்) அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆன பிறகு நபி (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டுவது அதிகரித்த காலத்தில் ஹதீஸைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இமாம்கள் ஹதீஸைத் தொகுக்கும் முயற்சியை முடுக்கி விட்டார்கள். பெரும்பாலான அறிஞர்கள் அறிவிப்பாளர் தொடர்களை ஆராய்ந்து பார்த்த அளவிற்கு செய்திகளை ஆராயவில்லை.

  1. குர்ஆனும் ஹதீஸும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹதீஸை எழுதி வைப்பதை ஆரம்பத்தில் தடை செய்தார்கள். முதலில் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக குர்ஆனை மட்டும் எழுதி வைக்கச் சொன்னார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இறங்கிய குர்ஆன் வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்.

குர்ஆன் தூய வடிவில் முழு பாதுகாப்புடன் விளங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இரு முறை குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள். இது போன்ற சிறப்புக் கவனம் ஹதீஸ்களுக்குக் கொடுக்கப் படவில்லை.

  1. நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே ஒலி வடிவில் பல உள்ளங்களில் குர்ஆன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குர்ஆன் பதிவு செய்யப்பட்டதைப் போல் பல உள்ளங்களில் ஹதீஸ் பதிவு செய்யப்படவில்லை.
  2. குர்ஆன் ஒட்டு மொத்த சமுதாயத்தின் கவனத்திற்கும் காலங்காலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஹதீஸ் இவ்வாறு அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வரப்படவில்லை.

இது போன்ற வித்தியாசங்களைக் கவனிக்கும் போது பாதுகாக்கப்பட்ட விதத்தைப் பொறுத்த வரை, ஹதீஸை விட குர்ஆன் வலிமை வாய்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த வித்தியாசங்களால் தான் பல அறிஞர்கள் குர்ஆனுக்கு கதயீ என்றும் ஹதீஸிற்கு லன்னீ என்று பிரித்துக் கூறியுள்ளார்கள்.

கதயீ என்றால் அதில் ஒரு போதும் எப்போதும் எந்த விதமான தவறுகளும் வராது என்று பொருள். லன்னீ என்றால் அதில் தவறு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று பொருள்.

இதை மையமாக வைத்து குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை அறிவித்தவர்களிடத்தில் தவறு வர வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள்.

குர்ஆனுடன் ஹதீஸ் முரண்படும் போது ஹதீஸை வைத்து குர்ஆனுடைய சட்டத்தையும் மாற்ற மாட்டார்கள். ஹதீஸை விட குர்ஆன் வலிமையானது என்பதே இதற்குக் காரணம்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளில் ஒன்று இன்னொன்றுக்கு முரண்படுவது உண்டு. முரண்படும் செய்திகள் அனைத்தும் ஒன்றை விட இன்னொன்றுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாத விதத்தில் எல்லாம் ஒரே தரத்தில் அமைவதோடு அவற்றை இணைத்து எந்த விளக்கமும் கொடுக்க முடியவில்லையென்றால் இப்போது அறிஞர்கள் இந்த ஹதீஸ்களில் எதையும் ஏற்க மாட்டார்கள்.

இந்த வகைக்கு முள்தரப் (குளறுபடி உள்ளது) என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இரண்டு நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி முரண்படும் போது இருவரில் யார் வலிமை மிக்கவர் என்று பார்ப்பார்கள். இருவரும் நல்லவர்கள், வல்லவர்கள் என்றாலும் முரண்பாடு வரும் போது இருவரில் அதிக வலிமையானவர் அறிவிக்கும் செய்திக்கு முன்னுரிமை கொடுத்து அவரை விட வலிமை குறைந்தவர் அறிவிக்கும் அந்தச் செய்தியை பின்தள்ளி விடுவார்கள்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்திக்கு மஹ்ஃபூள் என்றும் பின்தள்ளப்பட்ட செய்திக்கு ஷாத் என்றும் கூறுவார்கள்.

இதனால் யாருடைய செய்தி பின்தள்ளப்பட்டதோ அவர் அறிவிக்கும் எந்தச் செய்தியையும் ஏற்கக் கூடாது என்ற முடிவுக்கு வர மாட்டார்கள். மாறாக முரண்பாடாக அறிவிக்கும் அந்தச் செய்தியை மாத்திரம் புறக்கணிப்பார்கள்.

இவ்விதி நம்மை விமர்சிப்பவர்கள் ஒத்துக் கொண்ட விதி தான். ஹதீஸ் கலையில் எழுதப்பட்டது தான்.

நம்பகமானவர்கள் முரண்பாடாக அறிவிக்க மாட்டார்கள் என்று நம்மை விமர்சிப்பவர்கள் கருதுவதால் தான் நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி குர்ஆனுடன் முரண்படாது என்று கூறுகிறார்கள்.

ஒரு நம்பகமானவர் தன்னைப் போன்ற இன்னொரு நம்பகமானவருக்கோ அல்லது தன்னை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவருக்கோ முரண்பாடாக அறிவிப்பார். அப்படி அறிவித்தால் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கலையின் விதி உணர்த்துகிறது.

அப்படியானால் குர்ஆனிற்கு முரண்பாடாக அவரது செய்தி அமையாது என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? இவரது செய்தி முரண்பாடாக இருப்பதால், இவர் அறிவிக்கும் செய்தியை விட வலிமையான குர்ஆனுக்கு ஏன் முக்கியத்துவம் தரக்கூடாது?

சுருங்கச் சொல்வதாக இருந்தால் ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீஸிற்கு முரண்படும். ஆனால் ஹதீஸ் குர்ஆனிற்கு ஒரு போதும் முரண்படாது என்று கூற வருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமானது?

ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக் கொண்டு குர்ஆனுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்க மறுக்கிறார்கள். தங்களை அறியாமல் ஹதீஸை ஏற்றுக் கொண்டு குர்ஆனை மறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

குர்ஆனுடன் மோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமைந்த இந்தச் செய்திகள் தான் ஒருவனை குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளுகிறது.

முரண்படும் இந்தச் சில செய்திகள் ஒட்டு மொத்த ஹதீஸையும் அவன் மறுப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் முரண்படும் அந்தச் செய்திகள் ஹதீஸ் கலையில் உள்ள விதியின் பிரகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது கிடையாது என்று கூறி, நபியின் சொல்லுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தால் அவன் ஒரு போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறவே மாட்டான்.

இனியும் இவர்கள் குர்ஆனுக்கு ஹதீஸ் எதுவும் முரண்படாது என்று வார்த்தை ஜாலம் காட்டி முரண்பட்ட தகவல்களைச் சொல்வார்கள் என்றால் இவர்களின் இந்த நடவடிக்கை தான் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் உருவாவதற்குக் காரணமாக அமையும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

சிந்தனைக்கு எட்டாத மோசமான செய்திகளை நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொன்னால் கேட்பவர் நபி (ஸல்) அவர்களைத் தவறாக மதிப்பிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் சில நபித்தோழர்கள் இது போன்ற செய்திகளைக் கூற வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றி பேசி அதனால்) அல்லாஹ்வும் அவன் தூதரும் (அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்ன?

நூல்: புகாரி 127

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பது அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.

நூல்: முஸ்லிம் 12