அப்சல்குரு தூக்கு அப்பட்டமான சட்டமீறல்

அப்சல்குரு தூக்கு அப்பட்டமான சட்டமீறல்

(இந்தக் கட்டுரை, அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை விமர்சித்து டி.ஆர். அந்தியார்ஜுனா அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். கட்டுரையாளர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரலும் ஆவார். இவரின் கட்டுரை பிப்ரவரி 19, 2013 இந்து நாளேட்டில் வெளியானது.)

பிப்ரவரி 9, 2013 அன்று மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமான செயல் ஆகும். ஆகஸ்ட் 4, 2005ம் ஆண்டு அப்சல் குருவுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  இதன் பின்னர் அவர் நவம்பர் 8, 2006ல் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். ஏழு வருடங்கள் அவருடைய கருணை மனு கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் கிடந்தது. இப்போது அது மறுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தனக்கு வாழ்வா? சாவா என்று எந்த ஒரு முடிவும் தெரியாமல் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் கடுந்துயருக்கும் கவலைக்கும் ஆளாயினர். தூக்குத் தண்டனை கைதிகளும், அவர்களது குடும்பத்தாரும் படுகின்ற அவஸ்தை, அல்லல் காரணமாக நாகரிகமான நாடுகளும் நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றன.

ஏழாண்டுகள் கழித்து பிப்ரவரி 3 அன்று குடியரசுத் தலைவர் கருணை மனுவை மறுத்த இந்த விபரம் இரகசியமாகவே வைக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமல் மறைக்கப்பட்டது. இது போன்ற கால தாமதமான வழக்குகள் நீதிமன்றத்தின் கவனத்தில் கொள்ளப்பட்டு மரண தண்டனையிலிருந்து காக்கப்பட்ட வழக்குகள் உள்ளன.

அப்படி அப்சல் குருவின் வழக்கு நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்து அவர் தப்பி விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இது மறைக்கப்பட்டது. அப்சல் குருவின் குடும்பத்திற்குக் கூடத் தெரிவிக்காமல் கருணை மனு மறைக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்குள்ளாக பிப்ரவரி 9ம் தேதி அன்று அவருக்குத் தூக்குத் தண்டனை இரகசியமாக நிறைவேற்றப்பட்டது. அது இரகசியமாக திஹார் சிறையிலேயே உடல் அடக்கமும் செய்யப்பட்டது.

மறுக்கப்பட்ட உரிமை

தண்டனையைக் குறைக்க வேண்டும் அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு செய்வது அரசியல் சட்டம் பிரிவு 72ன் படி ஒரு தண்டனைக் கைதியின் உரிமையாகும். அந்த மனு மறுக்கப்படுகின்ற வரை அரசாங்கம் தண்டனையை நிறைவேற்றக்கூடாது.

மனுவை முடிவு செய்வதில், பிரிவு 72ன் படி குடியரசுத் தலைவர் தனது தனி அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் அரசாங்கத்தின் அறிவுரைப்படியே நடக்க வேண்டும். 1989ஆம் ஆண்டு கெஹார் சிங்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தான் தீர்ப்பு அளித்தது.

அப்சல் குரு வழக்கில் எழக்கூடிய முக்கியமான கேள்வி, அவர் கருணை மனுவைச் சமர்ப்பித்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு அவருக்கு எப்படி தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடியும் என்பது தான். அப்சல் குருவின் கருணை மனு அரசியலாக்கப்பட்டு விட்டது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதை ஒரு பிரச்சனையாக ஆக்கி பிஜேபி அரசியல் ஆதாயம் தேட முனைந்து விட்டது. அதனால் அது மிக அற்பத்தனமாக வலுக்கட்டாயமாக அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தது.

அப்சல் குரு மரணத்தில் பிஜேபி அரசியல் ஆதாயம் பார்த்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இதில் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

உண்மையில் 2006 முதல் 2008 வரையிலான கால கட்டத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் வேண்டுமென்றே அப்சல் குருவின் கருணை மனு மீது உடனே பதில் அளிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தார்.

இந்தக் கால தாமதத்தைத் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளான அப்சல் குரு, “உண்மையில் நான் பாரதீய ஜனதா தலைவர் எல். கே. அத்வானி நாட்டின் அடுத்த பிரதம அமைச்சராக வர விரும்புகின்றேன். காரணம். அவர் ஒருவர் தான் என் விவகாரமாக ஒரு நல்ல முடிவு எடுத்து எனக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு மிகப் பொருத்தமானவர்” என்று குறிப்பிட்டிருந்தார். “அப்போதாவது நான் படுகின்ற அவஸ்தையும், வேதனையும் ஒரு முடிவுக்கு வந்து விடுமல்லவா?” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நவம்பர் 21, 2012 அன்று அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை நிறைவேற்றிய மாத்திரத்தில் எதிர்க்கட்சிகள் புது வேகத்துடன், புத்துணர்ச்சியுடன் அப்சல் குருவின் மரண தண்டனையை நிறைவேற்றும்படி கூக்குரலிட்டனர்.

எதிர்க்கட்சிகள் இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாக ஆக்கி விடக்கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளும் கவனமாக மேற்கொள்ளப்பட்டன.

கஸாபின் தூக்கு தண்டனையை மிக இரகசியமாகவும், மறைமுகமாகவும் நிறைவேற்றியது அப்சல் குரு மரணத்திற்கு ஒரு முன்னுதாரணமாக ஆனது.

நவம்பர் 15ம் தேதி அன்று குடியரசு தலைவர் அப்சல் குருவின் கருணை மனுவை மீண்டும் புதிதாக மறு பரிசீலனை செய்யும்படி கேட்டு உள்துறை அமைச்சகத்திற்கே திரும்ப அனுப்புகின்றார்.

ஜனவரி 23, 2013 அன்று உள்துறை அமைச்சகம் கருணை மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்கிறது. குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பு உடனே பிப்ரவரி 4, 2013 அன்று செயல்பாட்டுக்கு வருகின்றது. ஐந்து நாட்கள் கழித்து அதாவது பிப்ரவரி 9ம் தேதியன்று அதிகாலை அப்சல் குரு தூக்கிலிடப்படுகிறார்.

அரசாங்கம் இழுத்தடித்த இந்த நீண்ட காலகட்டத்தில் அப்சல் குருவும், அவரது குடும்பமும் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கும், மன சங்கடத்திற்கும் ஆளாயினர்.

இப்படி ஓர் அநியாயமான இழுத்தடிப்பிற்குப் பிறகு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்ட நெறிகளை மத்திய அரசாங்கம் காற்றில் பறக்க விட்டிருக்கின்றது.

1974ம் ஆண்டு ஆந்திர பிரதேச அரசுக்கு எதிரான எடிக்மா அநாமா வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர், “பல ஆண்டுகளாகப் பழிக்கப்பட்ட சிறை அறையில் அலைக்கழிக்கின்ற, அச்சத்திற்கு ஆட்பட்டு வெந்து நீறுகின்ற அப்பாவி கைதி தான் தூக்குத் தண்டனை கைதி” என்று வர்ணிக்கின்றார்.

1983ம் ஆண்டுகளில் தமிழக அரசுக்கு எதிரான டி.வி. வத்தீஸ்வரன் வழக்கில் நீதிபதி சின்னப்பா ரெட்டி, “மரண தண்டனை நிறைவேற்றுவதில் எடுக்கும் கால தாமதம் மனிதத் தன்மையை இழக்க வைக்கும் அக்கிரமும் அநியாயமுமாகும். ஒரு மனிதனுக்கு அரசியல் சட்டம் 21ஆம் பிரிவு அளித்திருக்கின்ற அடிப்படை வாழ்வுரிமையைப் பாதிக்கின்ற வகையில் அநியாயமான, அக்கிரமமான அநீதியான வழியில் தட்டிப் பறிக்கும் செயல் ஆகும்” என்று தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட ஒரு தூக்குத் தண்டனை கைதி, மாற்றுத் தீர்வுக்காகக் காத்திருக்கும் மனநோவு, ஏக்கம், ஏமாற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையில் உருவாகும் கொடூரமான மன வேதனை. அது அவரது உடலின் மீதும், உள்ளத்தின் மீதும் தொடுக்கின்ற கோரத் தாக்குதல்கள், கொடுமையான விளைவுகள், ஒட்டுமொத்தமாக ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் என அவர் அன்றாடம் அனுபவிக்கின்ற அவதிகள், அல்லல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

அடுக்கடுக்கான இந்த வேதனைகள் அனைத்தையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரைவி கவுன்சில் (பிரிட்டனின் ஆராய்வாளர்களின் ஆலோசனைக் குழு) குறிப்பிட்டதை அந்த நீதிபதி அவர்கள் மேற்கோள் காட்டினார்.

குடும்பத்தார் படும் அல்லல்கள்

1983ம் ஆண்டு பஞ்சாப் அரசுக்கு எதிரான ஹேர் சிங் வழக்கில் நீதிமன்றம் அதே கருத்தைத் தெரிவித்திருந்தது.

1989ம் ஆண்டு குஜராத் அரசுக்கு எதிரான திரிவேனி பெண் வழக்கில், “காலங்கடந்து நிறைவேற்றப்படுகின்ற தூக்குத் தண்டனை அநீதி, அநியாயம், ஏற்க முடியாத காரியம்’ என்று உச்ச நீதி மன்றம் தெளிவாகக் குறிப்பிட்டது.

கருணை மனுவைத் தாமதமாக முடிவு செய்யும் போது தண்டனைக்குள்ளானவர் உடல் ரீதியான சித்ரவதைக்கு உள்ளாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மன வேதனைக்கும், உளைச்சலுக்கும் உள்ளாகின்றார். என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்ட – மறுக்க முடியாத உண்மையாகும்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் அர்த்தமற்ற தாமதம் ஏற்படுமானால் தண்டனைக்குரியவர், “இந்தக் கால தாமதம் நியாயம் தானா? தனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா?’ என்று கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கு முழு உரிமை உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டால் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விபரத்தை குடும்பத்தார்களுக்குத் தெரிவிப்பது சட்டப்பூர்வமான கடமையாகும் என்றும் அது தெரிவித்தது.

தூக்கு தண்டனை கைதி மட்டுமல்ல; அவருடைய குடும்பமும் சேர்ந்து அநாவசியமான தாமதத்தால் நெருங்கிய உறவினர்களும் மன உளைச்சல் வேதனைக்கு ஆளாகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் 2012ல் மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஜகதீஷ் வழக்கில் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் ஒரு தூக்குத் தண்டனை கைதி நீண்ட நாட்கள் சிறையில் வாடி வதங்கிய பிறகும் நொந்து நூலான பிறகு இவருக்கு இப்படி ஒரு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா என்ற ஓர் உறுத்தலும், மனக் கலக்கமும் ஏற்படுகின்றது.

இந்த மன உளைச்சல். மனக்கலக்கம் ஏன் ஏற்படுகின்றது? நம்மிடம் உள்ள மனிதம் என்பது தான் அதற்குரிய பதில்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை நீண்ட காலம் தண்டனை நிறைவேற்றாமல் காக்க வைப்பது மனிதாபிமானம் அற்ற செயல் என்று அதைக் கருதுகின்றோம். இவ்வளவு காலம் நீண்ட சிறை வாசத்தை அனுபவிக்கச் செய்துவிட்டு அவரை தூக்கில் போடுவது என்பது ஈவு இரக்கமற்ற மிருகத் தனமான தண்டனை என்றும் நாம் கருதுகின்றோம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறிய கண்ணோட்டத்தை 1994ல் பிரைவி கவுன்சில் அப்படியே தன்னுடைய கருத்தாக ஏற்றுக் கொண்டது.

1989ல் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய கோர்ட்டும், கனடா நாட்டு உச்ச நீதிமன்றமும் ஒரே விதமான கருத்தை ஏற்றுக் கொண்டன. அப்சல் குரு தூக்குத் தண்டனை விவகாரத்தில் நம்முடைய நாட்டின் உச்ச நீதிமன்றம், இன்ன பிற நீதிமன்றங்களின் கருத்தை உதறித் தள்ளிவிட்டது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக மரண தண்டனை கைதிகள் மன வேதனைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாவது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தார்கள், அவரது சொந்த பந்தங்களும் அதே மனவேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகின்றார்கள் என்பது உலகம் ஒருமித்து ஏற்றுக் கொள்கின்ற உண்மையாகும்.

தூக்கு தண்டனை நிறைவேற்றுகின்ற நாள், நேரம் நெருங்கும் போது குடும்பத்தார்கள் மனநிலை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றது. இதற்கு ஒரு மரியாதை கொடுக்கும் விதத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று சொல்கின்ற நாடுகளில், தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் அந்தக் கைதி, தனது சொந்த பந்தங்களைச் சந்திக்குமாறு ஏற்பாடு செய்கின்றனர்.

அவர்களிடம் தண்டனை நிறைவேற்றப்படுகின்ற நாள் நேரத்தைத் தெரிவிக்கின்றனர். தண்டனை நிறைவேற்றிய பின் அடக்குவதற்காக உடலையும் அவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். ஆனால் அப்சல் குரு விஷயத்தில் அது போன்று தகவல் தெரிவிக்கவில்லை. தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் அவரது குடும்பத்தார்கள் அவரை இறுதியில் சந்திக்க முடியாமல் ஆயினர்.

பிப்ரவரி 8ம் தேதி துரித தபாலில் தகவலை அனுப்பி விட்டோம் என்று மத்திய அரசு சொல்வது அர்த்தமற்றது; பொறுப்பற்றது.

இந்தக் கடிதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் இவருடைய வீட்டில் கொடுக்கப்பட்டது.

2012 மார்ச் – ஏப்ரல் மாதங்களில் உச்ச நீதிமன்றம் இரண்டு தூக்குத் தண்டனை கைதிகளின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தேவேந்திர பால், நரேந்திர நாத் தாஸ் ஆகியோர் தான் அவ்விருவரும்.

அவ்விருவரும் கருணை மனு அளித்த பின்பு 8லிருந்து 11 மாதங்கள் தண்டனை நிறைவேற்றாமல் கால தாமதம் செய்யப்பட்டனர். தண்டனை நிறைவேற்றப்படாமல் இது போல் கால தாமதம் செய்யப்பட்டு, காத்துக் கிடக்கின்ற கைதிகளின் ஆவணங்களையும் அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்சநீதி மன்றம்.

நீண்ட நாள் தாமதமாகும் வழக்குகளின் நிலை

கருணை மனு நிலுவையில் வைக்கப்பட்டவர்களின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளில் உள்ள ஒன்று தான் அப்சல் குரு வழக்கு!

அர்த்தமற்ற, அநியாயமான, கால தாமதத்திற்குப் பிறகு சிறையில் வாடுகின்ற தண்டனை கைதிகளின் மிகப் பெரிய கேள்விக்கு விடை காணவும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் என்னை (அந்தியார்ஜுனா அவர்களை) பொறுப்பாளராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இது தொடர்பாக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விஷயத்தைக் குறிப்புப் படுத்தி தகவல் தெரிவித்தேன்.

இவ்வழக்கு மீதான விசாரனை ஏப்ரல் 19, 2012 அன்று முடிந்தது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. கருணை மனுவுக்குப் பிறகு கால தாமதமாகும் தூக்குத் தண்டனை கைதிகள் தொடர்பான வழக்குகளின் சட்ட நிலை குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்பது மத்திய அரசுக்கு நன்கு தெரியும்.

நிலுவையில் இருக்கின்ற இந்த மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான தீர்ப்புக்காகக் கண்டிப்பாகக் காத்திருக்க வேண்டிய மத்திய அரசு, அவசர கதியில் அப்சல் குருவின் தண்டணையை பிப்ரவரி 9, 2013ல் நிறைவேற்றி முடித்தது.

மத்திய அரசு நிறைவேற்றிய அப்சல் குருவின் இந்த மரண தண்டனை வரலாற்றில் மட்ட ரகமாகவும் கேவலமாகவும் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையாக வரலாற்றில் பதிவாகி விட்டது.