அடக்கத்தலத்தின் ஆகாய விலை

அடக்கத்தலத்தின் ஆகாய விலை

“நகரத்தின் மத்தியிலா வீடு வாங்கப் போகிறீர்கள்? அங்கு சதுர அடிக்கு பத்தாயிரம் ரூபாய் ஆகுமே!’ என்று வீடு வாங்குபவர்களிடம் நாம் பேசிக் கொள்வோம். உயிருடன் உள்ளவர் தனக்காக வீடு வாங்கும் போது நாம் இவ்வாறு சொல்வோம். ஆனால் செத்தவருக்கு நிலம் தேடுவோரிடம் இப்படிச் சொன்னால் எப்படியிருக்கும்?

“இந்த மையவாடியிலா அடக்கம் செய்யப் போகிறீர்கள்? அங்கு ஒரு சதுர மீட்டர் நிலம் 7,800 யுவான்; அதாவது ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 45 ஆயிரம் இந்திய ரூபாய்)’ என்று சீனாவில் உள்ளவர்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. 03.04.2007 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தான் கூறுகிறோம்.

மத்திய சீனாவின் ஹெனான் மாநிலம் செங்ஸாவ் என்ற இடத்தில் ஒரு சதுர மீட்டர் அடக்கத்தல இடம் 7,800 யுவான் ஆகும். இதே பகுதியில் குடியிருக்க வீடு வேண்டுமென்றால் ஒரு சதுர மீட்டர் 4,000 யுவான் மட்டுமே!

வீட்டுக்குச் செலவு செய்வதை விட இறந்தவரின் அடக்கத்தலத்திற்கு இரு மடங்கு செலவாகின்றது.

சமீபத்தில் சீனாவில் அடக்கத்தல விற்பனையில் உலகளாவிய வணிகம் உள்ளே நுழைந்து அவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து விட்டன. பொது மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி விட்டனர். அரசாங்கத்தினால் இதைத் தடை செய்யவும் முடியவில்லை. காரணம், இது தொடர்பாக 1997ல் இயற்றப்பட்ட சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன என்று அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

சீனா ஏன் இவ்வாறு அவதிக்குள்ளாக வேண்டும்?

கல்லறைகள் சந்திப்பு நாள் என்று ஒரு நினைவு நாளை ஏற்படுத்தி அந்நாளில் சீனர்கள் கல்லறைகளில் போய் குவிகின்றனர். இதற்காக இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்கள் கல்லறைகளை எழுப்புகின்றனர். அத்துடன் பொதுச் சொத்தாக இருக்க வேண்டிய அடக்கத்தலத்தை தங்கள் குடும்பச் சொத்தாக ஆக்கிக் கொள்கின்றனர். இதனால் தான் சீனர்கள் இந்தச் சீரழிவைச் சந்திக்கின்றனர்.

இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்து விட்டு அதன் மீது கல்லறைகளை, நினைவுச் சமாதிகளை கட்டாமல் இருந்தால் இப்படியொரு பிரச்சனையை சீனர்கள் எதிர் நோக்க வேண்டிய அவசியமில்லை. இந்த இயற்கை முறையைத் தாண்டிச் செல்வதால் இந்தச் சோதனையை சந்திக்கின்றனர்.

சீனர்கள் மட்டுமல்ல! கிறித்தவர் களும் கூட கல்லறை கட்டுவதால் இது போன்ற சோதனையை அனுபவிக்கின்றனர். சென்னை போன்ற பகுதிகளில் கிறித்தவர்களின் கல்லறைக்கு கிட்டத்தட்ட இதே நிலை தான் உள்ளது.

இங்கு தான் இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கம் இயற்கைக்கு இயைந்த ஓர் உத்தரவைத் தனது இறைத் தூதர் மூலம் பிறப்பிக்கின்றது.

“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1609

கப்ரு பூசப்படுவதையும், அதன் மீது அமரப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

இறைத் தூதரின் இந்த உத்தரவை முஸ்லிம்கள் உலகெங்கிலும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.

இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமைந்தது. ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி பல கோடிக்கணக்கான   பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. இதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த உத்தரவு தான்.

தரை மட்டத்திற்கு மேல் அடக்கத்தலத்தை உயர்த்தக் கூடாது என்றும், கப்ருகளைப் பூசக் கூடாது என்றும் அவர்கள் கூறி விட்டதால் முஸ்லிம்கள் தங்கள் அடக்கத் தலங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கிக் கொள்கின்றனர். (தர்ஹாக்கள் என்ற பெயரில் சமாதிகளின் மீது முஸ்லிம் பெயர் தாங்கிகள் கட்டடங்களைக் கட்டியிருப்பதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)

இஸ்லாம் கற்றுத் தந்துள்ள இந்த இயற்கை முறையினால், எவ்வளவு பேர் இறந்தாலும் அடக்கத்தலத்திற்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது.

அடக்கத் தலத்திற்கு சதுர அடி கணக்கில் நிலம் வாங்குவது, விற்பது போன்ற நெருக்கடிகளையும் முஸ்லிம்கள் சந்திப்பதில்லை. இவ்வாறு அடக்கம் செய்வதால் பொருளாதார ரீதியிலும் பெரும் நன்மை கிடைக்கிறது.