ஆங்கிலத்தில் வரும் அக்கார்டிங் டூ
சாதாரண ஆங்கிலம் படித்தவர்களுக்குக் கூட According Toஎன்றால் என்ன என்று புரியும். பத்திரிகைகளில் பத்திக்குப் பத்தி இந்த வார்த்தை இடம் பெறும்.
நமது நிருபர் அளித்த தகவலின்படி, முதல்வரின் உதவியாளர் தெரிவித்தபடி, கல்வி இயக்குனரின் அறிவிப்புப்படி என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.
சேலத்தில் நடைபெற்ற கலவரத்தில் 10 பேர் பலி என்று மாவட்ட ஆட்சித் தலைவரை மேற்கோள் காட்டி, பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தால் நாம் என்ன விளங்கிக் கொள்வோம்? தனக்குக் கிடைத்த தகவலை, தனக்கு வந்த விபரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கின்றார் என்று தான் விளங்குவோம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்த அந்தச் செய்தி சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஒருவேளை நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்து, நீங்கள் தவறான தகவலைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நீதிபதி கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அந்த மாவட்ட ஆட்சித் தலைவர், எனக்கு வந்த தகவலைத் தெரிவித்தேன். அந்தச் செய்தி பற்றிய முழு உண்மை தெரியாது என்று ஒன்றிரண்டு நிமிடங்களில் பதில் சொல்லி விட்டுப் போய் விடுவார்.
According to என்பதன் மதிப்பும் மரியாதையும் இவ்வளவு தான்.
தன்னைத் தானே இறைவேதம் என்று சொல்லிக் கொள்ளும் பைபிளுக்கு வாருங்கள்.
The Gospel according to Mark, The Gospel Accord to Luke, மாற்கு அறிவிக்கின்ற படி நற்செய்தி, லூக்கா அறிவிக்கின்ற நற்செய்தியின் பிரகாரம் என்பது தான் இதன் பொருள்.
ஏன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்? கிறித்தவ உலகம் தங்களிடம் மூல பைபிள் தொடர்பான 4,000 பிரதிகள் இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றது. இந்த 4,000 பிரதிகளில் ஒன்றில் கூட லூக்கா தான் எழுதினார், அல்லது மாத்யூ தான் எழுதினார் என்று இவர்கள் சொல்கின்ற ஆசிரியரின் கையொப்பம் இல்லை. அதனால் தான் According Toஎன்ற வழிமுறையைக் கையாள்கிறார்கள்.
மேலே நாம் கொடுத்த உதாரணத்தில் உள்ளதைப் போன்று ஒரு வாதத்திற்கு லூக்காவைக் கேட்டால், எனக்குத் தெரியாது என்று எளிதில் சொல்லி விட்டுப் போய் விடுவார். இப்படி அனாமதேயங்கள் சொன்னதைக் கடவுளின் வார்த்தை என்று எப்படி நம்ப முடியும்?
ஆங்கிலத்தில் இந்த ஒரு குறைந்தபட்ச நியாயத்தையாவது கடைப்பிடித்தார்கள். தமிழில் “மார்க் எழுதின சுவிஷேசம்’, லூக்கா எழுதின சுவிஷேசம்’ என்று இவர்களையே ஆசிரியர்களாக்கி விடுகின்றனர். ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் கடைப்பிடித்த அந்த நியாயத்தை தமிழில் கடைப்பிடிக்கத் தவறி விட்டார்கள். ஆங்கிலத்திலும் தற்போது வெளியாகியுள்ள பைபிளின் சர்வதேச புதிய பதிப்பு (New International) வெளியீட்டில் According Toஎன்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள் என்பது தனி விஷயம்.
இவர்கள் இவ்வாறு நீக்கியதற்குக் காரணம், மாற்கு, மத்தேயு ஆகியோர் தான் இந்த ஏடுகளின் நேரடி ஆசிரியர்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
கள்ள மத்தேயுவும் நல்ல மத்தேயுவும்
ஏசுவுக்கு மத்தேயு என்ற சீடர் ஒருவர் இருந்தார். அவர் தான் மத்தேயு என்ற புத்தகத்திற்கு ஆசிரியர் என்று கிறித்தவ உலகம் கருதுகின்றது. ஆனால் சீடரான அந்த மத்தேயுவும், சுவிஷேசம் எழுதிய இந்த மத்தேயுவும் ஒன்றா என்பதைப் பின்வரும் வசனத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.
இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
மத்தேயு 9:9
மத்தேயு எழுதியிருந்தால் இந்த வசனம் எப்படி அமைந்திருக்க வேண்டும் தெரியுமா?
சுங்கச்சாவடியில் உட்கார்ந்த மத்தேயுவாகிய என்னைக் கண்டு, தன்னைப் பின் தொடர்ந்து வா என்று ஏசு சொன்னார். நான் அவருக்குப் பின் சென்றேன்.
இப்படித் தான் மத்தேயுவின் வாசகம் அமைந்திருக்க வேண்டும்.
ஆனால் இதற்கு மாற்றமாக, “சுங்கச்சாவடியில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்பவரைக் கண்டு, எனக்குப் பின் வா என்று ஏசு சொன்னார். அவர் எழுந்து அவருக்குப் பின் சென்றார்” என்று பைபிள் கூறுகின்றது.
ஏசுவின் சீடர் மத்தேயு எழுதிய நூலாக இருந்தால், அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது, “மத்தேயு என்பவர்’ என்று படர்க்கையாகக் கூற மாட்டார். தன்னிலையாகத் தான் கூறுவார். எனவே பைபிளில் உள்ள மத்தேயு என்ற நூல், ஏசுவின் சீடர் மத்தேயு எழுதியதல்ல என்பது தெளிவாகின்றது.
ஜே.பி. ஃபிலிப்ஸின் கண்டுபிடிப்பு
பைபிளில் வரும் மத்தேயு எனும் ஆகமத்தை, ஏசுவின் சீடர் மத்தேயு எழுதவில்லை. இது வேறு மத்தேயு என்று இங்கிலாந்தின் பிரபலமான ஆங்கிலகன் திருச்சபையின் ஊழியர் ஜே.பி. ஃபிலிப்ஸ் தெரிவிக்கின்றார்.
“ஆரம்ப காலச் செய்திகள் இந்த நற்செய்தியை தூதர் மத்தேயு எழுதியதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் நவீன கால அறிஞர்கள் பெரும்பாலும் இந்தக் கருத்தை மறுத்து விட்டனர். நாம் நம்முடைய வசதிக்காக இதன் ஆசிரியர் மத்தேயு என்று சொல்லிக் கொள்கிறோம்.
அதாவது மத்தேயு, மாற்கு, லூக்கா என்று நாம் பெயர் வைக்கவில்லை என்றால் திரும்ப முதல் ஆகமம் என்று ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இந்த வசதிக்காகத் தான் நாம் மத்தேயு, மாற்கு, லூக்கா என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு ஜே.பி. ஃபிலிப்ஸ் தெரிவிக்கின்றார்.
மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுவதாவது:
“ஆசிரியர் மத்தேயு தெளிவாக சில செய்தி மூலங்களிலிருந்து தனது நற்செய்தியை எடுத்திருக்கின்றார். அவை வாய்வழியாக வந்த செய்திகளின் தொகுப்பாகும். அவர் மாற்கின் நற்செய்தி நூலைத் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்”
அதாவது மாற்கின் நூலிலிருந்து மத்தேயு காப்பியடித்திருக்கின்றார் என்று ஜே.பி. ஃபிலிப்ஸ் தெரிவிக்கின்றார். இவ்வாறு கருத்து தெரிவிக்கின்ற ஃபிலிப்ஸ் சாதாரண ஆள் அல்ல! பைபிளைப் பற்றி நன்கு ஆய்வு செய்த மேன்மை மிகு அறிஞர்! பைபிளின் மூலப் பிரதிகளான கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலும் தனது பார்வையைச் செலுத்தியவர். அவர் தான் மத்தேயுவைப் பற்றி இவ்வளவும் தெரிவிக்கின்றார்.
ஏசுவுடன் இருக்கும் போது கண்ட அனுபவங்களை, நிகழ்வுகளை தானே நேரடியாக எழுதுவதை மத்தேயு விரும்புவாரா? அல்லது தனது மக்களை ஏசு கடிந்து கொண்டிருந்த காலத்தில் 10 வயது சிறுவனாக இருந்த மாற்கின் நூலிலிருந்து காப்பியடிப்பாரா? நிச்சயமாக அவர் அவ்வாறு செய்ய மாட்டார். எனவே ஏசுவின் சீடரான அந்த மத்தேயு நல்ல மத்தேயு! இந்த ஆகமத்தை எழுதியுள்ள மத்தேயு கள்ள மத்தேயு ஆவார்.
ஃபிலிப்ஸின் கண்டுபிடிப்பை இப்போது கத்தோலிக்க பைபிளின் மத்தேயு நூல் துவக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை இப்போது பார்ப்போம்.
இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்துதர் மத்தேயு முதன் முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.
மத்தேயு முன்னுரை
மத்தேயு தான் இப்படி என்றால் லூக்காவைப் பாருங்கள்.
மாண்புமிகு தியோபிலுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது; நல்ல கிரேக்க மொழிநடையில் அமைந்துள்ளது. தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல் இதற்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்றுப் பின்ணணியோடும் யாவற்றையும் உறுதிபடுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக்1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயர் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.
எருசலேம் நகரம் தீத்துவால் அழிக்கப்பட்ட போது நிகழ்ந்தவை இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில் பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப் பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5, 20; 13:35). எனவே இந்நூல் கி.பி 70-க்கு பின் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் அந்தியோக்கியா, உரோமை போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.
லூக்காவின் முன்னுரை
மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்;
தொடக்க முதல் நேரில் கண்டும் இறை வார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,
அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
லூக்கா 1:1-4
இது இறைவனிமிருந்து வந்த செய்தி என்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருக்கின்றதா என்று பாருங்கள்.
லூக்கா, தனக்கு நல்லதாய் தோன்றுவதை மன்னருக்கு எழுதுகின்றார். அவ்வளவு தான்! இது எப்படி வேத நூலாக ஆக முடியும் என்பதை கிறித்தவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
அனாமதேய ஆகமங்கள்
காப்பியடிக்கப்பட்ட செய்திகளும், கண்டதையும், கேட்டதையும் பதிவு செய்த போலி ஆசிரியர்களின் வாக்குமூலத்தையும் நாம் பார்த்தோம்.
பைபிளில் இடம் பெறுகின்ற ஆகமங்களுக்கு அல்லது புத்தகங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. சாதாரண நூல்களுக்காவது ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் வேத நூல்கள் என்று சொல்லப்படுகின்ற புத்தகங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை, அல்லது ஆசிரியர்கள் என்று சொல்லப்படுபவர்களும் அனாமதேயங்களாக இருக்கிறார்கள்.
பைபிளில் இடம் பெற்றுள்ள ஆகமங்களின் ஆசிரியர் விபரங்களை பைபிளிலிருந்தே எடுத்துக் காட்டுகிறோம்.
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் , எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஐந்து நூற்களும் மூஸா எழுதியது
யோசுவா – பெரும் பகுதிகள் யோசுவா இயற்றியவை
நீதிபதிகள் ஆகமம் – சாமுவேலாக இருக்கலாம்
ரூத்து – உறுதியாகத் தெரியவில்லை
சாமுவேல் முதல் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை
சாமுவேல் இரண்டாம் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை
ராஜாக்கள் முதல் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை
ராஜாக்கள் இரண்டாம் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை
நாளாகமம் முதல் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை; எஸ்ராவால் சேகரிக்கப்பட்டு இயற்றப்பட்டிருக்கலாம்
நாளாகமம் இரண்டாம் நூல் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை; எஸ்ராவால் சேகரிக்கப்பட்டு இயற்றப்பட்டிருக்கலாம்
எஸ்ரா – எஸ்ராவால் எழுதப்பட்டு இயற்றப்பட்டிருக்கலாம்
எஸ்தர் – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை
யோபு – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை
சங்கீதங்கள் – முதன்மையாக தாவூதும், தொடர்ந்து மற்ற எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர்
சங்கத் திருவுரை ஆகமம் – சந்தேகத்திற்குரியது; ஆனால் பொதுவாக சாலமன் எழுதியதாகக் குறிப்பிடப்படுகின்றது
எசாயா – முக்கியமாக எசாயா எழுதியது. இதன் பகுதிகள் மற்றவர்களால் எழுதப்பட்டிருக்கலாம்
யோனா – ஆசிரியர் யாரென்று தெரியவில்லை
அபக்கூக்கு – ஆசிரியர் பிறந்த இடமோ பிறந்த காலமோ தெரியவில்லை
இந்த விபரங்கள் Collins வெளியீடான R.S.V. 1971 பைபிளின் பக்கம் 12-17ல் இடம் பெற்றுள்ளன.
அனாமதேயங்கள், அடையாளமே தெரியாதவர்களின் வார்த்தை ஜாலங்களை, வர்ணனைகளை இறைவனின் வேதம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவற்றை வேதம் என்று நம்பி பரலோக ராஜ்ய வாழ்வைப் பாழாக்கலாமா என்று ஒவ்வொரு கிறித்தவரும் சிந்தித்து, உண்மை இறை வேதமான திருக்குர்ஆனின் பக்கம் வாருங்கள் என்று அன்பாய் அழைக்கிறோம்.