வலஜாவில் ஒரு வாட்போர்…….27

வலஜாவில் ஒரு வாட்போர்…….27

அபூபக்ர் (ரலி) வரலாறு                         தொடர் – 32

எம். ஷம்சுல்லுஹா

இராக்கில் பாரசீக சக்திகளை வேரறுத்து விட்டதாக காலித் கருதவில்லை. பாரசீகத்தின் கிஸ்ரா எனும் பாம்பு இன்னும் தன் படத்தைக் கீழே போடவில்லை என்பதை காலித் அறிந்திருந்தார்.

பாரசீகப் பேரரசின் அடுத்தக்கட்ட வேலை, முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, (முஸ்லிமான) அரபியரை, (முஸ்லிம் அல்லாத) அரபியர்களைக் கொண்டு களையெடுக்க வேண்டும் என்பது பாரசீகத்தின் திட்டம் என்று காலித் கணக்குப் போட்டு வைத்திருந்தார். அவரது கணக்கு சரியானது; கணிப்பு நிஜமானது.

இராக்கின் புராத், திஜ்லா என்ற இரு நதிகளுக்கு இடையே பல்வேறு அரபிக் கோத்திரங்கள் பரவலாகப் பரந்து விரிந்து கிடந்தன. பாரசீகப் பேரரசு இவர்களுடைய சுதந்திரத்திற்கு எவ்வித சோதனையையும் கொடுக்கவில்லை. அவர்களுடைய சுய ராஜ்யத்திற்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கவில்லை. இந்த அரபியப் படையினரிடம் இஸ்லாமியப் படை வந்து, இஸ்லாத்தில் நுழையுங்கள்; அல்லது வரி செலுத்துங்கள் என்று கேட்டால் இசைவார்களா? ஒரு போதும் இசைய மாட்டார்கள். அசையக் கூட மாட்டார்கள். இஸ்லாமிய அரசா? அல்லது பாரசீக அரசா? என்றால் அவர்கள் தேர்வு செய்வது பாரசீகத்தைத் தான்.

இந்தச் சிந்தனை தான் இஸ்லாமிய ராஜ தந்திரியின் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது. இந்தச் சிந்தனை ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் காலிதின் காதுக்கு ஒரு தகவல் வருகின்றது. பனூ பக்ர் பின் வாயில் தலைமையில் ஒரு படை வஜலாவை நோக்கி வருகின்றது என்ற தகவல் தான் அது! தளபதி காலித் அப்போது மதாரில் இருந்து கொண்டிருந்தார்.

பக்ர் கிளையினரைத்  தூண்டி விட்ட பாரசீகம்

மதாரில் பாரசீகப் படை படுதோல்வி அடைந்தது. காரின் கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி அர்தஷீருக்குக் கிடைக்கின்றது. அர்தஷீர் அப்போது பாரசீகப் பேரரசின் அரசராக இருந்தார். இதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, தன் அரசின் பாதத்தை அரபகத்தில் பதிய வைத்து விட வேண்டும் என்பதற்காக பனூ பக்ர் கிளையை அர்தஷீர் தூண்டி விடுகின்றார்.

அந்தப் படைக்கு அன்தர்சகர் என்பவன் தலைமை தாங்குகின்றான். இவன் மதாயின் நகரத்தைச் சார்ந்த கறுப்பு இனத்தவன்; ஒரு வீரன். இவன் மதாயினிலிருந்து புறப்பட்டு கஸ்கர் என்ற இடத்திற்கு வந்தான். பின்னர் அங்கிருந்து வலஜாவுக்கு வந்தான்.

அரபியர்களை அரபியர்கள் தான் வீழ்த்தினார்கள் என்ற வரலாறு வந்து விடக் கூடாது என்பதற்காக பஹ்மன் ஜாதவைஹ் என்பவன் தலைமையில் ஒரு பாரசீகப் படையையும் அர்தஷீர் அனுப்பி வைக்கின்றார். அந்தப் படை அன்தர்சகர் படையை வேறு வழியில் தொடர்ந்து வருகின்றது. இந்தப் படை, ஹியராவுக்கும் வலஜாவுக்கும் இடையில் அரபியர்களையும், பாரசீகத் தலைவர்களையும் திரட்டி வருகின்றது. இந்தப் படையின் தொகையைக் கண்ட பஹ்மன் ஜாதவைஹ் பெருமிதமும் பேரானந்தமும் அடைந்தவனாக வலஜாவில் முகாமிடுகின்றான்.

இந்தத் தகவலைப் பெற்ற காலித், தான் கைப்பற்றிய நகரங்களின் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். வெற்றிக் களிப்பில் இருந்து விடாதீர்கள்! எதிரிகளைத் தோற்கடித்து விட்டோம் என்ற மிதப்பில் மிதந்து விடாதீர்கள் என்ற ஓர் அறிவுரையைப் பதிவு செய்து விட்டு வலஜாவை நோக்கி அவசரமாக விரைகின்றார்.

அவரது படை வலஜா வந்ததும், பனூ பக்ர் படையும், பாரசீகப் படையும் இணைந்து காலிதின் படையுடன் கடுமையாக மோதுகின்றனர். இரு படையினரும் இனி தங்களுக்குப் பொறுமையில்லை எனுமளவுக்கு உக்கிரமான போர் நடக்கிறது. காலித் முன்னால் நின்று கொண்டு தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தார். எதிரிகளிடம் முஸ்லிம்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளை!

வலஜாவிற்கு வரும் வழியில் காலித் முன்னேற்பாடாக இரு படைகளை இரு வேறு பகுதிகளில் பிரித்து விட்டு, திடீர்த் தாக்குதலுக்கு வருமாறு ஏற்கனவே கட்டளையிட்டிருந்தார். அந்த இரு படையினரும் தாமதமாக வந்தாலும் இஸ்லாமியப் படைகளுக்குத் தக்க பலமாக வந்து சேர்ந்தனர்.

முன்னால் காலிதின் மின்னல் வீச்சிலும், பின்னால் திடீர் படையினரின் அதிரடித் தாக்குதலாலும் எதிரிப் படையினர் அடையாளம் தெரியாமல் ஆயினர்.

தம்முடன் வந்த நண்பர்களின் கதி என்ன? என்று பார்க்க முடியாதவாறு அவரவரின் கதி அவசர கதியில் முடிந்து போனது. தளபதி அன்தர்சகர் அடித்துப் புரண்டு கொண்டு ஓடிப் போய், தாகத்தால் தவித்தே செத்தான். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தான். போர் குற்றவாளிகளையும் அவர்களுக்கு உதவியவர்களையும் இஸ்லாமிய ராணுவம் கைதிகளாகப் பிடித்தது.

அம்பாரமாய் குவிந்த ஆகார வகைகள்

போர் முடிவின் போது அங்கு ஆகாரங்கள், உணவுப் பொருட்கள் அம்பாரமாய் குவிந்து கிடந்தன. எதிரிகளின் இந்தப் பொருளாசை பற்றியும் அதற்காக எதிரிகள் புரிந்த போரைப் பற்றியும் விமர்சித்து, அல்லாஹ்வின் போர் வாள் ஆற்றிய உரை இதோ:

கொட்டிக் கிடக்கும் இந்த ஆகாரங்களையும், குவிந்து கிடக்கும் உணவுப் பொருட்களையும் ஒரு முறை நீங்கள் உற்றுப் பாருங்கள். அல்லாஹ்வின் பாதையில் ஓர் அறப் போர் இல்லையெனில், அவன் பால் அழைக்கும் அழைப்புப் பணி இல்லையெனில், மறுமை வாழ்வு என்ற ஒன்று இல்லையெனில் நாங்களும் இந்த உலக சுகபோக வாழ்க்கைக்காகத் தான் போரில் குதித்திருப்போம். அதில் உங்களை விஞ்சியும் விடுவோம்.

உங்களைப் போன்ற வெறி பிடித்தவர்களுக்குப் பசியையும் பட்டினியையும் உடமையாக்கி இருப்போம். ஆனால் நாங்கள் மறுமைக்காகப் போரிடுபவர்கள்; இந்த உலக சுகபோகத்திற்காகப் போரிடுபவர்கள் கிடையாது.

இவ்வாறு காலித் உரையாற்றினார்.

காலிதின் இந்த அக்கினிப் பொறி பறக்கின்ற ஆவேசப் பேச்சுக்குப் பின்னர் அவருடைய படையிலுள்ள ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைப் பெரிதாகக் கருதுவார்களா? இங்கு அல்லாஹ்வின் பாதையில் அல்லவா காலித் தன்னை அர்ப்பணித்துள்ளார். அதே சமயம் வெற்றிப் பொருட்களையும் பெற்றுள்ளார். அவரது வலக்கரங்கள் அடிமைகளை சொந்தமாக்கியிருக்கின்றன. இவை உண்மையில் இம்மை, மறுமை ஆகிய ஈருலகப் பேறும் பாக்கியமும் அல்லவா?

இத்தகைய படையினருக்குத் தான் அல்லாஹ் மாபெரும் வெற்றியை அளித்தான். அந்தப் போரின் பரிசாகக் கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி விட்டு மீதியை போராளிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். படம் எடுத்து ஆடிய பாரசீகப் பாம்பின் விஷப் பல்லை, காலித் பிடுங்கி எறிந்தார்.

உல்லைஸில் ஒரு போர்

இதனால் இந்தப் போருக்குப் பின் பாரசீகம் அவ்வளவாக எகிறவில்லை. ஆனால் அரபிக் கிளைகள் அடங்கவில்லை. வலஜா போரின் தோல்விக்காக பாரசீகம் கொதித்து எழாவிட்டாலும் பனூ பக்ர் கிளையினர் கொதித்து எழுகின்றனர். கோபாவேசத்தில் சீறுகின்றனர். பனூ பக்ர் கிளையினர் ஏன் இவ்வாறு ஆத்திரம் கொள்கின்றனர்?

அல்லாஹ்வின் போர் வாளும், வெற்றியின் கூர் வாளுமாகிய காலித் பின் வலீத், வலஜா போரில் ஆயிரம் பேருக்குச் சமமான பாரசீக மாவீரனை மண்ணைக் கவ்வச் செய்தார். அந்தப் போரில் ஏற்பட்ட சாவுப் பட்டியலில் முக்கியமான இருவர் இடம் பெறுகின்றனர். ஒருவர் ஜாபிர் பின் புஜைர் என்பவரின் மகன்! மற்றொருவர் அப்துல் அஸ்வதின் மகன்!

ஜாபிர் பின் புஜைர், அப்துல் அஸ்வத் ஆகிய இருவருமே பனூ பக்ரின் தலைவர்கள். அதனால் பனூ பக்ர் கிளையினர் கிளர்ந்தெழுகின்றனர். அதிலும் தங்களைப் போன்ற அரபி இனத்தவர் தங்களைத் தோற்கடித்து விட்டனர் என்ற வெறி அவர்களுடைய தலைகளில் ஏறிப் போய் இருந்தது. குறிப்பாக அவர்களிலுள்ள கிறித்தவர்கள், முஸ்லிம்களை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தனர்.

இதன் காரணமாக பனூ பக்ர் கிளையினர் அந்நியப் படைகளிலும் ஆதரவு கோரி கடிதம் எழுதுகின்றனர். அந்நிய சக்திகளும் படையனுப்புவதாக வாக்களித்துப் பதில் கடிதம் அனுப்பினர்.

பாரசீக மன்னன் அர்தஷீர், தன்னுடைய ஆளுனரான பஹ்மன் ஜாதவைஹிக்கு, “நீ உடனே உல்லைஸுக்குப் போ! அங்கு ஒன்று கூடுகின்ற பாரசீக, கிறித்தவப் படைகளுடன் இணைந்து கொள்க” என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் அனுப்பினார்.

பஹ்மன் ஜாதவைஹ், மன்னரைச் சந்தித்து விட்டு உல்லைஸுக்குச் செல்வோம் என்று எண்ணி அவர் ஜாபான் என்பவரைத் தனது பிரதிநிதியாக உல்லைஸுக்கு அனுப்பி வைக்கின்றார்.

பஹ்மன் ஜாதவைஹ், மன்னரிடம் வந்த போது அவர் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் அவரது நோக்கம் நிறைவேறாமல் உல்லைஸுக்குப் புறப்பட்டு வந்தார். ஸஃபர் மாதம் அவர் உல்லைஸ் வந்து சேர்ந்தார்.

கிறித்தவப் படைக்கு அப்துல் அஸ்வத் தலைவராக இருந்தார். ஜாபிர் பின் புஜைரும் கிறித்தவராக இருந்ததால் அவரும் அப்துல் அஸ்வதுக்கு முழு உதவியளித்தார்.

இந்தக் கூட்டுப் படைகள் உல்லைஸில் ஒன்று கூடியிருக்கிறார்கள் என்ற விபரம் காலித் பின் வலீதுக்குக் கிடைத்தது.

காலித் உடனே உல்லைஸுக்கு வருகின்றார். எதிரிகளின் முகாமை வந்தடைந்த போது அவர்கள் உணவு பரிமாறுவதற்காகப் பந்தி ஏற்பாட்டில் மும்முரமாக இருந்தனர்.

சண்டைக் களமா? சாப்பாட்டுக் களமா?

காலிதைக் கண்ட எதிரிப் படையினர், “நாம் சாப்பாட்டைச் சாப்பிடுவோமா? அல்லது இவர்களைச் சாத்துவோமா?” என்று தமது தளபதி ஜாபானிடம் ஆலோசனை செய்தனர்.

அதற்கு ஜாபான், “அவர்கள் உங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் நீங்களும் அப்படியே இருந்து விடுங்கள். ஆனால் அவர்கள் (காலித் படையினர்) உங்களைச் சாப்பாட்டில் கை வைக்க விட மாட்டார்கள் போல் தெரிகிறது” என்று கூறினார்.

ஜாபானின் இந்த ஆலோசனையை அவரது படையினர் கண்டு கொள்ளவில்லை. பந்திக்கான விரிப்புகளை விரித்தனர். உணவுகளை வைத்தனர். சண்டைக் களத்தில் இறங்குவதற்குப் பதிலாக அவர்கள் சகட்டு மேனிக்கு சாப்பாட்டுக் களத்தில் இறங்கினர்.

அப்போது அந்தக் களத்திற்கு அருகே வந்த காலித், “புஜைர் எங்கே? அப்துல் அஸ்வத் எங்கே? மாலிக் பின் கைஸ்  எங்கே? ஜத்ரா கிளையைச் சேர்ந்த ஆள் எங்கே?” என்று எதிரிப் படையினரின் பெரும் புள்ளிகள், தலைவர்களின் பெயர்களைக் கூறி சிங்கமாய் கர்ஜிக்கலானார்.

வளரும் இன்ஷா அல்லாஹ்