ஆய்வே அமைப்பின் ஆணிவேர்

ஆய்வே அமைப்பின் ஆணிவேர்

எண்பதுகளில் தவ்ஹீத் ஜமாஅத் உதயமான வேளைகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பலைகளையும் எரிமலைகளையும் அது சந்தித்தது. எதிர்ப்பவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் பயன்படுத்தி, மொத்த சக்தியையும் பிரயோகித்து மூர்க்கத்தனமாக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்தனர். முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும் என்பது அவர்களின் மூளையில் படிந்திருந்தது. அதனால் தங்கள் கட்டுப்பாட்டிற்கும் கைவசத்திற்கும் உட்பட்ட அனைத்து காட்டுத் தர்பார்களையும் கட்டவிழ்த்து விட்டனர்.

ஏனிந்த எதிர்ப்பு? எதற்காக இந்த ஏகோபித்த தாக்குதல்கள்? காரணம், தவ்ஹீத் ஜமாஅத் தொடுத்த இருமுனைத் தாக்குதல்கள். ஒன்று இணை வைப்பு, மற்றொன்று மத்ஹபு. இவ்விரண்டிற்கும் எதிரான இருமுனைத் தாக்குதல் தான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

தமிழகத்தில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஹைத்ரூஸ் ஆலிம், தென்காசி இ.எம். அப்துர்ரஹ்மான் ஆலிம் போன்றோரும், ஆலிம் அல்லாத வட்டத்தில் சிம்மக்குரலோன் என்று பாராட்டப்பட்டவரும் மறுமலர்ச்சி ஆசிரியருமான முஹம்மது யூசுப் போன்றவர்களால் சமாதி வழிபாடு எனும் இணை வைப்பு எதிர்க்கப்பட்டது.

இந்த வகையில் இணை வைப்பிற்கு எதிரான யுத்தம் தமிழகத்திற்கு ஓரளவு அறிமுகமாகியிருந்தது. ஆனால் தமிழக முஸ்லிம்கள் அறியாததும் அறவே காணாததும் மத்ஹபுக்கு எதிரான யுத்தம். வணக்க வழிபாடுகள், வாழ்க்கை விவகாரங்கள் அனைத்திலும் மாநபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றவேண்டும்; அவர்கள் மட்டும் தான் இமாமுல் அஃலம் – மாபெரும் தலைவர் என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைப் பிரகடனம் தமிழக முஸ்லிம்களிடம் ஒரு புது அத்தியாயமாகவும் புரட்சியாகவும் பார்க்கப்பட்டது. போர்ப் பிரகடனமாக அர்த்தம் செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் இந்தக் கொள்கைப் பிரகடனத்தை அறிவிக்கின்ற வரை நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவுகளில் மட்டுமே போற்றப்பட்டார்கள். ஷாபி, ஹனபி இமாம்கள் தான் பின்பற்றப்பட்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பிரகடனத்தில் தொழுகையில் உளூ, தக்பீர் தஹ்ரீமா முதல் ஸலாம் கொடுத்தல் வரையிலும் இதர வணக்கங்களிலும் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே நேர்முகமாகப் பின்பற்றப்பட்டு, அவர்கள் மட்டுமே இமாமாக ஆக்கப்பட்டார்கள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் நபி (ஸல்) அவர்களே முன்மாதிரியாகவும் முன்னுதாரணமாகவும் ஆனார்கள்.

இந்த இருமுனைத் தாக்குதல்கள், குறிப்பாக மத்ஹபுக்கு எதிரான தாக்குதல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எழச் செய்தது; எதிர்க்கச் செய்தது.

எனினும் இந்தத் தாக்குதலில் தவ்ஹீத் ஜமாஅத் வெற்றி கண்டது. அல்லாஹ்வின் அருளால் கிடைத்த இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது ஆய்வுகள் தான். மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு எந்த மத்ஹபு நூலையும் ஆதாரமாகக் கொள்ளாமல் நேரடியாகக் குர்ஆன், ஹதீஸிலிருந்து பதில் அளிக்கப்பட்டது.

இன்றளவும் ஆன்லைன் பிஜே இணைய தளத்திலும், ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி இதழ்களிலும் கேள்வி பதில்கள் அனைத்திற்கும் குர்ஆன், ஹதீஸே நேரடியாக ஆளப்பட்டு ஆதாரமாக அளிக்கப்படுகின்றது. மத்ஹபு நூல்கள் இல்லாமல் அணுவளவும் அசையாது என்பது சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோரின் ஆழமான, அழுத்தமான நம்பிக்கை! அதைத் தகர்த்தெறிந்து, அணுவளவு அல்ல, ஆகாயமே குர்ஆன், ஹதீஸின் வசமாகும் என்று அவ்விரண்டிலிருந்தும் நேரடியாக தவ்ஹீத் ஜமாஅத் அளிக்கும் தனது பதில்கள் மூலம் நிரூபித்து வருகின்றது.

இதற்கு அடிப்படை என்ன? தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் செய்த ஆய்வுகள் தான். இணை வைப்பிற்கு எதிரான போராகட்டும்; மத்ஹபுக்கு எதிரான போராகட்டும். இரண்டுக்கும் இன்றியமையாதது ஆய்வுகள் தான். இந்த ஆய்வுகள் இல்லை என்றால் இந்த ஜமாஅத் என்றோ அழிக்கப்பட்டிருக்கும்.

அசத்தியவாதிகள் தங்களது இணை வைப்புக் கொள்கைக்கு ஆதாரமாகக் குர்ஆன் வசனங்களைத் தான் வைத்தார்கள். அதற்குப் பதிலளிப்பதற்கு ஆய்வு அவசியமானது. ஹதீஸ்களை எடுத்து வைத்தார்கள். அதற்கும் ஆய்வு மிக மிக அவசியமானது. காரணம், பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு வந்து தங்கள் அசத்தியக் கொள்கைக்கு ஆதாரமாக நிறுத்தினார்கள். குர்ஆனைப் பொறுத்தவரை பலவீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் ஹதீஸ்களைப் பொறுத்தவரை பலம், பலவீனம் என்ற நிலைகள் உண்டு.

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரங்கள், தகுதிகள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய ஆழ்ந்த அறிவும் ஆய்வுத் திறனும் இருந்தே தீர வேண்டும். இதை வைத்துத் தான் விவாதக் களத்தில் வைக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் தகர்க்கப்பட்டன.

ஜகாத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு, உலகின் நிலைப்பாட்டிற்கு மாற்றமான நிலைப்பாடு! இந்த நிலைப்பாடு சுயமாக எடுக்கப்பட்டதல்ல. ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நிலைப்பாடாகும். ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் அதாவது, ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூடக் கிடையாது.

இந்த முடிவை எடுப்பதற்கு அடிப்படையாக அமைந்தது, ஜகாத் தொடர்பான அனைத்து ஹதீஸ்கள், அவற்றின் அறிவிப்பாளர்களின் தரங்களை ஆய்வு செய்தது தான்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதிலும் தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு வேறுபட்டே நிற்கின்றது. குர்ஆனுக்கு மாற்றமான ஒன்றை, உலகமே ஒன்று சேர்ந்து சொன்னாலும் அதை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக நிற்கின்றது.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:8

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்று குர்ஆன் வசனங்கள் தெளிவாக மறுக்கின்றன என்பது தான் நமது இந்த நிலைப்பாட்டிற்குக் காரணமாகும்.

இந்தத் தெளிவான முடிவை அடையத் துணை புரிந்தது ஆய்வுகள் தான். எனவே இப்படி ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்கள் உருவாகியாக வேண்டும்.

இப்படி ஆய்வாளர்கள் உருவாக வேண்டுமென்றால் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பணிக்காக அனுப்பி வைக்க வேண்டும். இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுவோர் அனைத்து நன்மைகளும் அளிக்கப்பட்ட அருட்கொடை பெற்றவராகி விடுகின்றார். அபரிமிதமான நன்மைகளைப் பெற்றவராகி விடுகின்றார்.

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 2:269

நபி (ஸல்) அவர்களும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்கள்.

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 71

மார்க்கத்தைக் கற்று, ஆய்வு செய்து, தீர்ப்பு வழங்குவோருக்கு நபி (ஸல்) அவர்கள் உயரிய இடத்தை அளிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால்நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.

இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 79

மார்க்கத்தில் ஆய்வு செய்கின்ற சாராரை நபி (ஸல்) அவர்கள், நீரை உள்வாங்கி, புற்பூண்டுகளை முளைக்கச் செய்கின்ற நிலத்திற்கு ஒப்பிட்டு, அவர்களை முதல் தரத்தில் வைக்கின்றார்கள்.

பேச்சாளர்கள் உருவாகி விடலாம். ஏனைய பேச்சாளர்களின் பிரச்சாரத்தைக் கேட்டு, அதை அப்படியே ஒப்பிவித்தால் பேச்சாளர் என்ற பெயரைப் பெற்று விடலாம். அல்லது குர்ஆன், ஹதீஸ் நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை, இதர மார்க்க விளக்க நூல்களைப் படித்து, அதன் மூலம் பேச்சாளராகி விடலாம். அப்படி ஏராளமான அழைப்பாளர்கள் உருவாகியும் இருக்கிறார்கள்.

ஆனால் ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் தேவை. அப்படி ஆய்வு செய்கின்ற அறிஞர்களை உருவாக்கும் பொறுப்பு நமது ஜமாஅத்தைச் சார்ந்த பெற்றோர்கள் மீது இருக்கின்றது. தங்கள் பிள்ளைகளை இந்த மார்க்கப் பணிக்கு அனுப்பி, ஏகத்துவக் கொள்கையைக் காக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை ஆய்வில் இருந்தவர்கள் உலகத்தை விட்டு விடை பெற்றாக வேண்டும். அதை ஈடுகட்ட இளைய தலைமுறை ஏகத்துவம் காக்க முன்வந்தாக வேண்டும்.

எனவே, அடுத்த தலைமுறையே! ஆய்வு செய்ய வா என்று கனிவாக அழைக்கின்றோம். இது பெற்றோர் துணை நின்றால் மட்டுமே சாத்தியம் என்பதைப் பணிவுடன் அவர்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.