ஆடைகள்

ஆடைகள்

எஸ். யூசுப் பைஜி

அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இன்னும் அவர்களுக்கு உணவுகளையும், குடிபானங்களையும், ஆடைகளையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். எனினும் அதில் சில வரையறைகளை ஏறபடுத்தி இருக்கிறான். அந்த வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: “தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியதுஎனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்     

அல்குர்ஆன் 7:33

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை முழுமைப்படுத்தினான்.

அல்குர்ஆன் 16:81

ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள ஆடைகளின் நிறங்கள்

மஞ்சள்:

உபைது பின் ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “அப்துர் ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை நான் பார்க்கிறேன்என்று கூறி விட்டு, “நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதை நான் பார்க்கிறேன்என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை நான் பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை நான் விரும்புகிறேன்என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 166, 5851

இந்தச் செய்திலிருந்து மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ளலாம் என்பதை நாம் விளங்க முடிகிறது.

சிவப்பு:

பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ளவர்களாகவும், இரு புஜங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ள (அகண்ட மார்புடைய)வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான்    சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கின்றேன். அதை விட அழகான ஆடையை நான் பார்த்ததில்லை.

நூல் : புகாரி 3551

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிபவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு, “சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது; யாருக்காவது செருப்பு கிடைக்காமல் இருந்தால் தோலினால் ஆன காலுறை அணிந்து கொள்ளலாம் அந்தக் காலுறை கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 366

இந்தச் செய்தியில் இஹ்ராம் அல்லாத மற்ற சமயத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கொள்ளலாம் என்று விளங்க முடிகின்றது. குங்கும நிற ஆடைக்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஹஜ் அல்லாத மற்ற காலங்களிலும் காவி ஆடை அணியக் கூடாது என்று தனியாகத் தடை வந்துள்ளது.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது சிவப்பு நிற ஆடை அணிவதையும் தங்கம் மோதிரம் அணிவதையும் ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.

நூல்: நஸயீ 5171

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சில அறிஞர்கள், “முதலாவது செய்தியில் சிவப்பு நிறம் அனுமதிக்கப் பட்டதாக வருகிறது; இரண்டாவது செய்தியில் தடுக்கப்பட்டதாக வருகிறது; எனவே ஆடைகளில் குறைவாக சிவப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; முற்றிலும் சிவப்பாக இருக்கக் கூடாது” என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் நஸயீயின் இந்த அறிவிப்பில் மட்டுமே சிவப்பு என்று வருகிறது. இதே இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக, இதே வார்த்தையில் நஸயீயில் வேறு சில அறிவிப்புக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்த அறிவிப்புக்கள் அனைத்திலும் காவி நிறம் என்று வந்துள்ளது.

எனவே இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் காவி நிறம் என்பதற்கு சிவப்பு என்று சொல்லி விட்டனர். ஏனென்றால் நிறத்தால் இரண்டும் ஒத்ததாக இருப்பதால் இப்படி மாற்றிக் கூறியிருக்கலாம் என்று விளங்கிக் கொண்டால் எந்த முரண்பாடும் இல்லை.

பச்சை:

அபீ ரிம்ஸா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்து வந்தார்கள்.

நூல்: நஸயீ 5224

கருப்பு:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கருப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் நுழைந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 2638

அப்தில்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் மீது கருப்பு நிறமான கோடு போடப்பட்ட பட்டு இருந்த நிலையில் மழை வேண்டினார்கள்.

நூல்: நஸயீ 1490

வெள்ளை:

நபி (ஸல்) அவர்கள், “வெள்ளை நிறமான ஆடைகளை அணியுங்கள்; அது தான் ஆடைகளில் சிறந்ததாகும்; அதன் மூலம் உங்களில் மரனித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 915

நஸயீயின் மற்றொரு அறிவிப்பில்…..

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் வெண்மை நிறமான ஆடையை அணியுங்கள்; அது தான் தூய்மையானதும் சிறந்ததுமாகும். அதன் மூலம் உங்களில் மரணித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

நூல்: நஸயீ 5227

மேற்கூறப்பட்ட நிறங்களில் அமைந்த ஆடைகளையும், இங்கு கூறப்படாத மற்ற நிறங்களிலான ஆடைகளையும் அணியலாம்; எந்தத் தடையும் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட காவி நிறத்தை மட்டும் அணியக் கூடாது.

தடை செய்யப்பட்ட நிறம்

நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கண்ட போது, “இவை இறை மறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளதாகும்; எனவே இதை அணியாதீர்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4218

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், ஆண்கள் குங்குமப்பூ சாயமிட்டுக் கொள்ளக் கூடாது எனத் தடை விதித்தார்கள்என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: புகாரி 5846, முஸ்லிம் 4268

மேலே சொன்ன முதலாவது செய்தியில் பொதுவாகக் காவி ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. இரண்டாவது செய்தியில் ஆண்களுக்குத் தடை விதித்தார்கள் என்று வருகிறது. எனவே ஆண்கள் தான் காவி ஆடை அணியக் கூடாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தி மேலும் வலுவூட்டுகிறது.

அம்ரு பின் ஷுஐப் தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, “இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்த சாயமிடப்பட்ட ஆடையை என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு நபியவர்கள், “அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையேஎன்றார்கள்.

நூல்: அபூதாவூத் 3544

இந்தச் செய்தியிலிருந்து பெண்கள் காவி நிற ஆடையை அணிவது தவறில்லை என்பது தெரிகின்றது. இன்ன நிறங்கள் அணியலாம்; இன்ன நிறங்கள் அணியக் கூடாது என்பது ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு இல்லை. பட்டாடை மற்றும் மற்ற ஆடைகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருப்பது போன்று இதிலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

முஸ்லிமில் வரக்கூடிய ஒரு செய்தி நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அந்தச் செய்தியில்…

நபி (ஸல்) அவர்கள் என் மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது கோபமாக “உன்னுடைய தாயாரா (இதை அணியுமாறு) ஏவினார்கள்?” என்று கேட்டார்கள். நான், “இதைத் துவைத்து நிறத்தை மாற்றி விடட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள், “இல்லை! இதை எரித்து விடுஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3873

இதற்கு இமாம் நவவீ அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்: “இதை உன் தாய் தான் ஏவினார்களா?” என்ற நபியவர்களின் சொல், “இந்த ஆடை பெண்களுக்குரியதும் அவர்களுடைய அலங்காரமாகவும் இருக்கும் போது அதை எப்படி உனக்கு அணியக் கொடுத்தார்கள்?’ என்பது இதன் கருத்தாகும். இதை எரிக்க வேண்டும் என்ற நபியவர்களின் கட்டளை, தண்டனைக்குரியது; கடுமையானது என்பதைக் காட்டுவதற்காகவும் மற்றவர்கள் இதைச் செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும் தான்.

நூல்: ஷரஹ் முஸ்லிம்

ஆடை அணிவதன் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதில் இஸ்லாம் சில ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.

  1. மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்

எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும்; எவற்றை மறைக்காமல் இருக்கலாம்என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்என்று விடையளித்தார்கள். “ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி 2693, 3718

  1. ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி 2717, அபூதாவூத் 3502

  1. வலது புறமாக ஆரம்பம் செய்ய வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.

நூல்: திர்மிதி 1688

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.

நூல்: அபூதாவூத் 3612

  1. ஆடை அணியும் போது கூற வேண்டிய துஆ

நபி ஸல் அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு,

அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹு அஸ்அலுக ஹைரஹு வ ஹைர மா ஸீனிஅ லஹு வ அவூது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸீனிஅ லஹீஹுஹூ

என்று கூறுவார்கள்.

பொருள்: அல்லாஹ்வே! இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும்! இந்த ஆடையின் நன்மையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம்  நான் கேட்கிறேன். இதன் தீமையையும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீமையையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல் : திர்மிதி 1689

  1. பெருமைக்காக ஆடையை தரையில் படுமாறு நடக்கக் கூடாது

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகில் புகுவார்.

நூல்: புகாரி 5787

அபூதர் (ரலி) கூறியதாவது: “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை கணுக் கால்களுக்குக் கீழ் இறக்கிக் கட்டியவர், செய்த உபகாரத்தைச் சொல்லி காட்டுபவர், பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்”  என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 171

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முற்காலத்தில் ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் இழுத்துக் கொண்டே நடந்த போது அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்.

நூல்: புகாரி 3485

இது போன்ற செய்திகளை முன் வைத்து கரண்டைக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது; அப்படி அணிகிறவர் நரகில் புகுவார் என்று கூறுகின்றனர். இப்படி மட்டும் செய்தி இருந்தால் இவர்கள் சொன்ன கருத்து சரி என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற மற்ற செய்திகளைப் பார்க்கும் போது,  பொத்தாம் பொதுவாக இப்படிச் செய்கிறவர் நரகில் புகுவார் என்று சொல்லவில்லை. மாறாக பெருமைக்காக இப்படி அணிந்தால் நரகம் என்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக இருக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் தரையில் (படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

நூல்: புகாரி 5783

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தனது கீழாடையைத் தரையில் (படுமாறு) இழுத்துச் சென்றவனை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

நூல்: புகாரி 5788

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் தனது ஆடையைப் பெருமையுடன் தரையில் படுமாறு இழுத்துக் கொண்டு செல்கிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லா விட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று சரிந்து விடுகிறதுஎன்று சொன்னார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  “நீங்கள் தற்பெருமையுடன் அப்படி செய்பவரல்லர்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5784

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் தற்பெருமையுடன் கர்வத்துடன் கணுக் கால்களுக்குக் கீழ் அணிந்தால் தான் நரகம் என்று வருகிறது. இதுதான் சரியாகவும் இருக்கிறது. ஏனென்றால் சாதாரணமாக ஆடை தரையில் படுவதற்காக இந்தத் தண்டனை கொடுப்பது சரியில்லை. மாறாக பெருமையுடன் நடந்ததால் தான் இந்தத் தண்டனை கொடுப்பது தான் சரியாகும்.

சில அறிஞர்கள் வேறு விதமான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அதாவது கரண்டைக்குக் கீழ் ஆடை இறங்கி விட்டால் அது நரகத்திற்குரியது என்பதும், பெருமைக்காக ஆடை அணிந்து தரையில் படுமாறு சென்றால் அவர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் என்பதும் தனித்தனியான செய்திகள். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து பெருமைக்காகச் சென்றால் தான் இந்த எச்சரிக்கை என்று விளங்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான எச்சரிக்கைகள் இருக்கின்றன.  எனவே பெருமைக்காக இருந்தாலும் பெருமை இல்லாவிட்டாலும் கணுக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பொதுவாக ஹதீஸ் கலையின் விதியில், ஒரு செய்தி காரணம் இல்லாமலும் இன்னொரு செய்தி காரணத்தைக் குறிப்பிட்டும் வந்தால் காரணத்தோடு வந்திருக்கும் செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. இந்த விதியை அறியாத காரணத்தால் இப்படி விளக்கம் கூறி விடுகின்றனர்.

இந்த விதியை விளங்குவதற்காக, குர்ஆனில் சொல்லப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். குர்ஆனில் அல் மாயிதா என்ற அத்தியாயத்தில் ஹராமாக்கப்பட்ட விஷயங்களைச் சொல்லும் போது இரத்தத்தையும் குறிப்பிடுகின்றான்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப் பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

அல் குர்ஆன் 5:3

இதே செய்தியை திருக்குர்ஆனில் அன்ஆம் என்ற அத்தியாயத்தில் இரத்தத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஓட்டப்பட்ட இரத்தம் என்று குறிப்பிடுகிறான்

தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர்கள் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 6:145)

இங்கே நாம் எப்படி விளங்கிக் கொள்வோம்? ஓடக் கூடிய இரத்தம் தான் ஹராம்! ஓடாத இரத்தங்கள் ஹராம் இல்லை என்று விளங்குவோம். இதே போன்று தான் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கக் கூடிய செய்தி பொதுவாக இடம் பெற்றுள்ளது. மற்றொரு செய்தியில் பெருமைக்காக என்று வந்துள்ளது. எனவே காரணத்தோடு வந்திருக்கக் கூடிய  செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படித் தான் இந்த விஷயத்தில் இணைத்து முடிவு காண வேண்டும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரியிலும், இமாம் நவவீ அவர்கள் முஸ்லிம் விளக்கவுரையிலும் கூறியிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். ஆடையை பெருமைக்காக அணிவது குற்றம் என்றவுடன் இது வேட்டியை, கீழங்கியை மட்டும் குறிக்கும், மற்ற ஆடைக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக சட்டை, தலைப்பாகை இவைகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

ஆடையைத் தொங்க விடுவது என்பது கீழங்கியிலும், சட்டையிலும், தலைப்பாகையிலும் இருக்கிறது. யார் இவைகளைப் பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் (3571)

இந்தச் செய்தி கீழங்கியை அணிபவருக்கு மட்டும் எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக தலைப் பாகையின் ஓரங்களைப் பெரிதாகத் தொங்க விடுவதையும், சட்டையில் ஜுப்பா என்ற பெயரில் முட்டுக் கால் வரை தொங்க விடுவதையும் எச்சரிக்கை செய்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெரும் அப்துல் அஜீஸ் என்பவரைப் பலர் குறை கூறியிருப்பதாக இமாம் முன்திரி அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இவருடைய விஷயத்தில் குறை கூறியவர்கள் இவர் கொண்டிருந்த கொள்கைக்காகத் தான் குறை கூறியுள்ளார்கள். கொள்கை ரீதியாக ஒருவரைக் குறை கூறுவதால் அவரது நம்பகத்தன்மையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.)

  1. எதுவரை உயர்த்தி கட்டலாம்?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை கணுக்காலுக்குக் கீழ் இருந்தது. அப்போது அவர்கள், “அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு!என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். “இன்னும் உயர்த்திக் கட்டுஎன்றார்கள். அவ்வாறே நான் இன்னும் உயர்த்தினேன். பின்னர் நான் அதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். (இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், “எதுவரை உயர்த்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “கணுக்கால்களின் பாதியளவுக்குஎன்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4238

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமினின் கீழங்கி கணுக்காலின் பாதியளவாகும். கணுக்காலுக்கும் கரண்டைக்கும் மத்தியில் இருந்தால் குற்றமில்லை.  கரண்டைக்கும் கீழாக இருந்தால் அது நரகத்திற்கு உரியதாகும். யார் பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்கிறாரோ அல்லாஹ் அவரை கியாம நாளில் பார்க்க மாட்டான்.

நூல்: அபூதாவூத் 3570

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அனைத்திலும் பொதுவாக ஆடைகளை கரண்டைக்குக் கீழ் அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. எனினும் பெண்களுக்கு என்று இதில் விதி விலக்கு இருக்கிறது. அதைக் கீழ்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

  1. பெண்கள் கரண்டைக்குக் கீழ் அணியலாமா?

நபி (ஸல்) அவர்கள், “யார் தமது கீழாடையைப் பெருமைக்காகத் தரையில் படுமாறு இழுத்துச் செல்கிறாரோ அவரைக் கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்என்று கூறியவுடன் உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் தங்களுடைய கீழாடையை எப்படி அணிவது?” என்று கேட்டார்கள். “ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்என்றார்கள். “அப்படியானால் அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே!என்று உம்மு ஸலமா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம்; அதை விட அதிகமாக்கக் கூடாதுஎன்றார்கள்.

நூல்கள்: அபூதாவூத் 5241, திர்மிதி 1651

பெண்கள் கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவதை இந்தச் செய்தி அனுமதிக்கிறது. எனவே அவர்களுக்கு மேற்கூறப்பட்ட எச்சரிக்கை பொருந்தாது என்பதை விளங்கலாம்.

  1. அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது “இவர் தனது ஆடையை தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 3540

வளரும் இன்ஷா அல்லாஹ்