பிடிவாதம் சத்தியத்தை அறிய உதவாது

பிடிவாதம் சத்தியத்தை அறிய உதவாது

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஏராளமான சான்றுகளையும், இதன் அடிப்படையில் ஹதீஸ்களை விமர்சித்த அறிஞர்களின் வழிமுறை களையும் சென்ற இதழில் வெளியான “அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்’ என்ற கட்டுரையில் விரிவாக, தெளிவாகப் பார்த்தோம். நியாயமாகச் சிந்திக்கும் யாரும் அக்கருத்துக்களை மறுக்க மாட்டார்கள்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று  தமிழகத்தில் சொன்ன போது அதைப் பலர் எதிர்த்தார்கள்; இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை தொடர்பாக உண்மையைக் கண்டறிவதற்காகப் பல நாட்களை ஒதுக்கி ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது தான்  இந்த விதி ஹதீஸ் கலையில் உறுதி செய்யப்பட்ட ஒன்று தான் என்பதும், இவருக்கு முன்னால் பல அறிஞர்கள் பல ஹதீஸ்களை இந்த அடிப்படையில் புறக்கணித்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது. ஹதீஸ் கலையின் இந்த விதிகளைப் படிக்காத காரணத்தினால் தான் மாற்றுக் கருத்துடையவர்கள் நமக்கெதிராகக் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவானது.

அறியாத காரணத்தினால் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற எண்ணத்தில் இவர்களுக்கு சத்தியத்தை உணர்த்துவதற்காக நாம் ஏகத்துவத்தில் வெளியிட்ட கட்டுரையில் இடம்பெற்ற தகவல்களை கோவை, கோட்டார், விருதுநகர் போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் வெளிநாடு மற்றும் உள்ளூர்களில் குறுந்தகடுகள் வாயிலாகவும் கிடைக்கச் செய்தோம்.

இன்று வரை இதற்கு முறையான பதில்களை இவர்கள் தரவில்லை. இந்நிலையில் கோவையில் நாம் விளக்கமளித்த மறு வாரம், நாம் பேசிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக ஜாக் அமைப்பினர் ஏற்பாடுகளை செய்தார்கள்.

நமக்கெதிராகப் பேச வேண்டும் என்பதற்காகவே அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறைவனுக்குப் பயந்து உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தால் நாம் வைத்த கேள்விகளுக்கு முறையான விளக்கத்தைக் கொடுத்திருப்ôர்கள். அல்லது பிடிவாதம் கொள்ளாமல் தாங்கள் கூறியது தவறு என்று ஒத்துக் கொண்டிருப்பார்கள்.

குருட்டுத்தனமான கேள்விகள்

அறிஞர்கள் கூறிய கருத்துக்களையும், அவர்கள் செய்த விமர்சனங்களையும் நாம் கூறிய போது, ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அது குறித்து ஹதீஸ் கலை அறிஞர் எழுப்பிய கேள்வியையும் வெளியிட்டிருந்தோம்.

அதற்குப் பதிலளிக்கும் போது, “இந்த ஹதீஸ் சரியாக இருந்தாலும் மறுக்க வேண்டும் என்று உள்ளதா?” என்ற குருட்டுத்தனமான கேள்வியை கேட்டார்கள்.

குர்ஆனிற்கு முரண்படும் செய்திகள் சஹீஹாக இருந்தாலும் மறுக்க வேண்டும் என்ற கருத்தில் நாம் கூறவேயில்லை. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தான் கூறினோம்.

ஏனென்றால் ஒரு ஹதீஸ் சரியாவதற்கு அறிவிப்பாளர் தொடரும் சரியாக இருக்க வேண்டும்; அந்த ஹதீஸில் இடம் பெறும் செய்தியும் சரியாக இருக்க வேண்டும். இதைத் தான் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

அறிஞர்கள் விமர்சனம் செய்ததாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் பெரும்பாலும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரி, முஸ்லிம் போன்ற நம்பத் தகுந்த புத்தகங்களில் இடம் பெற்றவை.

குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதி புதியதல்ல; ஏற்கனவே பல அறிஞர்கள் இவ்விதியைக் கடைப்பிடித்துள்ளார்கள். இதற்குப் பல சான்றுகளைக் கூறினோம். நாம் கேட்ட கேள்விக்குப் பதில் தராமல் சம்பந்தமில்லாத விளக்கங்களை இதற்குக் கூறுகிறார்கள். நாம் வெளியிட்ட ஹதீஸ்களுக்கு விளக்கங்களைக் கூறியுள்ளார்கள்.

அறிஞர்கள் மறுத்த ஹதீஸ்களுக்கு விளக்கம் என்னவென்று நாம் இவர்களிடத்தில் கேட்கவே இல்லை. நாம் கடைப்பிடித்த வழிகளை இந்த அறிஞர்களும் கடைப்பிடித்துள்ளார்கள் என்பதற்காகத் தான் அந்தக் தகவல்களைக் கூறினோம். இவ்விதி புதிய விதியல்ல என்று ஒத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

குர்ஆனிற்கு முரண்படுவதாக அறிஞர்கள் கூறிய ஹதீஸ்கள் உண்மையில் முரண்படுகிறதா? அல்லது அதற்கு இணைத்து விளக்கம் கொடுக்க முடியுமா? என்று சிந்திப்பது இவர்களுடைய வேலை மட்டுமல்ல! நம்முடைய வேலையும் கூட! அந்த வேலையை இவர்களை விடப் பன்மடங்கு அதிகமாக நாம் செய்கின்றோம்.

இவ்விதி அறிஞர்கள் கடைப்பிடித்த விதியா? இல்லையா? என்பது தான் நம்முடைய கேள்வி. இதற்குப் பதில் சொல்லாத வரை இவர்கள் தப்பித்து ஓடுகிறார்கள் என்ற முடிவுக்குத் தான் மக்கள் வருவார்கள்.

அறிஞர்களின் பார்வை

இவர்களுடைய இந்த அறியாமையை அகற்றுவதற்காகவும் மக்களை இவர்களுடைய குழப்பத்திலிருந்து காப்பதற்காகவும் பின்வரும் தகவல்களைக் கூறுகிறோம். அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் போதாது; செய்தியும் சரியாக இருக்க வேண்டும் என்ற விதியை இந்தத் தகவல்கள் தெளிவாக எடுத்துரைக்கும்.

பெரும் பெரும் மாமேதகள் ஹதீஸைச் சரி காணுவதற்கு இரண்டு வழிமுறைகளைக் கடைப்பிடித்து உள்ளனர்.

  1. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது
  2. அறிவிக்கப்பட்ட செய்தியிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

இந்த இரண்டு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஹதீஸ் சரியாகும். ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இந்த இரு நிபந்தனைகளில் முதலில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டாவதைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.

ஒரு ஹதீஸில் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இரண்டு நிபந்தனைகளில் முதல் நிபந்தனைக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸ் ஆகிவிடும். இந்த ஒன்று மட்டும் அதைச் சரியானது என்று நிறுவுவதற்குப் போதாது. இரண்டாவது நிபந்தனைக்கும் அவசியம் உட்பட்டதாக இருக்க வேண்டும்.

  1. ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.
  2. இதை விட வலிமையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படக்கூடாது.
  3. நிரூபிக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படக்கூடாது.
  4. ஒரே ஹதீஸ் முரண்பாடாக, பல விதங்களில் அறிவிக்கப்படக்கூடாது.

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைந்து ஹதீஸின் கருத்தில் மேலுள்ள குறைகளைப் போன்று ஏதேனும் இருக்குமானால் இதுபோன்ற நிலையில் அறிஞர்கள் அந்த ஹதீஸிற்கு “அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி” (சஹீஹுல் இஸ்னாத்) என்று மட்டுமே கூறுவார்கள். அதாவது தகவல் சரியானது என்பதற்கு அவர்கள் அங்கீகாரத்தைத் தர மாட்டார்கள். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இப்னுஸ்ஸலாஹ் அவர்களின் விளக்கம்

அறிஞர்கள் இது சஹீஹான செய்தி என்றோ அல்லது ஹசனான செய்தி என்றோ கூறாமல், “இதன் அறிவிப்பாளர் தொடர் சரியானது’ என்றோ அல்லது “இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸனானது’ என்றோ கூறுவதுண்டு. ஏனென்றால் (கருத்தை கவனிக்கும் போது) தன்னை விட வலிமையான செய்திக்கு அது மாற்றமாக இருப்பதால் அல்லது ஏதோ ஒரு குறை (அதில்) இருப்பதால் ஹதீஸ் சரியாகாமல் இருந்தாலும், இது சரியான அறிவிப்பாளர் தொடர் உள்ள செய்தி என்று சொல்லப்படும்.

நூல்: முகத்திமது இப்னிஸ்ஸலாஹ், பாகம்: 1, பக்கம்: 6

அல்குலாஸத் என்னும் நூலில் தய்யிபியின் கூற்று

தன்னை விட வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ தகவல் சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹாகவோ அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாகவோ சில வேளை இருக்கும்.

இமாம் நவவீ அவர்களின் கூற்று

தன்னை விட வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹாகவோ அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாகவோ சிலவேளை இருக்கும். (நூல்: அல்இர்ஷாத்)

இமாம் ஹாகிமின் கூற்று

உறுதிமிக்க அறிவிப்பாளர்களுக்கு குறை தென்படாத காரணத்தினால் அவர்கள் குறையுள்ள ஹதீஸை அறிவிப்பார்கள். எனவே ஹதீஸ் குறையுள்ளதாக மாறி விடும். உறுதி மிக்க அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளில் குறை அதிகமாக இதனால் வருகிறது.

நூல்: மஃரிஃபது உலூமில் ஹதீஸ், பாகம்: 1, பக்கம்: 261

இதே கருத்தை இப்னுல் முலக்கன் என்பவரும், இப்னு ஜமாஆ என்பரும் கூறியுள்ளார்கள்.

நூல்கள்: அல்மன்ஹலுர்ரவீ,  பாகம்: 1, பக்கம்: 37

அல்முக்னிஃ, பாகம்: 1, பக்கம்: 89

இப்னு ஜவ்ஸியின் கூற்று

சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் உறுதிமிக்க ஆட்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றம் செய்யப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.

நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்:99

இப்னு தய்மியா அவர்களின் கூற்று

முழுமையான தொடரில் சரியாக இருக்கும் எத்தனையோ ஹதீஸ்களில் கூட்டுதலும் குறைத்தலும் நிகழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது அர்த்தத்தையே மாற்றி விடும். ஒரு வார்த்தையைக் குறைப்பதும் இவ்வாறே அர்த்தத்தை மாற்றி விடுகிறது.

நூல்: மஜ்மூஉல் ஃபதாவா, பாகம்: 18, பக்கம்: 47

இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் ஹதீஸ் பல விஷயங்களால் தான் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும், கருத்தில் குறை வராமல் இருப்பதும், வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும், மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.

நூல்: அல்ஃபரூசிய்யா, பக்கம்: 246

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற தீர்ப்பைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருப்பதென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல.  எனவே முரண்பாடும், குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது.

நூல்: ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம்: 1 பக்கம்: 77

சன்ஆனீயின் கூற்று

ஹதீஸ் கலை அறிஞர்கள், ஹதீஸின் தகவலைப் பற்றிப் பேசாமல் அறிவிப்பாளர் தொடர் சரியானது, ஹசனானது, பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருப்பதால் தொடர் சரியாகி விடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்)  இருப்பதால் செய்தி சரியாகாது.

நூல்: தவ்ளீஹுல் அஃப்கார், பாகம்: 1, பக்கம்: 234

வளரும் இன்ஷா அல்லாஹ்