பயத் தொழுகையும் பயணத் தொழுகையும்

பயத் தொழுகையும் பயணத் தொழுகையும்

போர்க்களத்தில் தொழும் தொழுகைக்கு, ஸலாத்துல் கவ்ஃப் – பயத் தொழுகை என்று பெயர்.

இறைவன் தொழுகையை நமக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆக்கியிருக்கிறான். இவ்வாறு நேரம் குறிக்கப்பட்ட இந்தக் கடமையை போர்க் காலத்திலும், பயணக் காலத்திலும் குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது மிகக் கடினமாகும். இப்படியொரு கடினமான, சிரமமான சூழ்நிலை நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் அஹ்ஸாப் எனும் அகழ்ப் போரின் போது ஏற்படுகின்றது.

அஹ்ஸாப் (அகழ்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 2931, 4111, 6396

நபித்தோழர்களும் இது போன்ற சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

அகழ்ப் போர் தினத்தில் நபி (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள். வழிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்” என்று கூறினர். வேறு சிலர், “(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்.) எனவே நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது, அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 4119

இப்படி நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் சிரமப்பட்டிருக்கும் வேளையில் தான் பயத் தொழுகை, அதாவது போர்க்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது.

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங் களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:102

இவ்வசனம் போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது.

போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும் போதும் இமாம் இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து, ஒரு அணியினர் களத்தில் நிற்க வேண்டும்; மற்றொரு அணியினர் இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும்.

ஒரு ரக்அத் தொழுததும் அவர்கள் களத்திற்குச் சென்று விட வேண்டும். தொழாத அணியினர் வந்து தொழுகையில் சேர வேண்டும். இவர்கள் வரும் வரை இமாம் தொழுகையை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதி-ருந்து போர்க்களத்தில் எல்லாத் தொழுகையும் ஒரு ரக்அத் தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இமாம் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்பதைப் பொதுவானதாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் இவ்வசனத்தின் துவக்கத்தில் “நீர் அவர்களுடன் இருந்து”, “நீர் அவர்களுக்குத் தொழுகை நடத்தினால்” என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒரு அணியினருக்கு மட்டும் அவர்கள் தொழுகை நடத்தி விட்டு மற்றொரு அணிக்குத் தொழுகை நடத்தாது விட்டால் அவர்கள் வருத்தம் அடைவார்கள்.

நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர மற்றவர்கள் இமாமாகத் தொழுகை நடத்தும் போது அவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடிக்க வேண்டும். அடுத்த அணியினர் தமக்குள் இன்னொருவரை இமாமாக ஏற்படுத்தி ஒரு ரக்அத் தொழ வேண்டும்.

போர்க்காலங்களில் இடையூறுகள் குறுக்கிடும் என்பதால் எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கொரு விதிவிலக்கை அளித்து, இம்மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கு ஓர் இலகுவை, எளிமையை வழங்குகிறான். சலுகையுடன் கூடிய இந்தத் தொழுகைக்குத் தான், பயத் தொழுகை என்று பெயர்.

போர்க்களத்தில் நிற்கும் மக்களுக்கு இறைவன் அளித்த மாபெரும் சலுகையும் அருட்கொடையுமாகும்.

பயணத் தொழுகை

இது போலவே பயணத்தின் போதும் மக்களுக்குத் தொழுகையில் அல்லாஹ் சலுகையளிக்கிறான். அதற்குப் பெயர் பயணத் தொழுகையாகும்.

உண்மையில் பயணம் என்று நரகமாகும். இதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 1804)

மனிதன் தன் பயணத்தின் போது இது போன்ற ஒரு வேதனையை அனுபவிக்கையில் மார்க்கம் கடமையாக்கியுள்ள தொழுகையின் மூலமும் சிரமப்படக் கூடாது என்பதற்காக இரு விதமான சலுகைகளை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

  1. குறைத்துத் தொழுதல்
  2. இணைத்துத் தொழுதல்

கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாக சுருக்கித் தொழலாம்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்தை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1230

இந்த செய்தியின் அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்கள் கஸ்ர் செய்த அளவை குறிப்பிடும் போது மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்.

இதில் மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் கூடுதல் அளவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.

ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

பயணத்திலிருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.

விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.

அதே போல் மஃரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.

அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர், இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாகவுமே தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் சேர்த்துத் தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2477

பயணத்தில் அல்லாஹ் இப்படி ஒரு சலுகையை வழங்கி, மக்களுக்கு மார்க்கத்தை இலகுவாக்கியுள்ளான். இந்தச் சலுகை இல்லையெனில் மக்கள் பெரும் அவதிக்கும் அல்லலுக்கும் உள்ளாகி விடுவார்கள்.

உறக்கம், மறதிக்கும் ஒரு சலுகை

இப்படிப் பயணத்தில் சலுகையளித்த எல்லாம் வல்ல அல்லாஹ், ஒரு மனிதன் தொழுகையை விட்டு விட்டு, தன்னையறியாமல் தூங்கி விட்டால், அல்லது மறந்து விட்டால் அதற்காக அவனைத் தண்டிப்பதில்லை. அதற்கும் ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1217

உறக்கத்திற்கும் மறதிக்கும் மகத்தான இந்தச் சலுகையை அல்லாஹ் வழங்குகிறான். தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்பதால் அதில் “களா’ என்ற பேச்சுக்கே இடமில்லை. (இதைத் தனிக் கட்டுரையில் காண்க!)

தொழுகையில் களா இல்லை எனும் போது அதற்கேற்றவாறு மார்க்கத்தில் சலுகை இருந்தாக வேண்டும். இந்தச் சலுகை இல்லையென்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி விடுவார்கள். அதற்காகத் தான் அல்லாஹ் இப்படிப்பட்ட சலுகையை அளிக்கிறான்.

நோயாளியின் தொழுகை

தொழுகைக்கான சலுகைகள் இத்துடன் நின்று விடவில்லை. தொழுகையை நின்று தான் தொழ வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது. ஆனால் நின்று தொழ முடியாத கட்டங்களில் உட்கார்ந்தும் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக நோயாளிக்கு இந்த விஷயத்தில் பெரும் சலுகையை மார்க்கம் வழங்கியுள்ளது.

எனக்கு மூல நோய் இருந்தது. “எவ்வாறு தொழுவது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரீ 1117

தொழுகை விஷயத்தில் கடுமை காட்டும் மார்க்கம், மறு பக்கத்தில் இப்படிப்பட்ட சலுகைகளை வழங்கி, தன்னை மனித குலத்திற்கு ஓர் எளிய மார்க்கமாக ஆக்கி வைத்திருக்கின்றது.