குடும்பவியல் தொடர்: 19
மனைவிக்கு மரியாதை
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடத்தில் இஸ்லாம் வழங்கினாலும், அவர்கள் தன்னிச்சையாக மனம் போனபடி நிர்வகிக்கின்ற அதிகாரத்தை வழங்கவில்லை. எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் இஸ்லாம் ஆண்களுக்கு சொல்லித் தருகிறது.
“நான் நிர்வாகியாக இருப்பதால் அடிப்பேன்; உதைப்பேன்; கணவனாகிய நான் என்ன சொன்னாலும் மனைவி கேட்க வேண்டும்” என்பதைப் போன்று சர்வாதிகாரியாகவும் கரடுமுரடாகவும் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஆண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவே இல்லை.
இஸ்லாம் எந்தப் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தாலும் அதற்குரிய விதிமுறைகளைச் சொல்லித்தான் ஒப்படைக்கும். விதிமுறைகள் சொல்லப்படாத எதுவும் மனிதனின் தன்னிச்சையான முடிவுக்குட்பட்டு கடைசியில் தவறில் தான் முடிகிறது.
பிற சமூகங்களில் பெண்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாவதையும் கொடுமைகள் இழைக்கப்படுவதையும் ஆராய்ந்தால், இஸ்லாம் வகுத்தளித்த இந்த விதிமுறைகளோடு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை என்பதுதான் காரணம்.
“கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்”, “ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தலாம்” என்றெல்லாம் தவறான வழிகள் ஊட்டப்படுவதினால் நமது மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து செயல்படுகிறார்கள் ஆண்கள். அதனால்தான் நம் மனைவியை நாம் எப்படிக் கொடுமைப்படுத்தினாலும் அதை யாரும் எதிர்த்துக் கேட்பதற்கு அதிகாரமில்லை என்பது போன்று நிர்வாகம் வேறு வேறு சமூகங்களில் வழங்கப்பட்டிருக்கிறது.
நபியவர்கள் காலத்தில் நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் நடந்த நிகழ்வு, மனைவியிடத்தில் ஆலோசனை கேட்டு கணவன் செயல்படுவதற்கு ஆதாரமாகும்.
நபியவர்கள் மக்காவிற்கு ஹஜ் செய்வதற்காகத் தமது தோழர்களுடன் செல்கிறார்கள். அப்போது மக்காவிலுள்ள காஃபிர்கள் அதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் மக்கா என்ற எங்களது ஊரிலிருந்து எங்களால் விரட்டியடிக்கப்பட்ட நீங்கள் மதீனாவிலிருந்து படை திரட்டி வந்து எங்கள் ஊருக்குள் நுழைவதை நாங்கள் ஒத்துக் கொள்ளமாட்டோம் என்கிறார்கள். தங்களது ஊரை இந்த முஹம்மதுவும் அவரது தோழர்களும் கைப்பற்றி விடுவார்களோ என்ற பயம்தான் இப்படி மறுப்பதற்குக் காரணமாகும்.
அப்போதுதான் தூதராக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்குள் அனுப்பி வைக்கிறார்கள். அதன் பிறகு நபியவர்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இந்த ஆண்டு முஹம்மதையும் முஹம்மதின் கூட்டத்தாரையும் மக்காவிற்குள் நுழைய விடமுடியாது. அடுத்த ஆண்டில் வருவதற்கு அனுமதிப்போம், தற்போது திரும்பிப் போய்விட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். நமக்குள் எந்தச் சண்டையும் சச்சரவுகளும் வேண்டாம் என்றும் ஒப்பந்தம் போடச் சொல்கின்றனர்.
இஸ்லாம், குஃப்ர் என்று இரு சமூகமாக பிரிந்திருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களாகத் தான் இருந்தார்கள். அதனால்தான் தற்போது மக்காவிற்குள் நீங்கள் நுழைவது தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்; எனவே இந்த முறை விட்டுக் கொடுத்து அடுத்த முறை வருவதற்கு அனுமதிப்போம். அதற்கும் சில ஒப்பந்தங்களை இருதரப்புக்கும் இடையில் போட்டுக் கொள்வோம் என்று பல ஒப்பந்தங்கள் நிறைவேறுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறிய இடம் ஹுதைபிய்யா என்பதால் தான் இந்த ஒப்பந்தத்திற்கு ஹுதைபிய்யா ஒப்பந்தம் என்ற பெயர் வந்தது.
அதில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களில், மக்காவிலிருந்து முஸ்லிம்களாகிய எங்களிடமிருந்து யாராவது உங்களிடம் வந்தால் அவர்களை எங்களிடம் திருப்பி அனுப்பிட வேண்டும்; அதேபோன்று உங்களிடமிருந்து எங்களிடம் வந்தால் நாங்கள் திருப்பித் தரமாட்டோம் என்கிறார்கள். இப்படி எல்லா ஒப்பந்தங்களும் அவர்களுக்குச் சாதகமாகவே போடுகிறார்கள். நபியவர்கள் அதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள். இதைப் பார்த்த நபித்தோழர்களுக்கு கடுமையான கோபம் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
எங்களையெல்லாம் உம்ரா செய்ய வேண்டும், அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று அழைத்து வந்து, இங்கு அவர்கள் சொல்வதற்கெல்லாம் இணங்கினால் என்ன அர்த்தம்? என்றெல்லாம் நபியவர்களிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். நாம் சரியான மார்க்கத்தில் இருக்கிறோம், தவறான வழியில் இருக்கிற இவர்களிடம் பணிந்து போக வேண்டும் என்கிற எந்த அவசியமும் கிடையாது என்று உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள்; கோபிக்கிறார்கள்; கொந்தளிக்கிறார்கள். ஆனால் நபியவர்கள் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாகவே விட்டுக் கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் நபியவர்கள் விட்டுக் கொடுப்பது பின்னால் முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் வெற்றி கிடைப்பதற்காகத் தான் என்று இறைவன் வசனம் இறக்குகிறான்.
(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப் படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.
அல்குர்ஆன் 48:1,2,3
ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின்னால் அல்லாஹ் மேற்கண்ட இந்த வசனத்தை இறக்குகிறான். சஹாபாக்களுக்குக் கோபம் இருந்தாலும் நபியவர்கள் உறுதியாக நின்று ஒப்பந்தம் கையெழுத்தாகி நிறைவேறுகிறது. இப்படி ஒப்பந்தம் நிறைவேறியதால் அந்த ஆண்டு உம்ரா செய்ய முடியாமல் போய்விட்டது.
உம்ரா செய்வதற்கு நபியவர்களும் ஸஹாபாக்களும் ஆடு, மாடுகள், ஒட்டகங்களைக் கொண்டு வந்துள்ளனர். உம்ரா தடுக்கப்பட்டதினால் நபியவர்கள் ஹுதைபிய்யா என்ற இடத்திலேயே தலையை மழித்துவிட்டு அல்லது சிறிதளவு முடியை குறைத்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த பலிப்பிராணியை அறுப்பதற்குக் கட்டளையிடுகிறார்கள். ஆனால் எந்த நபித்தோழரும் தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ எழுந்திருக்கவில்லை. ஆடு மாடுகளை அறுக்கவும் எழுந்திருக்கவில்லை. அதற்குத் தயாராகவுமில்லை.
உம்ராவோ, ஹஜ்ஜோ செய்யும் போது கடைசி வணக்க முறையாக, தலைமுடியை மழித்து அல்லது தலை முடியைச் சிறிதளவு குறைத்து ஆடு, மாடு, ஒட்டகம் ஏதேனும் ஒரு பலிப்பிராணியைப் பலியிட்டு அந்த உம்ராவை ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இதைத்தான் நபியவர்கள் ஹுதைபிய்யாவில் தடுக்கப்பட்டதால் அங்கேயே நிறைவேற்ற சஹாபாக்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். ஆனால் யாரும் பணியவில்லை.
நபியவர்கள் சொல்லிற்கு அப்படியே கட்டுப்படுகிற தோழர்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக நபியவர்களின் கட்டளையை நிறைவேற்ற ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை. இப்படி தனது கட்டளைக்கு நபித்தோழர்கள் கட்டுப்படாத சூழ்நிலையை வாழ்க்கையில் முதல் தடவை நபியவர்கள் சந்திக்கிறார்கள்.
தனது தோழர்கள் தனக்குக் கட்டுப்படவில்லை என்ற கவலையில் நபியவர்கள், தனது கூடாரத்திற்குள் செல்கிறார்கள். கூடாரத்திற்குள் மனைவி உம்மு சலமா அவர்கள் இருக்கிறார்கள். அதாவது பயணத்தில், மனைவிமார்களில் யாரையாவது ஒருவரை அழைத்து வருவது நபிகளாரின் வழக்கம்.
கூடாரத்திற்குள் கவலையுடன் வருகிற நபிகளாரை உம்மு சலமா அவர்கள் பார்த்ததும் நபியவர்கள் தமது கவலையை மனைவியிடத்தில் தெரிவிக்கிறார்கள்.
மனைவி என்றால் அடக்குமுறை செய்யப்பட வேண்டியவள் என்று எண்ணக் கூடாது. நமது தேவையை அவளிடம் கேட்கலாம், நமக்குத் தேவையான ஆலோசனைகளைக் கேட்கலாம். மனைவி கணவன் கேட்காமல் சூழ்நிலையைப் புரிந்து கொண்டும் சில ஆலோசனைகளைக் கணவனுக்குச் சொல்லலாம்; சொல்ல வேண்டும்.
அந்த அடிப்படையில் நபியவர்களின் மனைவி உம்மு சலமா அவர்கள், நீங்கள் சொன்ன கட்டளை உண்மையில் செயல்படுத்துவதற்காகத் தானா? அல்லது வேறு காரணங்களுக்காகச் சொன்னதா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் உண்மையில் செயல்படுத்துவதற்குத் தான் என்றதும், அப்படியெனில் நீங்கள் யாரிடமும் மீண்டும் கட்டளையிடாமல் எதுவும் சொல்லாமல் முதலில் அந்தக் கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள். நாவிதரை அழைத்து உங்களது தலைமுடியை மழித்து, நீங்கள் கொண்டு வந்த பலிப்பிராணியை அறுங்கள். நீங்கள் செய்வதைப் பார்த்து அப்படியே உங்களது தோழர்களும் உங்களைப் போன்றே நிறைவேற்றிவிடுவார்கள் என்று ஆலோசனை கொடுக்கிறார்கள்.
அதேபோன்று ஒப்பந்தம் சரியில்லை என்று கோபமடைந்த சஹாபாக்களும் நபியவர்களின் செயலைப் பார்த்து தங்களது கோபத்தைத் தூக்கியெறிந்து விட்டு கட்டளையைச் செயல்படுத்தினர்.
ஆக , மனைவியின் யோசனையைக் கேட்டு செயல்பட்ட செய்திகளை நபியவர்களிடம் முன்மாதிரியாகப் பெறுகிறோம். எனவே சில நேரங்களில், ஏன் பல நேரங்களில் பெண்களிடமும் நல்ல யோசனைகள் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டுதான் கணவன்மார்கள் குடும்ப நிர்வாகத்தை நடத்த வேண்டும்.
இவ்விடத்தில் நபிகளார், தனது மனைவியைப் பார்த்து நீ யார் எனக்கு யோசனை சொல்வதற்கு என்றோ, எங்களுக்குத் தெரியாதது உங்களுக்குத் தெரிந்து விட்டதோ என்றெல்லாம் கேட்கவில்லை. இதுபோன்ற விவகாரங்கள் மனைவிமார்களுக்குத் தெரியாது என்றெல்லாம் அலட்சியப்படுத்திடவில்லை.
நபியவர்கள் தமது மனைவி சொன்ன யோசனை சரியாகப் பட்டு அதை நிறைவேற்றியதால், அதைப் பார்த்த சஹாபாக்களும் தங்களது உம்ரா கடமைகளை நிறைவேற்றினர். இதில் நபியவர்களின் கட்டளையை மீற வேண்டும் என்கிற நோக்கமெல்லாம் சஹாபாக்களுக்குக் கிடையாது. மாறாக இப்படியெல்லாம் நாம் கோபப்பட்டால் நபியவர்கள் ஒப்பந்தத்தை நாம் நினைப்பது போல் மாற்றியமைத்துக் கொள்வார்கள். பிறகு நபியவர்களின் கட்டளையைச் செயல்படுத்துவோம் என்று நினைத்தார்கள். நபியவர்களின் கட்டளையை மீறுவதற்கு யாரும் தயாராக இல்லை. இருப்பினும் இந்த விஷயத்தில் சத்தியாகிரகம் செய்தால் நபியவர்களின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைத்தார்கள்.
ஆனால் நபியவர்கள் தான் சொன்ன சொல்லில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனை தானே முதலில் செயல்பட்டு செய்து காட்டியதினால் நபியவர்களே மாற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பதினால் ஸஹாபாக்களும் மொட்டையடித்து தங்களது பலிப்பிராணிகளை அறுத்தனர்.
இந்தச் செய்தியை புகாரியின் 2734வது செய்தியாகப் பார்க்கலாம். இது பெரிய சம்பவமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நபியவர்கள் தமது மனைவியிடம் ஆலோசனை கேட்ட செய்தியை மட்டும் சுருக்கமாகக் கூறியுள்ளோம்.
எனவே, நான் சொல்வது தான் சட்டம் என்பது போன்று நிர்வாகம் செய்யவே கூடாது. மனைவியர், வாழ்க்கைத் துணைவியர். அவர்களிடமும் நல்ல கருத்துக்கள் இருக்கும். அவர்கள் சொல்கின்ற கருத்து நாம் சொல்வதை விடவும் சிறப்பானதாகவும் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பெண்கள் சொல்லி ஆண்கள் கேட்பதா? என்று நினைக்காமல், உதாசீனப்படுத்தாமல் சரியா? தவறா? என்று பார்க்க வேண்டும். சரியானதைச் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்கள். குடும்பத்தை நிர்வகிக்கிற ஆண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
அடுத்து, நிர்வாகம் செய்வது ஆண்களாக இருந்தாலும், எல்லாவற்றிலும் ஆண் விரும்பிவாறு ஒரு பெண்ணால் மனைவியால் நடக்கவே முடியாது. உலகில் எந்த மனிதனுக்கும் அப்படியொரு மனைவி இருக்க மாட்டாள். இரு நபர்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக சிந்திக்கவே மாட்டார்கள். உடன் பிறந்த சகோதரர்களாக இருந்தாலும் அப்படித்தான். இதுதான் யதார்த்தம்.
உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், ஒரு தாய் சமைத்த உணவை ருசித்து வாழ்கிற இரு சகோதரர்களுக்கே கூட ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். ஒரே வீட்டில் தான் இருவரும் வாழ்கிறார்கள். ஆனாலும் தம்பி கோபக்காரனாகவும் அண்ணன் சாந்தமாகவும் இருக்கிறான். அவன் சரியாகச் சிந்திக்கிறான். இவன் முட்டாளாக இருக்கிறான். ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே ஒரே கருத்து இருக்காது என்கிற போது, திருமணத்தின் மூலமாக சொந்தமாகிக் கொண்ட இருவருக்குள் எல்லாவற்றிலும் ஒரே கருத்து வருவதற்கு நிச்சயம் வாய்ப்பே இல்லை.
ஏனெனில் பெண் கணவனது வீட்டில் வளர்ந்தவளாக இருக்கமாட்டாள். இவளது வளர்ப்பு முறை வேறானது. அவனது வளர்ப்பு முறை வேறானது. அவளது சிந்தனை, விருப்பம், ஆசை வேறானது. அவளது சுவைக்கும் இவனது சுவைக்கும் சிந்தனைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் இருக்கும். எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்படித்தான்.
எனவே ஆண்கள், நாம் சொல்வதைப் போன்றுதான் 100 சதம் நமது மனைவிமார்கள் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. மேலும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத்தான் நான் திருமணம் முடிப்பேன் என்று ஒரு ஆண் ஆசைப்பட்டால் நிச்சயம் கியாமத் நாள் வரை அவன் எந்தப் பெண்ணையும் திருமணம் முடிக்கவே முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2915
மனைவியிடத்தில் ஒன்று பிடிக்காமல் இருந்தால் எது பிடித்ததாக உள்ளதோ அதைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்ளுங்கள். மனைவியை நன்றாகக் கவனித்துப் பார்த்தால், மனைவியிடத்தில் பிடித்த பண்புகள் நிறையவே இருக்கும். அதை வைத்து திருப்திபட்டுக் கொள்ள வேண்டும். மனைவிமார்கள் செய்வது அத்தனையும் வெறுப்புக்குரியது என்று உலகத்தில் ஒருத்தி கூட இருக்கமாட்டாள். அதாவது ஒரு பெண்ணிடத்தில் அத்தனையும் விரும்பத்தக்கதாக எப்படி இருக்காதோ அதுபோன்று அத்தனையும் வெறுக்கத்தக்கதாகவும் இருக்காது.
சில பெண்கள் எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசுபவர்களாக இருப்பார்கள், சிலர் எப்போது பார்த்தாலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டேயிருப்பார்கள், ஒழுங்காக சோறு சமைக்கத் தெரியாது, அது நமக்குப் பிடிக்காமல் இருக்கும். அதிகமாக உப்பை அள்ளிப் போட்டு சமைப்பார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் மனைவியிடம் பிடிக்காத பண்பு இருந்தால், அந்த மனைவியை நன்றாக உற்று நோக்கினால் எத்தனையோ நமக்குப் பிடித்த பண்புகள் இருக்கும். பிடிக்காததைப் பார்ப்பதை விட பிடித்ததைப் பார்த்து திருப்திபட்டு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என நபியவர்கள் நமக்குக் கட்டளையிடுகிறார்கள்.
எனவே 100 சதம் ஒரு ஆண் திருப்திபடும் வகையில் பெண் படைக்கப்படவில்லை என்பதை ஆண்கள் முதலில் புரிந்து நடக்க வேண்டும். அதேபோன்று ஆண்களும் 100 சதம் மிகச் சரியானவர்களாக நடப்பவர்களாகப் படைக்கப்படவில்லை என்பதும் உண்மை.
ஒரு பெண்ணை 100 சதம் திருப்திப்படும் வகையில் ஒரு ஆண் நடந்து கொள்ளவே முடியாது. எனவே மனைவி சரியில்லை என்று வேறொரு பெண்ணை மணக்கலாம் என்று போனால், அவளும் 100 சதம் சரியாக இருக்கமாட்டாள். அவளிடமும் 25 சதம் குறையிருக்கத்தான் செய்யும். இவளிடம் இருந்த குறைகள் இல்லாவிட்டாலும் வேறு குறைகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.
எந்தப் பிரச்சனைக்காக முதல் மனைவி வேண்டாம் என்று சொன்னோமோ அதே பிரச்சனை மறுபடியும் தொடரத்தான் செய்யும். அதே சண்டை, அதே வம்பு, அதே பிரச்சனை என்று புறந்தள்ளிவிட்டு ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று ஒவ்வொரு நாளைக்கும் ஒரு திருமணம் செய்யமுடியுமா? செய்யமுடியாது. திருமணம் என்பதே நிம்மதிக்குத் தான் என்கிற போது அந்த அடிப்படையே நாசமாகிவிடும்.
எனவே ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து மனைவியாக்கிவிட்டால் அவளிடம் குறையும் இருக்கும் நிறையும் இருக்கும். நிச்சயம் நிறைகள்தான் குறைகளை விடவும் பன்மடங்கு அதிகமாக இருக்கும். அந்தக் குறை மற்றும் நிறைகளுடன் தான் இல்லறத்தை நடத்த வேண்டும். இதுதான் ஆண்கள் பெண்களை நிர்வகிக்கும் முறை. எனவே ஆண்களிடம் நிர்வாகம் இருக்கிறது என்பதால் எப்படி வேண்டுமானாலும் நிர்வாகம் செய்ய முடியாது. அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன முறைகளைத் தான் நிர்வாகம் செய்ய ஒரு ஆண் பயன்படுத்த வேண்டும்.