“ஈ” தொடர்பான நபிமொழி மறுக்கப்பட வேண்டியதா ?
நபிமொழி நூல்களில் ஈ விழுந்த பானம் தொடர்பாக ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி (3320)
இந்த செய்தியை குர்ஆனுக்கு முரணாக உள்ளதாக கூறி ஒரு சிலர் மறுக்கின்றனர்.
அவ்வாறு கூறுவோரின் வாதம் பின்வருமாறு அமைந்துள்ளன.
முஹம்மது நபியவர்கள் கெட்டவற்றை தடை செய்வதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
அவர்கள், எழுதப் படிக்கத் தெரியாத (முஹம்மது) நபியாகிய இத்தூதரைப் பின்பற்றுகின்றனர். தம்மிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் அவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதாகக் காண்கின்றனர். அவர், நல்லவற்றை அவர்களிடம் ஏவி, தீயவற்றை விட்டும் அவர்களை தடுப்பார். தூயவற்றை அவர்களுக்கு அனுமதிப்பார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடை செய்வார்.
திருக்குர்ஆன் 7:154
மேலும் தூய்மையானவற்றையே உண்ண வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.
திருக்குர்ஆன் 2 172
ஈ என்பது தூய்மையானது அல்ல. அவை பல நோய்க்கிருமிகளை கொண்ட கெட்டவையாகும்.
எனவே ஈ விழுந்த பானத்தை குடிக்குமாறு நபியவர்கள் கூறியதான செய்தி திருக்குர்ஆனின் இவ்வசனங்களுக்கு முரணாக உள்ளது என்கிறார்கள்.
நேரடியாக குர்ஆனின் கருத்துடன் மோதும் செய்திகள் நபி கூறியதல்ல எனும் அடிப்படையில் மறுக்கப்பட வேண்டியதே. இதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. ஹதீஸ் கலையிலும் நபியின் கூற்றிலும் அதற்கான ஆதாரமுள்ளது.
ஆனால் குர்ஆனுக்கு முரண் என்பதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு செய்யக் கூடாது.
வட்டி தடுக்கப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது. வட்டியை அனுமதிப்பது போன்று ஒரு ஹதீஸ் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதைக் குர்ஆனுக்கு முரண் என்று கூறலாம்.
ஆனால் குர்ஆனில் பொதுவாகச் சொல்லப்பட்ட விஷயங்களை வைத்துக்கொண்டு, ஹதீசை மறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தால் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.
ஈ தொடர்பான செய்தி குர்ஆனுக்கு முரணாக உள்ளதாக இவர்களின் கூற்று மிகத்தவறானதாகும்.
தூய்மையானவற்றையே உண்ண வேண்டும் என்பதும் கெட்டவற்றை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதும் சரியே!
ஆனால் ஈ விழுந்த பானம் கெட்டது, அது தூய்மையானது அல்ல என்பது தவறான முடிவாகும்.
இதை புரிந்து கொள்ள ஒரு அடிப்படையை முதலில் அறிந்து கொள்வோம்.
எந்தவொரு பொருளை எடுத்துக் கொண்டாலும் நூறு சதவிகிதம் அது தூய்மையானதாக, நல்லவையாக இருக்காது.
தூய்மையான பொருள்கள் சிலவற்றிலும் சில கெட்ட அம்சங்கள் இருக்கவே செய்யும்.
கெட்ட பொருள்கள் சிலவற்றிலும் சில நல்ல அம்சங்கள் உண்டு.
ஒரு பொருளில் உள்ள குறைவான அம்சத்தை கவனத்தில் கொள்ளாமல் மிகுதியாக என்னவுள்ளதோ அதன் மூலமே அப்பொருள் நல்லவையா? கெட்டவையா? என முடிவு செய்யப்படும்.
மதுவிலும் சில நல்ல அம்சங்கள் உண்டு என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் மிகுதியாக கெடுதியே உள்ளதால் அதை கெட்டது என திருக்குர்ஆன் தீர்ப்பளிக்கின்றது.
மிகுதியாக என்னவுள்ளது என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும் எனும் அடிப்படையை இதன் மூலம் திருக்குர்ஆன் கற்றுத்தருகிறது.
இப்போது ஈ விழுந்த பானத்தை எடுத்துக் கொள்வோம்.
ஈக்களில் சில கிருமிகள் உள்ளன என்பதால் அது விழுந்த பானம் முழுவதும் கெட்டது என்றாகி விடாது.
தண்ணீரிலோ, வேறு ஏதேனும் உணவிலோ சில தூசிகள் விழுந்து விட்டால் அந்த உணவு கெட்டவையாகி விடுமா?
ஈக்களில் கிருமியுள்ளது என்பதால் அது விழுந்த பானம் ஹராம் என்றால் தண்ணீரில் கிருமியுள்ளதே? நீரருந்துவதும் மார்க்கத்தில் ஹராமான செயலா?
ஒரு பொருள் நம் பார்வைக்கு அசூசையாகத் தெரிவதால் மட்டுமே அது விழுந்த உணவு முழுவதும் அசுத்தமாகி விடாது.
“கெட்டவற்றை அவர் தடை செய்வார்” என்ற வசனத்தை வைத்துக்கொண்டு, ஈ கெட்டது, பூனை கெட்டது, நாய் கெட்டது, எனவே இது தொடர்பான ஹதீஸ்கள் எல்லாம் குர்ஆனுக்கு முரண் என்று கூறி மறுக்க ஆரம்பித்தால் என்னவாகும்?
பூனையின் வாயில் கூட சில கிருமிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நபியவர்கள் பூனை வாய் வைத்த நீரை பயன்படுத்தலாம், அவை அசுத்தமல்ல என்கிறார்கள்.
அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு அவர் பாத்திரத்தைச் சாய்த்தார். என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா? என்று கேட்டார். நான் ஆம் என்றேன். இவை அசுத்தமானவை அல்ல. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.
அறிவிப்பவர் : கப்ஷா
நூல்கள் : திர்மிதி, நஸயீ, அபூதாவூத்
கிருமி, கெட்டது எனும் பெயரில் குர்ஆனுக்கு முரண் என்று கூறுவதாக இருந்தால் இந்த செய்தியையும் குர்ஆனுக்கு முரண் என கூற வேண்டும்.
அது எப்படி பூனை வாய் வைத்த தண்ணீரை அசுத்தமானவையல்ல என்று நபிகள் நாயகம் கூறியிருப்பார்கள். இது குர்ஆனுக்கு முரண் என கூறுவார்களா?
நாய் வாய் வைத்த தண்ணீர் அசுத்தமானது என்று நபியவர்கள் கூறியதோடு அப்பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும் என்றார்கள்.
உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதைத் தூய்மை செய்யும் முறையானது, ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்
ஆனால் அதே வேளை நாய் மூலம் வேட்டையாடிய பிராணிகளை உண்ணலாம் என்று மார்க்கம் அனுமதிக்கின்றது.
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது:
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக் கவ்விக்) கொன்றுவிட்டாலும் அதை நீங்கள் உண்ணலாம். (அந்தப் பிராணியை) நாய் தின்றிருக்குமானால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அது (அப்பிராணியை) தனக்காகவே (கவ்வி) வைத்துக் கொண்டுள்ளது” என்று கூறினார்கள்.
புகாரி 175
நாய் ஒரு பாத்திரத்தில் வாய் வைப்பதற்கும் பிராணியை வாயில் கவ்விக் கொண்டு வருவதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தான் ஒன்றுக்கு தடையும் இன்னொன்றுக்கு அனுமதியும் கூறப்படுகிறது.
பாதிப்பின் தன்மையை பொறுத்து சட்டம் மாறுபடுகிறது.
வெறுமனே கிருமி எனும் அடிப்படையில் ஈ செய்தியை குர்ஆனுக்கு முரண் என்று கூறுவோர் நாய் வேட்டையாடிய பிராணியை உண்ணலாம் என்று நபி கூறியதையும் குர்ஆனுக்கு முரண் என்பார்களா?
நாயின் வாயில் எவ்வளவு கிருமியுள்ளது? அது கவ்விக் கொண்டு தரும் பிராணியை உண்ணுமாறு நபியவர்கள் எவ்வாறு கூறியிருப்பார்கள்? என்று கேள்வியெழுப்பி மறுப்பார்களா?
ஒரு பொருளில் மிகுதியாக என்ன உள்ளது? அதைக் கொண்டே அப்பொருளின் மீதான சட்டம் அமையும்.
ஈயை பொறுத்தவரை அதில் சற்று அசுத்தம் உள்ளது என்பதில் யாரும் மறுக்கவில்லை. மேற்படி ஈ தொடர்பான செய்தியும் அக்கருத்தை மறுக்கவில்லை. ஆனால் அது ஒரு பானத்தில் விழுவதால் அப்பானம் முழுவதையும் அசுத்தமாக்கி விடாது.
மிக சொற்ப அளவே பானத்தில் அது பாதிப்பை உண்டாக்குகின்றது.
அதனால் தான் ஈயை தூக்கி எறிந்து விட்டு அப்பானத்தை அருந்தலாம் என்று நபிமொழி கூறுகின்றது.
இதில் குர்ஆனுக்கு முரண் என்று கூற எந்த முகாந்திரமும் இல்லை.
தூய்மையானவற்றை உண்ண வேண்டும் என்பது மிகுதியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்ட வசனமாகும்.
சொற்ப அளவில் தூய்மைக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் கூட அந்த உணவை உண்ணக்கூடாது என்று அவ்வசனத்தின் பொருளல்ல.
அவ்வாறிருந்தால் பச்சை தண்ணீரை கூட அருந்தக்கூடாது, தூசி விழுந்த பானம், உணவு உள்ளிட்டவற்றையும் உண்ணக்கூடாது என்றாகும்.
கெட்டவற்றை நபியவர்கள் தடை செய்வார்கள் எனும் வசனமும் சொற்ப பாதிப்பை கவனத்தில் கொண்டு சொல்லப்பட்டவை அல்ல.
அதனால் தான் நாய் கவ்விக் கொண்டு வரும் பிராணி, பூனை வாய் வைத்த தண்ணீர் இவற்றையெல்லாம் நபியவர்கள் அனுமதித்தார்கள். அது போலவே ஈ விழுந்த பானத்தை நபியவர்கள் அருந்தலாம் என்று கூறினார்கள்.
சொற்ப அளவில் அசுத்தம் இருப்பதால் முழு பொருளையும் கெட்டது என்று முடிவு செய்யுமாறு குர்ஆன் எங்கும் கூறவில்லை.
இதனடிப்படையில் ஈ விழுந்த பானத்தை கெட்டது என்று இவர்கள் எடுத்த முடிவே திருக்குர்ஆனுக்கு மாற்றமானதாகும்.
எனவே ஈ தொடர்பான செய்தியை குர்ஆனுக்கு முரண் என்று கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை.
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் ஒரு உணவை தவிர்க்கிறார் என்றால் அதை குறை கூற முடியாது.
நபியவர்கள் உடும்புக்கறியை விரும்பவில்லை எனவே தாம் அதை உண்ண மறுத்து அடுத்தவருக்கு வழங்கினார்கள்.
இன்றும் கூட சிலர் குடல், நண்டு, சில வகை கடல் மீன்கள் உள்ளிட்டவற்றை அசூசையாக கருதி உண்ண மறுக்கின்றனர். இது அவரவர்களின் விருப்பத்தை சார்ந்தது.
குடல் சாப்பிடுவதை ஒருவர் தூய்மையற்றது, கெட்டது என்று கருதுகிறார் என்றால், அதை வைத்துக் கொண்டு குடல் சாப்பிடுவது குர்ஆனுக்கு எதிரானது, ஹராமானது என்ற முடிவுக்கு வருவது எவ்வளவு அறிவீனமோ அதைப் போன்றதுதான் ஈ தொடர்பான ஹதீசை மறுப்பதும் ஆகும்.
அதே சமயம், ஒருவர் ஈ விழுந்த பானத்தை குடிப்பதை தவிர்த்தால் அதைக் குறை காண இயலாது.
அறிவியலாய்வுக்கு எதிரானதா?
அடுத்து ஈ செய்தியை மறுப்பதற்கு இவர்கள் கூறும் மற்றுமொரு காரணம் தான் அறிவியலாய்வுகளுக்கு இச்செய்தி முரணாக உள்ளது என்பதாகும்.
”குடி பானத்தில் ஈ விழுந்து விட்டால் அதை அப்பானத்தில் முழுவதுமாக அமிழ்த்தி பின்னர் அதை வெளியில் போட்டுவிட வேண்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது” என்று அச்செய்தி கூறுகிறதல்லவா?
அவ்வாறெல்லாம் எதுவுமில்லை என்கிறார்கள்.
இதை மறுப்பவர்கள், ஈ விழுந்த குடிபானத்தில் அந்த ஈயை முழுவதுமாக அமிழ்த்து பரிசோதித்துப் பார்த்தார்களா?
அவர்கள் எந்த ஆய்வகத்தில் அந்தப் பரிசோதனையைச் செய்தார்கள்? எத்தனை அறிவியலாளர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள்?
அறிவியலாய்வுகளுக்கு எதிராகவுள்ளது என்பதற்கு இவர்கள் அங்கீகரித்தக்க எந்த தரவுகளையும் சமர்ப்பிக்கவில்லை.
இதிலிருந்தே தக்க ஆதாரமின்றி, அறிவியலுக்கு எதிராக உள்ளதாக வாதிடுகிறார்கள் என்பது தெளிவு.
அறிவியலில் இறுதி செய்யப்பட்ட ஆய்வுகள் உண்டு என்பதை போல ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாதவையும் உண்டு. அறிவியல் தொடாத எல்லைகளும் உலகில் பல உண்டு.
அறிவியல் முழுமையாக அடையாத விஷயங்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாத விஷயங்களையும் அறிவியலுக்கு எதிரானது என்பது தவறாகும்.
பூமியை பற்றி அறிவியல் முழுமையாக கண்டடையாத போது அது தட்டை என்று கூறப்பட்டது. பின்பு முழுமையான ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் இறுதி நிலையை அடைந்த பின்பு பூமி உருண்டை என்று நிறுவப்படுகிறது.
இப்படி அறிவியலில் வளர்ச்சி நிலைகள் உண்டு.
எனவே முழுமை பெறாத ஆய்வுகளை கொண்டோ அல்லது ஆய்வுக்கே எடுத்துக் கொள்ளப்படாததை கொண்டோ இஸ்லாத்தில் உள்ள எந்தவொன்றையும் அறிவியலுக்கு எதிரானது என்று கூறமுடியாது.
உதாரணமாக திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் ஏழு வானங்கள் உள்ளதாக குறிப்பிடுகிறது. ஆனால் அறிவியல் இது குறித்து அவ்வாறு கூறவில்லை.
இந்நிலையில் குர்ஆன் கூறுவதை அறிவியலுக்கு எதிரானது என்போமா? அல்லது அறிவியல் இதை முழுவதுமாக ஆய்வு செய்து அதன் இறுதிக்கட்டத்தை அடையவில்லை என்போமா?
மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்று அறிவியல் கூறுகிறது. ஆனால் திருக்குர்ஆனோ இதற்கு மாற்றமாக, மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று கூறுகிறது.
குறிப்பிட்ட இருகடல்களுக்கு இடையே திரை உள்ளது. ஒன்று மற்றொன்றுடன் கலக்காது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க 27:61, 35:12, 55:19,20)
இது குறித்து ஆய்வு செய்யப்படாத காலத்தில் இந்த வசனத்தின் கருத்துகளை அறிவியலுக்கு எதிரானது எனக்கூற முடியுமா?
நபிகள் நாயகம் காலத்தில் சந்திரன் பிளந்ததாக நபிமொழி குறிப்பிடுகிறது. ( புகாரி 3636)
அறிவியல் இதை ஆய்வு செய்து கண்டு பிடித்து விட்டதா?
சந்திரனில் ஆங்காங்கே சிறுசிறு வெடிப்புகள் இருப்பதாக கூறும் நவீன அறிவியல், நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் நிகழ்ந்த அற்புத நிகழ்வை இன்னமும் உறுதி செய்யவில்லை.
ஆதலால் சந்திரன் பிளந்த நிகழ்வை மறுக்க முடியுமா?
அறிவியலை ஆதாரமாகக் கொண்டு ஈ தொடர்பான ஹதீஸை மறுக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இதுபோன்ற குர்ஆன் வசனங்களையும் மறுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
குர்ஆன் வசனத்துடன் அறிவியல் கூறும் ஒரு செய்தி முரண்படும்போது என்ன நிலைப்பாட்டை எடுக்கிறோமோ அதே அளவுகோலைத் தான் ஹதீஸ் விஷயத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதும் அல்லாஹ்வின் வஹீயே என்பதில் சந்தேகமில்லை.
ஈ தொடர்பாகவும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் எதுவும் இல்லை. ஈயில் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன எனவும் அதே அறிவியல் தான் கூறுகிறது.
அது போலவே ஈ சம்பந்தமாக சிற்சில ஆய்வுகள் செய்யப்பட்டாலும் மேற்படி நபிமொழி கூறும் அந்த அம்சம் முழுவதுமாக ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஈயின் இறக்கைகளில் நிவாரணமுள்ளது எனும் செய்தியை அறிவியல் உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் அது அறிவியலுக்கு எதிரானது என்றாகாது.
எனவே ஈ தொடர்பான செய்தியை அறிவியலுக்கு எதிரானது என்று கூறுவது தவறான வாதமாகும்.